18/04/2011

தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை - கீரனூர் ஜாகிர்ராஜா

கல்லிலே உருவான இந்த அதிசயத்தைக் காணத்தான் கொங்கு மண்டலத்திலிருந்து 16 வருடங்களுக்கு முன்னால் நான் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வந்தது. கரையேறி மீன் விளையாடும் காவிரிக்கரையை இலக்கியங்களில் படித்துவிட்டு வற்றிய காவிரியைக் கண்டபோது எனக்கு மனம் திடுக்கிடத்தான் செய்தது. நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி வரும் காவிரியை மோகமுள்ளிலும் அம்மா வந்தாளிலும் வாசித்துவிட்டு ஒரு மணல் காட்டை தரிசித்தபோது திசைமாறி வந்துவிட்டோமோ என்னும் அன்றைய என் தவிப்பு, தவிப்பின் வடு இன்றளவும் மாறாமலிருக்கிறது. ஜானகிராமனின் கதைமாந்தனைப்போல படித்துறையில் ஆற அமர உட்கார்ந்து அகண்ட காவிரியில் லயிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் என் ஆதி நம்பிக்கை வறட்சி குதிரைகளின் குளம்படி ஓசை அசரீரியாய் கேட்க, ஒரு புராதன நகரத்துக்குள் புழங்கித் திரிபவனாயிருக்க வேண்டுமென்பதுதான் அன்றைய என் கனவாயிருந்தது. அதுதான் என்னைத் தஞ்சாவூருக்கு இழுத்து வந்தது.

தஞ்சாவூரின் எந்தப் புள்ளியிலிருந்து பார்த்தாலும் ராஜராஜேச்வரம் எனப்படும் பெரியகோவில் நம் கண்களுக்கு காட்சியளிக்குமென எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் பஸ்ஸை விட்டு இறங்கி பெட்டியும் கையுமாக அண்ணாந்து பார்த்தபடி நடக்கிறேன். வணிக வளாகங்களால் சூழப்பட்ட நகர்மயமாகியிருந்த சற்று படாடோபமான தஞ்சாவூரைத்தான் அன்றைக்கு என்னால் காண முடிந்தது. பிறகொரு கிடைத்ததற்கரிய சந்தர்ப்பம் வாய்த்தது. தஞ்சாவூரின் பல நூற்றாண்டு கால வரலாற்றையும், பெரியகோவிலின் உன்னதங்களையும், அவலங்களையும், அகண்ட காவிரியின் சுழிப்புகளையும் அதன் வற்றிய சோகச் சரிதத்தையும் தன் நெஞ்சிலே புதைத்து வைத்துத் திரிந்த ஒரு ஆன்மாவைச் சந்திக்க வாய்த்தது. அவர் பெயர் தஞ்சைப் பிரகாஷ். இலக்கியத்திலேயே இது ஒரு இருட்டடிக்கப்பட்ட பெயர். ஆனால் நான் அறிந்து கொள்ள துடித்த புராதனத் தஞ்சையின் வளம்மிக்க பக்கங்களை மட்டுமல்ல பெரியகோவிலின் நிஜமான பிம்பத்தை குறிப்பாக, ராஜராஜசோழனால் சிவதுரோகியாக்கப்பட்ட பாவப்பட்ட ஏழைக் கூட்டத்தை பிரகாஷ்தான் எங்களுக்குச் சொன்னார். அவர்களின் வழியே உடலில் சூடு போடப்பட்டு சோழ மண்டலத்தின் பல பாகங்களிலிருந்தும் இழுத்து வரப்பட்ட 400 பெண்கள் தளிச்சேரிப் பெண்டுகளாக தேவரடியார்களாக தாசிகளாக்கப்பட்ட வரலாற்றின் கறைபடிந்த இருள்பக்கங்களையும் கதைசொல்லி ரூபமெடுத்த அவருடைய வாய் வழியாகத்தான் கேட்க நேர்ந்தது.

பிரகாஷ் கடைசியாகத் தொடங்கி நடத்திய இலக்கிய அமைப்புக்குப் பெயர் தளி. தளி அமைப்பின் கூட்டங்கள் நடந்த இடம் அசல் தளிச்சேரி. இன்றைக்குப் பெரிய கோவிலின் உள்ளே நுழைகிறவர்களுக்கு அந்த தளிச்சேரி பசுமையான புல்வெளியாகக் காட்சியளிக்கலாம். ஆனால் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில்தான் தளிச்சேரிப் பெண்டுகளின் வதைபடும் வாழ்க்கை நடந்திருக்கிறது. தளி என்றால் கோவில், சேரி என்றால் சேர்ந்து வாழுமிடம். தஞ்சாவூரிலிருந்த எரியூர் அரிகுலகேசரி ஈச்வரம், கடம்பூருக்கருகில் திவிலன்கோவில், திருவாரூரிலிருந்த பெரியதளி, பிரமீச்வரம், திருவாழனேரி, ஒலோகம மகாதேவீச்வரம், அருமொழி ஈச்வரம், உலகீச்வரம் போன்ற ஆலயங்களிலிருந்தும் அந்தப் பெண்கள் தஞ்சாவூருக்கு கட்டாயமாக அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஒரு பாதி. மறுபாதியினர் ராஜராஜனால் விதிக்கப்பட்ட வரியைக் கட்ட முடியாமல் சிவதுரோகியாக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் மற்றும் ராஜராஜனால் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் . இவர்களில் அரசகுடும்பத்தினரும் அடக்கம். அலகிடுபவர்களாக, மெழுகிடுபவர்களாக, விளக்கேற்றுபவர்களாக, ஆடுமகளிராக அதற்கும் அப்பால் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மேய்ச்சல் நிலமாகவும் அவர்கள் பாவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வகையில் இந்த தளிச்சேரியிலிருந்து தான் என்னுடைய இலக்கியப் பயணம் தொடங்கியது. இன்றைக்கு நவீனமான புல்வெளியாக்கப்பட்ட அந்த இடத்தில்தான் எங்கள் படைப்பரங்கம் நடைபெற்றது.

தஞ்சைப் பெரியகோவில் தன் விதானங்களை அகண்ட ஆகிருதியை படைப்பாளிகளுக்குத் திறந்து வைக்கிறது. இங்கே வழிபாட்டுக்காக வருகிறவர்களை விட தங்கள் மன அவசங்களுக்கு வடிகால் தேடி வருகிறவர்களே அதிகம். திறந்த வெளியும் செதுக்கப்பட்டுள்ள கலைச்சிற் பங்களும், பசும்புல் வெளியும், நெடிதுயர்ந்த கோபுரமும் நெஞ்சிலே பாரஞ்சுமந்து வருகிறவர்களை ஆசுவாசப்படுத்த ஆற்றுப்படுத்த வல்லவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஆகிருதியைச் சுற்றிவரும் பொழுது பத்தாம் நூற்றாண்டுப் புராதன நிழல் நம்மேல் கவிகிறது. கீழைச் சாளுக்கியரின் நிலமாயிருந்த வேங்கி நாடென்றழைக்கப்பட்ட இன்றைய ஆந்திரம், கங்கபாடி என்றழைக்கப்பட்ட இன்றைய மைசூர், நுளம்பர்களின் பிரதேசமாகயிருந்த பெங்களூர், பெல்லாரி உள்ளிட்ட பகுதிகள், குடகுநாடு, கேரளத்துக் கொல்லம், கலிங்கம், தென் இலங்கைத் தீவிலுள்ள ஈழம், மேலைச் சாளுக்கியர்களின் இரட்டபாடி என்னும் வடகர் நாடகம், மராட்டியம், லட்சத்தீவு, மாலத்தீவு, தென் தமிழகத்தின் பாண்டியநாடு யாவற்றையும் வெற்றிகண்டு அபய குலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள் மொழி, அழகிய சோழன், ரணமுகபீமன், ராஜாச்ரயன், ரவிகுல மாணிக்கன், ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜகேசரி வர்மன், ராஜமார்த்தாண்டன், ராஜேந்திர சிம்மன், ராஜவிநோதன், உத்தமசோழன், உத்துங்கதுங் கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாதசேகரன், தெலிங்ககுல காலன், நிகரிலிசோழன், நித்யவினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச்சோழன், மூர்த்த விக்கரமா பரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழ நாராயணன், தைலகுல காலன் என்று மூச்சுவாங்குமளவு தனக்கு நூற்றுக்கணக்கான பெயர்களைச் சூடிக்கொண்ட ராஜராஜனின் படைகளையும் போர்ப் பரணிகளையும் வரலாற்றுப் பரிச்சயமுள்ள படைப்பாளிகளால் உள்வாங்கிக் கொள்ள முடியும். நம்முடைய அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், இலக்கியப் பீடங்கள் காரணமில்லாத புனைப்பெயர்களைச் சூடிக்கொள்வர். ராஜராஜன் சூடிக் கொண்டவை காரணப்பெயர்கள். பிறகு ஆன்மீகம் என்கிற பரவச நிலையை விடுத்து சற்றே நம் பகுத்தறிவின் சாளரத்தை மூடிவைத்துவிட்டு இங்குள்ள கலையழகை யெல்லாம் அதனதன் தொன்மத்துடன் பொருத்திப் பார்ப்போமானால் இன்னொரு மாறுபட்ட லோகத்துக்குள் நம்மால் சஞ்சரிக்க முடியும்.

மேம்போக்காக நுனிப்புல் மேய்கிற தன்மையுடன் கலைப்ரக்ஞையற்ற கண்களால் பெரியகோவிலைப் பார்க்கிறவர்களுக்கு எதுவும் அனுபவித்தறிய முடியாது. பெரியகோவில் கோபுரத்தின் குறுகிய படிக்கட்டுகளின் வழியே கருவறைக்கு மேலே உள்ள திருச்சுற்றில் சிவனின் 108 விதமான நடனத்தோற்றங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 81 தோற்றங்கள் வரை செதுக்கப்பட்டு என்ன காரணத்தினாலோ 27 நிலைகள் செதுக்கத் தோதான நிலையில் விடப்பட்டுள்ளது. சிற்பங்கள் செதுக்கப்பட்ட பிறகு சிற்பிகளின் கண்களை ராஜராஜன் குருடாக்கி விட்ட தாகவும் ஒரு வதந்தி உண்டு.

பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டி ருக்கிறது. பேராசிரியர் அடையாளப்படுத்தியபிறகு இந்திய தொல்லியல் துறை உள்ளே நுழைகிறது. சோழர்கால ஓவியங்களுக்கு மேல் நாயக்கர் கால ஓவியங்கள் படிந்திருக்கின்றன. இவையும் 400 ஆண்டுகாலப் பழமைவாய்ந்தவை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல 1000 ஆண்டு பழமைவாய்ந்த சோழர்கால ஓவியங்கள் தனியாகவும் 400 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த நாயக்கர்கால ஓவியங்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்படுகின்றன.

சோழர்கால ஓவியங்களை ஆய்வு செய்தவர்கள் அவை ‘ப்ரெஸ்கோ ப்யூனோ’ அரிய வகையைச் சேர்ந்த அரிய ஓவியங்கள் என்று மதிப்பிட்டிருக்கின்றனர். இன்றைக்குப் பிரசித்தி பெற்ற அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை விட வரையப்பட்ட பாணிகளால் இந்த ஓவியங்கள் உயர்தரமானவை என்று இதற்குப் பொருள். பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரிய மூலிகைச் சாறுகளுடன் மரப்பிசின் கலந்து தயாரிக்கப்பட்ட வர்ணக்கலவைகளை இந்த ஓவியங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மட்டுமல்ல புராணக் காட்சிகள், போர்க்கோலங்கள், கடவுளர்கள், மன்னன் ராஜராஜன், அவனது மனைவியர், ராஜராஜனின் குருமார்கள், நடனமாதர்கள், சோழர்கால ஆண்கள், பெண்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தை இந்த ஓவியங்கள் துல்லிய மாகச் சித்தரிக்கின்றன.

ஆடல் மகளிர்களை அதற்குரிய வனப்புடன் தீட்டியிருக்கிற அதே தூரிகைகள் குடும்பப் பெண்கள் சமையலறையில் சமைப்பது உள்ளிட்ட பல காட்சிக்கோணங்களையும் பதிவு செய்திருப்பதும் சாமானிய மாந்தர்களும் இக்காட்சிப் புலத்துள் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய தாகும். ஆனால் இந்த ஓவிய மேளாவை நிகழ்த்திக்காட்டிய எந்த ஓவியனின் பெயரும் பதிவாகவில்லை என்பதுதான் ஆகத்துயரமாகும். ஓட்டைச் சுவரிலிருந்து வெளிப்பட்டு ஓவியங்களைக் காட்டித்தந்து சிறகடித்த அந்தப் பெயர் தெரியாச் சிறுபறவைக்கு காலம் நன்றி கூறுவதைப் போல, ஒரு காலகட்டத்தையே தங்கள் தூரிகைக் கரங்களால் வார்த்துத் தந்திருக்கிற அந்த ஓவியக் கலைஞர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றியறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ராஜசிம்மன் என்கிற பல்லவ மன்னனால் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்ட கச்சிப்பேட்டுப் பெரிய கோவிலைப் பார்த்த பிறகுதான் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்ட நினைத்ததாகக் கூறுகிறவர்கள் உண்டு. இலங்கையை வெற்றிகொண்ட ராஜராஜன் அங்கிருந்த பௌத்தவிஹார்களின் காட்சிப் பொலிவில் மயங்கி, இவற்றையெல்லாங் கடந்த ஒரு கலைக் கோட்டத்தை உருவாக்க எண்ணிப் பல காலங்கள் பலவிதமாய் மனதில் அசைபோட்டு செயல்வடிவம் தந்தது தான் ராஜராஜேச்வரம் என்று அபிப்ராயப்படுகிறவர்களும் உண்டு.

எதிர்காலத்தில் உன் புகழ் போர்களின் மூலமாக மட்டுமே அறியப்படாமல் நீதிமான்களும், கல்வியாளர் களும், கலை விற்பன்னர்களும், மதியூக அரசியல் மேதாவிகளும் மட்டும் உன்னைப் பாராட்டாமல் சைவ சமயத்தாரும் உன்னைப் போற்றிப் பாட ‘தளிக்குளம்’ கோவில் பெரியகோவிலாக வேண்டும் என்று தமக்கை குந்தவை வேண்டிக்கேட்டுக் கொண்டதன் பேரில்தான் ராஜராஜன் பெரியகோவிலை நிறுவினான் என்று நிறுவுகிறவர்களும் உண்டு.

கட்டடக் கலை என்று பார்க்கும்போது பத்தாம் நூற்றாண்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத சாதனைதான் பெரியகோவில். இதற்கு சில நூற்றாண்டு களுக்குப் பிறகு மொகலாயர்களின் கட்டடக்கலை வியப்பூட்டும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் உருவங்களைப் புறக்கணிக் கின்ற இஸ்லாமிய வேத அடிப்படையில் சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கு இடமில்லாமல், அவை சலவைக்கற் களால் எழுப்பப்பட்ட சன்னிதானங்களாகவே காட்சியளிக் கின்றன. என் பிள்ளைகளுக்கு எங்கோ தொலைவில் யமுனா நதி தீரத்திலிருக்கின்ற தாஜ்மஹாலைக் காட்டு வதைவிடவும் அருகிலிருக்கின்ற பெரியகோவில் என்கிற இந்த அதிசயத்தைக் காட்டுவதில் தான் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. நண்பர்களே! ராஜராஜனின் கலாரீதியான செயல்பாடுகளைக் கொண்டாடத்தான் வேண்டியிருக்கிறது. நட்டுவக்காரர்கள், பாட்டுக்காரர்கள், கானபாடிகள், வங்கியக்காரர்கள், பாடவியக்காரர்கள், வாத்தியக்காரர்கள், உடுக்கை வாசிப்போர், வீணை வாசிப்போர், ஆரியம்பாடுவோர், தமிழ் பாடுவோர், கூத்தர், கெட்டி மத்தளம் வாசிப்போர், கந்தர்வத் துறையார், சங்கு ஊதுவோர், பக்கவாத்தியர், உவச்சர்கள் என்று 17வகை யான கலைஞர்களை பெரியகோவிலுக்காக வென்றே பராமரித்துக் காபந்து செய்தவன் ராஜராஜன். சரி; கலை இவனாட்சியில் உச்சத்திலிருந்தது! ஒப்புக் கொள்வோம்! ஆனால் ஜனங்கள் என்ன நிலையிலிருந்தார்கள். மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்களென நாம் ஆய்ந்து பார்க்கையில் ராஜராஜனுக்குப் பின்னடைவுதான் என்கிற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சோகம்தான்! ஒரு கோயிலுக்காக தன் சாம்ராஜ்யத்தின் பெரும் பகுதிச் செல்வமனைத்தையும் தாரைவார்த்த இந்தத் தஞ்சை மன்னன் தனதாட்சிக் காலத்தில் உழைக்கும் மக்களை, பாட்டாளி வர்க்கத்தை, கடைநிலைச் சமூகத்தை எந்த லட்சணத்தில் நடத்தினான் என்றும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைகள் தேவைதான். கலைஞர்கள் போற்றி ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் கற்களால் எழுப்பப்பட்ட கனவுக்கோட்டத்துக்குக் கீழே உழைப்பாளிகளின் உதிரம் சிந்தப்பட்டிருக்கிறது. ஆட்டுக்கறை, நல்லெருது, ஓடக்கூலி, ஈழம் பூட்சி, தரகுப்பட்டம், தறி உறை, மீன்பாட்டம், வட்டி நாழி, கண்ணாலக் காணம், வண்ணாரப்பாறை, குசக்காணம் என்று மீனவர்கள், உழவர்கள், சலவைத் தொழிலாளிகள், நெசவாளர்கள், தரகர்கள், ஆட்டிடையவர்கள், ஓடக்காரர்கள், கள் இறக்குவோர் உள்ளிட்ட உதிரிப்பாட்டாளி வர்க்கத்தினர் மேல் வரிச்சுமையை ஏற்றி வைத்தவன் ராஜ ராஜசோழன். சனாதன தருமம் வேர்பிடிக்கவென்றே திட்டமிட்டு பார்ப்பனர் களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கிவிட்டு குடிமக்களில் ஒருவன் திருமணம் செய்து கொண்டால் அதற்குரிய ‘கண்ணாலக் காணம்’ என்கிற வரியைப் பேரரசுக்குச் செலுத்த வேண்டுமென்று தீர்மானம் போட்டவன் ராஜராஜன். அவனுடைய கல்வி நிறுவனங் களிலே கற்பிக்கப்பட்டவை எல்லாம். மீமாமிசை, வியா கரணம், இதிகாசம், சிவதருமம் என்று வடமொழிக்குரிய இலக்கண இலக்கியங்கள்தான்! தமிழக வரலாற்றின் கரும்புள்ளிகளாகத் தேங்கிவிட்ட வலங்கை, இடங்கைக் குலங்களின் போராட்டங்கள் ராஜராஜன் காலத்து எச்சம்தான்!

இந்த அகண்ட ராஜேச்வரத்தின் கல்வெட்டுகளில்தான் தமிழகத்திலேயே முதன் முதலாக சமஸ்கிருத அட்சரங்கள் பொறிக்கப்பட்டன. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல வரிசெலுத்த முடியாதவர்களை சிவதுரோகியாக்கி, அவர் களுடைய நிலங்களை விற்று, கோவில் நிர்வாகத்திடம் சேர்ப்பித்தது ராஜராஜனின் ஊர்சபை! பிறகு அந்த நிலங்கள் பிராமணர்களுக்குச் சொந்தமான பிரம்மதேயங்களாக, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான சதுர்வேதி மங்கலங் களாக மாற்றம் பெறுகின்றன. இந்த ஊர்சபை நிர்வாகம் குறித்து பெரிய பாராட்டுகளை ராஜராஜனுக்கு வழங்குகின்ற இன்றைய நண்பர்கள், அந்த ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மட்டுமே அங்கம் வகிக்க முடிந்தது என்கிற சங்கதியை வசதியாக மறந்துவிடுகின்றனர் அல்லது மறைக்கின்றனர்.

செழிப்பான தஞ்சாவூர் கிராமங்கள் ஒவ்வொன்றின் வளத்தையும் வாழ்வையும் உறிஞ்சித்தான் பெரிய கோவில் கோபுரம் நிமிர்ந்திருக்கிறது. ரூபாய்க்கு 10 வட்டி என்பது இந்தக் காலத்திலேயே கொடுமையாக இருக்கும் போது 12 சதவிகித வட்டிக்குப் பணம்கொடுத்து, அதை வசூலிக்க ஒரு குண்டர் படையையும் வைத்திருந்து லேவாதேவி வேலைபார்த்தவனாக ராஜராஜனுக்கு இன்னொரு மங்கிய முகம் உண்டு. நிலப்பிரபுத்துவம் என்கிறபொருளியியல் ஏற்பாடு ராஜராஜன் காலத்தில்தான் முழுவடிவம் பெற்றது. சொந்த நிலமுள்ளவனுக்குத்தான் அவன் காலத்தில் மதிப்பு. ஒருவன் கோவில் பண்டாரமாக விரும்பினால்கூட அவனிடம் குறிப்பிட்டளவு நிலம் வேண்டும்.

இன்னொரு விஷயம்; தளிச்சேரிப் பெண்களுக்கு ராஜராஜன் வீடு கொடுத்தான், நிலம் கொடுத்தான், ஊதியம் கொடுத்தான், எல்லாம் தந்து பராமரித்தான் என்கிற நண்பர்களிடம் நம்மால் கேட்க முடியும். அந்த 400 பெண்டுகளிடமும் உயர்சாதிப் பெண்களுக்கு விசேஷ சலுகைகளும், சிவதுரோகியாக்கப்பட்ட குடும்பங்களி லிருந்து வந்த ஏழைப்பெண்களுக்கு வேறுவிதமாகவும் பாரபட்சமான முறையையும்தான் காட்டினான்! மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் யாவும் வளமான பூமி. தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தரிசு நிலம் இப்படியான பாகுபாடும் காட்டப்பட்டி ருக்கிறது.

ராஜராஜனைப் பொறுத்தவரையில் இந்த கோயில் கட்டுவது அவனுடைய இலக்காக இருந்திருக்கிறது. அதற்கான பொன்னையும் பொருளையும் தன்னுடைய கஜானாவிலிருந்து தாரை வார்த்ததுபோக மீதியை எப்படியெல்லாம் தேற்றுவது என்று யோசிக்கிறபோதுதான் அவனுடைய பொருளாதார மூளை குடிமக்களைச் சுரண்டு கின்ற யோசனையைச் சொல்லி யிருக்கிறது. அந்தக் கால கட்டத்துப் பெண் களின் கோபுர தற்கொலைகளும், மக்கள் கிளர்ச்சிகளும் பொற்கால ஆட்சியின் புகழ் பாடுகையில் மறைக்கப்படுகிறது.

குடவோலை முறை ஜனநாயகத்தைப் பற்றி பாடபுத்தகங்களில் எழுதி எழுதி மாய்ந்துவிட்டனர். ஆனால் சொத்து இருந்தவனுக்குத்தான் குடவோலையும் ஊர்சபையும் என்று நம் குழந்தைகளுக்கு யார் மறு கற்பித்தல் செய்வது? பண்பாடும் இலக்கியமும் வளர்க்கப்பட்ட சிந்தனை யாளர்கள் தோன்றியிருந்த களப்பிரர்களின் ஆட்சிக்காலம் ‘இருண்ட காலம்’ என்றுதான் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றுதான் வருணாசிரமம் வளர்க்கப்பட்ட சோழர்காலம் பொற்காலம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

ராஜராஜன் தன் குடிமக்கள் மீது விதிக்காத வரியே இல்லை. ஏழை விவசாயி ஒரு பயிருக்கு ஊடுபயிராக இன்னொரு பயிரை வளர்த்தால் கூட ‘ஊடு போக்கு வரி’ என்கிற பெயரில் வசூலித்த அந்த மன்னனை நாம் எப்படிக் கொண்டாடுவது? வரிக்கொடுமை தாங்கமாட்டாமல் தங்களை கோயிலுக்கு விற்றுக் கொண்ட 12 குடும்பங்களின் கதை செங்கல்பட்டு மாவட்ட கல்வெட்டுகளில் இன்றளவும் கண்ணீர்க்கதை போல காணக்கிடைக்கிறது.

எங்களடியாள் அங்காடியும் இவள் மகள்

பெருங்காடியும் இவள் மக்களும்

திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக

நீர் வார்த்துக் கொடுத்தோம்

என்கிற வரிகள் ஒப்புதலுக்குக் கொடுக்கப்பட்டவை. ஆனால் இதில் அவர்களுடைய துக்கமும் துயரமும் கையறு நிலையும் பேரோலமும் அடங்கியுள்ளதாகவே உணர முடிகிறது.

ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்களை பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்றெல்லாம் பிரித்து உருவாக்கியதும் பறைச்சுடுகாடு, கம்மாளச்சுடுகாடு என்றெல்லாம் பிரித்ததும் ராஜராஜன் காலத்து கைங்கரியங்கள்தான். ஊடுபயிர் வளர்த்த ஏழை விவசாயிகளை ஊடுபோக்கு வரியால் பழிவாங்கிய மாமன்னன், நிலங்களை பிராமணர்களுக்குத் தாரை வார்க்கிறான். பிராமணர் குழுக்களுக்கு மொத்தமாக நிலம் வழங்கப்பட்டால் அது பிரமதேயம். தனியொரு பிராமணனுக்குத் தரப்பட்டால் அது ஏகபோக பிரமதேயம். இப்படி வேலிக்கணக்கில் ஏகபோக பிரமதேயம் பெற்ற பிராமணக் கதைமாந்தர்களை நீங்கள் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” போன்ற நாவல்களில்கூட வாசித்துணரலாம். மேலும் இதற்கான கூடுதல் ஆதாரங்களை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் சோழர்களைக் குறித்து எழுதிய நூல்களிலிருந்தும் கண்டடையலாம். சம்புவரை யர்கள், பழு வேட்டரையர்கள், மலையமான் களெனப் பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சியே சோழர் ஆட்சி என்றும் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மூலமாக நமக்கு கூடுதல் தகவல் கிடைக்கிறது. ராஜராஜன் செய்தது இவர்களை எல்லாம் திறம்பட இணைத்ததுதான்.

ராஜராஜன் நிர்மாணித்த பெரிய கோவிலின் பெருமையெல்லாம் அதைக்கட்டிய கல் தச்சர்கள், சிற்பிகள், கடுமையான உடல் உழைப்பாளிகள் இவர்களுடைய வியர்வை யிலும், குருதியிலும், மதிநுட்பத்திலும் அடங்கி யிருக்கிறது.

இன்றைக்குப் ‘பொற்காலம்’ என்று புகழ் பாடுகின்ற இதே நம்முடைய மாநில அரசுதான் 1976-களிலும் இயங்கியது. மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் நிறு வனத்தின் சார்பில் கோ.தங்கவேலு என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “தமிழ் நில வரலாறு” என்னும் நூலில் சோழர்கால ஆட்சி ஏழை விவசாய, உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கு எப்படியெல்லாம் பொல்லாத ஆட்சிக்காலமாக விளங்கியது என்று துல்லியமாக ஆராய்ந்து எழுதப்பட்டிருந்தது. அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு பிறிதொரு சனாதன ஆலோசகர் குழுவினரால் அந்த நூல் தடை செய்யப்பட்டது. பொல்லாத ஆட்சி பொற்காலம் ஆட்சியாவதும், பொற்காலம் இருண்ட காலமாவதும் இன்றைக்கு வரலாற்றைத் திரிக்கிறவர்களின் கைகளிலே இருக்கிறது. ஆனால் இன்றைக்குள்ள நம்முடைய ஆய்வாளர்கள் இந்த இருட்டடிப்புகளை வெளிச்சப்படுத்து கிறவர்களாகத் துணிச்சலுடன் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள். கலை போற்றி ஆராதிக்கப்பட்ட காலத்தை நாம் மதிப்புடன் பதிவு செய்கின்ற அதே நேரத்தில் ; ஏழை மக்களும், உழைப்பாளிகளும், பெண்களும் வதைபடும் வாழ்வில் உழன்ற காலத்தை பொற்காலம் என்று மதிப்பிடுவதும், உயரத் தூக்கிக் கொண்டாடி உண்மைக ளை மறைப்பதும் தமிழனின் உண்மையான வரலாறுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்கின்ற துரோகமாகும்!

(அக்டோபர் 31 2010 - தஞ்சையில் தமுஎகச நடத்திய ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

கருத்துகள் இல்லை: