சர்ரோகசி' என்ற சொல் சமீப காலமாகப் பெருமளவில் பயன்பாட்டிற்கு வந்த போதிலும், சர்ரோகசியின் பயன்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லாச் சமூகங்களிலும், எல்லாச் சமயங்களிலும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பைபிளில் கூறப்படும் யூத தம்பதியரான சாரா - ஆப்ரகாமின் கதையை நாம் அறிவோம். அவர்களுக்குப் பிறக்கும் வாரிசுகள் வானில் உள்ள விண்மீன்களைவிட அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்று இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டாலும், வயதான காரணத்தால் இனி தான் குழந்தைப்பேறு பெறமுடியாது என்று எண்ணி, சாரா தன்னிடம் பணிபுரிந்த ஹாகர் என்னும் எகிப்து நாட்டு அடிமைப் பெண்ணை வாடகைத் தாயாக்குகிறாள். அவளுக்குப் பிறக்கும் குழந்தை இஷ்மயில் (Ishmael). ஆனால், பின்னாளில் வயது முதிர்ந்த பின்னர் சாராவும், ஐசக் என்ற குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.
மகாபாரதத்தில் இதற்கு எதிர்மாறாக, பாண்டவர்களின் தந்தையாகிய பாண்டுவும் கெüரவர்களின் தந்தையாகிய திருதராஷ்டிரனும் வாடகைத் தந்தையின் மூலம் பிறந்தனர் என்று காண்கிறோம். இதனால்தானோ என்னவோ "சர்ரோகசி' என்பதைத் தற்போது (1) சம்பிரதாயமான சர்ரோகசி (traditional surrogacy) என்றும், (2) சூழ்நிலை சர்ரோகசி (gestational surrogacy) என்றும் பிரிக்கிறார்கள் போலும்! இவற்றைக் கருத்தில் கொண்டு இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.
புலவர் செ.சத்தியசீலன் சர்ரோகேட், சர்ரோகசி என்பவை பெயர்ச்சொற்கள் என்றும், இச்சொற்களுக்கு மாற்றுத்தாய், செவிலி, மாற்று, பதிலி, பதிலாள் போன்ற சொற்கள் பொருந்தி வரும் என்றும் எழுதியுள்ளார்.
தெ.முருகசாமி, பதிலி அல்லது பிரதிநிதி என்னும் சொற்கள் பொருந்தும் என்கிறார். மு.தனகோபாலன், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு மாற்று நிலையாளர் என்ற சொல்லும், சர்ரோகசி என்ற சொல்லுக்கு வாடகைத்தாய் என்ற சொல்லும் பொருந்தும் என்கிறார். வெ.அனந்தகிருஷ்ணன் துணை குரு, பெயராள், வாடகைத்தாய், துணைக்குரு பதவி, மாற்றாள், பதிலானது, பதிலாள், பகரமானது, பகரப்பொருள் என்னும் சொற்களை எழுதியுள்ளார்.
வழக்குரைஞர் கோ.மன்றவாணன், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு நிகராள், நிகராளி, நிகராளர், பதிலி, பதிலாள், பதிலாளர், பெயராள், பெயராளர், இணையாள், இணையாளர் என்னும் சொற்களையும், சர்ரோகசி என்ற சொல்லுக்கு கருநடவு, இரவல் கருத்தரிப்பு, இரவல் கருவளர்ப்பு, செயற்கைக் கருத்தரிப்பு, செயற்கைக் கருவளர்ப்பு, நடவுத்தாய், பதிலித்தாய், வாடகைத்தாய், நிகர் நிலைத்தாய், நிகர்த்தாய், தாய்நிகர் என்னும் சொற்களையும் அனுப்பியுள்ளார்.
ஹரணி என்பவர், பதிலி, மாற்றாள், பதிலித்தாய், பதிலிப் பொறுப்பு முதலிய சொற்களையும், சோம.நடராசன், துணையாள், பெயராள், பதிலாள், மாற்றாள், சார்பாள் ஆகிய சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.
முனைவர் பா.ஜம்புலிங்கம், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு பதிலாள், மாற்றாள், மாற்றான், மாற்று, பதிலி, துணை, செவிலி என்னும் சொற்களையும், சர்ரோகசி என்ற சொல்லுக்கு மாற்றுக்காணல், பதிலித்தெரிவு, பதிலி உருவாக்கு முறை, மாற்று உருவாக்கு முறை என்னும் சொற்களையும் கூறியுள்ளார். மேலும், சர்ரோகேட், சர்ரோகசி என்னும் சொற்களுக்கு இணைச்சொற்களாக, க்ளோனிங் சைல்டு (cloning child) என்ற சொல்லுக்குப் படியாக்கக் குழந்தை என்ற ஒரு அழகான சொல்லையும் உருவாக்கி அனுப்பியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் சொற் களஞ்சியத்தில் முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு துணைகுரு, பெயராள் என்னும் சொற்களையும், சர்ரோகேட்ஷிப் என்ற சொல்லுக்கு துணை குரு பதவி என்ற சொல்லையும் இணைச் சொற்களாகக் குறிப்பிட்டுள்ளார். மெரியம் வெப்ஸ்டர் அகர முதலி, "சர்ரோகேட் என்ற சொல் லத்தீன் சொல்லான சர்ரோகேடஸ் என்ற சொல்லிருந்து 1533-இல் உருவானதாகவும், அது செயப்படுபொருள் குன்றாவினை (transitive verb) ஆகப் பயன்படுத்தப்படும்போது, ஒருவருக்கு பதிலாகவோ, வாரிசாகவோ, துணையாகவோ, இன்னொருவரை நியமிப்பது என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்படும்' என்றும் கூறுகிறது.
ஆனால், சர்ரோகேட் என்ற சொல் பெயர்ச்சொல்லாகப் (noun) பயன்படுத்தப்படும்போது, அச்சொல்லுக்கு (1) ஒருவரது இடத்தில் செயல்படுவதற்காக நியமிக்கப்படும் இன்னொருவர், (2) சில மாநிலங்களில் (நியூயார்க்கைப் போல்) உயில்களைச் சான்றளிப்பதற்கும், பாதுகாவலர்களைக் கண்காணிப்பதற்கும், அதிகார வரம்பு பெற்ற நீதித்துறை அலுவலர், (3) ஒருவருக்கு பதிலாக செயல்படும் இன்னொருவர் ஆகிய மூன்று பொருள்களைத் தருகிறது.
ஆக்ஸ்ஃபோர்ட் அகர முதலியும் சர்ரோகேட் என்ற சொல்லுக்கு மூன்று வகையான பொருள்களைத் தருகிறது. அவை: (1) ஒரு அலுவலரின் பணியைக் கவனிக்கும் இன்னொருவர், (2) திருமண உரிமங்களை (marriage license) வழங்கும் அதிகாரம் பெற்ற துணை குருமார் அல்லது பேராயரின் உதவியாளர் (Bishop’s Deputy), (3) உயிலுக்குச் சான்றளித்தல்,
வாரிசு உரிமையை அங்கீகரித்தல் மற்றும் இளவர்களின் (Minor) பாதுகாவலர்களைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை நிர்வகிக்கும் ஒரு நீதிபதி. ஆனால், பேராயரின் உதவியாளர் என்ற பொருளும், உயிலுக்கு சான்றளிக்கும் நீதிபதி என்ற பொருளும் தற்போது வழக்கொழிந்துபோன காரணத்தால், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு குழந்தைப்பேறு தொடர்பாக ஒரு பொருளும், ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் அவரது பணியை கவனித்தல் என்ற இன்னொரு பொருளும் மட்டுமே தங்கி இருப்பதாகத் தெரிகிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த வாரக் கடிதங்களைப் பார்த்தோமேயானால், சர்ரோகசி என்ற சொல்லுக்கு கருநடவு என்ற சொல் ஒரு புதுச் சொல்லாக்கமாகத் தெரிகிறது. சர்ரோகேட் என்ற சொல்லுக்கு மாற்றாள் என்ற சொல் பல்வேறு பொருள்களையும் உள்ளடக்கி காட்டுகிறது.
எனவே, சர்ரோகேட் என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் மாற்றாள். சர்ரோகசி என்ற சொல்லுக்கு இணையான சொல் கருநடவு.
நன்றி - தமிழ்மணி 07 07 2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக