09/06/2015

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 34

இந்து' நாளிதழில் கடந்த (2013 ஜூன்) 23-ஆம் தேதி, UFOs sighted in Chennai?' (சென்னையில் பறக்கும் தட்டுக்கள் காணப்பட்டனவா?) என்ற தலைப்பில் ஒரு செய்தி பிரசுரமானது. முகப்பேரில் ஒரு வங்கி அலுவலர் தானும், தன் குடும்பத்தாரும் பளிச்சிடும் மஞ்சள் நிற ஒளியோடு ஐந்து தட்டுக்கள் தெற்கிலிருந்து வடக்கே பயணித்ததைப் பார்த்ததாகக் கூறினார் என்றும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் அவை விண்ணிலிருந்து விழும் எரிமீன்களாக இருக்கலாம் என்று கருத்தறிவித்தது என்றும் அச்செய்தி கூறியது.

அறிவியலுக்குப் புலப்படாத அமானுஷ்ய சக்திகளும், நிகழ்வுகளும் உண்டு என்றும், இல்லை என்றும் காலங்காலமாக மாறுபட்ட கருத்துகள் உலவி வருகின்றன. ஆயினும், அவற்றின்பால் மனிதனுக்குள்ள ஆர்வமும், ஈடுபாடும் என்றென்றும் குறைவதில்லை. 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான "பாராநார்மல் ஆக்டிவிடி' என்ற திரைப்படம், வெளியிடப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், 1945 திரையரங்குகளில் அமெரிக்காவில் மட்டும் 108 மில்லியன் டாலர்களையும், வெளிநாடுகளில் 85 மில்லியன் டாலர்களையும் வசூலில் அள்ளிக் குவித்தது என்பதிலிருந்தே ஆவி உலகத்தின் மேல், இப்புவி உலகத்திற்கு உள்ள ஆர்வம் புலப்படும்.

"நார்மல்' என்ற சொல்லுக்கு இயல்பான, வழக்கமான என்ற பொதுப்பொருள்கள் உண்டு. எனவே, இயல்பைக் கடந்த அல்லது நிலையில் திரிந்தவற்றை ஆங்கிலம் அப்நார்மல் (abnormal) என்று குறிப்பிடுகிறது. அதே சமயம், இயல்நிலைக்குக் குறைந்த ஒன்றை ஆங்கிலத்தில் சப்நார்மல் (subnormal) என்று குறிப்பிடுகின்றனர். இவற்றைத் தாண்டி, அறிவியலால் விளக்கவொண்ணாதவற்றைப் பாராநார்மல் என்று குறிப்பிடும் சொல் வழக்கு 1920-ஆம் ஆண்டில் உருவானதாகவும், பாராநார்மல் என்ற சொல்லுக்கு சூப்பர் நேச்சுரல் (super natural) என்ற பொருளையும் மெரியம்-வெப்ஸ்டர் ஆங்கில அகரமுதலி தெரிவிக்கிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, இவ்வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

ஆசிரியர் பெ.கார்த்திகேயன், பன்னாட்டு அகராதிகள், பாராநார்மல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அடிப்படை அறிவியல் கோட்பாடுகள், புரிதலை மீறி ஏற்படுவதாகத் தோன்றும் செயல்கள், எண்ணங்கள், சக்திகள் என்று கூறுகின்றன என்றும், அவை உண்மை நிலையை மீறுவதாக இருப்பதால் அமானுஷ்யம் என்ற வடமொழிச் சொல் பொருந்தும் என்றும், காணாநிலை, உண்மையிலாத் தோற்றம், அறிவியல் மீறுநிலை, மாயநிலைக் கோட்பாடு அல்லது நிலை, கனவுநிலை, வேறுபாடுநிலைத் தோற்றம், பொய்நிலை, கண்டுணராக் காட்சிநிலை, அறிவியல் வரம்பு மீறும் கோட்பாடு, மெய்யில்லாநிலை, மெய்மீறிய நுண்ணுணர்வு, பொய்த்தோற்றம், தன்னுணர்வு அற்ற புறநிலைசார் அறிவு எனப் பல தமிழ்ச் சொற்களையும் பரிந்துரைத்திருக்கிறார்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, விளக்கவொண்ணா, விஞ்ஞானம் விடைகாணா, விஞ்ஞானம் விளம்பா, விஞ்ஞானம் வழுவிய, விஞ்ஞானம் மருவா, விஞ்ஞானம் தழுவா, ஆய்வுகாணா, ஆய்வுகடந்த, ஆய்வுக்கப்பால், இயற்கை அல், இயற்கைஎதிர், இயல்பு அல், இயல்பு எதிர், அல்வழி, அன்வழி, ஆய்வு மீறிய, அறிவு மீறிய என்றெல்லாம் கூறலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், ஆரம்ப நிலை, அதீத நிலை, உயர்தனி நிலை, இயற்கைக்கு மேலான நிலை, இயற்கைக்கு அப்பாற்பட்டு, இயற்கைக்கு அப்பால், இயல்புக்கு மீறிய என்று கூறுகிறார். புலவர் செ.சத்தியசீலன், அறிவுக்கெட்டா இயல்பு, புலணுணராப் புலம் ஆகிய சொற்களை இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்றும், மு.தனகோபாலன் பூடகமான (அறிவியலுக்கும், மனித அறிவுக்கும் அப்பாற்பட்டது) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சோலை. கருப்பையா, வழக்கத்திற்கு மாறான, வித்தியாசமான, சிறப்பான அல்லது விதிவிலக்கான ஆகிய சொற்கள் பொருந்தும் என்கிறார். ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், நமக்குப் புரியாமல் இயங்கும் சக்தியை, அறிவியல் எல்லைக்குள் கொண்டு வரமுடியாத சக்தியை இச்சொல் குறிப்பதால், "அறியாச் சக்தி' என்ற தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்கிறார்.

தெ.முருகசாமி, இயல்புக்கு மாறாக (சித்தப்பிரமை போல்) உள்ள நிலை, உடன்பாடில்லாத நிலை, முறை பிறழ்ச்சி (dis-order) என்றும் கூறலாம் என்றும், அதனால் இயல்புக்கு மாறுபட்ட நிலை என்றும் கூறலாம் என்றும் கூறியுள்ளார்.

டி.வி.கிருஷ்ணசாமி, சாதாரண நிலை போன்ற, ஒத்த சாதாரண நிலை, சற்று தேவையான அல்லது உண்மையான பிரதி என்பவை பொருத்தமாக இருக்கும் என்று உரைத்திருக்கிறார்.

கோ.மன்றவாணன், இயல்பெதிர்வு, இயல்முரண், இயல்பு பிறழ்வு அல்லது இயல்பிறழ்வு, அமானுஷ்யம், புனைவு, புனைநிகழ்வு, பொய் நிகழ்வு, புலன்மீறு உணர்வு, புலன் எட்டா நிகழ்வு ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

 சென்னைப் பல்கலைக்கழக (பதிப்பாசிரியர்: முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியர்) ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் பாராநார்மல் என்ற சொல்லுக்குப் பொருள் தரப்படாவிட்டாலும், சூப்பர் நேச்சுரல் என்ற சொல்லுக்கு இயற்கை கடந்த, இயற்கைக்குள் அடங்காத, இயன்முறைக் காரண காரியத் தொடர்புக்கு அப்பாற்பட்ட, ஆவித்தொடர்புடைய, தெய்வீக ஆற்றல் சுட்டிய ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளன.

இவற்றைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், அறிவியல் மீறு நிலை, இயல்புஎதிர், இயல்பிறழ்வு ஆகிய சொற்கள் பொருந்தி வருவதாகத் தெரிகிறது. ஆனால், அறிவியலாளர்கள் இச்சொல்லை அறிவியலுக்கு அப்பாற்பட்ட அல்லது இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு நிலை அல்லது நிகழ்வோடு தொடர்புபடுத்திப் பேசுவதால், அறிவறியா நிலை அல்லது இயல்பறியா நிலை என்று கூறுவது பொருந்தும். இவற்றுள் இயல்பு என்ற சொல், நார்மல் என்ற சொல்லின் நேரடிப் பொருளாக இருப்பதால், பாராநார்மல் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "இயல்பறியா நிலை’.


நன்றி - தமிழ்மணி 30 06 2013

கருத்துகள் இல்லை: