21/08/2011

நாடோடிப் பாடல்களின் சிறப்பியல்புகள் - ப.பாலமுருகன்

நாடோடிப் பாடல்களுக்கென்று சில சிறப்பான இயல்புகள் உண்டு. ஒரு குறிப்பிட்ட பாடலை முதன் முதலில் யாரேனும் ஒருவர் இயற்றியிருக்க வேண்டும். இயற்றியவர் இலக்கியப் புலமை படைக்காவிட்டாலும் பாமரர்களைப் போல் சொல்வன்மை மிக்கவராக இருப்பர். கூலி வேலை செய்யும் பெண்கள் தம்மிடம் உள்ள இயற்கையான ஆற்றலில் அவ்வப்போது பாடல்களைப் பாடுவதும் உண்டு. இவ்வாறு பாடும் நாடோடிப் பாட்டில் எதுகை, மோனை, ஓசை என்னும் மூன்றும் இருக்கின்றன. எனவே நாடோடிப் பாடல்களுக்குரிய சிறப்பு இயல்பை இக்கட்டுரை விளக்குகிறது.

எதுகை - மோனை:-

எதுகை மோனை என்பவை தமிழ்நாட்டு மக்களுக்கு இயல்பாகவே கைவரப் பெற்றவை என்றே கூறவேண்டும். இதனை,

''மானங்கெட்டவளே, மரியாதைக் கெட்டவளே

ஈனக்கெட்டவளே, இடுப்பொடிந்தவளே''

என்ற வசவில் எதுகையும் மோனையும் இருக்கின்றன. அடிமுதல் எதுகை வருதல் தமிழருக்கே உரிய தனிச்சிறப்பு. பேச்சு வழக்கில் எத்தனையோ தொடர்கள் எதுகை மோனைச் சிறப்பு உடையனவாகப் புரளுகின்றன. அவை,

''அக்கிலி பிக்கிலி, ''அக்கம்பக்கம்'', ''அசட்டுப் பிசட்டு'',

அடிதடி, அமட்டல் குமட்டல், ஆசாரம் பாசாரம்,

ஏழை பாழை, கண்டதுண்டம், ''ஐபதப''

என்பவைப் போல உள்ளவற்றைக் காணும்போது, எதுகை, மோனை நயம் அமைந்த தொடர்களுக்கு குறைவில்லை.

''அல்அசல், ஆடி அம்மாவாசை, கல்யாணம்

கார்த்திகை, கொள்வினை கொடுப்பினை,

பற்றுப் பாத்திரம், கோயில்குளம், தோப்புத் துரவு''

என முதலியவற்றில் எதுகை மோனை நயமிக்க சொற்களில் காணலாம்.

பேச்சு வழக்கில் தண்­ர் பட்டபாடாக வழங்கும் எதுகை, மோனைகள், பழமொழிகள் சிறப்பாக அமைந்திருப்பது வியப்பன்று.

''அக்கரைக்கு இக்கரைப் பச்சை'', ''அகம் ஏறச் சுகம் ஏறும்'', ''ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு'', "குட்டையில் ஊறிய மட்டை" என்பன போல ஆயிரக்கணக்கான பழமொழிகளில் எதுகை மோனை அமைந்திருக்கின்றன.

''சிங்கத்தின் காட்டைச் சிறுநரி வளைத்தாற்போல'',

''சூலிக்குச் சுக்குக்கு மேல் ஆசை''

''தலை ஆட்டித் தம்பிரான்''

''தீயில் இட்ட நெய் திரும்புமா?''

''பெண்சாதி கால்கட்டு

பிள்ளை வாய்க்கட்டு''

''மனப்பால் குடித்து மாண்டவர் அநேகர்'' என்பனவற்றில் மோனை நயத்தைக் காணலாம்.

நாடோடிப் பாடல்களில் குழந்தைகள் விளையாடும்போது பாடும் பாடல்களில் ஒன்றும் பொருள் இல்லாவிட்டாலும் எதுகை நயமும், மோனை அமைதியும் பல பாடல்களில் உண்டு. இவ்விரண்டும் குழந்தைகளுக்கு இன்பத்தை உண்டாக்குகின்றன.

''கண்ணாம் கண்ணாம் பூச்சாரே

காது காது பூச்சாரே''

என்பது கண்ணாம்பூச்சி விளையாட்டுப் பாடல். கண்ணை மூசுதல் என்றால் கண்ணை மூடுதல் என்று பொருள். கண்மூசு என்பது கண்ணாமூச்சியாகிப் பிறகு கண்ணாம்பூச்சி என்று வழங்கப்பெறுகிறது.

கீழ்க்கண்ட இப்பாட்டில் பொருள் சிறிதளவே இருக்கிறது. ஆனால் எதுகை மோனை அமைதியே சிறப்பாக அமைகிறது. இதனை,

''தத்தக்கா புத்தக்கா

தவலைச் சோறு

நெற்றிமா நெருங்குமா

பச்சை மரத்திலே பதவலை கட்டப்

பன்றி வந்து சீராடப்

பாண்டியன் வந்து நெல்லுக் குத்தக்

குண்டுமணி சோறாக்கக்

குருவி வந்து கூப்பிடுது''

இப்பாடலில் சொற்களுக்கு பொருள் இருந்தாலும் அப்பொருள் தொடர்ச்சியாக இல்லை. ஆனாலும் எதுகையினாலும், மோனையினாலும் ஓசையழகு அமைந்திருக்கின்றது.

''வெத்தலைக் கட்டு விரியக்கட்டு

தோட்டத்துக் காரனை புடிச்சுக்கட்டு''

என்பதிலும் அந்த இயல்பைக் காணலாம்.

ஓசை அமைதி:-

இலக்கியங்களில் நால்வகைப் பாக்களும் அவற்றின் இனங்களும் அமைந்துள்ளன. நாடோடிப் பாடல்களில் பெரும்பாலும் கண்ணிகளும், கிளவிகளும் பயின்று வருகின்றன. பல பாடல்களில் ஏதோ ஒருவகையில் ஒழுங்கான ஓசை அமைதி இருக்கின்றது. சில வகையான பாடல்களுக்கு இன்ன ஓசைதான் என்ற மரபு அமைந்திருக்கிறது.

தெம்மாங்கு என்பது ஒரு குறிப்பிட்ட ஓசை அமைதியோடு இருக்கிறது. தாலாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரி, கும்மி, ஓடப்பாட்டு முதலியவற்றுக்கு திடமான உருவங்கள் அமைந்துள்ளன. இன்ன பாட்டிற்கு இன்னதுதான் இலக்கணம் என்று புலமையுகத்து வாய்ப்பாட்டில் கூற இயலாவிட்டாலும் காதிலே கேட்டால் இன்னபாட்டு என்று பழக்கத்தால் தெரிந்து கொள்ளலாம்.

இலக்கியங்களில் வரும் பாக்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தும், பேராசிரியர் பாவைப்பற்றிக் கூறுகையில்,

''பாவென்பது சேட்புலத்திலிருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால், அவன் கூறும் செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற் கேதுவாகிப் பரந்துப்பட்டுச் செல்வதோர் ஓசை'' என்று கூறுவதிலிருந்து இது புலனாகும்.

சொற்கள்:-

நாடோடிப் பாடல்களில், வழக்கில் மட்டும் வழங்கும் சொற்களும், சிதைந்த சொற்களும் மிகுதியாக வரும்.

சந்தை விலை மதிப்பாள் சந்தனத்தைத் தோற்கடிப்பாள்'' என்றும்,

துப்பட்டி வாங்கித் தந்தார் - மாமாடா

தோளிலே போர்த்திப் பார்ப்போம்'' என்றும்,

அம்மத்தாளிடம் கொடுத்தேன்''

என்பவற்றில் வரும், சந்தை, துப்பட்டி, அம்மத்தாள் என்ற சொற்களை இலக்கியங்களில் காண இயலாது. சிதைந்து வழங்கும் சொற்களும் சொற்றொடர்களும், கணக்கு வழக்கின்றி, நாடோடிப் பாடல்களில் வரும். மேலும் அவற்றைத் திருத்தினால் எதுகை மோனை சிதைந்து விடும். அவை,

''ஒத்தையிலே இருக்கிறேண்ணு

ஒருகாலும் நினைக்காதேடா

கத்திக்கீரை ஆகாதேடா''

என்பதில் ''ஒத்தையிலே'' என்பதை ''ஒற்றையிலே'' என்று மாற்றினால் எதுகை மோனைச் சிதைந்துவிடும்.

''சின்னக்குட்டி நாத்தனாள் - ஏலங்கிடி லேலோ''

சில்லறையை மாத்தினாள் - ஏலங்கிடி லேலோ''

என்பதில் மாத்தினாள் என்பதை மாற்றினாள் என்று திருத்தினாலும் எதுகையழகு இல்லாமற் போய்விடும்.

இப்படியே மோனையிலும் வழக்குச் சொற்கள் அமைந்து மாற்ற முடியாமல் இருக்கும் இடங்கள் பல.

''பெரட்டாசி மாதத்திலே

பெரிய கடை வீதியிலே''

என்பதில் புரட்டாசி என்ற சொல் வாய்மொழியிலே சிதைந்த உருவமாகி பெரட்டாசி என்று நின்று, பெரிய என்பதில் உள்ள முதலெழுத்தொடு ஒன்றி மோனையமைதி பெற்றிருக்கிறது. பெரட்டாசியைப் புரட்டாசி ஆக, ஆக்கிவிட்டால் ''பெரிய'' என்பதைப் ''புரிய'' ஆக்க இயலுமா?

சிதைந்த சொல்லைத் திருத்தப் புகுந்தால் ஓசை கெட்டு விடுவதற்குச் சில சான்றுகள்.

''தமயந்தியைக் கட்டணுன்னு

சனிபகவான் பட்டபாடு''

என்பதை, ''தமயந்தியைக் கட்ட வேண்டுமென்று'' என்று மாற்றினால் ஓசை நயம் கெட்டுவிடும்.

''ஆடிருக்கு மாடிருக்கு - கண்ணே உனக்கு

அழகான வீடிருக்கு''

என்பதிலுள்ள சொற்களை ''ஆடிருக்கிறது, மாடிருக்கிறது, வீடிருக்கிறது, என்று மாற்றினால் அப்பால் அதில் பாட்டே இராது எனலாம்.

இலக்கணத்துக்கு மாறு:-

இலக்கணத்திற்கு மாறாகப் பலவற்றை நாடோடிப் பாடல்களில் காண்கின்றோம். பேச்சு வழக்கில் எவ்வாறு இலக்கண வழுக்கள் இருக்கின்றனவோ, அவ்வாறே நாடோடிப் பாடல்களிலும் பேச்சு மொழிக்கு இயல்பாகி விட்டன. அவ்வாறே நாடோடிப் பாடல்களிலும் இருக்கின்றன. கொச்சை வார்த்தைகளும் இலக்கண வழுக்களும் பேச்சு மொழிக்கு இயல்பாகி விட்டன. இதுவே, நாடோடிப் பாடல்களிலும் இயல்பாகப் பொருந்திவிட்டன.

''பயிரும் விளையாது பறவைகள் நாடாது

குடிக்கஜலம் கிடையாது குருவிகள் நாடாது''

என்பதில் ஒருமைப் பன்மை மயக்கம் இருக்கின்றது.

திருப்பிச் சொல்லுதல்:-

நாடோடிப் பாடலைப் படித்துப் பார்ப்பதில் இன்பம் அவ்வளவு இராது. அதைப் பாடிக் கேட்கும் போதுதான் அதன் இசையும் தாள அமைப்பும் ஒருவிதமான கவர்ச்சியைத் தருவதைக் காணலாம். இலக்கியங்களில், ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொன்னால் அது கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படும். ஆனால் நாடோடிப் பாடல்களிலே சொன்னதே மடக்கி, மடக்கித் திரும்பச் சொல்வது மரபு.

கீர்த்தனங்களில் பல்லவி பலமுறை வருவது இசைப்பாட்டுக்கு இன்பம் உண்டாக்குகிறது. அதுபோல் நாடோடிப் பாடல்களும் இசையோடு பாடப்படுவன, ஆதலின் அவற்றில் மீண்டும், மீண்டும் சில சொற்றொடர்கள் வருவது அழகு பயப்பதாக இருக்கிறது. இதனை,

''ரோடு எல்லாம் கொழுத்தடை

ரொம்பிக் கிடக்குது பார் - ராசாத்தி

ரொம்பிக் கிடக்குது பார்

நல்ல கரும்புக் கட்டுக் கட்டா

நயமா விக்குதுபார் - ராசாத்தி

நயமா விக்குதுபார்''

என்பனவற்றில் ஒரே அடி மீண்டும் மடங்கி வருகிறது.

நாடோடிப் பாடல்களில் இலக்கியப் புலமை இல்லாத பாமரர்கள் பாடும் பாடல்களில் எதுகை, மோனை, ஓசைநயம் போன்றவை சிறப்பாக கையாளப்பட்டுள்ளன என்பது இக்கட்டுரை வாயிலாக அறியப்பெறகிறது.

பவளக் கொடி மாலை - ஓர் ஆராய்ச்சி.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: