இலக்கியத்தினுடைய மூலங்கள் என்று நாட்டுப்புறவியலைக் கூறலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேசுகிற மொழி தமிழாக இருப்பினும் பேசுகிற விதத்தில் வேறுபாட்டினைக் காணமுடிகிறது. அதுபோலவே நாட்டுப்புறவியலில் ஒவ்வொரு வட்டாரத்திலும், பழக்க வழக்கங்கள், தெய்வங்கள், விளையாட்டுகள் போன்றவை அந்த அந்த வட்டாரத்திற்கு ஏற்ப மாறிவருகின்றது. சிறுவயதிலிருந்தே ஒரு குழந்தையைப் பழக்கப்படுத்தி பக்குவப்படுத்தினால்தான் எதிர்காலத்தில் சிறந்த மனிதனாக்க முடியும் என்று நம்பியவர் பாரதி இதனை,
''ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா''
என்று குறிப்பிடுகிறார். இத்தகைய வலிமையை அளிக்கக்கூடிய விளையாட்டுப் பாடல்கள், உடுமலை வட்டாரத்தில் எவ்வாறு அமைந்திருக்கின்றன. விளையாட்டுப் பாடல்களினால் கிடைக்கக்கூடிய நன்மை யாது? உடுமலைப்பேட்டை என்பதன் பெயர்க்காரணம் என்ன என்று ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
உடுமலை - பெயர்க்காரணம்:-
உடும்புகள் நிறைந்த மலைகள் இருப்பதால் உடும்புமலை என அழைக்கப்பட்டு காலப்போக்கில் உடுமலையாக மாறியது எனக் கூறுவர். உடுமலையாக மாறி பின் பேட்டை என்ற பெயரையும் தன்னுள் சேர்த்து உடுமலைப்பேட்டையாக அழைத்தனர் என்று கூறுவோரும் உளர்.
விளையாட்டுப் பாடல்கள்:-
குழந்தைகள் விளையாடுகின்ற போது சிறு சிறு பாடல்களைப் பாடிக் கொண்டே விளையாடுவர். இப்பாடல்களே நாட்டுப்புறவியலில் விளையாட்டுப் பாடல்களாக மலர்ந்தன எனலாம். இவ்விளையாட்டு உள்ளத்தையும், உடலையும் நெறிப்படுத்துகிற கருவியாக குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதனை,
விளையாட்டு பொழுது போக்காக மட்டுமின்றி உடல்நலம் மனநலம் பேணுபவையாகவும் உள்ளது. விளையாட்டில் உடல் செயல்களின்றி உள்ளச் செயல்களும் இடம் பெறுகின்றன. குழந்தைகளின் இயல்புகளும், வெளிப்படுத்தப்படுகின்றன. வாழ்க்கைக்கு பயிற்சியளிக்கும் களம் என்ற விளையாட்டை கூறுவர் என்று விளையாட்டினால் பெறப்படும் நன்மையை சு. சக்திவேல் அவர்கள் குறிப்பிடுவர். உடுமலை வட்டார விளையாட்டுகள் கள ஆய்வு செய்கின்ற விடத்து, பல விளையாட்டு வகைகளைப் பார்க்க முடிந்தது.
எண்ணுப்பெயர் விளையாட்டு:-
ஒரே மாதிரியான கையிற்கு அடக்கமான சிறு சிறு கற்களைக் கொண்டு விளையாடுவது கல் விளையாட்டாகும். ஏழு கல்லை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கல்லாய் தரையிலிருந்து எடுத்து மேலே போட்டு பிடிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறு படிப்படியாக ஏழு கல்லையும் ஒரு சேரப் பிடித்தால் அக்குழந்தை வெற்றி பெற்றதாக அறிவிப்பர். இதனை,
ஒரே கல்ல ஒசந்த கல்லு
இரண்டாம் கல்லு இரத்தின முத்து
மூணாங்கல்லு முத்துப் பதக்கம்
நாலாங் கல்லு
நவமணிச் செண்டு
ஐந்தாங் கல்லு அயிர மீது
ஏழாங் கல்லு எழுதிப் புடிச்சா
என்று பாடுகிறார்கள். இக்கல்லுப் பயிற்சி மூலம் கைகளுக்கு அழுத்தத்தைக் கொடுத்து செய்வதால் கைகளில் இரத்த ஓட்டம் காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், உயிர் சக்தி ஓட்டம் இவை சீர் படுவதனை அறிய முடிகிறது. உடலில் முக்கிய அங்கமாக கையை வலுவூட்டுவதற்கு இவ்விளையாட்டு உறுதுணை புரிகின்றது என்பதை உணர வேண்டியுள்ளது. இதே போல,
''ஒண்ணு உங்க வீட்டுப் பொண்ணு
இரண்டு ராமலிங்க குண்டு
மூணு முருங்கப்பட்ட தோளு
நாலு நாய் குட்டி வாலு
ஐந்து அவரக்கா பிஞ்சு
ஆறு அரண்மனைக் காரு
ஏழு எம்பேச்சக் கேளு
எட்டு டமடம கொட்டு
ஒன்பது ஒரு முழுக் குஞ்சம்
பத்து பனங்காட்டு நரிக்கு வெடிய வெடிய கல்யாணம்''
என்று பத்து பேரைக் கொண்டு ஓடிப்பிடித்து விளையாடுவதாக இவ்விளையாட்டுப் பாடல் அமைகின்றது. இப்பாடல்கள் எண்ணுப் பயிற்சி பெறுவதற்கும் உதவியாக இருக்கிறது என்பதையும் உணரலாம்.
தொடர்வண்டி விளையாட்டு:-
''கர கர வண்டி
காமாச்சி வண்டி கிழக்கே போகுது
பொள்ளாச்சி வண்டி''
என்று ஒருவர் பின் ஒருவராக சட்டையைப் பிடித்து ஓடிக் கொள்ளுவதாக அமைந்திருக்கிறது.
இந்த நாட்டுப்புற மூலத்ததைத்தான் திரைப்படம் பயன்படுத்திக் கொண்டுள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இன்றைக்கு ஒலிம்பிக் போட்டி என்று சொல்லக்கூடிய சர்வதேசப் புகழ்பெற்ற போட்டியிலும் கூட ''தொடர் ஓட்டம்'' என்ற ஒன்று இடம் பெறுகிறது. இத்தொடர் ஓட்டத்தினுடைய ஆதி இவ்விளையாட்டாக இருக்கலாம் என்று கருதுவதற்கு இடமாக இவ்விளையாட்டு அமைந்துள்ளது.
கபடி விளையாட்டு:-
இன்றைக்கு கபடி விளையாட்டு அன்றைக்கு சடுகுடு விளையாட்டாக அமைந்திருக்கிறது. இதனை,
''சடுகுடு மலையில
இரண்டானை
தவறி விழுந்தது
கிழட்டு யானை
சடுகுடு சடுகுடு சடுகுடு''
இவ்வாறு கபடியை முன்னைய காலத்தில் விளையாட இருக்கிறார்கள். காலுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய நல்ல விளையாட்டாக இதனைக் குறிப்பிடலாம்.
நாட்டுப்புற விளையாட்டுகளில் சடுகுடுவும், தொடர்வண்டி விளையாட்டும், கபடியாக, தொடல் ஓட்டப் பந்தயமாக தேசிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று கூறலாம்.
நாட்டுப்புற விளையாட்டுகள் உடற்பயிற்சிக்கும் உள்ளப் பயிற்சிக்கும் உதவுகின்றன எனக் கூறலாம்.
இக்காலத்தில் ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்லுகிற நிலையில் இருந்தாலும், காலை நேரத்தை விளையாட்டுப் பயிற்சிக்கு என்று ஒதுக்கி முன்னோர்கள் வழி வகுத்த விளையாட்டினையும் காக்க வேண்டியது நமது கடமையாகும் என்றும் உணர்த்த வேண்டியுள்ளது.
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக