01/09/2011

தமிழ் படைப்புகளின் தடங்கள் - மனுஷ்ய புத்திரன்

தமிழ்ப் புத்தக பதிப்புத் துறை இரண்டாயிரத்துக்குப் பின், முக்கியமான பல மாறுதல்களைச் சந்தித்துள்ளது. இந்த மாற்றங்கள் பல தளங்களிலும் நிகழ்ந்துள்ளன. புதிய தலைமுறைப் பதிப்பாளர்கள் பலரும் உற்சாகத்துடன் உள்ளே வந்த காலகட்டம் இது.

தமிழினி, காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு, அடையாளம், விடியல், சந்தியா, மருதா முதலான பதிப்பகங்கள், பல்வேறு நிலைகளில், நவீன தமிழ் இலக்கியத்தின் பெரும் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உருவெடுத்துள்ளன. இந்தப் பதிப்பகங்களின் வருகை, தமிழ்ப் பதிப்புலகின் முகத்தை முற்றிலுமாக மாற்றியமைத்துவிட்டன. க்ரியாவும் அன்னமும் முன்னோடிகளாக இருந்து உருவாக்கிய பாதையில், தமிழ் நூல்களின் உருவமும் உள்ளடக்கமும் தீவிரமான மாறுதல்களை அடைந்தது மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளனின் பிரசுரம் சார்ந்த, நெருக்கடிகள், பெருமளவு தீர்க்கப்பட்டுவிட்டன என்றே சொல்லவேண்டும். இன்று தனித்துவமான அடையாளத்துடன் எழுதவரும் ஒரு இளம் படைப்பாளி, தனக்கான பதிப்பகத்தைத் தேர்வு செய்கிற அல்லது அவனுடைய நூலைப் புதுப்பிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் போட்டியிடுகிற சூழல் உருவாகி வருகிறது. அத்தகைய பிரசுரம் சார்ந்த தொடர்புகள் இல்லாதவர்கள் கூட, இன்றைய பணமதிப்பில் அவ்வளவு முக்கியமில்லாத தொகையினைக் கொண்டு தாமாகவே தமது புத்தகங்களைப் பதிப்பித்துக் கொள்கிற அளவுக்கு அச்சு சார்ந்த தொழில் நுட்பம் அனைவருக்கும் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது.

இப்போது தமிழ்ப் பதிப்புலகில் நிகழ்ந்துவரும் இன்னொரு முக்கிய மாற்றம், பெரிய நிறுவன பலம் கொண்ட பதிப்பகங்கள் உருவாகி வருவதாகும். சில முக்கியமான ஆங்கில பதிப்பகங்கள் தமிழ் நூல் பதிப்பில் ஈடுபடும் முயற்சியை மேற்கொண்டுள்ளன. சிறிது காலத்திற்கு முன்பு, மலையாளத்தின் முன்னணி பதிப்பகம் ஒன்று தமிழ்ப் பதிப்புத் துறைக்குள் நுழைய ஆர்வத்துடன் சில முயற்சிகளை மேற்கொண்டது. எழுத்தாளர்களுக்குக் காப்புரிமையை முன் பணமாக அளித்து பிரதிகளை வாங்குதல், ஒரு எழுத்தாளரின் மொத்த படைப்புகளின் பதிப்புரிமையை வாங்குதல், திட்டமிட்ட வகையில் பிரதிகளை உருவாக்குதல் போன்ற முயற்சிகள், ஏற்கெனவே தமிழில் தொடங்கிவிட்டன. ஒரு காலத்தில் மலையாளத்தில் இருந்த பல்வேறு பதிப்பகங்களை டிசி புக்ஸ் படிப்படியாக விழுங்கி, இன்று தனிப் பெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமக்கென கேரளா முழுக்கச் சொந்த வினியோக கட்டமைப்பையும் அது பெற்றிருக்கிறது. அதுபோன்ற ஒரு ஏகபோகம் தமிழில் நிகழுமா என்று திட்டவட்டமாகச் சொல்ல இயலவில்லை. ஏனெனில், தமிழ்ப் புத்தகச் சந்தை பெரிய நிறுவனங்களைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்குப் பெரியதா என்பதை நிர்ணயிப்பது கடினமாக உள்ளது. இப்போது பெரிய அளவிலான பதிப்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பதிப்பகங்கள் ஒரு பரிசோதனைக்கால சூதாட்டத்திலேயே ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், தமிழில் இலக்கிய தத்துவார்த்த கோட்பாடுகள் சார்ந்த பதிப்புரை காலகட்டம் ஒன்று இருந்தது. இன்று அது கிட்டத்தட்ட மறைந்துவிட்டது என்றே சொல்லலாம். போட்டியும் சந்தை நெருக்கடிகளும் பதிப்பாளர்களின் செயல்பாடுகளை முற்றிலுமாக மாற்றியமைத்து வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்தகக் கண்காட்சியின் பெரும் வெற்றிக்குப் பிறகு, தமிழகமெங்கும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு வருகை தரும் மக்களின் கூட்டமும், குறிப்பிடத் தகுந்த விற்பனையும், புத்தகங்கள் எதிர்காலத்தில் தமிழர்களின் கலாச்சார வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. சென்ற ஆண்டில் மதுரை புத்தகக் கண்காட்சியில் மக்கள் காட்டிய ஆர்வம், மிகவும் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. கூட்டம் விற்பனையை நேரடியாகப் பிரதிபலிப்பதில்லை. ஆனால், புத்தகங்களின் இருப்பை அங்கீகரிப்பதே ஒரு சாதகமான மாற்றத்தின் விளைவு என்று தோன்றுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் முனைந்தால், சென்னை, மதுரையில் மட்டுமல்ல ஈரோடு, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய பிற முக்கிய மையங்களில் பிரமாண்டமான புத்தகக் கண்காட்சிகளை நடத்த முடியும். தமிழகமெங்கும் புத்தகக் கண்காட்சிகளை நடத்துவதில், பல்வேறு சாதகமான அம்சங்கள் பதிப்பாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இருக்கின்றன. தமிழில் பதிப்பகங்கள், வெளிவரும் நூல்களின் எண்ணிக்கை பெருகிய அளவுக்கு, விற்பனை மையங்கள் இல்லை என்பதே உண்மை. அனைத்து முன்னணி பதிப்பகங்களின் நூல்களையும் விற்பனைக்கும் காட்சிக்கும் வைக்கக்கூடிய அளவுக்கு, இடவசதிகொண்ட விற்பனை மையங்களின் என்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். பல சமயங்களில், புத்தகங்கள் பதிப்பாளரின் சரக்குக் கிடங்கிலிருந்து விற்பனையாளரின் சரக்குக் கிடங்கிற்குச் செல்கின்றன. மேலும் குறிப்பிட்ட சில முன்னணி நூல் விற்பனையாளர்கள் தவிர்த்து, பல நூல் விற்பனையாளர்கள் பதிப்பாளர்களுக்கு நெருக்கடியையே ஏற்படுத்துகின்றனர். ஏமாற்றுகிறவர்கள் சிலர் என்றால், ஏமாற்றும் நோக்கமற்று வர்த்தகம் சார்ந்த சிக்கல்களில் மாட்டிக்கொண்டு பதிப்பாளர்களுடன் முறையான வர்த்தக உறவுகளைப் பலருக்கும் பேண முடிவதில்லை. ஐம்பதாயிரம் ரூபாய் தரவேண்டியிருந்தால் ஐந்தாயிரம் ரூபாய்க்குப் பின் தேதியிட்ட காசோலை வழங்குவதில் தொடங்கி, தவறான கையிருப்புக் கணக்கு காட்டுவது வரை, சங்கடம் தரும் காரியங்கள் பெரும்பாலும் நடைபெறுகின்றன. வேறு சில சிறு விற்பனையாளர்கள், ஒரு முறை நூல்களை வாங்கிவிட்டு பதிப்பாளருக்கு பணம் செலுத்தாததுடன், மீண்டும் நூல்களையும் வாங்குவதில்லை. இதனால் நூல்கள் தொடர்ந்து வாசகர்களின் பார்வைக்குக் கிடைப்பதில்லை.

நூல்களை விரிவான அளவில் காட்சிப்படுத்துவதற்கு இன்றுள்ள ஒரே வாய்ப்பு, புத்தகச் சந்தைகள் மட்டுமே. ஊடகங்கள் புத்தகங்களைக் கடுமையாகப் புறக்கணிக்கின்றன. பல முக்கியமான நூல்கள் சிறு குறிப்புகள் கூட எழுதப்படாமல் மறைக்கப்படுகின்றன. இலக்கிய இதழ்களில் வரும் நூல் அறிமுகங்கள் தனிப்பட்ட உறவுகளைப் பொறுத்தவையாக மாறிவிட்டன. இந்நிலையில், புத்தகக் கண்காட்சிகள் மட்டுமே நூல்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஒரே திறந்த வெளியாக இருக்கிறது. புத்தகக் கண்காட்சிகளில் திரளும் பெருங்கூட்டத்தில் ஒரு பகுதி, தவிர்க்க இயலாமல் வருங்காலத்தில் வாசகப் பரப்பாக மாறவே செய்யும்.

தமிழகத்தின் பொது நூலகக் கட்டமைப்பு பிரமாண்டமானது ஆகும். ஏராளமான கிளை நூலகங்களுடன் குக்கிராமங்களில்கூட இந்த நூலகக் கட்டமைப்பு பரந்து விரிந்துள்ளது. இந்த நூலகக் கட்டமைப்பு முறையாகப் பராமரிக்கப்பட்டால், அது மிகப் பெரிய கண் திறப்பு என்பதில் சந்தேகமில்லை. என்னுடைய இளமைக்கால வாசிப்பு நினைவுகள் அனைத்தும் எனது கிராமத்துப் பொது நூலகத்தோடு தொடர்புடையது. ஒரு நூலின் ஒரு பதிப்பு வரும்போது, அதன் பிரதிகள் சில நூறு தனி நபர்களின் சொத்தாக மறைந்துவிடுகின்றன. பிறகு, அவை எவ்வளவோ காலத்திற்குப் பிறகு மறு பதிப்பு வருகின்றன. அல்லது வராமலேயே போய்விடுகின்றன. ஆனால், பொது நூலகங்கள் வழியாகவே அந்த நூல் பரந்துபட்ட வாசகர்களின் கவனத்திற்கு வருகிறது. அடுத்த தலைமுறை வாசகர்களிடையே போய்ச் சேருகிறது. ஆனால், கிளை நூலகங்களில் போதிய இட வசதியின்மை, நூலகர்களின் வாசக விரோத மனப்பான்மை காரணமாக, பல நூல்கள் பாதுகாக்கப்பட முடியாமல் போகின்றன. இவற்றையும் மீறி இன்றும் தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களில் எங்கும் காணக் கிடைக்காத எண்ணற்ற அரிய நூல்கள் மறைந்து கிடக்கின்றன. பொது நூலகத்துறையைச் சீரமைப்பது, உண்மையில் ஒரு மிகப் பெரிய பண்பாட்டுக் கடமை, கல்விக் கடமை என்பதில் சந்தேகமில்லை. கலைஞரின் தி.மு.க அரசு பொது நூலகத் துறை தொடர்பாக, சாதகமான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முன்வந்திருக்கிறது. நூலகத்திற்கு 1000 பிரதிகள் வாங்குவது என்ற தி.மு.க. அரசு அறிவிப்பு, தமிழ்ப் பதிப்புத் துறையினைப் பெரிதும் உற்சாகப்படுத்தக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. நூலகத் துறைக்குப் பொறுப்பான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நூலகத் துறையினைச் சீரமைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருவது, மிகவும் ஆரோக்கியமான ஒரு அறிகுறி. முதன் முறையாக இலக்கிய இதழ்கள் பொது நூலகத்திற்கு வாங்கப்படும் சூழல், தி.மு.க ஆட்சியிலேயே உருவாகியிருக்கிறது. இது நவீன இலக்கியம் சார்ந்து பார்வைகளைப் பரவலாக்குவதற்கான முக்கியமான செயல்பாடு.

பொது நூலகத் துறையில் சீர்படுத்த வேண்டிய முக்கியமான பல பிரச்சினைகள் இருக்கின்றன. மதிப்பு வாய்ந்த நமது பொது நூலகக் கட்டமைப்பின் பெரும்பகுதியை போலி நூல்களே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. நூலக ஆணையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த நூல்கள் மொழிக்கோ, பண்பாட்டிற்கோ, படைப்பிலக்கியத்திற்கோ, சமூகத்திற்கோ, தனிமனிதர்களுக்கோ எந்த வகையிலும் பயன் சேர்க்காதவை. அரசு பொது நூலகத் துறைக்கு ஒதுக்கும் பணத்தின் பெரும் பகுதி, எந்த நியாயமும் இல்லாமல் இந்த நூல்களுக்குப் போய்ச் சேர்கின்றன. அரிய உழைப்பினால் உருவான பல நூல்களுக்கு நூலக ஆணை கிடைப்பதில்லை. பொது நூலகத் துறையினையே இலக்காகக் கொண்டு செயல்படும் சில பதிப்பாளர்களே, ஆயிரம் பிரதிகள் வாங்குவது என்ற அரசின் முடிவையும் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கினால், நல்ல நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்களுக்கு அதனால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை. மாறாக, இப்போது அடைவதுபோல இன்னும் அதிக அளவிலான குப்பைகள் நமது பொது நூலகங்களில் அடையும்.

பொது நூலகங்களுக்கான தேர்வு முறை வெளிப்படையானதாக அமைய வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்தப் பதிப்பகங்களிடமிருந்து எவ்வளவு மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன என்பதை அரசு வெளிப்படையாக அறிவிப்பதுடன் வாங்கப்பட்ட நூல்கள் குறித்த விவரத்தைத் தகவல் பெறும் உரிமையின் கீழ் யாரும் சுலபமாகக் கேட்டுப் பெற வழிவகை செய்தல் அவசியம். இதன் மூலம் முறைகேடான பதிப்பாளர்களை இனம் காண முடியும். இப்போது இருப்பது போன்ற பொத்தாம் பொதுவான தேர்வுமுறை ஆபத்தானது. பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் கொண்ட ஒரு குழு இதற்காக நியமிக்கப்படுவது மிகவும் முக்கியம். மேலும் தகுந்த காரணமின்றி நிராகரிக்கப்பட்ட நூல்கள், மறு பரிசீலனைக்கு ஏற்கப்படுவதற்கான நியாயமான ஏற்பாடு ஒன்று இருக்க வேண்டும்.

பொது நூலகத் துறையின் நூல்களுக்கான விலை நிர்ணயம், போலி புத்தகப் பதிப்பாளர்களுக்கே இலாபகரமானதாக இருந்து வருகிறது. தரமான நூல்களைத் தயாரிக்கும் பதிப்பாளர்கள் இதனால் நெருக்கடியையே சந்திக்கின்றனர். காகித விலையேற்றம், நூல் தயாரிப்பின் தரம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு விலை நிர்ணயம் செய்வது முக்கியம்.

தமிழ் சினிமாவுக்குக் காட்டப்படும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு, தமிழ் நூல்களுக்குக் காட்டப்பட்டால், தமிழ்ப் பதிப்புலகில் ஒரு மலர்ச்சி தோன்றும். இது மறுமலர்ச்சிக்கு உரிய காலகட்டம்.

நன்றி: தீராநதி 2007

கருத்துகள் இல்லை: