01/09/2011

பாரதி பாடல் மொழிபெயர்ப்பு - ம.இலெ.தங்கப்பா

ஒரு முறை நண்பர் ஒருவர் "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்" என்ற பாரதியின் தொடரைக் கூறி, "எங்கே இப்பொழுதே இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்" என்றார்.

The heavens we will measure

And the oceans's leaping treasire

ஆகா, நன்றாயிருக்கிறதே என்ற நண்பர், "பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" இதையும் உடனே மொழிபெயர்க்க முடியுமா?'' என்றார்.

When a ghoul is in power

Scriptures eadavar

என்றேன்.

இவை சரியான மொழிபெயர்ப்புகள் தாமா என்று கூற முடியாது. ஆனாலும் அதிகம் எண்ணிப் பாராமலே எனக்குள்ளிருந்து அவை வந்தன. என் உள்ளத்துக்குள்ளே மொழிபெயர்ப்பு கொஞ்சம் இடத்தைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

நான் தொழில்முறை மொழிபெயர்ப்பாளன் அல்லேன். மொழிபெயர்ப்புக்குள் நான் நுழைந்ததே ஒரு விளையாட்டுத்தான். கல்லு‘ரியில் படிக்கையில் வகுப்பில் உறக்கம் வராமலிருப்பதற்காகக் கடைசி வரிசையில் இருந்து கொண்டு ஆங்கிலப் பாடப் பகுதியில் வந்துள்ள ஒரு பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். பின்பு அதில் ஒரு சுவை ஏற்பட்டது. முதலில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தான் மொழிபெயர்த்தேன். பின்புதான் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்க்கத் தொடங்கினேன். அதிலே மாட்டிக் கொண்டவர்தான் பாரதி.

முதலிலேயே நான் பாரதிக்கு வந்துவிடவில்லை. பாரதிதாசன் கொஞ்சம், இராமலிங்க அடிகள் கொஞ்சம், சங்கப் பாடல்கள் சில சில பின்புதான் பாரதி.

எதிலுமே நான் முழுமையாக ஈடுபட்டு முழுமையாகச் செய்பவன் அல்லேன். பற்பல வேலைகளிடையே மொழிபெயர்ப்பும் கொஞ்சம் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.

கல்லு‘ரியில் படிக்கும் காலத்தில் முழுக்க முழுக்கப் பாரதிதாசனே என்னை ஆட்கொண்டிருந்தார். (அப்பொழுதும் மொழிபெயர்க்கத் தொடங்கவில்லை) பின்புதான் பாரதி வந்தார் & குயில் பாட்டோடும், கண்ணன் பாட்டோடும் பாரதிதாசன் கருத்தெழுச்சியை ஏற்படுத்தினார் என்றால் பாரதி பாட்டுணர்வால் உள்ளத்தைப் பற்றிக் கொண்டார். அப்பொழுதெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பு நினைப்பு வரவில்லை. பாடல்களைச் சுவைத்தேன், ஈடுபட்டேன்; உள்ளமும் உணர்வும் தோய்ந்தேன்.

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்க்குமாறு என்னைத் து‘ண்டியவர் என் நண்பர் த.கோவேந்தன். பாரதிதாசன் பாடல்களையும் சங்கப் பாடல்களையும் ஆங்கிலத்தில் தர வேண்டும் என்றார். அவை ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கையிலேயே பாரதியையும் முன்வைத்தார்.

ஏற்கனவே வெளிவந்திருந்த பாரதி பாடல் மொழிபெயர்ப்பு நு‘ல்கள் இரண்டைக் காட்டினார். ஒன்று அன்றே ஆங்கில மொழிப்பெயர்ப்பாளராக நன்கு அறியப்பட்டிருந்த ஒருவரின் நூல். மற்றொன்று பாரதியின்பால் ஈடுபாடுகள் அரசியல் அறிஞர் ஒருவர் செய்தது. இரண்டுமே சப்பென்றிருந்தன. சொற்பொருள் தான் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

பாடல்களைப் பொறுத்தவரை தமிழராகிய நம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலத்தில் சிறவாமைக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று பாட்டுணர்வென்பது சிறிதும் அற்றவர்கள் பாட்டிலக்கியத்தை மொழிபெயர்ப்பதுதான். ஆங்கில மொழி நன்கு கைவந்த ஆங்கில அறிஞர்கள், பேராசிரியர்களாக இருப்பவர்கள் பலரின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் கூடச் சப்பென்றிருக்கக் காரணம் அவர்கள் பால் பாட்டுணர்வு இன்மையே ஆங்கில மொழியில் சீரிய புலமை பெற்றிருப்பதோடு, ஆங்கிலத்திலும் தரமான பாடல் எழுத வல்லவர்களின் மொழிபெயர்ப்புகளே படிக்கத்தக்கனவாக உள்ளன.

என் நண்பர் காட்டிய பாரதி மொழிபெயர்ப்புகளைப் பார்த்தபொழுது எனக்குத் தோன்றியது. "நாம் முயன்றால் இவற்றைவிட நன்றாகச் செய்யலாம் போலிருக்கிறதே!" என்பதுதான் நண்பரும் அப்படித்தான் கூறினார்.

1961 அளவில் என்று நினைக்கிறேன் & கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் அறிவித்திருந்த பாரதி மொழி பெயர்ப்புப் போட்டியைப் பற்றி நண்பர் கோவேந்தன் எனக்குக்கூறி, அதில் கலந்து கொள்ளவும் வேண்டிக் கொண்டார். அவரின் து‘ண்டுதல் இல்லாமலிருந்தால் நான் ஈடுபட்டிருக்கவும் மாட்டேன்.

பதினைந்து இருபது பாடல்கள் இருக்குமென்று நினைக்கின்றேன். போட்டிக்கு விடுத்து வைத்தேன். முடிவு என்னாயிற்று என்று இப்பொழுது நினைவில்லை; என் மொழிபெயர்ப்புக்கு மூன்றாம் இடம் கிடைத்திருந்தால்கூடத் தெரிவித்திருப்பார்கள். ஒன்றும் தெரிவிக்கப்பட்டதாக நினைவில் இல்லை. பாடல் படிகள் மட்டும் நல்ல வேளையாகக் காணாமல் போகவில்லை!

ஏறத்தாழ இருபது ஆண்டுகட்குப் பின் இருக்கலாம். புதுவையிலிருந்து வெளிவந்த ஆங்கிலக் கிழமையிதழ் ஒன்றுக்காகப் பாரதி பாடல்கள் சிலவற்றை மொழிபெயர்த்தேன். புதுவையில் பாரதி நு‘ற்றாண்டு விழா மலருக்கென ஒரு பாட்டை ஆங்கிலத்தில் தந்திருந்தேன். எல்லாம் சேர்ந்து ஏறத்தால முப்பது பாடல்கள் இருக்கும். இவ்வளவுதான் என் பாரதி பாடல் மொழிபெயர்ப்புகள்.

நான் மொழிபெயர்த்துள்ள பாரதிதாசன் பாடல்களையும் பார்க்கின்றேன். இவற்றையும் பார்க்கின்றேன். பாரதி பாடல்களே எனக்கு நிறைவு தருவனவாயிருக்கின்றன. இத்தனைக்கும் நான் மொழிபெயர்த்துள்ள பாரதிதாசன் பாடல்கள் தமிழில் சுவையும் அழகும் உடையனவாய் எல்லாரும் படித்து மகிழக்கூடியவையே.

மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை ஓர் உண்மை உண்டு. மூலத்தில் நன்றாயிருக்கும் பாடல்கள் யாவுமே மொழிபெயர்ப்பில் நன்றாயிருப்பதில்லை.

பொதுவாகப் பாடல்கள் இரண்டு நிலைகளில் சுவை தருகின்றன. முதலில், அவை நம் மண்ணோடும் மரபோடும் வாழ்வோடும் தேவைகளோடும் விருப்பு வெறுப்புகளோடும் குறிக்கோள்களோடும் நெருக்கமுடையவனவாக இருந்து நம் நெஞ்சின் வேட்கைகளை எதிரொலித்து இன்பம் தருகின்றன. அடுத்து அவை நம் அண்மைச் சூழல்கள், விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, மன்பதை முழுமைக்கும் பொதுத்தன்மை உடையனவாய் மாந்த இனத்தின் வாழ்க்கை அழகைப் படம் பிடிப்பனவாகவும், அதன் கனவுகளை முன்னிறுத்துவனவுமாகி அனைவர் உள்ளத்தையும் ஈர்த்து மகிழ்வூட்டுகின்றன.

முதலில் கூறப்பட்ட பாடல்கள் எழுதப்பட்ட மொழியின் தனிச் சிறப்போடும் உணர்த்தும் தன்மையோடும் ஒன்றி அம்மொழி மக்களின் சொந்த அடையாளங்களோடு கூடிய செய்திகளை எதிரொலிப்பனவாக அமைகின்றன. இரண்டாவதாகச் சுட்டிய பாடல்கள் மொழிக்கே உரிய சொல், வடிவ அழகுகளையும் அடையாளங்களையும் கடந்து பொதுமை உணர்வு நிரம்பிப் பாட்டிற்கே உரிய தகைமை சான்ற கலையழகும் படைப்புச் செழுமையும் வாய்ந்தனவாயிருக்கின்றன.

முதலில் சுட்டப்பட்ட பாடல்கள் மண்ணில் ஆழ்ந்து வேரூன்றி நிற்பன. ஆகையால், ஒரு குறித்த தட்பவெப்ப நிலை கொண்ட மண்ணுக்கே உரிய ஒரு செடி வேறிடங்களில் பெயர்த்து நட்டால் வேர் பிடிக்காமல் பட்டுப் போய்விடுவதுபோல் மொழிப்பெயர்ப்பில் தம் அழகுகளை இழந்துவிடுகின்றன.

மூல மொழியின் ஓசை, வடிவ அழகோடும் அம்மொழி மக்களின் உணர்வோடும் அமையாமல் அவற்றைத் தாண்டி பாட்டுக் கலைத்திறம் மிகுந்த கற்பனை நயங்களும் படிம அழகும் புனைந்து சீரிய கலை வடிவங்களைக் கொண்ட பாடல்களே மொழி பெயர்ப்பில் சிறந்து நிற்கின்றன.

பாரதிதாசன் பாடல்களிலும் மொழியுணர்வு, கொள்கை எழுச்சிப் பாடல்களைவிட அவர்தம் இயற்கைப் பாடல்களும் வாழ்வியல் உண்மைகளையும் மன்பதையின் பொதுவுணர்வுகளையும் எதிரொலிக்கும் பாடல்களே மொழிபெயர்ப்பில் பாரதிதாசனின் பெயர் சொல்பவையாக நிற்கின்றன.

பாரதி பாடல்களிலும் தேசியப் பாடல்களும் சிறுதெய்வ வழிபாட்டுப் பாடல்களும் கீழே நிற்க அவர்தம் இயற்கையுணர்வுப் பாடல்களும் மெய்யுணர்வுப் பாடல்களுமே மொழிபெயர்ப்பில் சிறப்பனவாயிருக்கின்றன. பாவலன், சூழ்நிலைக்கும் உணர்வு நிலைக்கும் தக்கபடி உலகை இருவகையாகப் பார்க்கின்றான். காட்சிகளினின்று விலகித் தனித்து நின்றும் பார்க்கின்றான். காட்சிகளில் தன்னைக் கரைத்துக் கொண்டும் பார்க்கின்றான். காட்சிகளைப் புனைவு முறையில் வர்ணித்துச் சொல்லும் பாடல்களும் கருத்துகளை எடுத்துரைத்து எழுச்சியூட்டும் பாடல்களும் ஒரு வகை காட்சிகளினின்று பிரித்துணர முடியாதபடி பாவலனின் ஆழ்மன உணர்வுகளையும் மெய்மையியல் பார்வையினையும் படம் பிடிக்கும் பாடல்கள் ஒரு வகை.

பெரும்பாலான பாவலர்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தி அமைக்கத் துடிக்கின்றனர். செம்மையான குறிக்கோளை நிலைநாட்டப் பாடுபடுகின்றனர். பாரதி இத்தகைய நிலைகளில் ஈடுபட்ட போதிலும் இவற்றையும் தாண்டி வேறோர் எல்லையை அவர் அணுகுகின்றார் எனலாம்.

உலகோடும் உலகத்துயிர்களோடும் பொருள்களோடும் தம்மைக் கரைத்துக் கொண்டு இரண்டற்று நிற்கும் நிலை அது. இரண்டற்ற நிலையிலேயே மெய்யியற் காட்சிகள் கிட்டுகின்றன.

இத்தகைய பாடல்களைப் படித்த பொழுதுதான் இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாமே. பெயர்த்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றியது. அத்தகைய பாடல்களையே தேடிப் பிடித்து மொழி பெயர்க்கலானேன்.

பாரதி பாடல் ஈடுபாடு ஓர் இனிய இயற்கைத் தோய்வு வாழ்க்கைத் தோய்வு பாரதியுடன் நேரில் பழகுவது போன்ற இனிய பட்டறிவு பாரதியின் சொற்களை அல்ல கருத்துக்களை, கற்பனைகளை அல்ல, பாரதி என்ற மாந்தனையே ஆங்கிலத்தில் படம் பிடிப்பது போன்ற உணர்வு. பாட்டின் உள்ளிருக்கும் அந்த மாந்தனைக் கண்டு கொண்ட பிறகு மொழிபெயர்ப்பு என்பது ஒரு தொல்லையாகவோ, சிக்கலாகவோ, அரு முயற்சியாகவோ தோன்றவில்லை. சொற்கள் எளிதாக வந்து விழுந்தன. தொடர்கள் தாமாகவே வந்து பொருந்தின பாரதி ஆங்கிலத்துக்கு அயலானாகவே தோன்றவில்லை.

பொதுவாகத் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் பெயர்க்கையில் தமிழ் மரபுக்குரிய தொடர்கள் ஆங்கில மரபுக்கு ஒட்டாதனவாக நின்று மொழிபெயர்ப்புக்கே ஓர் அயல்தன்மையை அல்லது செயற்கைத்தன்மையை வழங்குவதுண்டு. பாரதிதாசன் பாடல்கள் சில இப்படித்தான் ஆங்கிலத்தில் வரும்பொழுது சரியாக ஒட்டாமல் நிற்பதைப் பார்த்திருக்கின்றேன். பாரதியின் தொடர்கள் பொதுத்தன்மைக்கேற்ப எளிதில் வளைந்து கொடுத்தன. தங்கள் அழகையும் நிலைநிறுத்திக் கொண்டன.

"நான்", சிட்டுக்குருவி, "நிலாவும் வான்மீனும் காற்றும்..." போன்ற பாடல்களை எடுத்துக் காட்டுகளாகக் காட்டலாம். தமிழிற்போலவே ஆங்கிலத்திலும் இனிய சுவை தந்து நிற்கும் இவை மொழிபெயர்ப்பாளனுக்கு நிறைவு தந்து நிற்கும். சீரிய படைப்புகள் என்று கூறலாம். அவற்றை மொழிபெயர்ப்பதே ஒரு இனிய பட்டறிவாக இருந்தது.

இருப்பினும் ஒரு மொழி மரபுக்கே உரிய தொடர்கள், சொல்முறைகளை முற்றும் தொடர்பில்லாத மற்றொரு மொழியில் பெயர்க்க நேர்கையில் ஓரிரண்டு இடர்ப்பாடுகள் நேரவே செய்கின்றன. முழு மொழிக்கே உரிய தனித்தன்மைகள் மொழிபெயர்ப்பில் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து இரு கருத்துகள் நிலவுகின்றன.

மூலமொழித் தொடர்கள், பின்புலங்கள் போன்றவை மொழிபெயர்ப்பில் வருகையில் பாடலுக்கு ஒருவகை அயல்தன்மையை வழங்குகின்றன. அத்தன்மை ஒலிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதொரு கருத்து.

அப்படியன்று; மூலமொழிப் படைப்பின் இயற்கை மணம், பின்புலம், தனித்தன்மை மொழிபெயர்ப்பில் கமழ வேண்டும். அதனால இவற்றைக் காட்டும் தொடர்கள் பொருள்வழி மொழிப்பெயர்க்கப்படாமல் சொற்பெயர்ப்பாகவே கொள்ளப்படலாம் என்றும் சிலர் கூறுவர். என்னைப் பொறுத்தவரை முழுதும் அப்படியோ, முழுதும் இப்படியோ போய்விடாமல் எந்த இடத்தில் எது பொருந்துமோ, நன்றாயிருக்குமோ அந்த இடத்தில் அதனைப் பெய்து கொள்ளலாம் என்பதே சரியாகத் தெரிகிறது.

நான் முன்பே கூறியதுபோல் பாரதி மொழிபெயர்ப்பில் எனக்குக் கடுமையான சிக்கலோ இடர்பாடோ ஏற்படவில்லை.

மாகாளி, "பராசக்கி" என்ற சொற்களை அடிக்கடி பாரதி கையாள்கின்றார். இவற்றைச் சில இடங்களில் காளி என்றும் சிலவிடங்களில் கிரேட் மதர் என்றும் பெயர்த்திருக்கின்றேன்.

வையகம் ஆள்பவரேனும் & சிறு

வாழைப் பழக் கடை வைப்பவரேனும்

என்ற பாட்டின் இரண்டாம் அடியை Keeper of a petty banana shop என்றுதான் முதலில் பெயர்த்திருந்தேன். ஆயினும் அடுத்த முறை பார்க்கையில் அதைக் கொஞ்சம் பொதுத் தன்மையோடு மாற்றி அமைக்கலாமோ என்று தோன்றியது. petty vendor by the street என்று திருத்தினேன்.

"எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்!'' என்று தொடங்கும் பாடலில் வரும் "இன்பம்" என்ற தொடரை முதலில் டீணிதூண் என்று பெயர்த்திருந்தேன். ஆனால் பாட்டில் அடுத்துவரும் செய்திகளைப் பார்த்தால் அவை இன்பம் தருவதைவிட உள்ளளத்தை வியப்புறுத்தும் செய்திகளாக இருப்பதால் wonders என்று மாற்றினேன்.

சென்றதினி மீளாது எனத் தொடங்கும் பாட்டின் இறுதிபடி "தீமையெலாம் அழிந்துபோம்; திரும்பி வாரா" என்பது.

All the ills will wither away

And will not come back

என்று முதலில் பெயர்த்திருந்தேன். ஆயினும் மீளப் பார்க்கையில் ஈற்று முதலடியே போதுமெனத் தோன்றியது. இறுதியடியை நீக்கிவிட்டேன். ஜெயபேரிகை கொட்டடா, காணி நிலம் வேண்டும் என்ற இரு பாடல்களையும் முதலில் நான் மொழிபெயர்த்தது அறுபதுகளின் பின் பகுதியில் என்று நினைக்கிறேன். மரபுசார் ஆங்கில யாப்பு முறையில் (அன்றைய அறிவுநிலைக்கேற்ப) இயைபுத் தொடை" அமையுமாறு பெயர்த்திருந்தேன். பல்லாண்டுகட்குப்பின் (1985 அளவில்) அவற்றை மீண்டும் பார்க்கையில் விடுதலைப் பாட்டாக மொழிபெயர்த்தால் நன்றாயிருக்குமே என்று தோன்றியது. எனவே இரண்டு பாடல்களையும் விடுதலைப் பா வடிவில் முற்றும் புதிதாக மொழி பெயர்த்தேன். உள்ளத்துக்கு நிறைவாயிருந்தது. ஆயினும் முதல் மொழிபெயர்ப்புகளையும் விட்டுவிட உள்ளம் வரவில்லை. அவற்றுக்கு முதல் வடிவம் என்றும் பிந்தியவற்றுக்கு இரண்டாம் வடிவம் என்றும் பெயரிட்டு வைத்துள்ளேன்.

இறுதியாகப் பாரதி பாடல்களில் மொழிபெயர்ப்பில் எனக்கேற்பட்டுள்ள பட்டறிவிலிருந்து எழுந்து நிற்கும் உணர்வு. "அடடா, பாரதிபாடல்கள் ஆங்கில மொழி பெயர்ப்பில் நன்றாக எடுபடுகின்றனவே, இன்னும் பல பாடல்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கலாமே'' என்பதுதான்.

நன்றி: காலச்சுவடு 2007

கருத்துகள் இல்லை: