05/06/2015

ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? - முனைவர் ச.சுப்புரெத்தினம்

ஆய்த எழுத்தை உச்சரிக்கும்பொழுது "அக்கன்னா' என்றும், "அக்கேனா' என்றும் உச்சரிக்கிறார்கள். இது தவறானது.

குழந்தைகளுக்குத் தமிழிலுள்ள உயிரெழுத்துகளைச் சொல்லிக் கொடுக்கும்போது "அ' என்பதை "ஆனா' என்றும், "ஆ' என்பதை "ஆவன்னா' என்றும் வரிசைப்படுத்தி, "ஒளவன்னா' என்பது ஈறாகச் சொல்லி முடித்துப் பின், ஆய்த எழுத்தை (ஃ) "அக்கன்னா' என்று ஒருவித ஒலிநயத்துடன் சொல்லி முடிப்பதைப் பார்க்கிறோம்.

எழுத்துகளை விட்டிசைக்காமல் ஓர் இயைபு பட உச்சரிப்பதற்காகவே தனி எழுத்துகளின் பின் கரம், காரம், கான் என்ற சாரியைகளைச் சேர்த்துச் சொல்வது தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழக்கத்திலிருந்து வந்துள்ளது. அதாவது, "அ'கரம், "ஆ'காரம், "ஐ'காரம் அல்லது "ஐ'கான் எனப் போல்வன சாரியைகளோடு இயைந்த அத்தகைய உச்சரிப்புகளாகும்.

இத்தகைய சாரியைகளைத் தவிர ஆனம், ஓனம், ஏனம் (தொல்.சொல்.நூ.296-சேனாவரையம்) என்பவைகளும் வழக்கிலிருந்தன. அவற்றுள் ஒன்றான "ஏனம்' என்பதே ஆய்த எழுத்திற்குரிய சாரியை ஆகும் எனக் கொள்ளவேண்டும்.


தனித்தியங்கும் ஆற்றலில்லாத ஆய்த எழுத்து "அ' என்னும் உயிரை முன்னொட்டாகப் பெற்று "அஃ' என்றாகி, அதனுடன் "ஏனம்' என்பது சேர்ந்து "அஃஏனம்' என்று உச்சரிக்கப்பட வேண்டும். அல்லது "அஃகு' என்பதுடன் (தொல்.மொழிமரபு.நூ.38) "ஏனம்' என்பது சேர்ந்து "அஃகேனம்' என்றும் உச்சரிக்கப்படலாம். எனவே, அக்கன்னா, அக்கேனா என்பன தவறான உச்சரிப்புகள். "அஃஏனம்' அல்லது "அஃகேனம்' என்பதே சரியான உச்சரிப்புகளாகும்.

நன்றி தமிழ்மணி 10 11 13

1 கருத்து:

ப.கந்தசாமி சொன்னது…

நீங்கள் சொல்லும் உச்சரிப்பு இது வரையில் வழக்கில் எங்கும் காணவில்லையே? திடீரென்று ஒரு உச்சரிப்பை சொன்னால் அது மக்கள் மத்தியில் எப்படி எடுபடும்? "அக்கன்னா" என்பது புழக்கத்தில் பலகாலமாக இருக்கிறது. அது எல்லோருக்கும் புரிகிறது. அது இலக்கணப்படி தவறாக இருந்தாலும் புழக்கத்தில் இருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இலக்கியத்திற்குப் பின்தானே இலக்கணம் தோன்றியது?