24/08/2011

திருநாவுக்கரசர் தேவாரத்தில் பழமொழிகள் - முனைவர் ப.ஞானம்

''பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்

பாட்டின் இயல பண்ணத் திய்யே'' (தொல்.பொருள்.செய். 482)

எனத் தொல்காப்பியர் ''பண்ணத்தி'' எனக்கூறும் இலக்கியவகை நாட்டுப்புறப் பாடல்களையே குறிப்பன எனலாம். ''பழம் பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி'' எனப் பேராசிரியர் உரைகூறும் திறன் சிந்திக்கத்தக்கது. இப் பண்ணத்தியை நாடோடி இலக்கியம் அல்லது வாய் மொழி இலக்கியம் என்றும் கூறுவர். (அ.மு பரமசிவானந்தம், வாய்மொழி இலக்கியம், ப.51) பண்ணொடு பொருந்தி வருவதும், எளிமையான சொல்லமைப்புகளைக் கொண்டதும், தொடர்கள் திரும்பத் திரும்ப வருவதும், அனைவராலும் எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கதாக இதன் இயல்புகளை வரையறுக்கலாம்.

பொது மக்கள் இலக்கியமாகப் போற்றப்படும் பக்திப்பாடல்களான தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற பாடல்களிலும் நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது. நாட்டுப்புற இலக்கியங்கள் மக்களின் இயல்பான எளிய வாழ்க்கையிலிருந்து எழுந்தனவாகவும், சோர்வை நீக்கி மகிழ்ச்சி தருவனவாகவும் விளங்குகின்றன. திருவாசகத்தில் காணப்படும் கோத்தும்பி, தெள்ளேணம், திருச்சாழல், தோணோக்கம், பழமொழி போன்ற வாய்மொழி இலக்கியக்கூறுகள் மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ளமையும் உள்ளம் கொள்ளத்தக்கது.

பக்தி இயக்க தொடக்க காலமாகிய கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் சமணம் முளைத்திருந்த அக்கால கட்டத்தில் சைவ சமயச் சான்றோர்கள் தமிழ் மக்களைச் சைவ நெறியிலே செலுத்தக் கல்லையும் கனிவிக்கும் பக்திப் பாடல்களைத் தலங்கள் தோறும் சென்று பாடி வந்தனர். நாட்டுப்புற மக்களின் அன்றாட வாழ்விலே இடம் பெறும் ஆட்டங்கள், விளையாட்டு, தினைகுற்றுதல், சுண்ணம் இடித்தல், கும்மி கொட்டுதல், ஊசல் விளையாட்டு போன்ற செயல்களைச் சைவ, வைணவ அடியார்கள் தம் பாடல்களிலே இடம் பெறச் செய்து இறை உண்மையை விளக்கியுள்ளார்கள். அம்மானை, உந்தியார், ஏசல், தாலாட்டு, கோத்தும்பி, கோலாட்டம், பூவல்லி, வள்ளைப்பாட்டு, விடுகதை, பழமொழி, வில்லுப்பாட்டு போன்றவை பெரும்பாலும் சமயச் சார்புடைய நாட்டுப்புற இலக்கியங்களாகவே உள்ளமை மனம் கொள்ளத்தக்கது.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் பழமொழிகள்:-

''நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்

மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றி

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

எதுறுதலிய முதுமொழி என்ப'' (தொல்.செய்.479)

எனத் தொல்காப்பியர் முதுமொழிக்குக் கூறும் இலக்கணம் பழமொழிக்குப் பொருத்தமுடையதாக இருத்தல் கருதத்தக்கது. நாட்டுப்புற மக்களின் வாழ்விலே இடம்பெறக் கூடிய பழமொழிகள் அவர்களின் அனுபவ வெளிப்பாடுகள். இறையடியார்களும் தங்களின் தாழ்நிலை உரைக்கவும், இறைவனின் உயர்நிலை கூறவும், சமயத்தின் பெருமையுணர்த்தவும், மக்களுக்கு இறைஉண்மை புகட்டவும் இப்பழமொழிகளைக் கையாண்டுள்ளனர். திருநாவுக்கரசரின் தேவாரத் திருப்பதிகங்களில் பல்வேறு நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுக்கூறுகள் இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது. அப்பர் சுவாமிகளின் பக்தி நெறி மக்களைவிட்டு வேறுதிசை நோக்கியதல்ல; நாட்டுப்புற பாமர மக்களுடன் அவருக்கு இருந்த தொடர்பினை அவர் பாடல்களில் அமைந்துள்ள பழமொழிகளால் அறியமுடிகிறது. மக்களின் வாழ்வியற்கூறுகளும், வழக்காறுகளும் பண்பாட்டு மரபுகளும் பழமொழிகளில் பொதிந்துள்ளமை மனம் கொள்ளத்தக்கது. பக்தி நெறி மக்கள் உள்ளங்களிலே மிக விரைவாகச் சென்று சேர்வதற்குரிய உத்தியாக இப்பழமொழிகள் அமைந்துள்ளமை காணலாம். திருநாவுக்கரசர் பெருமான் அருளிய நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளில் மொத்தம் முப்பத்தி இரண்டு பழமொழிகள் அமைந்துள்ளன. திருவாரூர் தலத்தைக் குறித்து எழுந்த பத்துபாடல்களிலும் ஒவ்வொரு பழமொழி இடம் பெற்றுள்ளமையால் இதனைப் பழமொழிப்பதிகம் என்றே கூறுவர். திருமுறைகளில் இடம் பெற்ற பழமொழிகள் உவமைகள் வாயிலாகவே அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.

நான்காம் திருமுறையில் இடம்பெற்றுள்ள இருபத்தைந்து பழமொழிகளில் பத்து மொழிகள் மட்டுமே ஆய்வுச்சுருக்கம் கருதி இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே - (4.பதிகம் 5-1)

''உடலெல்லாம் வெண்­று பூசிய சிவபெருமானின் திருவடிகளை வழிபடாமல் பொய்மையான சமண சமயத்தை உண்மையென்று கருதி அம்மதத்தைத்தழுவி அங்குள்ள பழக்க வழக்கங்களை மேற்கொண்டு உறியதைத் தூக்கிக் கொண்டு திரிந்து திருவாரூரிலே கோயில் கொண்டு விளங்கும் பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கி, சுவையுடைய கனி இருக்கவும் அதனை விடுத்து சுயைவற்ற காய்களை விரும்பிய கள்வனாகி விட்டேனே'' என்று வருந்துகிறார் திருநாவுக்கரசர்.

பழமையான சைவமரபிலே பிறந்திருந்த போதிலும் அதன் பெருமையுணராமல் உயிருக்கு உய்திதராத சமணம் சார்ந்தவை கனியிருக்கக் காய் கவர்ந்தது என்னும் பழமொழி மூலம் விளக்குகிறார். ''ஆரூரரைக் கையினாலே தொழா தொழிந்து'' என்னும் பகுதியால் கனியைக் கவராமை உணர்த்தப்பட்டது. ''உய்யலாமென்றெண்ணி உறிதூக்கி உழி தந்து'' என்பதால் காய்கவர்தலை விரும்பியநிலை உணர்த்தப்பட்டது. தன்னைக் கள்வன் என்று குறிப்பிடுவதும் கருதத்தக்கது.

................ஆரூரர்தம்

முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்

காக்கைப்பின் போனவாறே (4.5.2)

''எலும்புகளை அடித்தளமாக அமைத்து அவற்றோடு நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்து எனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து உள்ளம் கோயிலாக்கி உலக இன்பங்களை அனுபவிப்பதற்குரிய இன்பங்களை அளித்த காலத்தில் சமணம் புகுந்த தீவினையால் அனைத்தையும் இழந்தேன். ஆனால் அன்புருவான ஆரூர் பெருமான் என்மீது அருள்செய்து ஆட்கொண்டார்'' என்று தம் கடந்தகால கசப்பான சமய வாழக்கையைக் கூற முற்பட்டபோது, ''முயல் விட்டுக் காக்கை பின் போனவாறே'' என்னும் பழமொழியை மொழிந்துள்ளார். முயல் பின் போதல் எளிது. காக்கையின் பின் போதல் பறத்தல் ஆகிய இயல்பில்லாத உயிர்க்கு அரிது என்ற மேம்போக்கான பொருளைத் தவிர முயலை சைவ சமயத்திற்கும் காக்கையைச் சமண சமயத்திற்கும் ஒப்புமையாகக் கூறியுள்ளார்.

அறுகயிறூசல் போல

வந்துவந் துலவு நெஞ்சம் (4.26.6)

தன் நிலையை விட்டுக் சென்று பிறிதோர் இடத்தைப் பற்றி மீண்டும் தொங்கிய நிலைப்பக்கம் வந்து சேரும் ஊசற் கயிறு போல ஓர் இடத்தை விடுத்து அலைந்து மீண்டும் அவ்விடத்திற்கே வரும் நெஞ்சம் ''கயிறற்ற ஊஞ்சலுக்குத் தாய் தரையேயாதல் போல இப்பொழுது நின் பாதமே இடமாக தங்கி நிற்கும். இயல்பைப் பெற்றுள்ளேன் ஆயினேன் என்று பாடுவார்.

சென்று பற்றுதலும் பற்றியதை விட்டு மீண்டு வருதலும் நெஞ்சிற்கு இயல்பு. ஒன்றைவிட்டு ஒன்று பற்றிவந்து உலவும் நெஞ்சிற்குக் கயிறூதல் ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது. ''ஊசல் கயிறு அற்று வீழ்ந்தால் தாய் தரையே ஆம்'' போல பாசம் அற்ற ஆன்மாவிற்கு நிலைக்களமாகக் கிடைத்தது இறைவன் திருவடியே என உணர்த்தினார்.

மத்துற தயிரே போல

மறுகுமென் னுள்ளத் தானும் (4.52.9)

''தீவினை செய்த அடியேன் பத்தனாக வாழ இயலாதேனாக, என் உள்ளம் முழுவதும் பரவி ஐம்பொறிகள் தீயசெயல்கள் பலவற்றையும் செய்ய அவை என்னை வருத்துவதனால் மத்தினால் கடையப்பட்ட தயிரைப்போல என் உள்ளம் நிலை சுழல்கின்றதே'' என்று பாடுவார்.

தழலெரி மடுத்த நீரில்

திளைத்து நின்றாடு கின்ற

ஆமை போய் தெளிவிலாதேன் (4.79-6)

ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் என் உள்ளத்தைச் சுற்றிநின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால் எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க அந்நீரிலே விட்ட ஆமையானது இதமான சூட்டிலே விளையாடி, தீயின் வெம்மையால் கொதிநீரில் வெந்து உயிர் நீங்கும் ''ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் இளைத்து தடுமாறுகின்றேன்'' என்று பாடுகின்றனர். ஐம்பொறிகளால் உண்டாகும் இன்பம் சிற்றின்பம்; நிலையானதல்ல சமண சமயம் சார்ந்த தாம் துன்புற்றதை ''உலையில் ஏற்றிய தழலெரிநீரில் நின்றாடும் ஆமை போல'' என்னும் பழமொழி மூலம் விளக்குகின்றார். நாலடியாரிலும் பேதமை என்னும் அதிகாரத்தில் இப்பழமொழி இடம் பெறுதல் காணலாம்.

பானுகோபன் வீரவாகு தேவரோடு போர் செய்த களிப்பில் தன் குலத்தோடு அழிதலை உணராமல் தெளிந்திலன் எனக் கூறிய கச்சியப்பமுனிவர் ''உலைபடும் இளவெந்நீரின் உளம்மகிழ் கமடம் ஒத்தான்'' எனப் பாடுவார் (தணிகை புராணம்)

கழியிடைத் தோணி போன்றேன் (4-31-6)

கடவூர் வீரட்டனீரே

''இந்த உடம்பாகிய பயன் அற்ற பாழ்நிலத்தில் பயன்படும் நீரை வீணாகப் பாய்ச்சி நேரிய வழியில் வாழமாட்டாதேனாய், இவ்வுலக வஞ்சனையே தெளிய மாட்டேனாய் ஐம்பொறிகளால் அலைக்கழிக்கப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணிபோல் உள்ளேன்'' என்று பாடுகின்றார். கரை ஏறாமலும் கடலிடை ஆடாமலும் இருக்கும் தோணி போல என்ற பழமொழி அவர்தம் நிலை உணர்த்துகிறது.

''ஏழைத் தொழூம்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே''

என்று பாடுவார் மாணிக்கவாசகர் (திருவாசகம் 325)

பாழ்க்கு நீரிறைத்து மிக்க அயர்வினால் ஐவர்க்காற்றேன் (4-52-7)

இப்பாடலில் ''உயிர் நிற்றற்குரிய உடலைக் காலாகவும், துயரத்தை ஏற்றமரமாகவும், உள்ளத்தை ஏற்றச் சாலாகவும் கொண்டு துன்பமாகிய ஏற்றத்தோடு கட்டித்தொங்கவிடப்பட்டிருக்கும் கழியைப் பற்றிப் பயிர்கள் சுருண்டு போகுமாறு அவற்றை விடுத்து பாழான வீண்தரைக்கே நீரை இறைத்து மிக்க தளர்ச்சியோடு தன்னை தீயவழியிலே செலுத்தும் ஐம்பொறிகளின் ஆதிக்கத்தைத் தாங்க இயலாதேனாய் உள்ளேன்'' என்று பாடுகின்றார்.

மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்து (4-75-7)

இப்பாடலில் பிணத்தைக் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய தீவினை என்னைச் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஓட்டாமல் கலக்க மயங்குகின்றேன் என்று பாடுகின்றார். காக்கைகள் மொய்த்தல் பிணத்திற்கும் வினைகள் மொய்த்தல் உயிருக்குமான பொருத்தமான பழமொழியைக் காணமுடிகிறது.

''ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய

வாதரைப் போல்'' (4-97-6)

''எல்லோர் உள்ளத்திலும் தெளிவு ஏற்படுத்தும் வண்ணம் இறைவன் கோயிலில் வீற்றிருப்பதை அறியாமலும் அவ்வாறு சென்றாலும் நெஞ்சுநிறைவு பெறாமலும் உள்ள புத்தியினர் ஆற்றில் இழந்த பொருளை குளத்திலே சென்று தேடும் அறிவிலிகளைப் போல இறைவனை காற்றைவிட மிக வேகமாகத் தேடித் திரிவர்'' என்று பாடுவார்.

நரிவரால் கவ்வச் சென்று நற்றசை யிழந்த தொத்த (4-27-5)

''ஆற்றிலுள்ள வரால்மீனை கவ்வச் சென்ற நரி, ஏற்கனவே தம் வாயிலிருந்த நல்ல ஊணை இழந்ததைப் போல'' என்ற பழமொழியால் சைவ சமயக் கொள்கைப் பிடிப்பு மிகுந்த சைவ மரபிலே பிறந்திருந்தாலும் அதனைவிட்டுச் சிந்தை தடுமாறிச் சமணம் புகுந்த நிலையை வெளிப்படுத்துகின்றார்.

நுண்மையும் சுருக்கமும் தெளிவும் பழமொழிகளின் தனித்தன்மையாதலால், தாம் கூறவந்த சமய அனுபவ உண்மைகளைப் பொருத்தமான உவமைகளால் விளக்குகின்றார் திருநாவுக்கரசர். சைவ சமயத்திலிருந்து சமணம் சார்ந்தமையால் தான் பட்ட துன்ப வரலாற்றையும் சைவ சமயத்தின் பெருமையுணர்ந்த அனுபவமொழிகளையும், உலகப்பற்றுக்களில் ஈடுபட்டமையால் அல்லல் உற்றமையும், இறைவன் பெருமைகளை அறியாமல் காலத்தை வீணாகக் கழித்தமையும், உயிரைப் பற்றியுள்ள வினைகளின் தன்மைகளையும் நாட்டுப்புற மக்களின் நடைமுறை வாழ்க்கையிலே பட்ட அனுபவப் பிழிவுகளான பழமொழிகளின் வாயிலாக தன்நிலை உணர்த்துகின்றார் திருநாவுக்கரசர்.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: