கண்ணதாசன் சங்க இலக்கியங்களையும் காப்பியங்களையும் ஆழ்ந்து பயின்று அவற்றின் சுவையில் திளைத்தவர் என்பதனை அவர்தம் கவிதைகளால் நன்கு அறியமுடிகிறது. இவ்வாறே ஏட்டுக்கு வராத கிராமத்து மக்களின் பழக்க வழக்கங்களைக் கூறும் வாய்மொழியை நேசித்துள்ளார். ஏட்டு இலக்கியத்தை நாட்டுப்புற மக்களுக்குக் கொண்டு சென்றவர் நாட்டுப்புற மக்களின் வாய்மொழி இலக்கியத்தை இலக்கியவாதிகளுக்குச் சொன்னவர். இவ்வாறு ஒரு புதிய மாற்றத்தை உண்டு செய்த பெருங்கவிஞராகவே விளங்கியவர் என்பதினை,
''பாவலரின் கவிதைக்கும்
பாமரனின் காதுக்கும்
பாலத்தைப் போட்டு வைத்தாய்
பண்டிதரின் முந்தியிலும்
பணக்காரர் தொந்தியிலும்
இருந்த தமிழ் மீட்டு வைத்தாய்''
கவிஞர் மு. மேத்தாவின் கூற்று மெய்ப்பிக்கும்.
தாலாட்டு:-
கவிஞரின் கவிதைகளில் நாட்டுப்புறக் பாடல்களுல் ஒன்றான தாலாட்டுப் பாடல்களின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகிறது. தாலாட்டுப் பாடல்கள் பெற்றோர் தவம், குழந்தை, அழகு, மாமன் சீர்வரிசை முதலியன குறிப்பிடத்தக்க சில கருத்துகளாகும் இவையின்றிக் காதல் பற்றியும் வீரம் பற்றியும் இயற்கை நிகழ்ச்சியான மழை பற்றியும், மதுவிலக்குப் பற்றியும் கலவரம் பற்றியும் தாலாட்டுப் பாடல்கள் கூறுகின்றன.
குழந்தையின் அழகு பற்றிய பாடல்:-
குழந்தையைத் தாலாட்டும் போது குழந்தையின் அழகினை வியந்து கூறும் தாலாட்டுப் பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. குழந்தையை முத்து என்றும் பவளம் என்றும் மணி என்றும் தாய் வியந்து பாராட்டும் பாடல்கள் பல காணப்படுகின்றன.
''முத்தத்தில் ஒரு முத்தோ முதிரவிளைந்த முத்தே
ஆணி பெருமுத்தோ ஐயாக்கள் ஆண்ட முத்தோ
முத்து முத்துக் கடலுகுள்ளே மூணாத்துப் பாய்ச்சலிலே
முக்குளித்து முத்தெடுக்கும் முத்துமகன் நித்திரையோ''
என்பது ஒன்று பாட்டினைக் கண்ணதாசன் தமதுதிரை இசைப் பாடலில்,
''ஆழக் கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய முத்து
எங்கள் ராசா கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு''
என்று வருணணைச் செய்திருக்கின்றார்.
ஒரு நாட்டுப்புறத் தாலாட்டுப் பாட்டில் பூ என்று குழந்தையின் முகத்தை வருணணை செய்கின்றாள் தாய் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூ வாக இருப்பதைக் கூறுகின்றார்
''கண்ணே கமலப்பூ கண்ணிரண்டும் தாமரைப்பூ
கண்மணியே ஏலப்பூ
சாதிரண்டும் பிச்சிப்பூ
மேனி மகிழம் பூ
மேற் புருவம் சண்பகப்பூ''
என்று தன் குழந்தையைப் பல்வேறு பூக்களாக வருணித்துத் தாலாட்டுகின்றாள். இப்பாடலினை அடியொற்றி
''சின்னச் சின்னக் கண்ணணுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டு தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா''
என்னும் பாடலைக் கவிஞர் பாடியுள்ளார்.
மாமன் சீர் தாலாட்டில்
தாலாட்டுப் பாடல்களின் மாமனை மையப்படுத்தி மாமனுடைய சமூகப் பொறுப்புகளை பற்றிக் கூறும் பாடல்களை ஒரு தனிவகையாக பிரிக்கலாம். அந்த அளவிற்கு மாமன் பற்றி தாலாட்டுப் பாடல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மாமன் என்பவர் செல்வராகவோ ஏழையாகவோ எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் சடங்கு வழியில் நின்று நிறைவேற்றும் பொறுப்புகள் மாறாதவகைளாக உள்ளன. சகோதரியின் குழந்தைக்கு மாமன் செய்யும் சீர் பற்றி
''தங்கத்தாலே தாலி என் கண்ணே
உனக்குத் தருவாரோ உன் மாமன்
பொன்னாலே மங்கலமாம் - என் கண்ணே
உனக்குப் போடுவார் உன் மாமன்''
வறுமை உணர்த்தும் தாலாட்டு:-
தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் குழந்தையிடம் கூறுவதாகப் பாடல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. வறுமையின் கொடுமையினையும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தினையும் தாலாட்டுப் பாடல்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
''ஏழைக் குடிசையிலே
ஏன் பிறந்தாய் செல்வமுத்தே
எத்தனையோ சீமாட்டி
ஏங்கித் தவங்கிடக்க
என் வயிறு தேடி
ஏன் பிறந்தாய் செல்வமுத்தே''
என்பது தான் வந்த நாட்டுப்புறப் பாடல் இப்பாட்டினை கண்ணதாசன் தனது கவிதையில்
''ஏன் பிறந்தாய் மகனே - ஏன் பிறந்தாயோ
இல்லையொரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே''
என்று வறுமையினை படம்பிடித்துக் காட்டுகின்றார். வறுமையோடு தத்துவத்தையும் கூறுகின்ற கவிஞர். பிறந்த மகனை ஏன் பிறந்தாய் என்று கூறுமளவுக்கு மனம் வெறுப்பதற்குக் காரணமான வறுமை காட்டுகின்றார்.
பணம் இருக்கும் மனிதனுக்கு உலகம் எல்லாம் சொந்தம். பணமில்லா மனிதனுக்குச் சொந்தம் எல்லாம் துன்பம் என்பார் கண்ணதாசன். இக்கருத்தினை வலியுறுத்தும் முகமாக ஒரு தாலாட்டுப் பாடல்.
''கண்ணுக்கு இனியவளே கற்கண்டுச் சொல்லழகா
மாமனார் வந்திடுவார் மார்மேலே சீராட்ட
பொன்னா சைக்குடைமாமன் புறப்பட்டு வந்திடுவான்
பாட்டியார் வந்திடுவார் அடுக்களைச் சோறூட்ட
எல்லோரும் வந்திடுவார் ஆன பணம் உண்டானால்
உன்னைப் போல் செல்வனை நான் உலகெங்கும் கண்டதில்லை
என்னைப் போல் ஏழையை நீ எங்கனாச்சும் கண்டதுண்டா''
இப்பாடலின் தாக்கமாக,
செல்வர்கள் வீட்டில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன் வண்ணக் கிண்ணத்தில பால்கஞ்சி
கண்ர் உப்பிட்டுக் காவிரி நீராட்டு
கண்ணுறங்கு கண்ணுறங்கு''
என்ற கண்ணதாசன் தனது கவிதையில் ஏழைக்கு பிறந்த குழந்தை செல்வ செல்வாக்கு இல்லை என்பதைக் குறிப்பிடுகின்றார்.
காதற் பாடல்கள்:-
நாட்டுப்புறப் பாடல்களில் காதற் பற்றியப் பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றது. காதல் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்ற பதிப்பாகவே இருக்கின்றன. அந்த அளவுக்கு மனதை கவர்ந்திழுக்கும் கருத்துச் செறிவும் உணர்ச்சியும் வெளிப்படுகின்றன.
வட்ட வட்டப் பாறையிலே
வரகரிசி தீட்டையிலே
ஆர் கொடுத்த சாயச்சீலை
ஆல வட்டம் போடுதடி
என்ற தெம்மாங்குப் பாட்டினை மனதில் நிலை நிறுத்திய கண்ணதாசன் தனது பாடலில்
வட்ட வட்டப் பாறையிலே
வந்து நிற்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி
ஆலவட்டம் போடுதடி''
என்று தமது கவிதையில் நாட்டுப்புறப்பாட்டின் தாக்கத்தினை அறியலாம்.
காதலரின் மேன்மையை வியந்து வருணித்துக் காதலி பாடும் நாட்டுப்புறப் பாடல் ஒன்றில்
''ஆல மரத்துக்கிளி
அசாரம் பேசுங்கிளி
நான் வளர்த்த பச்சைக்கிளி
நாளை வரும் இந்த வழி''
இவ்வாறு கூறுகின்றாள்.
இப்பாடலின் தாக்கம் கண்ணதாசனுக்கு மனதில் நிலைப் பெற்றதனால் அதனை சென்றதும் கூற்றாக,
''பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்துப் பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக்கிளி
நாளை வரும் கச்சேரிக்கு
என்று திரைக்குத் தகுந்தாற்போல பாட்டு இயற்றியுள்ளார் கவிஞர்.
ஒப்பாரிப் பாடல் தாக்கம்:-
ஒருவர் இறந்தபின்பு அவரின் இயல்புகளைக் கூறி அழுதல் ஒப்பாரி ஆகும். ஒப்பாரி என்பது இறங்கற்பா, கையறுநிலைப் பாடல் போன்றப் பெயர்களில் அழைக்கப்படும்.
''தங்க லைட் டெரியும்
தனிக்காந்தம் நிண்ணெரியும் - இப்போ
தங்க லைட்டுமில்லை - எனக்கு
தனிகாந்தம் பக்கமில்லை
பொன்னா பகுத்திருந்தா - எனக்கு
பொன்னு லைட்டெரியும்
புதுக் காந்தம் நின்னெரியும் - இப்ப
பொன்னு லைட்டுமில்லே
புதுக் காந்தம் பக்கமில்லை''
இப்பாடலொடு திரையிசைப் பாடல் ஒப்பிட்டு நோக்க உகந்ததாக அமைந்துள்ளது.
''அன்றோரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே''
என்று குறிப்பிடுவார். இப்பாடலிலும் வருத்தமே மிகுந்திருக்கின்றது.
கண்ணதாசன் பாடல்களில் நாட்டுப்புறப் பாடல்களுள் ஒன்றான தாலாட்டில் குழந்தையின் அழகு மாமன்சீர், வறுமையின் நிலை போன்றவைகளும் காதற் பாட்டு, ஒப்பாரிப்பாட்டு போன்ற செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. நாட்டுப் புறப்பாட்டின் தாக்கம் மிகுதியாக இடம் பெற்றுள்ளது.
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக