சந்திர சூரியர்கள் -என்றன்
தாளங்க ளாகுமடாலி
விந்தைக் கடலலைகள்- அதிலே
விம்மி எழும் ஒலியாம்
பளிச்சிடும் தாரகைகள்- என்றன்
பாடலின் வார்த்தைகளாம்
ஒளித்திரு வானவில்லே- என்றன்
உள்ளத் துணர்ச்சியடா''
என்ற கம்பீரத்தோடு கவிதை வானில் வலம் வந்தவர் கவிஞர் கம்பதாசன். 1916-ல் திண்டிவனத்துக்குப் பக்கத்தில் உலகாபுரத்தில் கொலுபொம்மைகள் செய்து விற்றுவந்த சுப்பராயர்- பாலம்மாளுக்கு மகனாகப் பிறந்து 1973-ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையில் தன் பாட்டுப் பயணத்தை நிறுத்திக்கொண்ட கவிஞரின் பள்ளிப்படிப்பு ஆறாம் வகுப்போடு நின்றுவிட்டது, சின்ன வயதிலேயே சென்னைக்கு சிறகு விரித்து வந்த கவிஞர்- பாரதி, பாரதிதாசனின் கருத்தாக்கங்களில் உருப்பெற்று காலப்போக்கில் தன் சிந்தனைத் திறத்தால் தனக்கொரு தனியிடத்தைக் கவியுலகில் கட்டிக்கொண்டவர். கவிஞரின் பல கவிதைகள் பாரதி, பாவேந்தர் கவிதைகளை அடியொற்றி எழுதப்பட்டதுதான் என்றாலும்
""நீ சிரித்தால் என்ன
நிலா சிரித்தால் என்ன?
கான் சிரித்த பூக்கள்
காலக் காற்றில் போச்சே! -காதல்
கனவும் மறையலாச்சே!''
என்று புதிய திசையில் புறப்பட்டுக் குரலெழுப்பியவர். ஆண்டவனுக்கும் ஆள்பவர் களுக்கும் பல்லக்குத் தூக்கிக்கொண்டிருந்த பாட்டை எளியவர்களை நோக்கித் திருப்பிவிட்ட பெருமை பாரதிக்கும் பாவேந்தருக்குமே உரித்தது என்றாலும் கம்பதாசனும் பாவேந்தரைப்போலவே எளிய வாழ்நிலை மாந்தர்களைத் தன் கவிதைகளில் உச்சத்தில் ஏற்றிவைத்து உள்ளம்மகிழ்ந்தவர். தொழிலாளி, செம்படவன், கொல்லன், பரவர், ரிக்ஷாக்காரன், படகோட்டி, நெல் அறுப்போன், நெல்குத்தும் பெண், மாடுமேய்க்கும்சிறுவன், வளையல்காரன், கூடைமுடைபவன், ஒட்டன், பிச்சைக்காரன், குலாலன், பஞ்சாலைத் தொழிலாளி என்று எவரைத்தான் எழுதாமல் விட்டார் கவிஞர்? காரணம் என்ன? அவர் காண விரும்பிய சமத்துவ சமுதாயம் தான்.
""மண்பாண்டம் செய்யும் குயவனும் -புது
மனைகட்டித் தந்திடும் கொத்தனும்
எண்ணெய் விளைத்திடும் வாணியன் -சிகை
எழிலுறச் செய்திடும் நாவிதன்
புண்ணைத் துடைக்கும் மருத்துவன்- கல்வி
போதிக்கும் பள்ளியின் ஆசானும்
கண்ணுக்குத் தோற்றம் வேறாயினும்- அவர்
காணும் பசியே சமத்துவம்''
என்ற தெளிவு அவருக்கு இருந்தது. காந்தியத்தின் பக்கம் கவிஞர் கண்பதித்திருந்தபோதும் அவர் சிந்தையில் செங்கொடி அசைந்தாடியது. சமத்துவம், இயற்கை, உழைப்பு, சோசலிஸம் என்று அவர் மனம்
பல்வேறு வெளிகளில் பயணப்பட்டது.
""சிற்றெறும்பு ஒன்றன்பின் ஒன்ற தாக -மலை
தினைக்காட்டில் வெய்யிலிலே செல்லல் போல
அற்றவரும் உற்றவரும் அணிவகுத்து -நொய்
அரிசிக்கு நிற்குநிலை பாராய் தம்பி''
என்று மனம்வருந்தி
""பன்றி வசிக்கும் நிலைபோல்- மிகு
பஞ்சை மக்கள் குடும்பம்
இன்றும் வதிகின்ற தெனிலோ- மனம்
ஏக்கத் தீயால் எரியும்''
என்று தனக்குள் எரிந்து கொண்டேயிருந்தார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பாத கவிதை என்ன கவிதை? நமுத்துப்போன சொல்லடுக்குகளில் தங்களுக்குள் தாங்களே முணு முணுத்துக் கொண்டிருந்தால் அது கவிதையுமல்ல; அதைக் காகிதத்தில் கக்குபவன் கவியுமல்லன். நம் கவிஞரோ,
""தீண்டாத குப்பையைத் தீண்டியே -தேச
சேவைசெய் தோட்டி குடிசையில்''
என்று சொல்லி,
""கண்ணன் இருந்தானாம் -திரௌபதி
கட்டத் துகில் தந்தானாம்
உண்மையில் அவனிருந்தால் -எனக்கே
ஓர் கந்தை தாரானோ?''
என்று ஏளனக் குரலில் வெப்ப வினாவை வீசுகிறார்.
அதுமட்டுமல்ல; “கெடுக உலகியற்றியான் என்று வள்ளுவப் பெருந்தகை கொந்தளித்தாரே அந்தக்
கொந்தளிப்பு அடங்காமல் நம் கவிஞர் கம்பதாசனிடம்-
""உண்ண உணவது இல்லை என்று -ஏழை
உயிரும் துடித்து இறப்பதற்கோ? -புவி
பண்ணிய குயப்பயலான தெய்வம் -இன்றே
பட்டொழிய வழிகண்டிடுவேன்''
என்று எதிரொலிக்கிறது ஒருபிடிச் சோற்றுக்கு வழியின்றி அலையும் அவலத்தைவிட, கொடுமையைவிட வேறென்ன அவலம், கொடுமை இருந்துவிட முடியும்? இதோ கவிஞரின் குரல் கேட்கிறது-
""கண்ணிளைப் பாறிடத் தூக்கமுண்டு- அற்பக்
கழுதை யிளைப்பாறிடத் துறையுமுண்டு
பண்ணிளைப் பாறிடத் தாளமுண்டு -எங்கள்
பசியிளைப் பாறிட உண்டோ இடம்?''
என்று கேட்டுவிட்டு அவரே சொல்கிறார்
""சொரிதவளை தங்கக் கேணியுண்டு -.சாவைக்
சொல்லிடும் கூகைக்குப் பொந்துமுண்டு
வறியவர் எஙகட்கு என்ன உண்டு? -உங்கள்
வாயேச்சும் வயிற்றுப் பசியுமுண்டு!''
என்பதோடு நிற்கவில்லை.
""தெருச்சுற்றும் நாய்களைச் சுட்டுத்தள்ளி -தோலைச்
சீராக்கி விற்றிடக் கற்றவரே!
அருளின்றேல் எங்களைச் சுட்டுத்தள்ளி- உற்ற
ஆவியைக் காற்றாய் அனுபவிப்பீர்!''
என்கிறார். ஏன் இப்படிப் பாடுகிறார் என்றால் அவர் கண்முன்னால் எப்போதும் எளிய மனிதர் களின் வாழ்க்கை எங்களுக்கு என்ன வழி என்று கேட்டுக்கொண்டே இருக்கிறது.
""வயிறாம் அடுப்பில் பசித்தீயுண்டு- விழி
வழங்கும் நீர்த்துளி சமைப்பதற்கு
உயிர்தளும்பும் உடல் பானையுண்டு- தங்கி
உண்டிட சாவாம் விடுதியுண்டு
என்று அவர்களின் அவலக் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு? கவிஞர் முழங்குகிறார்..
""விவசாயி..! விழி! அச்சம்
விடுவிடு!- ஏரின்
தவச்சாலை நிலம்... வித்தை
நடு!நடு!''
என்று. ஆனால் என்ன நடக்கிறது? அதையும் கவிஞரின் மொழியிலேயே கேட்போம்..
""உடல்பொருள் ஆவிய தெல்லாம்
பண்ணைச் செல்வருக் கீந்து -ஆலை
பட்ட கரும்பென வாகி
கண்ணீர் உகுக்கையில் கண்டேன்- அய்யோ
கலந்திருந்தது ரத்தம்! -அதில்
கடவுள் துடித்திடக் கண்டேன்''
தன்னுடைய கலகக் குரலை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறார்.. எப்படித் தெரியுமா?
""நீங்கள் சிலபேர் நிலம்படைத்தோர்
நாங்கள் பலபேர் ஏர்உழுவோர்
நீங்கள் சிலபேர் விருந்துண்போர்
நாங்கள் பலபேர் பசித்திருப்போர்!
நீங்கள் சிலபேர் ரோஜாமலர்
நாங்கள் பலபேர் கூர்முட்கள்
நீங்கள் சிலபேர் தோன்றுபிறை
நாங்கள் பலபேர் நட்சத்திரம்''
என்று நெஞ்சுயர்த்திச் சொல்லி
""நாளுக்கு நூறுமுறை - அஞ்சி
நாய்போல் வாழ்வதிலும்
தோளுயர்த்திச் சாவின் -முத்தம்
சூடுவோம் ஓர் முறையே..
என்று பிரகடனப்படுத்துகிறார். இவை மட்டுமல்ல; மணக்க மணக்க இயற்கையை தன் கவிதைகளில் பதியனிட்டு வைத்திருக்கிறார் கவிஞர். வசந்தம் வருவதை,
""மாமரம் செந்தளிர் நாவை நீட்டிட
மலர்கள் பூத்து வியந்து நோக்கிட
காமனின் சரம்போல் கோகிலம் கூவிட
கந்தம் சுமந்து தென்றல் தள்ளாட
வந்தது வசந்தம்! வந்தது வசந்தம்!
இன்பக் காவியம் இயற்கை ஏட்டில்
எழிலுறக் காணுது மலர் எழுத்தினால்''
என்று வசந்தத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து மலர்களைப் பொழியவைக்கிறார். விண்மீன் களைப்பற்றி எப்படி எழிலோவியம் தீட்டுகிறார் என்றால்-
""நீலமல ரொன்றில் பட்டாம்பூச்சி- பல
நின்று மஞ்சள் நிறச்சிறகை மெள்ளக்
கோலம் ஒளிர அசைப்பதுவோ?- இமை
கொட்டும் குளிரொளித் தாரகைகள்
வானெனும் பெரிய கம்பளமேல்- இருள்
வஞ்சியே சொக்கட்டான் தானாட
மீனெனும் சோழி குலுக்கிக்கொட்டி- அதில்
மிளிர்ந்திடும் எண்ணினைக் கூட்டுறாளோ?''
கம்பதாசனின் சொற்சித்திரங்கள் படிக்கப்படிக்க பற்பல வண்ணங்களை நமக்குள் வாரியிறைப்பவை. வானவில்லைக் கவிதையாக்கியவர்-
""பூமியாம் காதலி தன்னுடனே -வானம்
பொங்கிக் கலவிகொள் போதினிலே
தேமலர் வாய்மென்ற தாம்பூலத்தை -துப்பச்
சித்திர வானவில் ஆனதடா!''
என்று நமக்குள் ஒரு பெருஞ்சித்திரத்தை வரைந்துவைக்கிறார். இயற்கையை, மானுடத்தை உண்மையில் நாம் நேசிக்கிறோமா என்றால் எதிர்மறையான விடைதான் நமக்கு எப்போதும் கிடைக்கும். அதனால்தான் கவிஞர்-
""மூடிய வானக் கூடையின் கீழே
கோழிக் குஞ்சென நாழிகை போக்கி
வாழும் மானிட வாழ்வின் குருத்தே!''
என்று நம்மை விளித்து
""தரைமகள் அணிந்த தாவணிதான்
சரிந்தே காற்றில் பறப்பதைப்போல்
விரிவோடு வளைந்து செலும்பாதை
விசித்திரம் காணக் காண இன்பம்.''
என்பதை விளக்குகிறார்.
அவருடைய சொல்லாட்சியும் உவமைகளும் உருவகங்களும் அன்றைய காலத்தில் எத்தனையோ பேரை எழுதவைத்தது.
1941-ல் கவிஞரின் "கனவு' கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து "முதல்முத்தம்', "விதியின் விழிப்பு',
"அருணோதயம்', "புதுக்குரல்', பாட்டுமுடியுமுன்னே, "தொழிலாளி', "கம்பதாசன் கவிதைகள்' என்று பல படைப்புகள் படையெடுத்தன. தன்னுடைய "பாட்டு முடியுமுன்னே' என்ற கவிதை நூலுக்கு 1952-ல் கவிஞர் எழுதிய முன்னுரை இப்படிப் போகிறது: "இந்தப் புத்தகத்தில் உள்ள பாட்டுகள் எனது உணர்ச்சி வேகத்தில், என் காதலி என்னைப் பிரிந்தபோது, ஒரே இரவில் எழுதிய பாட்டுகளாகும். அன்பை உணர்ந்த கலை உள்ளங்கள். குற்றங்களைப் பார்க்காமல் ஏற்றுக்கொண்டால் அதுவே எனது இதய நோய்க்கு மருந்தாகும்' என்று. கவிஞரின் காதல் காயம் அவரை எவ்வளவு ஆழமாக பாதித்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
கவிஞர் பாவேந்தரின் அடியொற்றி வளர்ந்தவர். அவரால் பாராட்டப்பட்டவர். இவருடைய கலையுள்ளம் பம்மல் சம்பந்தம் முதலியாரால் விரிந்தது. ஆரணி குப்புசாமி முதலியாருடன் ஏற்பட்ட நட்பால் எழுதத்தொடங்கிய கவிஞர், நடிகராகவும், பாடகராகவும், திரைப்பட நடிகராகவும் வலம்வந்தார். இவர் எழுதிய திரைப்படப் பாடல்கள் திசைகளில் பட்டுத் தெறித்தபோது, கேட்ட உள்ளங்கள் எல்லாம் கிறுகிறுத்தன. 1945-ல் "சாளவாகனன்' படத்துக்குப் பாடலோடு கதை, வசனமும் எழுதினார். புகழ் அவருக்குப் பூமாலை சூட்டியது. மகாகவி வள்ளத்தோள் கவிஞருக்கு உறவானார். செல்வச்செழிப்போடும் புகழோடும் வளைய வந்த கவிஞரை வறுமை வட்டமிடத்தொடங்கியது.
""பாட்டு முடியுமுன்னே மீட்டிய வீணையை
பக்கம் வைத்தே நடந்தாய்''
என்று பாடியவர் தன் கவிதைகளை,
""சின்னஞ் சிறுகவிதை -மலர்மேல்
சிந்தும் பனித்துளிபோல்
சின்னஞ் சிறுகவிதை- உழவன்
சிந்தும் விதைநெல்போல்
சின்னஞ் சிறுகவிதை -அகலின்
தீப ஒளியதுபோல்
சின்னஞ் சிறுகவிதை -குழந்தை
செவ்விதழ் முத்தம்போல்''
என்று சொற்சித்திரமாக்கினார். கவிதை, திரைப் படப் பாடல்கள், காவியங்கள், நாடகங்கள், சிறுகதை கள் என்று நிறைய எழுதிக் குவித்த கவிஞரை வறுமை காவுகொண்டது. ஈரல் கோளாறும் காசநோயும் கவிஞரின் பயணத்தை முடித்துவைத்தன.
""காரிருள் நேரம்
காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே''
என்று கண்மூடிய கவிஞரை வழியனுப்ப வந்தவர்கள் மூன்றுபேர்தான் என்றசெய்தி எவ்வளவு வேதனைக்குரியது? என்றாலும்-
""சிலர் விழிப்பார் சிலர் துயில்வார் -நான்
விழித்துக் கொண்டே துயில்கின்றேன்
சிலர் வாழ்வார் சிலர் சாவார் -நான்
வாழ்ந்து கொண்டே சாகின்றேன்''
என்று தொடர்ந்து வாழ்வோடு போராடிய கவிஞரின் கலகக் குரல் எழுப்பிய கவிதைகள் எப்போதும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதை கவிதை நெஞ்சங்கள் மறுக்க முடியுமா?
நன்றி - இனிய உதயம் 01 03 2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக