சிலப்பதிகாரத்தில், கடிதம் அனுப்பிய நிகழ்ச்சியை இளங்கோவடிகள் இரண்டு இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இரண்டு கடிதங்களும் மாதவியால் கோவலனுக்கு எழுதப்பட்டவை. இவ்விரண்டு கடிதங்களின் இருவேறுபட்ட உள்பொருளும் காப்பியத்தின் பாத்திர மாண்பை விளக்குவதாக அமைந்துள்ளன.
இந்திர விழாவின்போது கானல்வரி இசைத்ததால் ஏற்பட்ட ஊடலால், கோவலன் சினங்கொண்டு மாதவியைப் பிரிந்து சென்றான்.
இளவேனிற்காலத்தில், கோவலனின் பிரிவு மாதவியின் உள்ளத்தை வருத்த, கோவலன்பால் மடல்விடுக்க விழைந்தாள். தாழையின் வெள்ளிய மடலில், சுற்றிலும் பல்மணப் பூக்களைப் பொதித்து, செம்பஞ்சுக் குழம்பை மையாகவும் பித்திகை மொட்டினை எழுத்தாணியாகவும் கொண்டு திருமுகம் தீட்டினாள். "உலக உயிர்களைத் துணையோடு சேர்க்கும் இளவேனிற்காலம் வந்தது. மாலையில் தோன்றிய சந்திரனும் பிரிவுத் துயரை மிகுவிக்கிறான். மலரம்புகளால் உயிரைக் கொல்லும் ஆட்சி தொடங்கிற்று. அறிந்துகொள்க' என அழகுற எழுதினாள் (வேனில் காதை: 56-63).
கடிதத்தை மாதவியிடமிருந்து பெற்றுக்கொண்ட வசந்தமாலை, புகார் நகரின் கூலக்கடைத் தெருவிலிருந்த கோவலனிடம் கொடுத்தாள். ஆனால், கோவலனோ அக்கணத்தே சினங்கொண்ட நெஞ்சில், மாதவி நிகழ்த்திய பலவகைக் கூத்துகளையும் நினைவிற்கொண்டு, அவள் ஆடல் மகளாகையால், அவளுக்கு அது பொருந்துமெனக் கூறி, வசந்தமாலை தந்த கடிதத்தை வாங்க மறுத்துவிட்டான்.
கோவலனின் கடுஞ்சொல்லை வசந்தமாலை கூறக்கேட்ட மாதவி, "மாலை வராராயினும் காலை காண்குவம்' எனக் கையறு நெஞ்சோடு மலர்ப்படுக்கையின் மீது உள்ளம் பொருந்தாது கிடந்தாள்.
பின்னர் கோவலனை, முயன்று கண்டறிந்த கோசிகன் என்பவன், அவனிடம் மாதவியின் மனத்துயரை எடுத்துக்கூறி, அவள்தந்த மண்ணுடைத் திருமுகத்தைக் கொடுத்தான். மாதவியோடு வாழ்ந்த காலத்தில் அவள் பூசிய நெய்வாசம், கடிதத்தின் கூந்தல் முத்திரையில் கமழ்ந்ததால் கடிதத்தைக் கைவிடாது பற்றி, ஏடுகளை விரித்து எழுதப்பட்டிருந்ததைப் படித்தான்.
""அடிகளின் திருவடிகளை வணங்குகிறேன். நான் எழுதியுள்ள கருத்தை மனதில் கொள்வீராக. பெற்றவர்க்குப் பணிவிடை செய்யாது அவர்களின் கட்டளையின்றி, உயர்குலக் கொடியாகிய கண்ணகியோடு இரவில் நகரைவிட்டுப் பிரிந்ததற்கு யான்செய்த பிழையாதென எண்ணி என் மனம் வருந்துகிறது. எனது துன்பத்தைப் போக்குவீராக. பொய்யற்ற அறிவுடைய பெரியோய், உமைப் போற்றுகிறேன்'' என மாதவி அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாள்.
""அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர் பணியன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்டிப் புரையோய் போற்றி''
(புறஞ்சேரியிறுத்த காதை: 87-92)
என்று பற்றற்ற நிலையில் மாதவி எழுதிய கடிதத்தைப் படித்துணர்ந்த கோவலன், "மாதவி குற்றமற்றவள், இது என் குற்றமே' எனக் கூறினான். மாதவி தனக்காகக் கடிதத்தில் தெரிவித்த செய்தி, ஒரு சொல்லும் வேறுபடாது, தான் தன் பெற்றோர்க்கு தெரிவிக்கத்தக்கதாக உள்ளதை அறிந்தான்.
""என்பயந் தார்க்கு இம்மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருள்உரை பொருந்தியது
மாசில் குரவல் மலரடி தொழுதேன்
கோசிகாமணி காட்டு''
(பு.காதை: 96-99)
எனக்கூறி, அக்கடிதத்தைத் தன் பெற்றோரிடம் சேர்க்குமாறு கோசிகனிடம் கேட்டுக்கொண்டான். இரண்டு கடிதங்களும், கண்ணகியை மணந்து, பின்னர் தன்னுடன் சேர்ந்த கோவலனைப் பிரிந்த நிலையில், மனத்துயர் பொறாத மாதவி எழுதியவை. இரண்டும் இருவேறுபட்ட மனநிலையில் எதிரெதிர் உணர்வுகளைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. இதுவே மாதவியின் மாண்பைக் காட்ட இளங்கோவடிகள் கையாண்ட உத்தி.
வசந்தமாலை கொண்டுவந்த முதல் கடிதத்தில் மாதவியின் முருகியல் உணர்வும், காதல் கிளர்ச்சியும் நிறைந்து, காதலி காதலனுக்கு அனுப்பும் வகையில் அழகுற அமைந்திருந்தது.
கோசிகன் கொண்டுவந்து கொடுத்த மாதவியின் இரண்டாவது கடிதம், முற்றிலுமாக அவளது தெளிவுபெற்ற மனநிலையைக் காட்டுகிறது. முதல் கடிதத்தில் காணப்பட்ட அகச்சார்பு எண்ணங்கள் ஒரு சிறிதும் இதில் இல்லை.
மாதவியின் கடிதத்தில் அவளது மனமாற்றம் ஒவ்வொரு சொல்லிலும் பிரதிபலிக்கிறது. அது தந்தைக்கோ, தமையனுக்கோ, ஆசிரியனுக்கோ எழுதும் கடிதம்போல, சொல்லும் பொருளும் அமைந்திருந்தது என கூறுவார் மு.வ.
காதலனாகிய கோவலனை முதன் முதலாக "அடிகள்' எனும் சொல்லால் விளித்தது, இன்பம் பொதிந்த வாழ்க்கை நிலையினின்று, அவள் நிலையாமையை நோக்கி எண்ண வைத்ததைக் காட்டுகிறது. கோவலனோடு கலை வாழ்க்கையும் அவனுக்குப் பின்னர் அற வாழ்க்கையும் வாழ்ந்தவளாகிய மாதவி யாதினும் உயர்ந்தவளே.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக