‘உலகமெங்கும் தனியுடைமையோ ஒடுக்குபவர்களோ ஒடுக்கப்படுபவர்களோ இல்லாத ஒரு சமூக அமைப்பில் இருந்துதான் மனித வரலாறு ஆரம்பமானது” என்பது, மார்க்சீய அறிஞர்கள் ஆராய்ந்து கூறிய உண்மை ஆகும். அக்கூற்றுக்கு ஏற்பவே தமிழகத்திலும் தாய் தலைமை ஏற்றிருந்த கணசமூகத்தில் இருந்துதான் அடிமைச்சமூகமும் நிலப்பிரபுத்துவ சமூகமும் தோன்றின.
தமிழகத்தில் பிறநிலங்களைவிட மருதநிலத்தில் சமூக மாற்றம் முன்னதாகவே நிகழ்ந்தது. இங்கு, ‘எல்லாச் சமூக உறவுகளின் வளர்ச்சியையும் நிர்ணயிக்கக்கூடிய உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி பூகோளச் சூழ்நிலைகளின் தன்மையால் தீர்மானிக்கப்படுகின்றது” என்ற மார்க்சீய அறிஞர்களின் கூற்று நம் கவனத்துக்கு உரியதாகிறது.
மருதநிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியும் ஆகும். இங்கு வாழ்ந்த மக்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டிருந்தனர். அம்மக்கள் ஊரன், மகிழ்நன், கிழவன், மனைவி, கிழத்தி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர், தொழுவர் எனப்பட்டனர். இவர்களில் ஊரன், மகிழ்நன், கிழவன், மனைவி, கிழத்தி என்போர் மேன்மக்கள் எனப்பட்டனர். இவர்கள் அடிமை எஜமானர்களும் ஆண்டைகளும் ஆவர். கிழவன் என்ற சொல்லுக்கு, நிலத்துக்கும் அடிமைகளுக்கும் உரிமை உடையவன் என்பதே பொருள் ஆகும். உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர், தொழுவர் என்போர் கீழ்மக்கள் எனப்பட்டனர். இவர்கள் அடிமைகள் ஆவர். தொழும்பர் என்ற சொல்லுக்கு அடிமைகள் என்றே தமிழ் நிகண்டுகள் பொருள் கூறுகின்றன.
ஆற்றங்கரையில் அமைந்திருந்த மருதநிலத்தின் நீர் வளம் மற்றும் நிலவளத்துடன் உற்பத்திக் கருவிகளில் ஏற்பட்ட முன்னேற்றமும் மக்கள் பெருக்கமும் அவர்களின் உழைப்பும் சேர்ந்ததால் உற்பத்தியும் விளைச்சலும் அதீதமாகப் பெருகின. விளைச்சலின் பெருக்கத்தை ‘ வேலி ஆயிரம் விளையும்” என்று சங்க இலக்கியங்கள் பெருமையாகப் பேசுகின்றன. இரும்பு உபயோகத்துக்கு வந்திருந்தது. புதிய முன்னேற்ற கரமான உற்பத்திக் கருவிகள் படைக்கப்பட்டன.
‘பிடியுயிர்ப்பன்ன கைகவர் இரும்பு” - புறநானூறு
‘மிதியுலை கொல்லன் முறிகொடிறு - பெரும்பாணாற்றுப்படை 207
‘அரம் பொருத பொன்” - திருக்குறள்
முதலிய தொடர்கள் இதற்குச் சான்றளிக்கின்றன.
கருவிகளின் படைப்புக்கு தேவை ஒரு முக்கிய காரணி ஆகும். வேட்டைக் கருவிகளான வில்லும் அம்பும் மருதநிலத்தில் போர்க்கருவிகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. கற்கருவிகளின் இடத்தை இரும்புக் கருவிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. உணவுக்காக விலங்குகளை வேட்டையாடித்திரிந்த மனிதன், அவற்றை மந்தையாகத் திரட்டி மேய்த்துப் பயன்கொள்ளத்தெரிந்து கொண்டான். பயிர் சாகுபடியிலும் வேளாண்மையிலும் ஈடுபட்டான். உணவு உற்பத்தி செய்தான். ஏர் கொழு, கோடரி. அரிவாள் முதலிய வேளாண் கருவிகளோடு கரும்பு யந்திரங்களும் தேர்களும் சகடங்களும் செய்யப்பட்டன. புதிய புதிய போர்க்கருவிகளும் படைக்கப்பட்டன. சகடங்களை ஈர்த்துச் செல்;லக் கால் நடைகள் பயிற்று விக்கப்பட்டன. ஓடங்களும், படகுகளும், பாய்மரக்கலங்களும் செய்யப்பட்டன். ‘கடலோடும் நாவாய்” என்று திருக்குறள் கூறுகிறது.
உற்பத்தியிலும் உற்பத்திக் கருவிகளிலும் ஏற்பட்ட முன்னேற்றத்தால் சமூகமாற்றம் ஓசையின்றி நிகழ்ந்து. சுய நல அடிப்படையிலான உற்பத்திப் பெருக்கத்துக்காக சக மனிதன் அடிமையாக்கப்பட்டான். கால வோட்டத்தில் கணசமூகத்தில் இருந்து அதனினும் முன்னேறிய தான அடிமைச் சமூகம் தோன்றியது. தமிழக வரலாற்றில் முதன் முதலாக வர்க்கங்களும் வர்க்க முரண்பாடுகளும் தோன்றின. அடிமைகள், அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் ஆண்டைகள் என்றும் சமூகம் இரண்டு வர்க்கங்களாகப் பிளவுபட்டது.
அடிமைச் சமூகத்தில் அவர்களின் உழைப்பால் உற்பத்தி மிகுதியாகப் பெருகினாலும் அதன் பயன் மக்களைச் சென்றடைய வில்லை. அடிமைகளின் கடின உழைப்பால் தான் அரண்மைனைகளும் வளமனைகளும் கோட்டைகளும் கொத்தளங்களும் கட்டப்பட்டன, அகழிகள் அகழப்பட்டன. ‘ காடு கொன்று நாடாக்கி குளந்தொட்டு வளம் பெருக்கும்” பணிகளையும் அடிமைகளே செய்தனர், ஆனால் ஆண்டைகள் அடிமைகளைச் சுரண்டிக் கொழுத்தனர்;, அவர்களின் சுய நலத்துக்காகவும் சுகபோகத்துக்காகவும் அடிமைகளின் உழைப்பு உறிஞ்சப்பட்டது.
அடிமைகளான உழைப்பாளிகள் ஆண்டைகள் கொடுத்த பழைய சோற்றை உண்டுதான் பசியாறினர். குடிசைகளில் தான் வாழ்ந்தனர். அக்குடிசைகளுமே ஊருக்கு ஒதுக்குப் புறமான இடங்களில் அமைத்துக் கொள்ளும் படி நிர்பந்திக்கப்பட்டனர். ‘பறழ்பன்றிப பல கோழி உறை கிணற்றுப்புறச்சேரி” என்று பட்டினப் பாலை இது பற்றிக்கூறுகிறது. ‘குட்டிகளையுடைய பன்றிகளையும் பல சாதியாகிய கோழிகளையும் உறைவைத்த கிணறு களையும் உடைய இழிகுலத்தோர் இருக்கும் தெருவுகள்” என்று நச்சினார்க்கினியர் இதற்கு உரை கூறினார். உழைக்கும் மக்கள் அடிமையாக்கி ஒடுக்கப்பட்ட செய்தியைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகவே கூறுகின்றன.
அடிமைகளை ஆண்டைகள் கடுமையாகச் சுரண்டினர். உற்பத்திப் பெருக்கத்துக்காக கடினமாக உழைக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். ஆண்டைகள் மற்றும் அரசர்களின் பாதுகாப்புக்காக கோட்டைகள், கொத்தளங்கள், அரண்கள் மற்றும் அகழிகள் அமைத்திடப் போரில் பிடிப்பட்ட கைதிகளை அடிமையாக்கினர். கரிகாற் சோழன் சிங்கள நாட்டை வென்று பிடித்து வந்த கைதிகளை அடிமையாக்கிக் கொண்டு வந்து காவிரிக்குக் கரையமைத்தான் என்பது ஒரு வரலாற்றுச் செய்தியாகும்.
அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் ஆடவரும் மகளிருமான அடிமைகள் பலர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். மகளிர் சமையல் காரிகளாகவும் சலவைக்காரிகளாகவும் நெல்குற்றுவோராகவும் பணிசெய்தனர். இதனை, ‘அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாணுலக்கைப்பரூஉக் குற்றரிசி”
என்று புறநானூறு ( 399 ) கூறுகிறது.
‘களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழிஇய தூவெள்ளறுவை’ - புறநானூறு : 311
(களர்நிலத்து உண்டாகிய கூவலைத் தோண்டி நாள் தோறும் வண்ணாத்தி துவைத்த வெளுத்த தூய வெள்ளிய ஆடை ) என்று அந்நூல் பேசுகிறது.
செல்வர் மனைகளில் அடிமைகள்
இவையன்றி, செல்வர்மனைகளில் அவர்தம் பிள்ளைகளைப் பேணிவளர்க்கும் பணிகளிலும் அடிமை மகளிர் அமர்த்தப்பட்ருந்தனர். ‘செல்வர்களின் பிள்ளைகள் உருட்டி விளையாடுவதற்காக அடிமைகளான தச்சர்கள் மூன்று கால்களையுடைய சிறு தேர் செய்து கொடுத்தனர். அதனைச் செல்வர்மனைச் சிறு பிள்ளைகள் உருட்டி விளையாடித்திரிந்தனர். அவர்கள் தமது தளர்நடையால் உண்டான வருத்தம் தம்மை விட்டு நீங்கும்படி, பால் சுரந்த முலையினையுடைய செவிலித்தாயாராகிய அழகிய பெண்களைத் தழுவிக் கொண்டு அம்முலையிற் பாலை நிரம்ப உண்டு தமது படுக்கையிலே துயில் கொண்டனர்.” என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
தச்சச்சிறா அர் நச்சப்புனைந்த
வூரா நற்றேர் உருட்டிய புதல்வர்
தளர்நடை வருத்தம் வீட அலர் முலைச்
செவிலியம் பெண்டிர்தம் தழீஇப் பாலார்ந்
தமளித் துஞ்சும் அழகுடை வியனகர்”
என்று பெரும்பாணாற்றுப்படை ( 248 - 52 ) என்று பேசுகிறது.
செல்வர் மனைகளில் அவர்தம் பிள்ளைகளுக்கு அடிமைகளான செவிலியர் தம் முலைப்பாலை உண்பித்துப் பசி போக்கி உறங்கச் செய்தனர் என்ற செய்தியை நமக்குக் கூறிய இலக்கியங்கள், அச்செவிலியரின் பிள்ளைகளின் கதியாதாயிற்று என்று கூறவில்லை.
அடிமைகளான பெண்கள் மழலைப் பருவத்துச் சிறுவர்களுக்கு மட்டுமல்லாது,செல்வர்களின் மனைவியர்க்கும் பணிவிடையும் குற்றேவலும் செய்யப்பணிக்கப்பட்டனர். ஆண்டைகளின் பிள்ளைகளுக்கு, அடிமைகளான செவிலியர்; தம் முலைப்பாலை உண்பித்து உறங்கச் செய்தனர். அவர்கள் மட்டுமல்லாது, அப்பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்வதற்காகவும் அலங்கரித்து அழகு செய்வதற்காகவும் ஐந்து வகையான அடிமைப் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இப்பெண்கள் ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடிபயிற்றுவாள், கைத்தாயர் எனப்பட்டனர். ‘மானிடமகளிர்க்குத் தாயர்பலரும் கை செய்து பிறப்பிக்கும் அழகு’ என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்குச் சான்றளிக்கிறார். ஆண்டைகளின் குழந்தைகளுக்குப் பாலூட்ட நியமிக்கப்பட்ட செவிலி, இவ் ஐவருள் ஊட்டுவாள் எனப்பட்டாள்.
அரண்மனைகளில் அடிமைகள்
அரண்மனைகளில் அடிமைகளான பெண்கள் அரசியர்க்குச் சாத்தம்மியில் கஸ்தூரி அறைத்துக் கொடுத்தனர் என்ற செய்தியை நெடுநல் வாடை (49 - 50) கூறுகிறது.
‘கடியுடை வியனகர் சிறு குறுந்தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கல் பல கூட்டுமறுக”
(காவலையுடைய அகன்ற மனைகளில் சிறிய குற்றேவல் வினைஞர் கருங்கொள்ளின் நிறத்தையொத்த நல்ல சாத்தம்மியில் பசுங்கூட்டறைத்தனர்) என்பது அந்நூல் கூறும் செய்தியாகும்.
அடிமை மகளிர் அரசியர் முதலான அரண்மனைப் பெண்களுக்குச் சந்தனம், மஞ்சள், கஸ்தூரி முதலான மணப் பொருள்களை அறைத்துக் கொடுத்ததுடன், கவரியும் ஆலவட்டமும் வீசினர். இவையல்லாது, அடிமைப்பெண்களாகிய சேடிகள் அரசியரின் பாதங்களை மென்மையாக வருடிக் கொடுத்து (கால் பிடித்து விட்டு) உறங்கப் பண்ணினர். இதனை, ‘மெல்லியல் மகளிர் நல்லடி வருட” (மெத்தென்ற தன்மையுடைய சேடியர் துயில் உண்டாகுமோ என்று அடியைத்தடவினர்) என்று நெடுநல்வாடை (151) கூறுகிறது.
அரசனாகிய தலைவன் போர் முதலிய காரணங்களால் தலைவியைப் பிரிய நேரிட்ட காலங்களில் பிரிவாற்றாமையால் வருந்துதலுற்ற தலைவியின் பிரிவுத்துயரைப் போக்கும் முயற்சிகளில் பெருமுது பெண்டிராகிய அடிமைகள் ஈடுபட்டனர். நெல்லும் முல்லை மலரும் தூவி அம்மகளிர் நற்சொல் (விரிச்சி) கேட்டலாகிய செயலில் ஈடுபட்டனர். இதனை
அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசையின வண்டார்ப்ப நெல்லொடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழலரி தூஉய்க்கை தொழுது
பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப”
(அரிய காவலையுடைய பழைய ஊர்ப்பக்கத்துப் பாக்கதே படைத்தலைவர் ஏவலால் நற்சொல் கேட்டற்குரிய பெரிய முதிர்ந்த பெண்டிர் நல்ல பூக்களையுடைய இனமான வண்டுகள் ஆரவாரிக்கும்படி அவிழ்ந்த பூவை, நாழியிடத்தே கொண்டு போன நெல்லுடனே தூவி தெய்வத்தை வணங்கி நற்சொல் கேட்டனர்) என்று, பெருமுது பெண்டிர் படைத்தலைவர் ஏவலால் நெல்லும் மலரும் தூவி நற்சொல் கேட்ட செய்தியினை முல்லைப் பாட்டு ( 7-11) கூறுகிறது. மேலும்
‘நரை விராவுற்ற நறுமெனக் கூந்தல்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவு நெடியவும் உரைபல பயிற்றி” நெடுநல்வாடை :152 - 154
(நரை கலத்தலுற்ற மெல்லிய மயிரினையுடைய சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயார்,’இவள் ஆற்றாவொழுக்கம் மிகுகையினாலே, திரண்டு பொருளோடு புணராப் பொய் மொழியும் மெய் மொழியுமாகிய உரைகள் பலவற்றையும் பலமுறை சொல்லி ஆற்றினர்) என்று தலைவியின் பிரிவுத்துயரைப் போக்கும் முயற்சியில் பெருமுது பெண்டிரும் செவிலியரும் ஈடுபட்டதனை இலக்கியங்கள் பேசுகின்றன.
இங்ஙனம் செவிலியர், சேடியர், தாதியர், பெருமுது பெண்டிர் முதலான அடிமைகள் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் குற்றறேவலும் பணிவிடையும் செய்ய நியமிக்கப்பட்டிருந்தனை இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இப்பெண்களை ‘ அடியோர் பாங்கு” என்று குறிப்பிடுகிறார். (சிலம்பு :16:85) அடியோர் என்பவர் அடிமைகளே என்பதனை “ அடியோர் பாங்கினும்; வினைவலர்பாங்கினும்” என்ற நூற்பா வாயிலாகத் தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். அடியோர் என்பவர் உரிமையின்றித் தலைமைக்குக்கட்டுப்பட்டு வாழ்ந்தவர் ஆவர். அடியோர் என்ற சொல் அடிமைகள் என்ற பொருளில் கலித்தொகையிலும் குறிக்கப்பட்டுள்ளது.
கொண்டிர் மகளிர்
போரில் தோல்வியுற்ற பகைவர் மனைகளில் இருந்து பிடித்துவரப்பட்ட பெண்கள் அடிமைகளாக்கப்பட்டனர். பகைவர் மனையோராய்ப்பிடித்து வரப்பட்ட மகளிர் “ என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்குச் சான்றளிக்கிறார். அப்பெண்கள் சமையல் காரிகளாகவும், சலவைக் காரிகளாகவும் நெல் குற்று வோராகவும், பணியமர்த்தப்படடனர் என்பதை முன்னர்க் கண்டோம். இம்மகளிருள் இளமையும் அழகும் உடையார் அரசர் மற்றும் செல்வர்களின் ஆசைநாயகியர் ஆக்கப்பட்டனர். இதனை,
‘மழையெனமருளும் மகிழ்செய் மாடத்து
இழையணிவரப்பினின்னகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறையப்பல்கால்
வாக்குபுதரத்தர”
(இழையணிந்த அழகினையுடைய பாட்டாலும் கூத்தாலும் வார்த்தையாலும் அரசனுக்கு இனிய மகிழ்ச்சியைச் செய்யும் பெண்கள் உண்டார் மயங்குதலைச் செய்யும் கள்ளை, மழையென்னும்படி மாடத்திடத்தே பலகாலும் ஓட்டமற்ற பொன்னற் செய்த வட்டில்கள் நிறையத்தந்து உண்பித்தனர்) என்று பொருநராற்றுப்படை அறிவிக்கிறது.
பகைவர் மனையோராய்ப் பிடித்து வரப்பட்ட இப்பெண்கள் கொண்டி மகளிர் எனப்பட்டனர். இவ்வடிமைப் பெண்கள் நீருண்ணும் துறையிலே சென்று மூழ்கிக்கோயில்களைத் தூய்மை செய்யவும் அந்திக் காலத்தே கோயில்களில் விளக்கேற்றவும், தறிகளுக்குப் பூச்சூட்டவும் பணியமர்த்தப்பட்டனர். ‘பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்பமகளிரை வைத்தார், அதனால் தமக்குப் புகழ் உளதாம் என்று கருதி” என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் காரணமும் விளக்கமும் கூறினார்.
இக்கொண்டிமகளிர் பரத்தையர் ஆக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. ‘ கொண்டி மகளிர் “ என்ற தொடர் பரத்தையர் என்ற பொருளில் ‘பயன்பல வாங்கி வண்டிற்றுறக்கும் கொண்டி மகளிர் என்று மணிமேகலையிலும் மதுரைக்காஞ்சியிலும் கூறப்படும் செய்தி மேற் குறித்த கூற்றுக்கு அரண் செய்கிறது எனலாம்.
பெண்களேயல்லாது, ஆண்களும் அரண்மனைகளில் அடிமைகளாகக் குற்றேவல் செய்தனர் என்பதையும் ஆடவரான அவ்வடிமைகள் அரசியர் வாழும் அந்தப்புரம் முதலிய பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தியையும் நெடுநல்;வாடை (106-107) கூறுகிறது.
‘பீடுகெழுசிறப்பின் பெருந்தகையல்லது
ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பு”
(பெருமை பொருந்தின தலைமையினையுடைய பாண்டியனல்லாது, குறுந்தொழில் செய்யும்; அடிமைகளான ஆண்களும் அணுகவாராத அரிய காவலையுடைய கட்டுக்கள்) என்பது, நூலாசிரியர் கூற்று.
‘கடியுடைவியனகர்” எனப்பட்ட கட்டுக்காவல் மிக்க அரண் மனைகளில் அடிமைகளாகப்பணிபுரிந்த ஆடவர்கள், ஆடவர் என்ற ஒரே காரணத்திற்காக அரசியர் வாழும் அந்தப்புரப் பகுதிக்குள் புகத்தடைவிதித்த அரசர்கள்தான், போர்க்களங்களில் தாம் அமைத்துத்தங்கிய பாசறைகளிலும் பாடிவீடுகளிலும் பணிபுரிந்திடப் பெண்களையும் உடன் அழைத்துச் சென்றனர், அப்பெண்களும் பாசறைகளில் ‘பாடை வேறுபட்ட பலவாகிய பெரிய படைக்கு நடுவே” (நச்சினார்க்கினியர் கூற்று) பணிபுரிய வற்புறுத்தப்பட்டனர் என்ற முரண் நம் சிந்தனைக்கு உரியதாகிறது.
அரண்மனைகளில் குறுந்தொழில் செய்வோராக நியமிக்கப்பட்ட அடிமைகளான ஆடவர்கள் அரசர்களுக்கு ஆலவட்டம், குடை, கொடி, பதாகை முதலியவற்றையும் செய்து கொடுத்தனர்.
‘கைவல்கம்மியன் கவின்பெறப்புனைந்த
செங்கேழ்வட்டம்” (கையாற் புனைதல் வல்ல உருக்குத்துகிறவனாலே அழகுறப்பண்ணின சிவந்த நிறத்தையுடைய ஆலவட்டம்) என்று நெடுநல் வாடை (57-58) அது குறித்த செய்தியைக் கூறுகிறது.
அரசர்களின் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் அடிமைகளான பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் சமையல் காரர்களாகப் பணிபுரிந்தனர்;.
‘கொடுவாள் கதுவிய வடுவாழ் நோன்கை
வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை”
(வளைந்த அரிவாளைக் கொண்ட வடுவழுந்தின வலியுடைத்தாகிய கையினையுடைய மடையன் (சமையல்காரன்) ஆக்கின பல இறைச்சியிற் கொழுவிய தசை) என்று பெரும்பாணாற்றுப்படை(471-472) இது குறித்துக் கூறுகிறது.
இவரையல்லாமல் சூதர் மாகதர் வைதாளிகர் நாழிகைக் கணக்கர் முதலானோரும் அரண்மனைகளிலும் அடிமைகளாகப் பணிபுரிந்தனர். இவர்கள் அரசர்களை முகஸ்துதியாகப் புகழ்ந்து பாடும் வேலைகளைச் செய்தனர். அவர்களும் நின்;றேத்துவார் இருந்தேத்துவார் என ஏற்றத்தாழ்வாகப் பிரிக்கப்பட்டிருந்ததையும் இலக்கியங்கள் காட்டுகின்றன.
சூதர் என்போர் நின்று கொண்டு அரசர்களை வாழ்த்தினர். அரசர்களுக்கு எதிரில் உட்கார்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படாத நிலையினையே ‘நின்றேத்துவார்” என்ற சொல் உணர்த்துகிறது. மாகதர் என்போர் இருந்தேத்திப்புகழைச் சொல்வோராவர். நாழிகைக் கணக்கர், அரசர்களுக்கு நேரத்தைக் கணக்கிட்டுக் கூறினர். வைதாளிகர் என்போர் தத்தம் துறைக்குரியவற்றைச் சொல்வோராவர். மேலும் அரசர்களுக்குப் பள்ளியெழுச்சியின் போது காலைப் பொழுதில் பள்ளியெழுச்சி முரசு முழக்குவோரும் இருந்தனர்.
‘சூதர்வாழ்த்த மாகதர் நுவல
வேதாளிகரொடு நாழிகையிசைப்ப
இமிழ் முரசிரங்க ‘ என்பது மதுரைக் காஞ்சி (670 -672) இது குறித்துக் கூறும் செய்தியாகும்.
போர்க்களத்தில் அடிமைகள்
அரண்மனைகளில் குற்றேவல் செய்வதற்காகப் பணியமர்த்தப்பட்ட அடிமைகளான பெண்களையும் பாணர் துடியர் முதலான அடிமைகளையும் அரசர்கள் போர்க் களங்களுக்கு உடனழைத்துச் சென்றனர். அரண்மனைகளில் மட்டுமல்லாது, போர்க்களங்களிலும் அரசர் படைத்தலைவர் முதலாயினர்க்குப் பணிவிடை செய்யவும் அவர்களின் காமப்பசிக்கு இரையாகவும் அடிமை மகளிர் உடன் கொண்டு செல்லப்பட்டனர், குற்றவேலும் பணிவிடையும் செய்யப் பணிக்கப்பட்டனர்.
‘குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ்சிறுபுறத்து
இரவு பகல் செய்யும் திண்பிடியொள்வாள்
விரவுவரிக் கச்சிற் பூண்டமங்கையர்
நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக்
கையமை விளக்கம் நந்துதொறு மாட்ட”
(சிறிய வளையலணிந்த முன் கையையும் கூந்தலசைந்து கிடக்கின்ற அழகிய சிறிய முதுகையும் உடையோரும் திண்ணிய கைப்பிடியையுடைய வாளைக் கச்சிலே பூண்ட வரும் நெய்வழிகின்ற திரிக்குழாயையுடையவரும் ஆன அடிமைப்பெண்கள், நெடியதிரியை எங்கும் கொளுத்தின ஒழுங்காய் அமைந்த விளக்குகள் அணையுந் தோறும் தம்கையிற்பந்தத்தால் கொளுத்தினர்) என்று முல்லைப்பாட்டு (45 - 49) கூறுகிறது.
போருக்குச் செல்லும் வீரர்கள் அவ்வப் போர்த்துறைக்குரிய பூவைச் சூடிச் செல்வது மரபு, அரசர்கள் அதற்கேற்பவீரர்களுக்குப் பூ வழங்குவர். போர்ப் பூ வழங்கும் செய்தி வீரர்களுக்குப் பறையறைந்து அறிவிக்கப்பட்டது. அப்பணியைத் துடியன் இழிசினன் முதலான அடிமைகளே செய்தனர். அடிமையாகிய இழிசினன் யானை மீதமர்ந்து பறை முழக்கிப் போர்ப் பூவைப் பெற்றிட வருமாறு வீரரை அழைத்தான். இழிசினன். அங்ஙனம் அழைத்ததனை.
‘கேட்டியோ வாழிபாண பாசறைப்
பூக்கோளின் றெறன்றையும
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே” புறநானூ : 289
(பாணனே பாசறையிடத்தே போர்க்குரிய மறவர்க்குப் போர்ப்பூவைத் தரும் பொழுது இப்பொழுது என்று அறிவிக்கும் புலையன் முழக்குகின்ற பறையின் ஓசையைக்கேட்பாயாக); என்று, புலையன் போர்ப் பூவைப் பெற்றுச் செல்லப் பறைமுழக்கி வீரரை அழைத்த காட்சியைப் புலவர் கழாத் தலையார் காட்டுகிறார்.
‘நிறப்படைக் கொல்காயானை மேலோன்
குறும்பர்க் கெறியும் ஏவற்றண்ணுமை”
(குத்துக் கோலுக்கு அடங்காத யானைமேலிருப் போனாகியவள்ளுவன், அரண்புறத்தே நின்று பொரும் பகைவர் பொருட்டு முழக்கும், பூவைக் கொள்ளுமாறு ஏவுதலையுடைய தண்ணுமை (பறை) என்று, வள்ளுவன் யானை மேலமர்ந்து வீரரைப் போர்ப் பூவைப்பெறுவதற்குப் பறையறைந்து அழைத்த காட்சியைப் புறநானூறு :293 காட்டுகிறது.
துடியன், பறையன், பாணன், புலையன் இழிசினன் முதலான அடிமைகள் பாசறைகளிலும் பாடி வீடுகளிலும் அரசர்க்குப் பணி விடை செய்வதற்காகப் போர்க்களத்துக்கு உடனழைத்துச் செல்லப்பட்டனர். துடியர் பறையர் என்போர் போர்க்களத்தில் துடியையும் பறையையும் முழக்கு வோராகப் பணிபுரிந்தனர். இதனை, ‘துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின” (துடிப்பறை கொட்டுபவனே பறையை முழக்கும் குறுந்தடியைக் கொண்டு நிற்கும் புலையனே) என்றும் ‘உவலைக்கண்ணித்துடியன்” என்றும் புறநானூறு கூறுகிறது.
போரில் தலைவன் வீழ்ந்து பட்டால் அவனது போர்க் கருவிகளான வேல் கேடகம் முதலானவற்றை, உடன் அழைத்துச் செல்லப்பட்ட துடியனும் பாணனும் தம் கைகளில் ஏந்திக் கொண்டனர்.
‘பாசறையீரே பாசறை யீரே
துடியன் கையது வேலேயடிபுணர்
வாங்கிரு மருப்பிற்றீந் தொடைச் சீறியாழ்
பாணன்கையது தோலே” புறநானு : 285.
(மாற்றார் எறிந்த வேல்மார்பிற்பட்டு தலைவன் மண்ணிற் சாய்ந்தானாக அவனது வேல் துடிகொட்டுவோன் கையதாயிற்று தலைவனது கேடகம் பாணன் கையதாயிற்று) என்று தலைவன் போரில் வீழ்ந்து பட்டானாக அவனது வேலும் தோலுமாகியவற்றைத் துடியனும் பாணனும் தம் கைகளில் ஏந்திக் கொண்டனர் என்ற செய்தியை அரிசில் கிழார் கூறுகிறார்.
சுpறாஅர் துடியர் பாடுவன் மகா அர்
தூவெள்ளறுவை மாயோற் குறுகி
இரும்புட் பூச லோம்புமின் யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரிகடிகுவென்” - புறநானூறு: 291
(அடிமைகளான துடியர்களே பாணர்களே தூய வெள்ளிய ஆடையணிந்த கரியனாகிய தலைவனை அணுகி, கரிய பறவைகள் செய்யும் ஆரவாரத்தை நீக்கு வீராக, யானும் விளரிப் பண்ணைச் சுழற்சியுறப்பாடி, தின்ன வரும் குறுநரிகளை யோட்டுவேன்.) என்று, போரில் வீழ்ந்து பட்ட வீரனது மனைவி, போர்க்களத்துக்குத் தலைவனுடன் சென்றிருந்த துடியனையும் பாணனையும் பார்த்துக் கூறியதாக நெடுங்களத்துப் பரணர்; கூறுகிறார். இவ்வாறு போர்க்களத்துக்கு அடிமைகளான பெண்களும் துடியரும் பாணரும் தலைவர்களால் உடனழைத்துச் செல்லப்பட்டதைப் புறநானூறு கூறுகிறது.
பாணரும் பாடினியரும் துடியரும் பறையரும் ஆண்டைகளின் அடிமைகளாக அவர்களின் ஆதரவில் வாழ்ந்தனர். போரில் ஆண்டையாகிய தலைவன் வீழ்ந்து பட்ட போது அவனது பராமரிப்பில் வாழ்ந்து வந்த துடியர் பாணர் முதலியோரது நிலை இரங்கத்தக்க தாயிற்று. இதனை,
‘துடிய பாண பாடுவல் விறலி
என்னாகுவிர்கொல் அளியர் நுமக்கும்
இவணுறை வாழ்க்கையோ அரிதே ‘ புறநானூறு : 280
(துடி கொட்டுபவனே பாணனே பாடல் வல்ல விறலியே நீங்கள் என்ன ஆவீர்களோ, இரங்கத்தக்கீர், இது காறும் இருந்தாற் போல இனி இவ்விடத்தே இருந்து வாழலாம் என்பது அரிதே) என்று போரில் இறந்து பட்ட தலைவனது மனைவி, துடியர் பாணர் முதலானோரது நிலைக்கு இரங்கிக் கூறியதாக மாறோக்கத்து நப்பசலையார் கூறுகிறார்.
பாணர் அடிமைகளாக ஆண்டைகளின் தயவில் வாழ்ந்தனர்;. அவர்களைப் பரத்தையரின் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர். ஆண்டைகளுக்காகப் பரத்தையர் பால் தூது சென்றனர். இதனைச் சங்க இலக்கியங்களில் மருதத்திணை சார்ந்த பாடல்கள் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றன. ‘பாணர் அடிமைகளாகப் பரத்தையர் வீடுகளுக்கும் உடன் சென்றனர், பாடி வீடுகளுக்கும் உடன் சென்றனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
ஈமத்தொழிலில் அடிமைகள்
புலையன் இழிசினன் முதலான அடிமைகளை ஆண்டைகள் பிணஞ்சுடுதல் போன்ற இழிபணிகளைச் செய்யவும் ஏவினர். ஆண்டைகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவர்களும் இடுதலும் சுடுதலுமாகிய ஈமத்தொழில்களைச் செய்தனர்.
கள்ளியேய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுளாங்கண்
உப்பில்லா அவிப்புழுக்கல்
கைக் கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோனீயப் பெற்று
நிலங்கலனாக விலங்குபலிமிசையும் -புறநானூறு :363
(கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முது காட்டில் வெள்ளிடையே ஓங்கிய அகன்ற இடத்தின் கண் உப்பின்றி வேக வைத்த சோற்றைக் கையிற் கொண்டு பின்புறம் பாராது இழிசினனாகிய புலையன் கொடுக்கப் பெற்று நிலத்தையே உண் கலனாகக் கொண்டு வைத்து வேண்டாத பலியுணவை ஏற்கும் ) என்றும்
‘கள்ளிபோகிய களரி மருங்கில்
வெள்ளினிறுத்த பின்றைக் கள்ளொடு
புல்லகத்திட சில்லவிழ்வல்சி
புலையனேவப் புன் மேலமர்ந்துண்
டழல்வாய்ப் புக்கபின்’ - புறநானூறு :360
(கள்ளிகள் ஒங்கியுள்ள பிணஞ்சுடு களத்தின்கண் பாடையை நிறுத்திய பின்பு பரப்பிய தருப்பைப் புல்லின் மேல் கள்ளுடன் படைக்கப்பட்ட சில சோறாகிய உணவைப் புலயைன் உண்ணுமாறு படைக்க, தருப்பைப் புல்லின் மேல் இருந்துண்டு சுடலைத்தீயில் எரிந்தனர்) என்றும் இலக்கியங்கள் பேசுகின்றன.
‘இழிசினனாகிய புலையன் பிணத்துக்கு உப்பில்லாத சோறும் கள்ளும் பின்புறம் திரும்பிப் பாராமல் படைத்தலாகிய சடங்கைச் செய்தலோடு பிணத்தை இடுதலும் சுடுதலும் ஆகிய ஈமத்தொழிலையும் செய்தான் என்ற செய்தியைப் புறநானூறு கூறுகிறது.
இழிந்தவையும் கடினமானவையுமான தொழில்களைச் செய்யுமாறு அடிமைகாளகிய சகமனிதர்களை ஆண்டைகள் வற்புறுத்தி ஏவினர். வயல்களில் உழுதல், நீர்பாய்ச்சுதல், தொளிகலக்குதல், நாற்று நடுதல், களைபறித்தல், காவல் காத்தல், நெல்லரிதல், பிணையலடித்தல், பொலி தூற்றுதல், நெல்லை ஆண்டைகளின் மனைகளில் உள்ள நெற் கூடுகளில்சேர்த்தல் போன்ற கடினமான பணிகளைக் கடையர் கடைசியர் உழவர் உழத்தியர் களமர் முதலானவர்களே செய்தனர். இவர்கள் கீழ் மக்கள் எனப்பட்டனர். தமிழ் இலக்கணநூல்களும் இலக்கியநூல்களும் அங்ஙனமே குறித்துக் கூறுகின்றன.
சங்க இலக்கியங்களில் இத்தகைய தொழில் செய்தாரைக் குறிக்கும் பொழுது ‘சிறு’ அல்லது ‘சிறார்’ என்னும் சொல்லுடன் சேர்த்தே குறிப்பிட்டனர். தச்சச் சிறார். வேட்கோச் சிறார், சிறுகுறுந் தொழுவர் என்று குறிக்கப்பட்டனர். அவர்களை அடிமைகள் அல்லது கீழ் மக்கள் என்று குறிப்பதற்காகவே இச் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டன. ‘சிறாஅர் துடியர் பாடுவன் மகாஅர்’ என்று துடியரும் பாணரும் சிறார் என்று அழைக்கப்பட்டதைப் புறநானூறு ( 291) காட்டுகிறது. இங்ஙனம் தச்சர், வேட்கோவர், குறுந்தொழுவர், துடியர் பாணர் முதலியவர்களை அடிமைகள் என்று குறிப்பதற்காவே அச்சொற்களுடன் சிறு மற்றும் சிறார் என்னும் சொற்கள் சேர்த்து வழங்கப்பட்டன.
வயதில் மூத்தவர்களான அடிமைகளையும் கீழ்ச்சாதியாரையும் இளையோரான ஆண்டைகளும் ஆதிக்க சாதியாரும் மரியாதை இல்லாமல் அடே என்று அழைப்பதும் வாடா போடா என்று ஏவுவதும் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இவ்வழக்கம் அடிமைச் சமூகம் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்ட வழக்கமாகும். இவ்வழக்கம் சங்க காலத்திலும் நடைமுறையில் இருந்தது என்பதையே, தச்சர் வேட்கோவர் முதலான சொற்களோடு சேர்த்து வழங்கப்பட்டுள்ள சிறு மற்றும் சிறார் என்னும் சொற்கள் உணர்த்துகின்றன.
உழவர், களமர், புலையர் முதலான அடிமைகள் ஊருக்குள் வாழ அனுமதிக்கப்;படவில்லை. ஊருக்கு வெளியே ஓதுக்குப் புறமான சேரிகளில் வசிக்கவே அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். சுரண்டும் வர்க்கத்தவர் ஆன ஆண்டைகள் வாழ்ந்த ஊர்களையும் அரண்மனைகளையும் புகழ்ந்து பாடிய புலவர்கள் உழைப்பாளிகளும் அடிமைகளும் ஆன கீழ் மக்கள் வாழ்ந்த சேரிகளைப்பாடாமல் ஒதுக்கினர். இது பற்றி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.
சங்க காலத்தில் அரண்மனைகளிலும் ஆண்டைகளின் வளமனைகளிலும் அடிமைகள் ஊதிய மின்றி உழைத்திட நிர்பந்திக்கப்பட்டனர். பழைய சோறே அடிமைகளுக்கு உணவாக ஆண்டைகளால் வழங்கப்பட்டது. ஆண்டைகள் உடுத்துக்களைந்த பழைய ஆடைகளே அடிமைகளுக்குக் கொடுக்கப்பட்டன. பிற்காலத்தில் ஜமீன்தார்கள் மற்றும் செல்வர்களின் வளமனைகளில் அடிமைகள் ஊதிய மின்றி உழைத்திட நிர்பந்தப் படுத்தப்பட்டனர். இவ்வடிமைகள் ஊழியக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அவ்வழக்கம் சங்க காலத்திலும் நிலவியது. அண்மைகாலத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படும் வரையிலும் நீடித்திருந்தது.
அடிமைக் கொடை
அடிமைகளைச் சங்க காலத்தில் விலைக்குவிற்கும் வழக்கம் இல்லை. அதற்கான சான்றுகள் இலக்கியங்களில் காணப்படவில்லை. அக்காலத்தில் அடிமை வாணிகம் தோன்றாமைக்கு வணிகமுறை வழக்கத்துக்கு வாராததும் ஒரு காரணமாகும். அந்தக் காலகட்டத்தில் வாணிபம் என்பது பண்டமாற்று முறையாகவே இருந்தது. இது குறித்து ஏராளமான செய்திகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆண்டைகள் அடிமைகளைப் பரிசிலர்க்கு தானமாக வழங்கும் வழக்கம் இருந்தது.
சிக்கல்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழி யாதன் என்பவன் குண்டுகட்பாலியாதனார் என்ற புலவருக்கு யானை குதிரை ஆநிரை நெற்போர் முதலியவற்றோடு அடிமைகளையும் தானமாக வழங்கினான் என்ற செய்தியைப்புறநானூறு ( 387 ) கூறுகிறது.
குன்றுறழ்ந்த களிறென்கோ
கொய்யுளைய மாவென்கோ
மன்று நிறை நிரையென்கோ
மனைக்களம ரொடு களமென்கோ
ஆங்கவை கனவென மருள வல்லே நனவின்
நல்கியோனே நசைசால்; தோன்றல்
( மலை போன்ற யானைகளும் கொய்யப்பட்ட தலையாட்டமணிந்த குதிரைகளும் மன்றிடம் நிறைந்த ஆநிரைகளும் மனைக்கண் இருந்து பணிபுரியும் அடிமைகளான களமரும் ஆகிய அவற்றைக் கனவு என்று மயங்குமாறு நனவின்கண் விரைவாக நல்கினான் ) என்பது பரிசில் பெற்ற புலவர் பாலியாதனரின் கூற்று ஆகும்.
ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்னும் வள்ளல் தன்னைப் பாடி வந்த பரிசிலர்க்கு யானை குதிரை அணிகலன் தேர் முதலியவற்றையும் எருதுகளையும் தேரைச் செலுத்தும் பாகனையும் பரிசிலாகக் கொடுத்தான் என்ற செய்தியைச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. ( 257 - 61 )
கடுந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்து பெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெலவொழிக்கும் மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ
யன்றே விடுக்கு மவன் பரிசில்’
( பாண்டில் எருது, வலவன் வண்டி யோட்டி) ( வலிய தொழிலைச்செய்யும் தச்சருடைய கையாற் செய்யும் உருக்கள் எல்லாம் முற்றுப் பெற்ற தேரினையும் தன் கடுமையால் குதிரையின் செலவைப் பின்னே நிறுத்தும் அழகும் வலிமையும் உடைய கால் களையும் ஒளிபொருந்திய முகத்தையும் உடைய நாரை எருத்தையும் அதனைச் செலுத்தும் பாகனையும் யானைகுதிரை அணிகலன்களையும் தந்து அவன் அன்றே விடுக்கும் ) என்பது இடைகழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நமக்குக் கூறும் செய்தியாகும். இவ்வாறு அடிமைகளை ஆண்டைகள் புலவர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
ஆண்டைகள் ஊர்ந்து சென்ற சிவிகைகளை அடிமைகள் சுமந்து சென்ற காட்சியை வள்ளுவர் நமக்குக் காட்டுகிறார்.
‘அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை” - குறள் என்பது வள்ளுவர் காட்டும் காட்சியாகும், இங்கு சிவிகை பொறுத்தார் அடிமைகள் ஊர்ந்தார் ஆண்டைகள். ஆடவரும் மகளிருமான அடிமைகளை ஆண்டைகள் அனைத்து விதமான பணிகளையும் செய்யுமாறு ஏவிப் பணி கொண்டதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. வலியோராகிய சிலர் எளியோராகிய பலரை - சகமனிதர்களை - மனிதக்கால் நடைகளாகக் கருதிப் பணியமர்த்திய கொடுமை தனியுடைமைச் சிந்தனையின் வெளிப்பாடு என்பது சங்க இலக்கியங்கள் வாயிலாக மனித குலவரலாறு நமக்குக் கூறும் செய்தியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக