கல்லும் வில்லும் கைத்தடியும் கொண்டு வேட்டையாடித்திரிந்த மனிதன் உணவுக்காக தானிய சாகுபடி முயற்சியில் ஈடுபட்டான், அப்போது அவன் பயிர்சாகுபடி பற்றி ஏதும் அறியாத நிலையில் தான் இருந்தான். அந்நிலையில் அநுபவம் சில பாடங்களை அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கும். கட்டாந்தரையில் விதைகளைப் போட்டால் பறவைகள் அவற்றைப் பொறுக்கித் தின்று விடுதல் கூடும், எறும்புகளும் இழுத்துச் சென்று விடும்.
மேலும் மழை பெய்யும் போது மழைநீர் விதைகளை அரித்துச் சென்று விடுதல் கூடும். எனவே நிலத்தைக் கிளறிப்புழுதியாக்கி, அப்புழுதியில் விதைகளை விதைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டான். ஆனால் காட்டு மிராண்டியாக அநாகரிக நிலையில் வாழ்ந்த அவனுக்கு உழவுத் தொழில் பற்றி எதுவும் தெரியாது. உழுவதற்கான கருவிகள் எவையும் அவனிடம் இல்லை. இந்நிலையில் நிலத்தில் கிடக்கும் கிழங்குகளைத் தின்பதற்காகப் பன்றிகள் மண்ணைத் தோண்டிக் கிளறிப் புழுதியாக்கியிருப்பதைக் கண்டான். அவ்வாறு பன்றிகளால் கிளறிப்புழுதியாக்கப்பட்ட இடங்களில் கானவர் மழைக்காலத்தில் தினை விதைத்தனர். அங்ஙனம் விதைத்த தினை முளைத்து வளர்ந்து விளைந்தது.
பன்றிகள் கிளறிக்கிளைத்த புழுதியில் கானவர் தினை விதைத்தமை குறித்து,
‘அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு
கடுங்கட் கேழல் உழுத பூழி
நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை
முந்து விளை யாணர்” - புறநானூறு : 168
(அருவி ஒலித்துப்பாயும் மூங்கில் வளர்ந்த அகன்ற இடத்தையுடைய மிளகுக் கொடி வளரும் மலைச் சாரலினிடத்து மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு பிறழக் கிளறித்தன் இனத்தோடு கூடித் தறுகண்மையுடைய பன்றிகள் உழுத புழுதியில் நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்துக் குறவர் அந்நிலத்தை உழாமல் அதுவே உழவாக வித்திய பரிய தோகையுடைய சிறிய தினை முற்பட விளைந்த புதிய வருவாயாகிய கதிர்) என்று புறநானுறு கூறுகிறது.
‘கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பிற்
றலை விளை கானவர் கொய்தனர்” - ஐங்குறுநூறு : 270
என்றும் ‘கேழல் உழுத கரிபுனக் கொல்லை “ - ஐந்தினை எழுபது : 11
என்றும் பிறநூலார் இது குறித்துக் கூறும் செய்தி நம் கவனத்துக்குரியதாகும்.
தினைக் கதிர் விளைந்து முற்றிய காலத்தில் பகற்பொழுதுகளில் கிளி, மயில் முதலிய பறவைகளும் இரவுப் பொழுதுகளில் பன்றி, யானை முதலிய விலங்குகளும் தினைக் கதிரைத் தின்று நொக்கி விடுகைக்கு வரும். எனவே, அவற்றைக் காவல் காக்கும் பொறுப்பு இப்பொழுது மனிதனை வந்தடைந்தது. பகற்பொழுதில் பெண்களும் இரவு நேரங்களில் ஆண்களும் தினைப் பயிரைக் காவல் காத்தனர், ஆண்களும் பெண்களும் தினைப்புனம் காத்தமை குறித்துச் சங்க இலக்கியங்களில் குறிஞ்சித் திணைப் பாடல்கள் விரிவாகவும் சுவையாகவும் பேசுகின்றன.
இதுவரை, இயற்கையாகக் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள் முதலியவற்றையும் வேட்டையாடிய விலங்குகளின் ஊனையும் தின்று உயிர்வாழ்ந்த மனிதன் முதன் முதலாகத் தன் உடல் உழைப்பைப் பயன்படுத்தித் தானியங்களை உற்பத்தி செய்யத் தொடங்கினான். உற்பத்தி செய்ததானியங்களை அறுவடை செய்தல், சேமித்துப் பாதுகாத்தல் என்ற புதிய வேலைகள் மனிதனை வந்தடைந்தன. கால வோட்டத்தில் நிகழ்ந்த சமூகவளர்ச்சியில் விதைப்பதும். பயிர்களைப் பாதுகாப்பதும் விளைந்த தானியங்களைச் சேமித்து வைப்பதும் மனிதனை வந்தடைந்த புதிய அனுபவமும் வேலையும் ஆகும். இதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் விரிவாகவே பேசுகின்றன.
‘நிலத்தைக் கிளறிப் புழுதியாக்கிப் பண்படுத்திச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும்” என்பதைக் காலமும் அனுபவமும் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தன. மக்கள் தொகைப் பெருக்கமும் உணவுப் பற்றாக் குறையும் கூடுதலான நிலத்தைச் சாகுபடிக்குக் கொண்டுவர மனிதனைத் தூண்டின. காட்டை அழித்துத் தான் நிலத்தைப் பயன் பாட்டுக்குக் கொண்டுவரமுடியும். ஆனால் காட்டை வெட்டி அழிப்பதற்கும் நிலத்தை உழுவதற்கும் அவனிடம் கருவிகள் ஏதும் இல்லை. கற்கருவிகளும் கைத்தடியும் வில்லுமே அவனிடமிருந்த கருவிகள், இரும்பைப் பற்றி மனிதன் இன்னும் அறிந்திருக்க வில்;லை. அதன் உபயோகம் குறித்து அவனுக்கு எதுவும் தெரியாது. ஆனால் நெருப்பின் உபயோகத்தை அவன் நன்கு அறிந்திருந்தான். எனவே, புதர் மண்டிக் கிடந்த நிலங்களைத் தீயிட்டு அழித்தான். அவ்வாறு அழித்துத்தான் நிலத்தைச் சாகுபடிக்கு ஏற்றதாகத் திருத்திப் பண்படுத்தினான். திருத்திய நிலத்தில் வரகும் தினையும் பயறும் விதைத்தான். இச்செய்தி களைச் சங்க நூல்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றன.
‘கானவர்
கரிபுனம் மயக்கிய அகன்காட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்
கருவி வானம் தலை இ”
(வேட்டுவர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைகக்கண் ஐவன நெல்லோடு வித்தி இருட்சியுற அழகு பெற்றுக் கோடை மிகுதியில் ஈன்றலைப் பொருந்தாத தினைக்கு இழு மென்னும் ஓசையுடன் மின்னலும் இடியும் முதலாகிய தொகுதியுடைய மழைத்துளி சொரிந்தது ) என்று புற நானூறு (159)
கூறுகிறது.
தானிய சேமிப்பும் பாதுகாப்பும்
மனிதன் காட்டு மிராண்டியாக வாழ்ந்த கால கட்டத்தில் உணவைச் சேமித்துப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்படவில்லை. அதற்குரிய சூழ்நிலையும் சமூக அமைப்பும் ஏற்பட்டிருக்க வில்லை, உணவுக்காக வேட்டையாடுதலோடு, கனிகள் முதலியவற்றைத் தேடித்தின்று பசியைப் போக்கிக்கொண்ட அவன், வேறு தொழில் எதையும் அறிந்திருக்கவில்லை. கிடைத்த உணவைக் கிடைத்த இடத்தில் தின்று உயிர் வாழ்;ந்தான். சில நேரங்களில் பெரிய விலங்குகள் வேட்டையில் கிடைத்து, கூட்டத்தார் அனைவருடனும் உண்டதுபோக எஞ்சியதை வெயிலில் உலர்த்திச் சேமிக்கப் பழகியிருந்தான். இலக்கியங்கள் இதனை ‘வாடூன்” என்று குறித்தன. அவ்வப்போது ஏற்பட்ட உணவுப் பற்றாக் குறையும் பசியும் பட்டினியும் அவனை அவ்வாறு சேமிக்கத் தூண்டின.
தற்போது, தான் விளைவித்த தாவர உணவாகிய வரகு, தினை முதலிய வற்றையும் சேமித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்பட்டது. அவற்றின் சேமிப்புக் காகக் குதிர்கள் அமைக்கவும் அவன்கற்றுக் கொண்டான் சாகுபடியும் சேமிப்பும் காலத்தின் கட்டாயமாயின . மனிதனை நரமாமிசம் உண்ணத்தூண்டிய காரணிகளே, இப்போது நரமாமிசம் புசித்தலைக் கைவிட்ட நிலையில், உணவு தானியங்களைச் சாகுபடி செய்யவும் சேமிக்கவும் தூண்டின.
குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் தம் உணவுத் தேவைக்காக வேட்டையாடுதலோடு வரகு, தினை முதலியவற்றின் சாகுபடியையும் மேற்கொண்டனர், அத்துடன் தேனழித்தல் கிழங்ககழ்தல் முதலிய வேலைகளையும் செய்தனர். கானவர் தேனழித்தது பற்றியும் கிழங்ககழ்ந்தது பற்றியும் ‘ தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்” என்று மலைபடுகடாம் கூறுகிறது. கானவர் தம் குடியிருப்புக்குப் பக்கத்தில் காட்டைச் சுட்டுத்திருத்திய நிலத்தில் தினை விதைத்தனர். தினைவிளைவிக்கும் வேலையைப் பெண்களே செய்தனர். நிலத்தைக் கிளறி விதைத்தல், களைபறித்தல், கிளி கடிதல், கதிர் அறுத்தல், தினைகுற்றுதல் முதலிய வேலைகளைப் பெண்களே செய்தனர்.
காதற்களமான தினைப்புனம்
தினைப்புனங்கள் இளைஞர்களின் காதற்களங்களாக விளங்கின. இதனைச் சங்க இலக்கியங்கள் காதற்சுவை நனி சொட்டச் சொட்டப் பேசுகின்றன. தினைக்கதிர்களைப் பறவைகள் தின்று விடாமல் தடுத்துக் காவல் காக்கும் வேலையைப் பெண்களே செய்தனர். தினைப்புனத்தைக் காவல் காத்துக் கிளியோட்டிக் கொண்டிருந்த வள்ளியை;த தேடி வந்த வேலனாகிய முருகன், மானைத் தேடி வந்ததாகக் கதையளந்து காதல் செய்து அவளை மணம் முடித்ததை வள்ளி திருமணம் நாடகம் நமக்குக் காட்டுகிறது. தலைவி, தினைப் புனத்தில் கிளியோட்டிக் காவல் காத்துக் கொண்டிருந்தாள், அவளை நாடிவந்த வேட்டுவ இளைஞன் ‘ வயமான் அடித்தேர்வான் போல” (கலித்தொகை குறிஞ்சிக் கலி) வந்து தினைப்புனம் காத்தவளைச் சந்தித்தான். பின்னர் இருவருக்கும் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தது. இது குறித்துச் சங்க இலக்கியங்களில், குறிஞ்சித்திணைப் பாடல்கள் விரிவாகப் பேசுகின்றன.
கானவர் அமைத்த பரண்கள்
யானை, பன்றி முதலிய விலங்குகள் இரவு நேரங்களில் வந்து தினைப் புனத்தை அழித்து விடாமல் ஆண்கள் காவல் காத்தனர். அவர்கள் இரவு நேரக் காவலுக்காக மரங்களின் மேல் பரண் அமைத்துக் காத்தனர், யானைக்கு எட்டாத உயரத்தில் பரண்கள் அமைத்தனர்.
‘வேழங்காவலர் குரம்பை”
(யானையைப் புனத்தில் தின்னாமல் காக்கின்ற தொழிலையுடையார் இதண் மேல் கட்டின குடில் ) என்றும்
‘ கழுதிற் சேணோன்”
(பரண்மேல் இருந்த, யானை முதலியவற்றுக்கு எட்டாதவன்) என்றும் பெரும்பாணாற்றப்படை (51) மலைபடுகடாம் (243) முதலிய நூல்கள் இதுபற்றிக் கூறுகின்றன.
இரவில் பரண்மீதிருந்து தினைப்புனம் காத்த கானவன் யானை தன் துணையாகிய பிடியுடன் தினைப் புனத்தை மேய வந்த ஓசையைக் கேட்டான், மழைக் காலத்து இரவாகையால் கானவன் கண்ணுக்கு யானை தெரியவில்லை. இடியும் மின்னலுமாக இருந்த அந்த நேரத்தில் ஓசைவந்த திசையை நோக்கி அவன்தன் கையில் இருந்த கவணையால் கல்லை வீசினான். விசையுடன் வீசப்பட்ட அக்கல் மலைமேல்; இருந்த வேங்கைமரத்தின் ஒள்ளிய பூக்களைச் சிதறி, ஆசினிப் பலாவின் பழங்களை உதிர்த்து, தேனிறாலைச் சிதைத்து மரத்தின் துணர்களைக் குலைத்து, குலை பொருந்திய வாழையின் மடலைக் கிழித்துப் பலாப்பழத்துள் தங்கியது” என்று கலித்தொகை கூறுகிறது.
‘இடி உமிழ்பு இரங்கிய விரைபெயல் நடுநாள்
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து
பிடியொடுமேயும் புன்செய்யானை
அடியொதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்
கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின்
இறுவரை வேங்கை ஓள் வீசிதறி
ஆசினி மென்பழம் அளிந்தவை உதிரா
தேன் செய்இறா அல் துளைபடப் போகி
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கி
குலையுடைவாழைக் கொழுமடல் கிழியா
பலவின் பழத்துள் தங்கும்” என்னும் கலித் தொகைப் (குறிஞ்சிக்கலி 5 ) பாடலில் எயினர்களின் கவண் எறியும் கை வண்ணம் குறித்துக் கபிலர் கவினுறப் பாடியுள்ளார். இ;ங்கே, கல்லும் கவணும் எயினரின் வேட்டைக் கருவிகளாக விளங்கியதைக் கலித்தொகை காட்டுகிறது.
மனிதன் காட்டு மிராண்டி நிலையிலும் அநாகரிக நிலையிலும் வாழ்ந்த காலகட்டத்தில் வில்லும் அம்பும் கண்டு பிடிக்கப்பட்டு வேட்டைக் கருவிகளாகப்பயன்படுத்தப்பட்டன. காட்டு மிராண்டி நிலையின் தலைக் கட்டத்தில்தான் வில்லும் அம்பும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று எங்கல்ஸ் அவர்கள் கருதுகிறார்கள். இது குறித்து அவர் கூறுவதாவது”. வில்லும் அம்பும் கண்டு பிடிக்கப்பட்டதில் இருந்து காட்டு மிராண்டி நிலையின் தலைக்கட்டம் தொடங்குகிறது. இதனால் காட்டு மிருக இறைச்சி ஒழுங்காக சாப்பாட்டுக்குக் கிடைக்கிற உணவுப் பொருளாக அமைந்தது. வேட்டையாடுதலும் ஒரு சகஜமான தொழிலாயிற்று”.
வில் நாண், அம்பு கூட்டாக அமைந்த ஒரு கருவியின் தொகை ஆகும். அதை சிருஷ்டிக்கிறதென்றால் அதற்கு முந்தி வெகுகாலமாகச் சேகரித்து வந்த அனுபவமும் கூர்மைப் படுத்தப் பட்ட புத்திபலமும் இருந்திருக்க வேண்டும். அதன் விளைவாக இதரபல புதுப்படைப்புகளும் அதே சமயத்தில் அறிந்து வைத்திருக்க வேண்டும். வில் அம்புகளோடு பழக்கப்பட்டிருந்த போதிலும் மண்பாண்டங்களைச் செய்யும் கலையை இன்னும் அறிந்திராத (இந்தக் கலை அநாகரிக நிலைக்கு மாறிச்செல்வதின் ஆரம்பத்தைக் குறிக்கிறது என்று மார்கன் கருதுகிறார்.) மக்கள் சமூகங்களை ஒப்பு நோக்கினால், இந்த ஆரம்பக்கட்டத்தில் கூட,கிராமம் கிராமமாகக் குடியமைத்துத்தங்குவதின் ஆரம்ப நிலைகளைப் பார்க்கிறோம். மரத்தால் செய்த கலயங்கள் சாமான்கள் நாரில் இருந்து (தறியில்லாமல்) கைவிரல்களால் துணி நெய்தல், நாரைக் கொண்டோ அல்லது நாணல் புல்லைக் கொண்டோ கூடைகளை முடைதல், பட்டை தீட்டப்பட்ட (புதிய கற்காலத்தைச் சேர்ந்த ) கற்கருவிகள் ஆகிய ஜீவனோபாயத்திற்குரிய சாதனங்களை உற்பத்தி செய்வதில் ஓரளவுக்குத் தேர்ச்சியடைந்திருப்பதையும் பார்க்கிறோம்.
மேலும் பெரும்பாலான இடங்களில் நெருப்பும் கற்கோடாரியும் கொண்டு மரத்தைக்குடைந்து ஓடம் செய்யப்பட்டுவிட்டது. சில இடங்களில் வீடுகட்டுவதற்கு மரக்கட்டைகளும் பலகைகளும் செய்யப்பட்டுவிட்டன. உதாரணமாக, இந்த முன்னேற்றங்களையெல்லாம் வடமேற்கு அமெரிக்க இந்தியர்களிடையே காணலாம். இவர்களுக்கு வில்லும் அம்பும் பழக்க மானவைதான். ஆனால் மண்பாண்டக் கலையைப் பற்றித் தெரியாது. அநாகரிக நிலைக்கு எப்படி இரும்புவாள் நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதோ, நாகரிக நிலைக்குத் துப்பாக்கி வகையறா எப்படி நிர்ணயமான ஆயுதமாக விளங்கியதோ அது போலத்தான் காட்டடுமிராண்டி நிலைக்கு வில்லும் அம்பும் நிர்ணயமான ஆயுதங்களாக விளங்கின”
(நூல் : குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்)
வேட்டுவர்களின் வில்லாற்றல்
வேட்டுவர்கள் வில்லாற்றலில் சிறந்து விளங்கினர். அதற்கு கண சமூகத்தலைவர்களில் ஒருவனான வல்வில் ஓரியின் வில்லாற்றலே சிறந்த சான்றாகும். ஓரி என்பவன் கொல்லி மலைத்தலைவன், அவன் தன் வில்லாற்றல் காரணமாகப் புலவர்களால் வல்வில் ஓரி என்று சிறப்பிக்கப்பட்டான். அவனது வில்லாற்றலை வன் பரணர் புறப்பாடல் ஒன்றில் வியந்து போற்றுகிறார்.
‘வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிதுறீஇப்
புழற்றலைப் புகர்க்கலையுருட்டி யுரற்றலைக்
கேழற்பன்றி வீழவயல
தாழற்புற்றத் துடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம் படுத்திருந்தோன்
புகழ் சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன்”
- புறநானூறு: 152
( யானையைக் கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு, பெரியவாயை யுடைய புலியை இறந்து படச் செய்து, துளை பொருந்திய கொம்பையுடைய தலையினையுடைய புள்ளிமான் கலையை உருட்டி, உரல் போலும் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச்செய்து அதற்கு அயலதாகிய ஆழ்தலையுடைய புற்றின் கட் கிடக்கும் உடும்பின் கண் சென்று செறியும் வல்வில்லால் உண்டாகிய வேட்டத்தை வென்றிப் படுத்தியிருப்பவன்: புகழமைந்த சிறப்பினையுடைய அம்பைச் செலுத்தும் தொழிலில் மிகச்சென்று உறுதற்குக் காரணமாகிய கொலைவன் ) என்று ஓரியின் வில்லாற்றல் வியந்து போற்றப்படுகிறது.
வேட்டுவச்சிறாரின் விற்பயிற்சி
வேட்டுவச் சிறுவர் விளையாட்டுப் பருவத்திலேயே விற்பயிற்சியைத் தொடங்கிவிடுவர், வளார்களில் மரற்கயிற்றைப் பிணித்து வில்லாகச் செய்வர். உடை வேலமரத்தின் உள்ளே புழையுடைய வெள்ளிய முள்ளை ஊகம் புல்லின் நுண்ணிய கோலிற் செருகி அம்புகளாகச் செய்வர். அவ்வம்புகளை வில்லில் தொடுத்து எய்து விளையாடுவர். இது குறித்துப் புறநானூறு அழகாகப்பேசுகிறது.
‘உழுதூர் காளை யாழ்கோடன்ன
கவை முட்கள்ளிப் பொரியரைப் பொருந்திப்
புது வரகரிகாற் கருப்பை பார்க்கும்
புன்றலைச் சிறாஅர் வில்லெடுத்தார்ப் பிற்
செங்கட் குறுமுயல் கருங்கலனுடைய
மன்றிற் பாயும் வன்புலம்” - புறநானூறு : 322
(வன்புலமாகிய முல்லை நிலத்தில் வாழும் வில்லேருழவரான வேட்டுவர்களின் சிறுவர்கள் வரகுக் கொல்லைகளில் வரகினது அரிகாலைப் பொருந்தியிருக்கும் காட்டெலிகளை வேட்டமாடுவர். எலியொன்றைக் கண்டதும் அவர்கள் ஆரவாரம் செய்வர். அவ்வோசையைக் கேட்டு, அருகேமேயும் முயல்கள் அண்மையில் உள்ள அவர்களது குடிசையின் முற்றத்தில் இருக்கும் மட்கலங்களின் இடையே துள்ளிப் பாய்ந்து செல்லும். அதனால் மட்கலங்கள் உருண்டு உடைந்து கெடும்.) என்று அக்காட்சியைப் புறநானூற்றில் ஆவூர்கிழார் அழகுறக் காட்டுகிறார்.
‘வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை
புள்ளன்தின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடைவான் முள்
ஊக நுண் கோற் செறிந்த அம்பின்
வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலந்தழீஇய அங்குடிச்சீறூர்” - புறநானூறு: 324
(வேட்டுவர்கள் காட்டுப் பூனையின் ஆணைப் போல் வெருண்ட பார்வையும் பெரிய தலையும் உடையவர்கள். பறவைகளின் ஊனைத் தின்பதால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய
வெளுத்த வாயையுடையவர்கள். அவர்களின் பிள்ளைகள் ஒருவரையொருவர் விரும்பிநட்புக் கொண்டு உறையும் பண்பினை உடையவர்கள். அச்சிறுவர்கள் சிறிய இலைகளையுடைய ஊகம் புல்லில் செருகிய அம்பை வளாரால் செய்யப்பட்ட வில்லில் வைத்து வளைத்துப் பருத்தியாகிய வேலியடியில் உறையும் காட்டெலிகளை வீழ்த்துவதற்குக் குறி பார்த்து எய்து விளையாடுவர். இத்தகைய புன்செய் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சீறூர்) என்று ஆலத்தூர் கிழார் அமைவுறக் கூறுகிறார்.
எயினர்களின் விற்பயிற்சியும் வில்லாற்றலும் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடுவதற்கே பயன்படுத்தப்பட்டன என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. மண்ணாசை மற்றும் அதிகார போதை காரணமாகப் போர்த் தொழிலில் ஈடுபட்டு சக மனிதர்களைக் கொல்லும் நிலையினை மனித சமூகம் இன்னும் எய்தவில்லை என்பதனை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பறவை வேட்டை
கானவர் தினை பயிரிட்ட செய்தி முன்னர் கூறப்பட்டது. அவர்கள் உணவுக்காக மட்டுமல்லாது கானக் கோழி, இதற் பறவை, புறா முதலிய பறவை களைப் பிடித்துச் சமைப்பதற்கும் தினையைப் பயன்படுத்தினர். எயினப் பெண்கள் அப்பறவைகளைப் பிடிப்பதற்காகத் தம் குடிசைகளின் முற்றத்தில் மான் தோலை விரித்து அதில் தினையைப் பரப்பிவைப்பர். அப்பறவைகள் அதில் வந்து அமர்ந்து தினையை மேயுங்கால் எயிற்றியர் அவற்றைப் பிடித்துக் கொன்று சமைப்பர். இதனை,
‘மானதட் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியோடிதல் கவர்ந்ததுண்டென
ஆரநெருப்பினாரல் நாறத்
தடிவாந் திட்ட முழு வள்ளாரம்
இரும்பே ரொக்கலொ டொருங்கினிதருந்தித்
தங்கினை சென்மோ பாண” - புறநானூறு 320
( பாணனே மான் தோலில் பரப்பி உலரவைத்த தினையரிசியைக் காட்டுக் கோழியும் இதற் பறவைகளும் கவர்ந்துண்டு அகப் பட்டனவாக, சந்தனக் கட்டையாலாகிய நெருப்பில் சுட்டுத் துண்டு துண்டாக அறுத்து நிறைத்த இறைச்சியை ஆரல் மீனின் நாற்றமும் உடன் கமழ, கரிய பெரிய சுற்றத் தோடே கூடியிருந்து இனிது உண்டு அவ்விடத்தே தங்கிச் செல்வாயாக )என்றும்
படலை முன்றிற் சிறு தினை யுணங்கல்
புறவு மிதலு மறவு முண்கெனப்
பெய்தற் கெல்லின்று பொழுதே” - புறநானூறு : 319
(படல் கட்டிய முற்றத்தில் சிறிய தினையாகிய உலர்ந்ததனைப் புறாக்களும் இதற்பறவைகளும் முற்றவும் உண்க என்று தெளித்து அவற்றைப் பிடித்துச் சமைப்பதற்கு ஞாயிறு மறைந்து இரவாயிற்று) என்றும் கானவர், குடிசை முற்றத்தில் தினையைத் தெளித்து புறாவையும் இதற்பறவைகளையும் காட்டுக் கோழியையும் பிடித்துச் சமைத்தனர் என்ற செய்தியை ஆலங்குடிவங்கனாரும் வீரை வெளியனாரும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
எயினரது ஊரும் அரணும்
எயினரது ஊர்கள் மிளை என்றும் காட்டரண் என்றும் கூறப்படுகின்ற காவற்காடு சூழ அமைந்திருந்தன.
‘ஊர், அருமிளை இருக்கையதுவே” - புறநானூறு :326
(ஊர், கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின்கண் உள்ளது)
‘வாழ்முள்வேலிச் சூழ்மிளைப் படப்பை”
பெரும்பாணாற்றுப்படை : 126
(ஊர், முள்ளையுடைத்தாகிய வாழ்முள் வேலியினையும் அதனைச் சூழ்ந்த காவற் காட்டினையுடைத்தாகிய பக்கத்தையும் உடையது)
‘ அருங்குழு மிளை “ - மதுரைக் காஞ்சி 64
(பகைவர் சேர்தற்கரிய திரட்சியையுடைய காவற்காடு)
என்னும் தொடர்கள் குறிஞ்சி நிலத்து வேட்டுவரது ஊர்களைச் சார்ந்து அமைந்திருந்த காவற்காடுகள் பற்றியும் அவற்றின் தன்மை பயன் ஆகியன குறித்தும் கூறுகின்றன.
இக்காவற்காடுகள் எயினர் ஊர்களின் பாதுகாப்புக்கான அரண்களாகவும் வேட்டைக்காடுகளாகவும் இருந்தன. பின்னர் கணசமூகத்தில் இருந்து அடிமைச் சமூகமும் நிலப்பிரபுத்துவசமூகமும் தோன்றி அரசு என்ற அமைப்பு நிறுவப்பட்ட கால கட்டத்தில் அரசுகளின் (சுரண்டு வர்க்கத்தின்) பாதுகாப்புக்காக அரண்கள் அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்தக் கால கட்டத்தில் அரசர்கள் மதில், அகழி, மலை, காடு என்னும் நான்கனையும் அரணாகக் கொண்டனர்.
‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையதரண்” - (குறள்) என்று வள்ளுவர் கூறுகிறார். இவற்றில் மலையும் காடும் இயற்கை அரண்கள் ஆகும். மதிலும் அகழியும் மன்னர்கள் தம்பாதுகாப்புக்காக அடிமைகளைக் கொண்டு செயற்கையாக அமைத்துக் கொண்டவை. வள்ளுவர் கூறும் காட்டரண் என்பது கணசமூகத்தின் காவற்காடேயாகும். இக்காட்டரண் எயினரின் வேட்டைக்காடாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் இருந்தன. மேய்ச்சல் நிலங்களை இலக்கியங்கள் விடுநிலம் என்று குறித்தன.
வேட்டைச் சமூகத்தவர் ஆன எயினர்கள் தம் முயற்சியால் விளைவித்துச் சேமித்த உணவுதானியங்கள் மற்றும் கால் நடைகள் முதலிய உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அவை பாதுகாத்துக் கொள்ளப்படவில்லையானால் அண்டைப் புலங்களில் உள்ளார் வந்து கொள்ளையடித்துச் செல்லும் அபாயம் இருந்தது. எனவே, அவர்கள் அரண் அமைத்துத் தம் செல்வத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.
எயினர் குடிசை
எயினரின் குடிசைகள் வேல் போன்ற கூர்மையான ஈந்தின் இலைகளால் வேயப்பட்டிருந்தன. அதனால் அக்குடிசைகள் முள்ளம் பன்றியின் முதுகுபோல் ஒழுங்கின்றிக் காணப்பட்டன. குடிசையின் முற்றத்தில் படல் கட்டப்பட்டிருந்தது. எயினர்களின் வீட்டு உபயோகப் பொருள்களைப் போலவே, வேட்டைக் கருவிகளும் எளிமையானவை. முரியடுப்பு, முரவு வாய்க் குழிசி, முதுவாய்ச்சாடி (ஒறுவாய் போன மண்பானை, முரிந்த அடுப்பு, பழைய மண்சாடி) மற்றும் நிலவுரல், உலக்கை, துடுப்பு இவையே எயினர்களின் வீட்டு உபயோகப் பொருட்களாம். அவர்கள் மான் தோலையே பாயாகப் பயன்படுத்தினர். கல், கவண், கைத்தடி, வில், அம்பு, வலை, வேல், குத்குக்கோல் முதலியவையே எயினர்களின் வேட்டைக் கருவிகளாம். இவற்றால் அவர்கள் உடும்பு, முயல், பன்றி, முள்ளம் பன்றி, மான், புலி, யானை முதலிய விலங்குகளை வேட்டையாடினர். புறா காட்டுக்கோழி முதலிய பறவைகளையும் வேட்டையாடினர்.
வல்லுவர்க் கூவல்
எயினர்கள் குடிநீருக்காகத் தம் குடிசைகளுக்குப் பக்கத்தில் கிணறுகளைத் தோண்டினார்கள். அக்கிணறுகளில் நீர் சில்லூற்றாகவே ஊறியது. நீரும் உவர்நீர் ஆகத்தான் இருந்தது. ‘கல்லறுத்தியற்றியவல்லுவர்க்கூவல்” (புறநானூறு 331) “ நெடுங்கிணற்று வல்லுவரி ‘களர்ப் படுகூவல்” என்று இக்கிணறுகள் பற்றிச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. சில இடங்களில் இயற்கையாக அமைந்த பள்ளங்களில் தேங்கியிருந்த மழைநீரையும் மக்கள் பயன்படுத்தினர்.
‘பூவற்படுவில் கூவற்றொடீஇய
செங்கட் சின்னீர்” -புறநானூறு 319
(செம்மண் நிலத்து மடுவில் உள்ள நீர் நிலையைத் தோண்டியதால் உண்டாகிய சிவந்த இடத்தில் சிறிதாக ஊறிய நீர்) என்றும்
‘களிறு நீறாடிய விடுநில மருங்கில்
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்திறந்தெனக்
குழிக்கொள்சின்னீர் குராஅ லுண்டலிற்
சேறு கிளைத்திட்ட கலுழ்கண்ணூறல்”
- புறம்;: 325
(பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட விடுநிலத்தின் கண் புதிதாக வந்த பெருமழை அவ்விடத்தை வரைந்து பெய்து நீங்கிற்றாக பள்ளங்களில் தங்கிய சிறிதாக ஊறிய நீரைக் கன்றையுடைய பசுவானது அங்கே முளைத்திருந்த புல்லை மேய்ந்து உண்டொழிதலால் சேற்றைநீக்கித் தோண்ட ஊறிய கலங்கலாகிய நீர்) என்றும்,
‘களிறு பொரக் கலங்கிய கழன்முள் வேலி
அரிதுண்கூவலங் குடிச் சீறூர்”
- புறநானூறு: 306
(களிறு படிந்துழக்கக்கலங்கிச் சேறாகும் உண்ணும் நீர் அரிதாகிய நீர் நிலையும் முள்ளையுடைய கழற்கொடியாலாகிய வேலியும் சூழ்ந்த அழகிய குடிகளையுடைய சீறூர்) என்றும் புறநானூறு, முல்லை நிலத்து வல்லுவர்க்கூவல் பற்றிப்பேசுகிறது.
எயினர் அரண்
எயினரின் அரண் ஊகம் புல்லால் வேய்ந்த உயரமான மதில்களை உடையவாயிருந்தன. வீடுகளில் வடித்த மணிகட்டின பலகைகளோடே வேல்களும்வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவ்வேல்கள் பருந்து மொய்க்குமாறு பகைவரைக் குத்தி வீழ்த்தியதால் முனை மழுங்கியிருந்தன. இரு முனைகளிலும் முடிந்த நாணையுடைய விற்கள் சார்த்தி வைக்கப்பட்டிருந்தன. திரண்ட கால்களையுடைய பந்தல்களிலே தேனிறால் போன்ற குதையினையுடைய அடியையுடைய அம்புக்கட்டுகளும் வல்லோசையுடைய பறைகளும் வைக்கப்பட்டிருந்தன. வாயிலில் கணைய மரம் செருகப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்டிருந்தன. செவ்விய முனையையுடைய கழுக்கள் வரிசையாக நடப்பட்டிருந்தன. முள்ளையுடைய வாழ் வேலியால் அரண் சூழப் பட்டிருந்தது.
‘பருந்துபட
ஒன்னாத்தெவ்வர் நடுங்க வோச்சி
வைநுதி மழுங்கிய புலவுவாயெ‡கம்
வடிமணி பலகை யொடுநிரைஇ முடிநாண்
சாபஞ்சார்த்திய கணைதுஞ்சு வியனகர்
ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப் பின்
வரைத் தேன்புரையுங்கவைக்கடைப்புதையொடு
கடுந்துடி தூங்கும் கணைக் காற்பந்தர்
தொடர் நாயாத்த துன்னருங்கடிநகர்
வாழ்முள்வேலி சூழ்மிளைப் படப்பை
கொடுநுகந்தழீஇய புதவிற் செந்நிலை
நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற்
கொடுவில்லெயினர் குறும்பு”
என்று பெரும்பாணாற்றுப்படை (117-129) எயினரின் அரண் பற்றிப் பேசுகிறது.
இங்கு, அமெரிக்க செவ்விந்தியக் குலங்களின் குடியிருப்புக்களைச் சூழ அமைந்திருந்த காவற் காடுகள் பற்றி தோழர் எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ள செய்தி நம் கவனத்துக்குரியதாகிறது. அவர் கூறுகிறார். ‘ யதார்த்தத்தில் குடிதங்கியிருந்த பிரதேசத்தோடு கூடுதலாக வேட்டையாடவும் மீன் பிடிக்கவும் ஒவ்வொரு குலமும் கணிசமான பிரதேசத்தைப்பெற்றிருந்தது. இதற்கு அப்பால், அடுத்த குலத்தின் பிரதேசத்தை வந்தடைகிறவகையில் அகலமான ஒரு நடு நிலைப் பிரதேசம் இருந்தது. எங்கு இரு குலங்களின் மொழிகளும் உறவு கொண்டிருந்தனவோ அங்கு இந்த நடுநிலைப் பிரதேசத்தின் அளவு சிறியதாக இருந்தது. அப்படி இல்லாத இடங்களில் விரிவாக இருந்தது. இங்கு கூறப்பட்ட செய்திகளால் உலகம் முழுவதிலும் கணசமூகத்தின் குடியிருப்புகள் காவற்காடு அல்லது விடு நிலம் எனப்பட்ட மேய்ச்சல் நிலம் (வேட்டைக்காடு) சூழ அமைந்திருந்தது என்ற உண்மையை நாம் உணரமுடிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக