04/06/2015

காளமேகம் தந்த இரண்டு சொற்கள் - திருவாரூர் இரெ சண்முகவடிவேல்

முந்நூறு ஆண்டுகளுக்குமுன் சிற்றுண்டிச்சாலைகளோ விடுதிகளோ இல்லை. வழிப்போக்கர்கள் யார் வீட்டிலாவது விருந்தினர்களாகத்தான் தங்கிப் பயணத்தைத் தொடரவேண்டும். அவ்வாறு வந்து தங்குவோர்களே விருந்தினர் என்று அழைக்கப்பட்டனர்.

ஆங்காங்கே சத்திரங்கள் இருக்கும். அவற்றிலும் தங்கிப்போவதுண்டு. தமிழ்நாட்டில் சத்திரங்கள் அறச்சாலைகளாகவே விளங்கின. அறச்செல்வர்கள் அதற்காகத் தங்கள் பொருட்செலவில் சத்திரங்களைக் கட்டிவைத்து அவற்றில் உணவும் உறையுளும் இலவசமாகத் தந்தனர்.

தமிழ் வளர்த்த நம் புலவர்கள் பயணம் செய்யும்போது இவ்வாறான சத்திரங்களில் தங்கிச்செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்தந்த ஊர்களில் தங்கும்போது அந்தந்த ஊர் பற்றிய பாடலை இயற்றுவார்கள். அந்தப் பாடல்களைக் கரித்துண்டினால் சுவரில் எழுதிவைத்துப் போவார்கள்.

அந்தப் பாடலை அவ்வூர் மக்கள் எடுத்துத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தருவார்கள். அப்பாடல்கள் நாளடைவில் மக்கள் மனதில் பதியும். இவ்வாறாகவே அவை தனிப்பாடல்களாகத் திரட்டப்படும்.

திருவாரூரில் இரட்டைப் புலவர்கள் ஒருநாள் திருவாரூரில் உள்ள சத்திரத்துக்கு இரட்டைப் புலவர்கள் வருகிறார்கள்.

இரட்டைப் புலவர்கள் குறித்து சிறிது சொல்லியாகவேண்டும். ஒருவருக்குக் கண்பார்வை கிடையாது. இன்னொருவரோ கால் இல்லாதவர். பார்வை இல்லாதவர் நடக்க இயலாதவரைத் தன் தோள்களில் சுமந்துபோவார். பார்க்க இயலாதவரின் பார்வையாக நடக்க இயலாதவர் இருப்பார். நடக்க இயலாதவருக்காகப் பார்வை இல்லாதவர் நடப்பார். இருவரும் தமிழறிந்த பெருமக்கள். ஒரு பாடலில் பாதியை ஒருவர் பாடித் தொடங்க, மீதியை மற்றவர் பாடி முடிப்பார்.

கிருஷ்ணன், பஞ்சுபோலவும் விசுவநாதன், இராமமூர்த்திபோலவும் சங்கர், ஜெய்கிஷன்போலவும் வாழ்ந்தார்கள் என்று சொன்னால் இப்போது உள்ளவர்களுக்குத் தெரியும்.

இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பது ஆச்சரியம் என்றால், தமிழ்ப் புலவர்களாக இருந்தும் ஒற்றுமை பேணியது அதிகப்படியான ஆச்சரியம்.

ஊர்தோறும் சென்று ஆங்காங்கே பாடல்களைப் பாடுவது அவர்களின் வாடிக்கை. திருவாரூர் வந்த அவர்கள் சத்திரத்தில் தங்கினார்கள்; உணவு உண்டார்கள்; ஓய்வு கொண்டார்கள்; கோவில் சென்று வழிபட்டார்கள்; திரும்பி வந்தார்கள்.

திருவாரூர்ப் பெருமானின் நினைவு நெஞ்சில் நிழலாடியபடியே இருந்தது. கவிஞனின் மனதில் ஆழப்பதியும் நிகழ்வுகள் கவிதையாகத்தானே வெளிப்படும்!

இரட்டையரில் ஒருவர் தொடங்கினார்.

திருவாரூர்த் தியாகேசன் யார்? சிவபெருமானல்லவா? அதனால் சிவன் திரிபுரம் எரித்த நிகழ்ச்சியை எண்ணினார். சிவன் முப்புரங்களை எவ்வாறு எரித்தார்? மேருமலையை வில்லாக வளைத்தார். வில்லுக்கு நாண் வேண்டுமே! வாசுகி என்ற பாம்பையே நாணாக்கினார். அம்பு? திருமாலையே அம்பாக்கிக்கொண்டார்.

மேருமலை வில்லில் வாசுகி நாணை இழுத்துக் கட்டி பெருமாள் பாணத்தை விட்டு எரித்தார் என்பதே செய்தி. இதைக் கவிதையாக்க நினைத்தார்கள்.

கவிதை என்றால் அதில் ஓர் அழகு வேண்டாமா? அழகைத்தான் இலக்கணமாக அணி என்று வரையறுத்தார்கள். எந்த அணியில் எழுதுவது? சரி, வஞ்சப் புகழ்ச்சியணியிலேயே எழுதுவோம் என்று முடிவெடுத்தார்கள்.

அது என்ன வஞ்சப் புகழ்ச்சி? வேறொன்றும் இல்லை. நாம் கிண்டலாகப் பேசுவதுதான்.

வகுப்புகளில் ஆசிரியர்கள் சொல்வோம். ""தம்பிதான் வகுப்பிலேயே முதல்! இல்லே தம்பி?'' என்று மாணவனை அரவணைத்தபடி கூறுவோம்.

செய்தி என்ன தெரியுமா? அவன்தான் கடைசி. நூற்றுக்கு மூன்று மதிப்பெண் வாங்கிக் கடைசியிலும் கடைசியாக இருக்கிறான் அவன்! 

புகழ்வதுபோலத் தோன்றும்; ஆனால் பழிப்பதாக இருக்கும். பழிப்பதுபோலத் தோன்றும்; ஆனால் புகழ்வதாக இருக்கும். 

இதைத்தான் வஞ்சப் புகழ்ச்சியணி என்று இலக்கணம் கூறும்.

இரட்டையர் வஞ்சப் புகழ்ச்சியாக திருவாரூர் ஈசனைப் பாடுவதென்று முடிவெடுத்தனர் என்பதால், அந்தத் திரிபுரம் எரித்த நிகழ்ச்சியை இகழ்வதுபோலப் பாடிப் புகழத்தொடங்கினர்.

திரிபுரம் எரித்த வில் எது? மேருமலை. மலை என்பது கல். கல் வளையுமா? வில் வளைய வளையத்தானே அம்பு விரைந்து பாயும். இதுவோ கல்லால் ஆகிய வில். அது எப்படி வளையும்? மூங்கிலில்தான் வில்லைத் தயாரிப்பார்கள். அது நன்றாக வளையக் கூடியது. ஆனால், இந்தக் கல் வில் எப்படி வளையும்? எப்படி அம்பை வேகமாகச் செலுத்தும்? சண்டை போடப்போன சிவபெருமானுக்கு இந்தச் சாதாரணமான உண்மைகூடப் புரியவில்லையே! இது பெருமானைப் பழிப்பதாகும். ஆனால் இதையே புகழ்மொழியாகவும் கொள்ள இடமுண்டு. வளையாத மலையை வைத்தே திரிபுரம் எரித்தாரென்றால்,  சிவபெருமான் நினைத்தால் எதையும் செய்யமுடியும் என்று விளங்குகிறது. 

சரி, மலைதான் வில்லாயிற்றே, வில்லை இழுத்துக்கட்டும் நாணாவது  சரியான நாணாக இருந்ததா? இல்லையே! நாண் எது? வாசுகி என்ற பாம்பு. ஒரு பாம்பைக் கயிறாகக் கட்டினால் அதில் அம்பை வைத்து எய்ய முடியுமா? கையை வைத்தால் கடிக்குமே! கையை வைத்தால் கடிக்கும் பாம்பே நாணென்றால்,  அதை வைத்துப் போர் செய்பவன், போரைத் தொடங்கும்போதே பரமபதம் போய் விடுவானே!

"பாம்பை- அதுவும் நஞ்சிருக்கும் பாம்பை-  விஷப்பாம்பை நாணாக எந்தப் போராளியாவது கட்டுவானா? அதைப் போய்க் கட்டினானே சிவபெருமான்!' என்பது இகழ்ச்சியாக எண்ணுவது.

நஞ்சிருக்கும் பாம்பைக் கட்டிப் போர் செய்த சிவபெருமானின் போராற்றலை என்னவென்று சொல்வது! இது புகழ்ச்சியாக அமைவது.  இதைத்தான் இரட்டையரில் ஒருவர் பாடினார்.

நாணென்றால் நஞ்சிருக்கும்; நற்சாபம் கற்சாபம்; 

பாணந்தான் என்று தொடங்கினார். அவ்வளவுதான் மேலே போக இயலவில்லை.

வஞ்சப் புகழ்ச்சியாக நாணைப் பாடியாயிற்று. சாபத்தை- அதாவது வில்லையும் - பாடியாயிற்று. இனி, பாடவேண்டியது பாணம் மட்டுந்தான். பாணமாக- அம்பாக- இருந்தவர் திருமால். இப்போது முன் இரண்டையும்- வில்லையும் கயிற்றையும் இகழ்வதுபோல் புகழ்ந்த மாதிரியே பாணத்தையும் இகழ்வது போன்றுப் புகழவேண்டும். பாணந்தான் என்று தொடங்கியவரால் மேலும் தொடர இயலவில்லை. பாணந்தான், பாணந்தான் என்று மூன்று நான்கு முறை சொல்லிப் பார்த்தார். மேலே கற்பனை போக மறுத்தது.

இரண்டாமவர் தன் வேலையைப் பார்த்தார். பாடல் அவரால் முடிக்கப்பட்டது. எப்படி?

நாணென்றால் நஞ்சிருக்கும்; நற்சாபம் கற்சாபம்; 

பாணந்தான் --- --- --- தாணுவே

சீர் ஆரூர் மேவும் சிவனேநீ எப்படியோ

நேரார் புரமெரித்த நேர்.

அப்படியே சுவரில் கரியால் எழுதிவைத்தார்கள். பாடல் இரண்டு சீர்கள்- இருசொற்கள்- இல்லாததால் மூளியாக இருந்தது.

இரட்டையர் அதுகுறித்துக் கவலைப்படவில்லை. தங்களின் இயலாமையைக் காட்டியே எழுதிவைத்தனர். 

மறுநாள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். 

பாடல் இருசீர்கள் இல்லாமல் குறைபாட்டுடன் சுவரில் எழுதப்பட்டிருந்தது. எல்லாரும் அதைப் பார்த்தனர். இரட்டைப் புலவர்களுக்குக் கூட கற்பனைப் பஞ்சமா?  என்று ஆளாளுக்குப் பேசியவாறே சென்றனர். 

இப்படியே ஒரு திங்கள் கழிந்தது.

அந்தச் சத்திரத்திற்கு காளமேகப் புலவர் வந்தார். வந்தார்; உண்டார்; நடந்துவந்த களைப்பு அகலப்படுத்து உறங்கினார்.

உறங்கி எழுந்தவர் கண்களில் சுவரில் எழுதப்பட்டிருந்த மூளியான வெண்பா பட்டது.

யாராவது அழித்திருப்பார்களோ என்று முதலில் சந்தேகப்பட்டார். பிறகு நடந்ததை அறிந்துகொண்டார். "இரட்டைப் புலவர்கள் சிறப்பாகப் பாடல் இயற்றுவார்களே' என்றார். 

"ஏதோ அந்த நேரத்தில் அவர்களுக்குத் தோன்றவில்லைபோலும்' என்று கூறியவாறு கையில் ஒரு கரித்துண்டை எடுத்தார். மூளியாய் இருந்த இடத்தை நிறைவு செய்தார்.

பாணந்தான் என்று தொடங்கி அத்துடன் நிறுத்தி இருந்தார்கள் இரட்டையர்கள். 

அதனை நிறைவு செய்தார் காளமேகம்.

""பாணந்தான் மண்தின்ற பாணமே'' என்று மூளியை நீக்கி முழுமை செய்தார். 

திருமால் கிருஷ்ணனாக அவதரித்தபோது மண்ணை அள்ளித்தின்றார். யசோதை தலையில் அடித்தாள். கண்ணன் வாயைத் திறந்தான். வாயில் அண்ட சராசரமும் தெரிந்தது. இது பாகவதக் கதை. காளமேகம் கூறுகிறார், சிவபெருமான் பாணமாக அம்பாக வைத்தது திருமாலை. அந்தத் திருமால் மண்ணைத் தின்றவர்.

ஒரு பாணம் என்பது குருதியையும் தசையையும் தின்னவேண்டும். மண்ணைத் தின்பது தோல்வியின் அடையாளம். "மீசையில் மண்படவில்லை' என்றும் "மண்ணைக் கவ்வினார்' என்றும் தோல்வியை இகழ்ந்து கூறுவோம்.

காளமேகம், மண்ணைத் தின்ற பாணத்தை வைத்திருந்த பெருமானை இகழ்வதுபோன்று சொல்லி, அந்த பாணத்தைக் கொண்டே திரிபுரத்தை எரித்ததைப் புகழ்ச்சியாக்கி, வஞ்சப் புகழ்ச்சி செய்கிறார். 

அரைகுறையாய் நின்ற பாடலை முழுமை செய்துவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தார் காளமேகம்.

அடுத்த திங்களில், அந்தச் சத்திரத்துக்கு வந்தார்கள் இரட்டைப் புலவர்கள்.

தங்களின் பாடல் நிறைவடைந்திருப்பதைக் கண்டு நெகிழ்ந்தனர். "மண்தின்ற பாணமே' என்று அருமைசெய்தவர் யார்? என்று கேட்டறிந்தனர்.

காளமேகத்தினிடம் இரட்டையர்க்கு நன்றி பொங்கியது. தங்களுக்கு வாய்க்காத அந்தக் கற்பனை அவருக்கு வாய்த்ததை எண்ணி வியந்து போற்றினர். 

உடனே காளமேகத்திடம் சென்று நன்றி தெரிவிக்க அவர்களின் நன்றி நிறை நெஞ்சம் ஏங்கித்தவித்தது.

காளமேகம் குடந்தையில் இருப்பதறிந்து திருவாரூரிலிருந்து குடந்தைக்கு விரைந்தனர்.

குடந்தைக்குள் நுழைந்தவுடன் எதிர்ப்பட்ட ஒருவரை, "காளமேகம் வீடு எங்கே?' என்று கேட்டனர். 

"காளமேகம் இருந்த வீட்டையா கேட்கிறீர்கள்?' என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

"ஏன், என்னாயிற்று?' பதறினர் இரட்டையர்.

"காலையில்தான் இறந்தார்.' என்றார்.

"வீடு எங்கே?'

"மூன்றாம் தெருவில் கடைசி வீடு.'

வீட்டை அடைந்து பார்த்தபோது, அப்போது தான் உடலைச் சுடுகாட்டுக்குக் கொண்டுசென்றதற்கான அடையாளம்மட்டுமே தெரிந்தது.

சுடுகாட்டுக்கு ஓடினார்கள். அந்த உடலையாவது பார்த்துவிட வேண்டும் என்று துடித்தபடி சென்றனர். காளமேகத்தின் உடலைக் கூட சரியாகப் பார்க்கமுடியவில்லை இரட்டையர்களால்.

இவர்கள் போய்ப் பார்த்தபோது காளமேகத்தின் உடலுக்குத் தீ மூட்டிவிட்டார்கள்.

இரட்டையர்கள் பார்த்தபோது தீ வாயில் பற்றிக்கொண்டிருந்தது.

இரட்டையர் துயரின் எல்லைக்கே சென்றனர். நாமென்றால் துயரம் வந்தால் அழுதுதீர்ப்போம். இரட்டைப் புலவர்கள் கவிவல்லவர்கள் அல்லவா! தங்களின் இதயதாபத்தைக் கவிதையாக்கிக் காட்டினார்கள். அவர்கள் அப்போது பாடிய பாடல்,

""ஆசு கவியால் அகில உலகும்
வீசு புகழ்க்காள மேகமே- பூசுரா
விண்கொண்ட செந்தழலில் வேகுதே ஐயையோ!
மண்தின்ற பாணம்என்ற வாய்.''

இருசொற்களைத் தந்த அந்தக் கவிஞனுக்கு இரட்டையர் ஒரு வெண்பாவையே நன்றிக் காணிக்கையாக்கித் தந்து இலக்கிய உலகில் காளமேகத்துக்கும் தங்களுக்கும் அழியாத இடத்தை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.

தமிழில் அந்த மூவரும் என்றும் இருப்பார்கள்.


நன்றி - இனிய உதயம்  01 8 2014

கருத்துகள் இல்லை: