அவ்வியம் என்னும் சொல் ஒளவியம் என்னும் சொல்லின் திரிபாயும் வழங்கப்படுகிறது. "ஒளவியம் பேசேல், ஒளவியம் அகற்று' என்றும் ஆத்திசூடியில் கூறப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் Envy என்பதற்கும் Jealousy என்பதற்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. Envy என்பது இருவர் தொடர்புடையது. Jealousy மூவர் தொடர்பானது.
தன் காதலனை வேறொருத்தி பறித்துவிடுவாளோ என்று அஞ்சுவதால் எழுவதே
Jealousy. ஆனால், Envy, பிறர் ஆக்கம் கண்டு மனம் புழுங்குவது. பிறர் ஆக்கம் கண்டு பொறாதிருப்பதைக் கடியும் அதிகாரமே அழுக்காறாமை. அஃதாவது, பொறாமை கொள்ளாதிருத்தல். அழுக்காறாமையில் வரும் பத்துக் குறட்பாக்களும் பிறர் ஆக்கம் கண்டு பொறாத மனக்கோட்டம் உடையவரைப் பற்றியதாகவே இருப்பதைக் காணலாம்.
Envy என்னும் சொல்லுக்கு இணையாக இச்சொல்லைக் (அழுக்காறு) கொள்ளலாம். ஆயினும், பொறாமை (Jealousy) காதலுணர்வு வெளிப்படுத்துகின்ற போதும் எழும்.
வள்ளுவர் அழுக்காறு - Envy என்ற பொருளில் எடுத்தாண்டு இருந்தாலும், காமத்துப்பாலில் தலைவி, தலைவன் மேல் ஊடல் கொண்டு பொய்யாகப் புலப்பது போலவும் பாடியுள்ளார்.
ஜெலசி என்பது தனக்குரியதை வேறொருவர் பறித்துவிடுவாரோ என்னும் ஐயத்தின்பாலெழும் என்பர். சங்க இலக்கியத்தில் காதலன் காதலிக்கு இடையே இதன் பொருட்டே "ஊடல்' நிகழ்வதைக் காணமுடியும்.
தலைவன் பரத்தையர் இல்லம் சென்று மீளுவான். அதையறிந்த தலைவி ஊடல் கொள்வாள்; வாழ மறுப்பதும் உண்டு. பரத்தையர்களுடன் கூடிக் குலாவியபோது அவன் மார்பிலே படிந்த சந்தனக்குழம்பு கண்டு சீறும் மனைவியையும் சங்க இலக்கியம் காட்டுகிறது. மருதத் திணைப் பாடல்களில் ஊடல் கொண்டு பழித்துரைக்கும் பாடல்களும் உண்டு.
"எம்கொழுநற் காக்கம்' (நற்றிணை 170) என்று தலைவன் பரத்தையின்பால் சென்றுவிடப் போகிறான் என்று அஞ்சித் தோழி, விறலிக்கு வாயில் மறுக்கிறாள். இரண்டு பரத்தையர்க்குள்ளும் கூட பொறாமை நிலவுவதாக (நற்.157) ஒரு பாடல் இருக்கிறது.
"ஊடுதல் காமத்திற்கு இன்பம்' என்பதால், காரணம் எதுவுமின்றித் தலைவி ஒருத்தி ஊடல் கொள்வது போல் "புலவி நுணுக்கம்' (அதி.132) என்று ஓர் அதிகாரம் யாத்துள்ளார் வள்ளுவர்.
""பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு'' (1311)
ஜெலசி என்பதன் நுண்பொருளை இக்குறள் விளக்குவதாக அமைந்துள்ளது. தலைவனைப் "பரத்தன்' என்று பொய்க்கோபம் கொண்டு திட்டுகிறாள். வள்ளுவர் தமிழுக்குக் கொடுத்த புதுச்சொல் பரத்தன். பரத்தையிடம் போய் வருபவனுக்குக் கொடுக்கப்பட்ட சொல் பரத்தன்.
""யாரினும் காதலம் என்றேனா ஊடினால்
யாரினும் யாரினும் என்று'' (1314)
"யாரினும் யாரினும்' என்று ஊடற் கொள்வதும் தன்பொருள் காத்தல் உணர்வு (possessiveness) எனலாம்.
(முனைவர் க.பலராமனின் "குறளியற் சிந்தனைகள்' நூலிலிருந்து...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக