21/08/2011

திருவிளையாடற் கதைகளில் நாட்டுப்புறக் கூறுகள் - முனைவர் சி. அயோத்தி

ஆரம்ப கால மக்களின் உள்ளங்களில் நம்பிக்கையின் அடிப்படையில் கருக்கொண்டு எழுந்த கருத்துக்களின் வெளிப்பாடாகவே புராணங்கள் உருக்கொண்டிருக்க வேண்டும். அவற்றுள் மதம், சமயம் தொடர்புடைய கதைகள், அரசர்கள், முனிவர்கள், மக்களுடைய பழக்கம், வழக்கங்கள், பழங்கால வரலாறு, கடவுளைப் பரவிப் பயன் பெற்ற அடியார்களின் மாண்பு ஆகியனவற்றோடு நாட்டுப்புறக் கூறுகளும் பொதிந்துள்ளன. அவ்வகையில் பெரும்பற்றப்புலியூர் நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோரால் புராண வடிவம் பெற்றுள்ள திருவிளையாடற் கதைகளில் வெளிப்பட்டுள்ள நாட்டுப்புறக் கூறுகளை மேலோட்டமாகக் காணும் முயற்சியாக இக்கட்டுரை அமைகின்றது.

புராணங்களைப் பழைய வரலாறு எனவும் பழங்கதை எனவும் அறிஞர்கள் கருத்துரைக்கின்றனர். நாட்டுப்புறக் கதைகளைப் புராணக் கதைகள் (Myth) எனவும், பழமரபுக் கதை (Legend) எனவும், நாட்டுப்புறக் கதைகள் (Folktale) எனவும் மூவகைகளாகப் பகுத்துப் பார்க்கின்றார். வில்லியம் பாஸ்கம் என்னும் மேனாட்டு அறிஞர். (மேற்கோள் விளக்கம் சு. சக்திவேல் ப.69) ஒரே மாதிரியான கதை ஒரு சமூகத்தில் நாட்டுப்புறக் கதையாகவும், மற்றொரு சமூகத்தில் பழமரபுக் கதையாகவும், வேறொரு சமூகத்தில் புராணக் கதையாகவும் அமைவது உண்டு என்றும் அவரே கருத்துரைக்கின்றார் (ப.152). புராணக்கதை, பழங்கதை, பொதுமக்கள் கதை (popular Tale) என நாட்டுப்புறக் கதைகளை முப்பெரும் பிரிவுகளாகப் பிரிட்டானிகா கலைக் களஞ்சியம் இனங் காண்கின்றது என்ற செய்தியினையும் சு. சக்திவேலின் நாட்டுப்புற இயல் நூல் வாயிலாகவே அறிகின்றோம் (ப.71). எனவே புராணம் என்பதனைப் பழமை எனப் பொருள்கொண்டு திருவிளையாடற் கதைகளில் இலைமறை காயாக உணரப்படும் நாட்டுப்புறக் கூறுகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.

சங்கப்பலகை குறித்த புராணக் குறிப்பு:-

மதுரையில் சங்கம் இருந்து தமிழாராய்ந்த செய்தியினை எழுத்திலக்கியம் வாயிலாக முதன் முதலில் இறையனார் களவியல் உரை மூலமாகத்தான் அறிகின்றோம். ஆனால் அதற்கு முன்பே அச்செய்திகள் மக்கள் மத்தியில் வாய்மொழிச் செய்திகளாகக் காலந்தோறும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். சங்கப் புலவர்கள் தத்தமது புலமைத் திறத்தால் தமக்குள் மனம் வேறுபட்டுப் புலமைப் போட்டி உடையவர்களாகத் திகழ்ந்தனர் என்பதனைத் திருவிளையாடற் கதை வாயிலாகத்தான் நாம் அறிகின்றோம். சங்கப் புலவர்களின் அறிவுத் திறமையை எடைபோட்டுப் பார்ப்பதற்காக (பரிசோதிப்பது) இறைவனால் அளிக்கப்பட்ட சங்கப் பலவை பற்றிய குறிப்பினைச் சங்க இலக்கியங்கள் வழி எவ்விடத்திலும் அறிய இயலவில்லை. தமிழச் சங்கத்தோடு தொடர்புடைய இத்திருவிளையாடற் கதை நாட்டுப்புற மக்களிடையே வழிவழியாகப் பலகாலும் பயிலப்பட்டுப் பின்னாளில் புராணமாகத் தோற்றம் கண்டிருக்க வேண்டும்.

''கொங்குதேர் வாழ்க்கை'' பாடலின் தெய்வீகப் புனைவு:-

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி எனத் தொடங்கும் குறுந்தொகையின் இரண்டாம் பாடல் தலைவன் தலைவியை நலம் புனைந்துரைத்தல் என்றும் அகத்திணைத் துறை விளக்கத்திற்குச் சான்றாக பாடப்பட்டுள்ளது. மலரை நாடிவரும் வண்டினைப் பார்த்து எம் தலைவியின் கூந்தலில் உள்ள மணத்தைப் போல் நீ வேறு எங்கும் கண்டதுண்டா? என்று தலைவன் வினவும் பாங்கில் அப்பாடல் பொருண்மை அமைகின்றது. ஆனால் பிற்காலத்தில் அப்பாடலுக்குத் தெய்வீகத் தன்மை ஏற்றப்பட்டு அதுவே புராணக் கதையாக உருவெடுத்துள்ளது. இதேபோல் பதினோராம் திருமுறையின் முதற்பாடலாக அமைந்த திருவாலவாயுடையார் திருமுகப் பாசுரம் என்ற பாடலின் கருத்தாக்கத்திலும் திருவிளையாடற் கதையொன்று உருவாக்கம் பெற்றுள்ளது.

பாண்டிய மன்னனாகிய சண்பக மாறனுக்குத் தம் மனைவியின் கூந்தலில் உண்டாகிய மணத்தின் பொருட்டு ஐயம் ஏற்பட்டதாகவும், அதனைத் தீர்த்து வைப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று மன்னன் ஆணையிட்டதாகவும், அதன் பொருட்டு ஏழைப் புலவன் தருமிக்கு இறைவனே இப்பாடலை எழுதிக்கொடுத்து அனுப்பியதாகவும், அப்பாட்டில் பொருட் பிழை கண்ட தலைமைப் புலவனாம் நக்கீரனை இறைவன் நெற்றிக்கண் காட்டித் தண்டித்ததாகவும் அமைகின்ற தருமிக்குப் பொற்கிழி அளித்த இத்திருவிளையாடற் கதையொன்று இப்பாடலின் பின்விளைவாகப் புராண வடிவம் பெற்றுள்ளது. பாடலைப் பாடிய புலவர் இறையனார் என்ற பெயரைக் கொண்டிருப்பதனால் மதுரைக் கடவுள் சிவபெருமானே இறையனார் என்ற புலவர் வடிவில் தமிழ்ச் சங்கத்திற்கு வந்திருந்து தாம் எழுதி அனுப்பிய பாடல் பிழையற்றது என்று வாதிட்டு வென்றதாகப் புராணத் தோற்றம் காலப்போக்கில் ஏற்பட்டு இருக்கின்றது.

நெற்றிக் கண்ணின் வெப்பத்தைப் பொறுக்க மாட்டாது பொற்றாமரைக் குளத்தினில் விழுந்த நக்கீரன் தன் தவறுணர்ந்து இறைவனை நோக்கி கயிலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதியினைப் பாடி வழிபட அது கேட்டு மகிழ்ந்த இறைவன் நக்கீரனைக் கரையேற்றியதாகவும், கதைப்போக்கு கூடுதலாக வளர்ச்சி பெறுகின்றது. அதன் தொடர்ச்சியாக இலக்கணப் புலமையில் குறைவுபட்ட நக்கீரனுக்கு இலக்கணம் கற்றுக் கொடுத்த கதையும் உருவாகியுள்ளது. இக்கூந்தலின் மணம் போல் வேறுமணம் உண்டா? என்ற சங்கப்பாடலின் செய்தி கூந்தலுக்கு இயற்கையிலே மணமுண்டா? அல்லது செயற்கையாக மணம் ஊட்டப்படுகின்றதா? என்ற விவாதச் சிந்தனையாக உருமாறி அதன் பொருட்டு இறைவனால் பல்வேறு திருவிளையாடல்கள் இந்த மண்ணுலகில் நடத்தப்பட்டுள்ளன. இப்புராணக் கதைகள் யாவும் ஆரம்ப நிலையில் தமிழகமெங்கும் செவிவழிச் செய்தியாக அமைந்து வாய்மொழி இலக்கியப் பாங்கில் சொல்லப்பட்டு அதன்பின்பு கவிவல்லவர்களால் புராணங்களாக எழுதப்பட்டிருக்க வேண்டும். எளிய நிலைக் கவிதையொன்று தத்துவார்த்தமுலாம் பூசப்பட்டு நாட்டுப்புறக் கதைகள் என்ற நிலையில் இருந்து வளர்ச்சி பெற்று திருவிளையாடற் கதைகளாக முகிழ்த்துள்ளன. இப்பாடல் அரங்கேற்றம் செய்யப்பெற்ற சங்கத்தோடு தொடர்புடையனவாகச் சங்கத்தார் கலகந் தீர்த்தது, இடைக்காடன் பிணக்குத் தீர்த்தது என்ற கதைகளும் மக்களால் பேசப்பட்டு ஒரு சேரத் திரட்டப்பட்டுள்ளன.

அற்புத நிகழ்வுக் கூறுகள்:-

புராணம் எனப்படுகின்ற பழங்கதை, மன்னர்கள், வீரர்கள் பற்றிய அற்புத நிகழ்ச்சிகளைத் தொகுத்தமைந்த வீரக்கதைகளாகவும், சமூக நிகழ்ச்சிகளில் அற்புதங்களாய் அமைந்த நாட்டுப்புறக் கதைகளாகவும் இருவேறு வகையாக அமைவதுண்டு என்பார் தமிழண்ணல். (திருவிளையாடல் சொற்பொழிவுகள் (ப.352). மக்களிடையே வழங்கப்பட்டுச் சமூக நிகழ்ச்சிகளில் அற்புதங்கள் பல நிகழ்த்திக் காட்டிய செயல்களில் இருந்து கிளைத்தெழுந்து வாய்மொழியாக வழங்கும் நாட்டுப்புறக் கதைகளின் அடிப்படையில்தான் பெரும் புராணங்கள் பெரிதும் பிறக்கின்றன என்ற தமிழண்ணலின் கூற்று (மேலது, ப.352) இக்கட்டுரைக்குப் பெரிதும் வலுச் சேர்ப்பதாக அமைகின்றது. இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் நாட்டுப்புறக் கதைகளாக மக்களிடையே வழங்கிப் புராண வடிவம் பெற்ற அற்புத நிகழ்வுகளைக் கொண்ட பல கதைகள் திருவிளையாடல்களாகப் பாடப்பட்டுள்ளன.

குண்டோதரன் உணவருந்தியது. அவனுக்காக அன்னக்குழியும் வையையும் அழைத்தது, எழுகடல் அழைத்தது, மலையத்துவசனை அழைத்தது, கடல் சுவற வேல்விடுத்தது, மேரூவைச் செண்டினால் அடித்தது, கடலை வற்றச் செய்தது, கல்லானைக்குக் கரும்பு அருந்தியது, உலவாக்கிழி, உலவாக்கோட்டை அருளியது, இரசவாதஞ் செய்தது, தண்­ர்ப் பந்தல் வைத்தது, நரி பரியாக்கியது, பரி நரியாக்கியது முதலில் பல திருவிளையாடல்கள் அற்புத நிகழ்வினை மையமிட்டதாகவே அமைகின்றது. பெரும்பகுதித் திருவிளையாடல்களில் இறைவனது அற்புதங்கள் மண்ணக உயிர்களுக்குப் பயன்படும் நோக்கில் நடத்திக் காட்டப்பட்டுள்ளன. எளியவர்களுக்கு இரங்குபவனும் தீயன களைந்து நல்லன பல செய்பவனும் மக்களுள் இறையெனப் போற்றப்படுவது உறுதி. அவன் குறித்த கதைகள் முதலில் வாய்மொழியாகப் பேசப்பட்டு அதன் பின்பு எழுத்து வடிவம் பெறுவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது. இந்நிகழ்வுகள் பல நாட்டுப் புறகதைகளின் தோற்றுவாயாகும். அரும்பெரும் செயல்கள் செய்தவர்களைக் கடவுளாக்கிக் காட்டினார்கள் என்ற கருத்து தொன்மையாகும் என்றுரைக்கும் சு. சக்திவேலின் (மு.நூ.ப.153) கருத்து வெளிப்பாடு இதனுடன் ஒருங்கு வைத்து எண்ணத்தக்கதாகும்.

புராணப் பழமரபுக் கதைகள்:-

புராணப் பழமரபுக் கதைகள் எண்ணற்றவை தமிழகத்தில் காணப்படுகின்றன. ஆழ்வார்கள் பற்றியும் நாயன்மார்கள் பற்றியும் கூறப்படும் பல கதைகள் நாட்டுப்புறக் கூறுகளை உள்ளடக்கிய பழ மரபுக்கதைகள் ஆகும். பெரிய புராணம் முந்தைய காலத்தில் வழங்கிவந்த பழமரபுக் கதைகளின் தொகுப்பு ஆகும். இதனைப் புராணம் என்பதைவிடப் புராணப் பழமரபுக் கதை என்பதே சரியாகும் என்கின்றார் தே.லூர்து அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிவாசகர், பன்னிரு ஆழ்வார், குமரகுருபரர் பற்றிய பல கதைகள் பழமரபுக் கதைகளே என்றும் வலியுறுத்துகின்றார் (நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள், ப.256).

பெரிய புராணத்தை எழுதப் புகுந்த சேக்கிழார், நாயன்மார்கள் பிறந்த ஊர்கள் தோறும் சென்று மக்கள் வழக்காற்றில் பேசப்பட்ட செவிவழிச் செய்திகளையும் மனத்துட் கொண்டு புராணம் இயற்றினார் என்ற செய்தி பலகாலும் பேசப்படுவதுண்டு. அமைச்சர் பெருமானாகிய ஆசிரியர் அரசாங்கச் செலுத்தலில் தாங்கண்ட கல்வெட்டு, செப்பேடு முதலிய சாசனங்களாலும் உலக வழக்கில் வழிவழி வந்த உண்மைச் சரித வரலாறுகளையும் அவை பற்றி அங்கங்குமுள்ள சான்றுகளும் பிறவும் பெரிய புராணத்திற்கு ஆதாரமாகின என்னில் இழுக்காகாது என்று பெரிய புராண வரலாறு உரைக்கும் சி.கே. சுப்பிரமணிய முதலியார் கூற்றில் (திருத்தொண்டர் புராணம் மூலம், ப.8) பெருமளவு உண்மை இருக்கத்தான் வேண்டும். திருவிளையாடற் புராண நூல்களை இயற்றிய நம்பியும், பரஞ்சோதியும் வடமொழிப் புராணத்தை மூல நூலாகக் கொண்டு எழுதியதாக நூல் வரலாறு உரைக்கின்றது ஆனால் அதே வேளையில் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் வரலாற்றோடு தொடர்புடைய திருவிளையாடல் கதைகளை மதுரையுடன் தொடர்புடைய நாட்டுப்புறக் கதைகளாக எண்ணுவதற்கும் இடமுள்ளது. பாண்டியன் சுரந் தீர்த்தது. சமணரைக் கழுவேற்றியது, வாதவூரடிகளுக்கு உபதேசித்தது, நரி பரியாக்கியது பரி நரியாக்கியது போன்ற அவர்தம் வாழ்வியலோடு தொடர்புடைய கதைகள் பலவும் வாய்மொழி இலக்கியங்களாகப் பேசப்பட்டே புராண வடிவம் பெற்றிருக்க வேண்டும்.

மாணிக்கவாசகர் தம் கீர்த்தித் திருவகலில் எண்ணற்ற அருட் செயல்களை விவரிக்கின்றார். ஒரே பொருண்மையுடைய திருவிளையாடல் நூல்களை இயற்றிய இருபெரும் புலவர்களாகிய நம்பி, பரஞ்சோதி ஆகியோர் நூல்களில் இடம்பெற்ற திருவிளையாடல்களிலேயே முரண்பாடு உள்ளது. நம்பி சொல்லியுள்ள சில திருவிளையாடல்களை பரஞ்சோதி விடுத்துச் செல்கின்றனர். காண்டப் பகுப்பு என்பது நம்பியில் இல்லை. படலப் பகுப்பில் சில இடங்களில் இருவரும் முன்பின் கதையமைக்கின்றனர். எனவே இது போல் நூற்றுக்கணக்கான திருவிளையாடல்கள் மக்களின் பேச்சு வழக்கில் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுபத்து நான்கு திருவிளையாடல்களே இலக்கியச் சிம்மாசனம் ஏறியிருக்க வேண்டும் என்று நினைப்பதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.

சாட்சி சொன்ன இறையருட்சிறப்பு:-

மங்கையின் கற்புக்கு அஃறிணை பொருள்களாகிய வன்னிமரமும் மடைப் பள்ளியும் நேரில் வந்து சான்று சொன்னதாக சிலப்பதிகார வஞ்சினமாலையில் குறிப்பொன்று உள்ளது. இது குறித்த வாய்மொழிக் கதையொன்று திருப்புறம்பயத்தும், திருமருகலிலும் இன்றும் வழங்கப்பட்டு வருவதோடு நினைவுச் சின்னங்களும் அவ்விடங்களில் உள்ளன என்று உ.வே. சாமிநாதய்யர் அடிக் குறிப்பு விளக்கம் தருகின்றார். திரும்புறம்பயத்து இறைவனுக்கு சாட்சி நாத ஈஸ்வரர் என்ற பெயரும் வழங்கி வருவதைக் காண்கின்றோம். இக்கதையே சிறிது மாறுபட்டு வன்னியும் கிணறும் இலிங்கமும் வந்து சாட்சி சொன்னதாகத் திருவிளையாடற் கதையில் விரிவடைந்துள்ளது. அஃறிணைப் பொருளோடு இறைவனும் வந்து சாட்சி சொன்னதை மெய்ப்பிக்கும் வண்ணம் நம்பி இக்கதைக்குச் ''சான்றழைத்த திருவிளையாடல்'' என்றே அமைக்கின்றார். இவ்வாறு ஒரே கதை இருவேறிடங்களில் இருவேறு விதமாகச் சொல்லப்பட்டாலும் வாய்மொழி இலக்கியங்களின், தன்மையோடு மிகவும் பொருந்தி வருகின்றது. இடம் விட்டு இடம் பெயர்ந்து மாற்றமடையும் இவ் இலக்கியத்திற்கு ''மிதப்பு இலக்கியம்'' (Foloating Literature) என்ற பெயர் நாட்டுப் புறவியலில் உண்டு என்பதனைத் தமிழண்ணல் கூற்றின் வழி அறிகின்றோம். (திருவிளையாடற் சொற்பொழிவுகள். ப.357)

''எது தொன்றுதொட்டு இன்றுவரை பரவியிருக்கின்றதோ அதுவே புராணம்'' என்று வாயுபுராணம் உரைத்துள்ள விளக்கத்தினை நாம் நாட்டுப்புறக் கதைக் கூறுகளோடும் பொருத்திக் காணலாம். மக்களுடைய எண்ணங்களில் குடிகொண்டு நீங்கா இடம்பெற்று பரம்பரை பரம்பரையாகக் காலந்தோறும் வாய்மொழி இலக்கியங்களாக அமைந்த கதைக் கூறுகளே பின்னாளில் நூல் உருவில் புராணத் தோற்றம் கொள்கின்றன. ஏடெடுத்து எழுதும் திறனும் வாய்ப்பும் பெற்றிராத நாட்டாரிடம் கால் கொண்டிருந்த சில தனித்த கூறுகள் மட்டும் இக்கட்டுரையுள் ஓரளவு இனங்காணப்பட்டுள்ளன. இவை போலவே நம்பிக்கைகள், அதன் வழி நிலை கொள்ளும் சடங்குகள், சம்பிரதாயங்கள், நிமித்தங்கள், கனவுகள், ஆசரீரி, பழமொழிகள், அகச்சான்றுகள் ஆகியன குறித்த நாட்டுப்புறக் கூறுகளையும் புராணக் காட்சிகளோடு பொருத்திப் பார்த்து வருங்காலத்தில் பட்டியலிட்டுத் தொகுப்பதற்கு இக்கட்டுரை பயன்படும்.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: