03/06/2015

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 28

இங்கிலாந்து நாட்டிலிருந்து ஆங்கிலச் சொற்றொடர்களைப் பற்றிய ஆய்வுகளை வெளியிடும் ஓர் இணையதளம், "ஆசிட் டெஸ்ட்' என்ற சொல்லுக்கு, "கேள்விக்கோ, ஐயத்திற்கோ அப்பாற்பட்ட ஒரு முடிவை அளிக்கும் உறுதியான சோதனை' என்ற பொருளைத் தருகிறது. இச்சொல் தோன்றிய வரலாற்றைப் பார்த்தால், 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தங்கத்தின் மீதான மோகம் கிடுகிடுவென்று ஏறத் தொடங்கியபோது மற்ற உலோகங்களிலிருந்து தங்கத்தைப் பிரித்துப் பார்க்கவும், அதனுடைய தூய்மையைப் பரிசோதிக்கவும், சில சோதனைகள் தேவைப்பட்டன. மற்ற உலோகங்களைப் போல் தங்கம் எல்லா அமிலங்களிலும் கரைவதில்லை. ஹைட்ரோகுளோரிக் மற்றும் நைட்ரிக் அமிலங்களின் கலவையான "அக்வா ரிஜிய'வில் மட்டுமே கரைவது கண்டுபிடிக்கப்பட்டதும், இப்பரிசோதனைக்கு "ஆசிட் டெஸ்ட்' என்ற பெயரிடப்பட்டது.

ஆனால் இச்சொல் அல்லது தொடர், உருவகமாக முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது நவம்பர் 1845-இல் "விஸ்கான்சின்' நகரிலிருந்து வெளிவந்த "கொலம்பியா ரிப்போர்ட்டர்' என்ற பத்திரிக்கையில்தான். அதில் ஒருவர் 24 ஆண்டுகள் ஆற்றிய திடமான சேவையைப் பாராட்டும்போது, அச்சேவை அவர் அமிலப் பரிசோதனையில் வெற்றி பெற்றதைக் குறிப்பதாக அப்பத்திரிக்கை குறிப்பிடிருந்தது.

ஆனால், துரதிருஷ்டவசமாக 1960-க்குப் பிறகு ஹிப்பி குழுமங்களின் உறுப்பினர்கள் போதை ஊசிகளைப் போட்டுக்கொள்ளும் திடம் பெற்றவர்களா என்பதைச் சோதிப்பதற்கும் இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. சான்ஃப்ரான்சிஸ்கோவில் 1960-களில் கென் கேசே என்பவர் தன்னுடைய பண்ணை வீட்டில் அளித்த கேளிக்கை விருந்துகளில் கலந்து கொள்பவர்களைக் கவரும் விதமாக, நகரெங்கும் ஒட்டிய சுவரொட்டிகளில் "உங்களால் அமிலப் பரிசோதனையில் தேர்ச்சி பெற முடியுமா?' என்ற கேள்வியை எழுப்பினார். எல்எஸ்டி (LSD) என்று சொல்லப்படும் ஒரு போதை மருந்தைச் செலுத்திக் கொண்டு வலம் வரும் திறனை இப்படி அவர் சோதித்தார். பின்னாளில், இவற்றை அடிப்படையாக வைத்து, டாம் உல்ஃப் (Tom Wolfe) என்பவர் தி எலக்டிரிக் கூல் எய்டு ஆசிட் டெஸ்ட் (The Electric Kool-Aid Acid Test) என்ற நூலை 1968-ஆம் ஆண்டு எழுதி, இச்சொற்றொடரின் மாற்றுப் பயன்பாட்டைப் பிரபலமாக்கினார்.

அதே நேரத்தில், வணிகவியலிலும் ஆசிட் டெஸ்ட் என்ற சொல், ஒரு விகிதாசாரத்தைக் குறிக்கும் வகையில் ஆசிட் டெஸ்ட் ரேஷியோ (Acid Test Ratio) என்று சொல்லாக்கம் பெற்றது. ஒரு நிறுவனம் தன் குறுகியகாலக் கடன்களை, எந்தச் சொத்துக்களையும் விற்காமலேயே தீர்த்து வைக்கக்கூடிய நிதித்திறனைப் பெற்றிருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க ஆசிட் டெஸ்ட் ரேஷியோ உருவாக்கப்பட்டது. கணித வடிவத்தில், தணிக்கையாளர்கள், "ஆசிட் டெஸ்ட் ரேஷியோ' என்பதைக் கையிருப்பில் உள்ள பணம், வெளியிலிருந்து வரவேண்டிய தொகை மற்றும் குறுகியகால முதலீடுகள் ஆகிய மூன்றின் கூட்டுத்தொகையை, தற்காலிகக் கடன் தொகையால் வகுப்பதால் வரும் ஈவு என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி ஆசிட் டெஸ்ட் என்ற சொல் 160 ஆண்டுகளுக்கு முன்னால் தங்கத்தை அமிலத்தில் போட்டுச் சோதிக்கும் சோதனையைக் குறிப்பதற்காக உருவாக்கப்பட்டு, பின்னாளில் மனிதர்களின் திறனைக் (நற்திறன் - தீத்திறன் இரண்டையும்) குறிக்கும் சொல்லாக உருமாற்றம் பெற்று, வணிகவியல் துறையில் நிறுவனங்களின் செயல்பாட்டையும் குறிக்கும் விதமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டது. இவ்வரலாற்றைக் கருத்திற்கொண்டு, இவ்வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

புலவர் சி.செந்தமிழச்சேய் இச்சொல்லுக்கு, "கடலூர் தமிழ்ப்பணி அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆட்சிச்சொற்கள் அகரமுதலியில், கடும் தேர்வு, கடும் ஆய்வு என்னும் பொருள்கள் கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால், வழக்கில் "அக்னிப் பரீட்சை' என்ற சொல் ஏற்கெனவே பயன்பாட்டில் இதே பொருளில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுவிட்டு, தூய தமிழில் "தீக்குளி தேர்வு' அல்லது "தீக்குளித்தெழல்' என்னும் சொற்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், "நேருக்கு நேரான மொழிபெயர்ப்பு அமிலச்சோதனை. ஆனால், அதற்கிணையான சொற்கள் சுயமதிப்பு, சுய பரிசோதனை, தற்சோதனை, தன்னறிவு சோதனை, மனப்பரிசோதனை, சுய ஆய்வு, தன்னாய்வு, திறனறிசோதனை, திறனறி ஆய்வு, தகுதி ஆய்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், கடும் தேர்வு, கடும் ஆய்வு, முழு ஆய்வு, இறுதி ஆய்வு, இறுதித்தேர்வு, கடைசி கடும் ஆய்வு' போன்ற சொற்கள் உள்ளன என்றும், ஆனால் மரபு வழிச்சொல்லாக இதை மொழிபெயர்க்க வேண்டுமானால், புடம்போடல் அல்லது புடம்போடுதல், புடமிடல் அல்லது புடமிடுதல், புடமிடுகை என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

என்.ஆர்.சத்யமூர்த்தி, ஒரு பொருளின் அல்லது செயலின் திறன் மற்றும் மதிப்பு ஆகியவற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் ஓர் அறுதியான மற்றும் உறுதியான முடிவைக்காணப் பயன்படும் சோதனை ஆசிட் டெஸ்ட் என்று சொல்லப்படுவதால், அதற்கிணையான சொற்கள் அக்னிப் பரீட்சை, உரைகல் என்கிறார்.

முனைவர் ஜி.ரமேஷ், கடும் ஆய்வு, தங்கத்தைத் திராவகத்தால் சோதித்தல், கடுந்தேர்வு, அமிலத்தேர்வு மற்றும் அமில ஆய்வு போன்ற சொற்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "புடத்தேர்வு' என்றும், டி.வி.கிருஷ்ணசாமி "அமிலச்சோதனை' என்றும், செ.சத்தியசீலன், புடம்போடல், உரசி உண்மை காணல், அமிலத்தோய்வு என்றும், மு.தனகோபாலன், அமிலச்சோதனை அல்லது முழுமையான சோதனை என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன், காடி ஆய்வு, கடுந்தேர்வு, உரைகல் என்னும் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கு "கடைசிக் கடுஞ்சோதனை' என்ற பொருளைத் தருகிறார். பெருவாரியான வாசகர்களின் கருத்துப்படி, "ஆசிட் டெஸ்ட்' என்ற சொல்லுக்கு நேரடி மொழிபெயர்ப்பு "அமிலச்சோதனை'தான். வழக்குச் சொல்லாக அது பயன்படுத்தப்படும்போது, "அக்னிப்பரீட்சை' என்பதும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆங்கிலத்தில் டெஸ்ட் ஆஃப் ஃபயர் (Test of fire) என்ற சொற்றொடர் பயன்பாட்டில் உள்ளதால், அக்னிப்பரீட்சை என்ற சொல் அத்தொடருக்கு அதிகமாகப் பொருந்தும்.

"புடம்போடுதல்' என்ற சொல்லும் கிட்டத்தட்ட சரியாக வந்தாலும், அச்சொல் சித்தர்களின் ரசவாதத்தையும், உலோகங்களை உருமாற்றும் அல்லது தூய்மைப்படுத்தும் முறையையும் குறிக்கப் பயன்படுவதால், அச்சொல், சோதனையைக் குறிக்கப் பயனாகாது. இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால், "கடுந்தேர்வு' என்ற சொல் மிகப் பொருத்தமாகும்.


நன்றி - தமிழ்மணி 19 05 2013

கருத்துகள் இல்லை: