18/04/2011

கணசமூகமும் கரந்தை வெட்சிப் போர்களும் - வெ.பெருமாள் சாமி

சங்க காலத்தில் தமிழகத்துக் குறிஞ்சி முல்லை நிலங்களில் கால்நடைகளுக்காக அம்மக்களிடையே போர்கள் மிகுதியாக நடைபெற்றன. மழையின்மை மற்றும் வறட்சி காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்ட காலங்களில் மக்கள் உணவுக்காக வேற்றுப் புலங்களுக்குச் சென்று போரிட்டு அவர்தம் ஆநிகைளையும் அவர்கள் சேமித்து வைத்திருந்த வரகு தினை முதலிய உணவுப் பொருள்களையும் கவர்ந்து வந்தனர். அப்போது நடைபெற்ற போர்களைச் சங்க இலக்கியங்கள் வெட்சிப் போர்கள் என்றும் கரந்தைப் போர்கள் என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றுக்கு ‘வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்” என்று இலக்கணநூல்கள் விளக்கம் கூறுகின்றன.

இ;ப்போர்களைப் பற்றிப் புலவர்கள் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளனர். அப்பாடல்கள் வீரச்சுவை மிக்கவையாக விளங்குகின்றன, அத்துடன் சங்ககாலத்தில் தமிழகத்தில் நிலவிய சமூக அமைப்புக்கும் சான்றளிக்கின்றன. முல்லை நிலப்பகுதிகளில் நடைபெற்ற இப்போர்கள் அரசர்களின் ஆதிக்க வெறி மற்றும் அதிகார போதையால் நிகழ்ந்த போர்கள் அல்ல. மன்னர்கள் மண்ணாசை காரணமாகத் தம் அதிகார எல்லையை விரிவு படுத்துவதற்காக நடத்திய போர்களும் அல்ல. ( நிலப்பிரபுத்துவ சமூகம் தோன்றி அரசுகள் வலுப்பட்ட காலத்தில் இவ்வகையான போர்கள் மிகுதியாக நடைபெற்றன.) வெட்சி கரந்தைப் போர்கள் மக்களின் வாழ்க்கைக்கான போர்களாகவே இருந்தன. இப்போர்கள் பற்றிய சங்க இலக்கிய பாடல்களில் தோல்வி மற்றும் புறமுதுகிடுதல் பற்றிய செய்திகள் காணப்படாமை இவ்வுண்மையை உணர்த்துகிறது.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்

இத்தகைய போர் ஒன்றில் வீரன் ஒருவன் பகைவர்வாளல் வெட்டுண்டு இறந்தான். அவன் துணிவுடன் போர்புரிந்ததால் உடல் துணி பட்டுச் சிதைந்து வேறு வேறாகச் சிதறிக் கிடந்தது. அதனை அறியாத வீரர் சிலர் போர் முடிவில் ஊருக்குள் போந்து, அவன் தாயைக் கண்டு, நின்மகன் போரில் புற முதுகிட்டு மாண்டான்.” எனப் பொய்யுரை புகன்றனர். அது கேட்டு முதியவளான அத்தாய் ‘தன் மகன் செயல் குடியின் புகழுக்கும் நலனுக்கும் ஊறு விளைவிப்பதாகும்என்று எண்ணினாள், கண்களில்; தீயெழ விழித்து நோக்கி, என் மகன் அங்ஙனம் மாண்டிருப்பானாகின் அவன் வாய் வைத்துண்ட என் மார்பை அறுத்தெறிவேன். என வஞ்சினம் கூறி வாள் ஒன்றைக் கையில் ஏந்திப் போர்க்களம் புகுந்தாள். களம் எங்கும் சிதறிக் கிடந்த பிணங்களைப் புரட்டிப் பார்த்தாள். ஓர் இடத்தில் தன் மகன் உடல் கிடந்ததைக் கண்டாள். சிதறிக் கிடந்த உறுப்புக்களைச் சேரத்;தொகுத்து ஒழுங்குற அமைத்து உற்று நோக்கினாள். அவன் முகத்திலும் மார்பிலும் விழுப்புண்பட்டு வீழ்ந்தானேயன்றிப் புறப்புண்பட்டு மாண்டிலன் எனத் தெளிந்தாள். அப்போது அவள் உள்ளத்தில் கனன்ற வெம்மை நீங்கியது. உவகை பொங்கியது. மகன் தன் கணத்தின் நலன்காக்கவும் குடிப்பெருமையை உயர்த்தவுமே போரிட்டு மாண்டான் என்பதால் எழுந்த உவகை அது. அவ்வுவகை, அவனைப் பெற்ற நாளில் அவள் அடைந்த உவகையினும் பெரிதாயிருந்தது. இதனைக் காக்கைப்பாடினியார் தம் பாடலில் பெருமிதம் பொங்க எடுத்துரைக்கிறார். அப்பாடல் இது :

‘நரம்பெழுந்துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டமர்க்குடைந்தனனாயின் உண்டெவென்
முலையறுத்திடுவேன் யான்எனச் சினை இக்
கொண்டவாளொடு படு பிணம் பெயராச்
செங்களம் துழவு வோள்சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது வந்தனளே”
- புறநானூறு 278.
-
காக்கைப் பாடினியாரின் இப்பாடல் கணசமூகமாக முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் போரில் புற முதுகு காட்டி ஓடுதலையும் புறப்புண்பட்டுத் தோற்றலையும் எந்த அளவுக்கு வெறுத்தனர் என்பதைக் காட்டுகிறது. இவ்வாறு, வெற்றி அல்லது வீரமரணம் என்ற உணர்வோடு அவர்கள் போரில் ஈடுபட்டதற்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணம் ஆகும். அவர்கள் கணசமூகமாக வாழ்ந்தனர்.

கால்நடைகளுக்காக நடைபெற்ற வெட்சிகரந்தைப் போர்களில் ஆடவரே ஈடுபட்டனர். மகளிர் பங்கேற்றிலர். ஆயின் அப்பெண்டிதர் தம் கணவர், மக்கள் உடன்பிறந்தார், மற்றும் தந்தையரைத் தூண்டிப் போர்க்களத்துக்கு அனுப்பினர். அப்போர்களில் அவ்வீரர்கள் இறந்துபடின், அதற்காக வருந்தாமல் அவர்தம் வீர மரணம் குறித்துப் பெருமிதமும் பேருவகையும் கொண்டனர். இப்போர்கள் பற்றிய புறநானூற்றுப்பாடல்கள் வீரச்சுவை மிக்கவையாகவும் புகழ்ச்சிக்கு உரியவையாகவும், விளங்கின்றன.

செருமுகம் நோக்கிச் செல்க என விடுத்த தாய்

ஒக்கூர் மாசாத்தியாரின் மூதின் முல்லைப் பாடல், கண சமூகத்தவரான மறக்குடி மகளிரின் மறமாண்பைப் புலப்படுத்துவதுடன், தான்வாழும் கணசமூகத்தின் நலன் காத்திட எத்தகைய தியாகத்தைச் செய்யவும், அப்பெண்கள். ஆயத்தமாக இருந்தனர் என்பதையும் உணர்த்துகிறது.

ஒரு மகனல்லது இல்லோளாகிய தாய் ஒருத்தி தன் தந்தையையும் கணவனையும் போரில் இழந்த நிலையில் தன் ஒரு மகனையும் ‘வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடுத்துப்பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவிச்செருமுகம் நோக்கிச் செல்க” என விடுத்த வீரம் உலகம் உள்ளளவும் உலகத்தார் அனைவராலும் போற்றத்தக்கதாகும். அது குறித்த பாடல் இது :

‘கெடுகசிந்தை கடிதிவள் துணிவே
மூதின் மகளிராதல் தகுமே
மேனாளுற்ற செருவிற் கிவடன்னை
யானையெறிந்து களத் தொழிந்தனனே
நெருநலுற்ற செருவிற்கிவள் கொழுநன்
பெருநிரைவிலங்கி யாண்டுப் பட்டனனே
இன்றும் செருப்பறைகேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து டீஇப்
பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகனல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே” - புறநானூறு 279

தான் வாழும் கணசமூகத்தின் நலனையும் புகழையும் காத்திடவே அத்தாய் தன் ஒரே மகனான சிறுவனைப் போருக்கு அனுப்பத் துணிந்தாள். இதனை இப்பாடல் தெளிவாக உணர்த்துகிறது.

மகன் மாண்டிலனே என வருந்திய தாய்

வெட்சியார் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்கச் சென்ற கரந்தையார் வெற்றியோடே மீண்டனர். அப்போது நிகழ்ந்த போரில் மாண்டோர் பலர், மீண்டோர் சிலர். வென்று மீண்ட வீரரை ஊரவரும் உறவினரும் உண்டாட்டு நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். மீண்டு வந்த வீரருள் அந்த கணசமூகத்தைச் சேர்ந்த மறக்குடி மங்கையின் மைந்தனும் ஒருவன். தன் மகன் உயிருடன் மீண்டமைக்காக அத்தாய் மகிழ்ந்தாளில்லை,, மாறாக வருந்தவே செய்தாள். அவளின் வருத்தத்தை அவ்வையார் ஒரு பாட்டாக வடித்தார். அப்பாட்டு இது.

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோரன்ன இளையர் இருப்பப்
பலர் மீது நீட்டிய மண்டை யென் சிறுவனைக்
கால் கழிகட்டிலிற் கிடப்பித்
தூவெள்ளறுவை போர்ப் பித்திலதே” - புறநானூறு : 286

( மண்டை – கள் உண்ணும் கலம் : கால்கழிகட்டில் - பாடை ) ‘என் மகன் போல் இளையர் பலர் இவ்வூரில் உள்ளனர். அவரனைவரும் தலைவன் சென்ற நெறியே வெள்ளாடு போல அன்போடு அவனைப் பின்தொடரும் இயல்பினர். ஆயினும் உண்டாட்டு முதலிய சிறப்புக்கள் நிகழுங்கால், அவரனைவரையும் விடுத்து என்மகனைச் சிறப்பாகப் பேணி யாவர்க்கும் மேலாகக் கள் வழங்குவன். அவன் வழங்கிய அக்கள் அத்தலைவனும் ஊரவரும் கண்ணீர்மல்கச் சாகும் பேற்றினை என் மகன் பெறுமாறு செய்திலது” என்று அத்தாய், தன்மகன் கணத்துக்காக வீரமரணம் அடையப் பெறாமைக்காக வருந்தினாள். என்னே தியாக உணர்வு.
கணத்தின் நலக்காக்க மகன் தன் உயிரையும் தியாகம் செய்திருக்க வேண்டும். அங்ஙனம் செய்திருந்தால் அத்தாய் பெரிதும் மகிழ்ந்திருப்பாள்.

‘வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே” என்று புறநானூற்றுத்தாய் ஒருத்தித் தன் மகன் அடைந்த வீரமரணத்துக்காகப் பெரிதும் மகிழ்ந்தாள். புலவர்களால் போற்றப்பட்டாள். அத்தகைய மகிழ்ச்சியும் புகழ்சியும் தனக்கு வாய்க்கவில்லையே என்று இத்தாய் வருந்தினாள்.’ பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக் கால் கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள்ளறுவை போர்ப் பித்திலதே” என்று இரங்கிக் கூறினாள்.

மக்கள் கணமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் உடைமை அனைத்தும் மக்களுக்கே - கணசமூகத்துக்கே – சொந்தமாக இருந்தன. தனிச் சொத்துடைமை பற்றிய சிந்தனையே எழவில்லை. அத்தகைய சிந்தனை தோன்றுவதற்கான சமூகச் சூழலும் ஏற்படவில்லை உலகம் முழுவதிலும் அப்படிப்பட்ட நிலையே இருந்தது. கணசமூகத்தில் உடைமைகள்அனைத்தையும் மக்கள் அனைவரும் எவ்விதப் பாகுப்பாடும் இல்லாமல் தமக்குள் சம அளவில் பங்கீட்டுக் கொண்டனர். சமூகத்தில் ஏற்றத் தாழ்வு இருந்ததில்லை. உயர்ந்தோர். தாழ்ந்தோர் என்ற பேதம் இருந்ததில்லை. சமத்துவம் நிலவியது. ‘அனைத்தும் அனைவர்க்கும்” என்ற சிந்தனையே செயல்பட்டது.

தனிமனிதன் தனக்கென உடைமைகள் எதனையும் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை. தான் சேர்த்து வைத்துள்ள செல்வம் தனக்குப்பிறகு தன் பிள்ளைகளையே சேர வேண்டும், தன்சொத்துக்குத்தன் பிள்ளைகளே வாரிசு ஆகவேண்டும். என்ற சிந்தனை மனிதனுக்கு ஏற்படவில்லை. ஆணாதிக்கம் தலைதூக்கவில்லை. பெண்ணே சமூகத்துக்குத் தலைமை ஏற்றிருந்தாள், தாய் வழியாகவே வம்சா வழி குறிக்கப்பட்டது. தன் வீடு, தன்பிள்ளை, தன்; பெண்டாட்டி என்ற கடுகு உள்ளத்தினராக கணசமூகமாந்தர் வாழ்ந்திடவில்லை. முதியோரையும் நோயுற்றோரையும் பாதுகாக்கும் பொறுப்பு சமூகத்தையே சார்ந்திருந்தது. எனவே தான் சமூகத்தின் உடைமைகளான ஆநிரைகளைப் பாதுகாக்கும் கரந்தைப் போரில் அனைவரும் ஈடுபட்டனர். அப்போரில் மரணம் அடைய நேரிட்டாலும் அதனை மகிழ்வோடு ஏற்றனர். அம்மரணம் புகழ்ச்சிக்குரியது எனப் போற்றினர். மரணம் நிச்சயம் எனத்தெரிந்திருந்தும் தாய் தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பத் துணிந்தாள். ‘செருமுகம் நோக்கிச் செல்க” என விடுத்தாள்.

மற்றொருதாய், தன் மகன் போர் முடிந்து வெற்றியோடு மீண்டமைக்காக மகிழாமல், மாண்டிலனே’ என்று வருந்தினாள். அன்னையரின் இத்தகைய எண்ணப்பாங்கிற்கு அவர்கள் வாழ்ந்த சமூக அமைப்பே காரணமாகும். அச்சமூகத்தையும் அதன் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே காரணம் ஆகும். அதற்காக எத்தகைய தியாகத்தைச் செய்திடவும் அவர்கள் முன் வந்தனர். ‘ஏழை இல்லாதவன் என்று யாரும் இருக்க முடியாது. முதியோர் நோயாளிகள் யுத்தத்தில் அங்க ஹீனரானவர்கள் விஷயத்தில் பொதுவுடைமை வகைப்பட்ட கணமும் குடும்பமும் தம் கடமைகளை உணர்ந்தே இருக்கின்றன. எல்லோரும் சமமானவர்கள். சுயேச்சையானவர்கள், பெண்கள் உள்பட ‘என்று எங்கல்ஸ் அவர்கள் அமெரிக்க இரோகுவாய்கள் பற்றிக் கூறியுள்ள கூற்று தமிழகத்துக் குறிஞ்சி முல்லை நிலங்களில் கணசமூகமாக வாழ்ந்த மக்களுக்கும் பொருந்தும் என்று கூறுவது சரியான மதிப்பீடாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை: