அவன் நினைத்தபடியே ஆயிற்று. பிளாட்பாரத்தில் சங்கடம் மிகுந்த நாலு அடி தூரம்
இன்னும் கடக்க இருக்கும்போதே ரெயில் நகர ஆரம்பித்து விட்டது.
”ஹோல்டான்! ஹோல்டான்!” என்று கத்தியபடி முன்னே பாய்ந்தான். கைப்பெட்டி அவ்வளவு உபாதைப் படுத்தவில்லை. ஆனால் தோளிலிருந்து தொங்கிய கான்வாஸ் பைதான் பயங்கரமாக அங்குமிங்கும் ஆடி, அவனை நிலை தடுமாற வைத்துக்கொண்டிருந்தது. அந்தப் பையில் ஓர் அலுமினியத் தம்ளரை ஓர் ஓரத்தில் இடுக்கியிருந்தான். அது அவன் விலா எலும்பைத் தாக்கியவண்ணம் இருந்தது. பை பையாக இல்லாமல், ஓர் உருளை வடிவத்தில் உப்பிப்போயிருந்தது. அதனால் ஒரு கையைத் தொங்கவிட முடியாமல் ஓர் இறக்கை பொலத் தூக்கிக்கொண்டே ஓட வேண்டியிருந்தது. ஓர் இறக்கையுடன் ரெயில் பின்னால் ‘ஹோல்டான், ஹோல்டான்’ என்று கத்திக்கொண்டு போவது அவனுக்குப் பொருத்தமில்லாதது ஒன்றைச் செய்யும் உணர்வைக் கொடுத்தது. ஒற்றை இறக்கையுடன் பஸ் பின்னால் கத்திக்கொண்டு போவதாவது ஓரளவு சரியாக இருக்கும்.
பஸ்! பஸ்ஸால்தான் இந்த அவதி. அவன் வீட்டிலிருந்து ரெயில் நிலையம் போய்ச் சேர ஏன் பஸ்ஸில் ஏறினான்? மூட்டை இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்து, பெட்டியும் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் பஸ்ஸில் ரெயில் நிலையம் போய்ச் சேரலாம் என்று தோன்றியே இருக்காது. பஸ்ஸில் அவன் ஏறிய நேரத்தில் கூட்டம் அதிகம். ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பின் வழியாக ஆண்களும் முன்வழியாகப் பெண்களுமாகப் பிரயாணிகள் ஏறியவண்ணமே இருந்தார்கள். யாருமே டிக்கெட் வாங்குவதைப் பற்றிய எண்ணமே இல்லாததுபோலத் தோன்றினார்கள். அவர்கள் டிக்கெட் வாங்காதவரை கண்டக்டர் பஸ்ஸை நகரச் செய்வதாக இல்லை. இதில் நடுவில் சிறிது நேரம் மழைத் தூறல். சாலையில் ஒரே மாடுகள்; அல்லது மாட்டு வண்டிகள். பெருச்சாளி சந்து கிடைத்த மட்டும் தன் பெருத்த, தினவெடுத்த உடலை மந்த கதியில் வளைத்துப் போவதுபோல, பஸ் முன்னேறிக்கொண்டிருந்தது. பெருச்சாளி வயிற்றுக்குள் ஒற்றை இறக்கையை விரித்து நின்று கொண்டு அவன் ரெயில் நிலையம் அடைவதற்குள் அவன் வயிறு நிரந்தரமாகக் கழுத்தில் தங்கிவிட்டது. ரெயில் நிலையம் எங்கேயோ, ரெயில் நிலையத்தின் பெயரைச்
சொல்லி பஸ் நிற்கும் இடம் எங்கேயோ, அந்த இடத்திலிருந்து ஒற்றைச் சிறகுடன் ஒரு பர்லாங்கு ஓடி வந்தான். ஒரு பர்லாங்கா? ஒரு மைல் கூட இருக்கும்.
வழியில் பட்டாணி வண்டிக்காரன். வாழைப்பழம் விற்பவன். செருப்புத் ட் ஹைபவன். ஒரு குஷ்ட ரோகி. ஐந்து குழந்தைகளை வரிசையாகத் தூங்க வைத்துப் பிச்சை கேட்கும் ஒரு குடும்பம். ஐந்து குழந்தைகள் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் எப்படித் தூங்க முடியும்? குழந்தைகளைக் கொன்று கிடத்தி விட்டார்களா? ஐயோ! இன்று கொன்று கிடத்திவிட்டால் நாளை? இல்லை குழந்தைகளை எப்படியோ தூங்கப்பண்ணி விட்டார்கள். மயக்க மருந்து கொடுத்திருப்பார்கள். ஆமாம், அதுதான். குழந்தைகள் நாக்கில் மாசிக்காயை அரைத்துத் தடவிவிட்டிருப்பார்கள். பாவம், குழந்தைகள்.
அப்புறம் மயக்கமுறாத குழந்தைகள் நொண்டிகளை சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வருகிறவன். முட்டாள், இப்படிச் சைக்கிளை நடைபாதையில் உருட்டிக்கொண்டு வந்தால் ஒற்றைச் சிறகுடன் ரெயிலைப் பிடிக்க ஓடும் ஜந்துக்கள் எங்கே போவது? அவனைச் சொல்ல உடியாது. அவன் சைக்கிளில் காற்று இறங்கியிருக்கும். விளக்கு இல்லாமல் இருக்கும். விளக்கு இல்லாமற்போனால் போலீஸ்காரன் பிடித்துப் போய் விடுவான். இதோ இப்போது ஒரு போலீஸ்காரன் எதிரே நிற்கிறான். நடை பாதைக்காரர்களை நிறுத்திவிட்டு வரிசையாக நான்கு லாரிகள் கடந்து செல்ல வழி கொடுத்திருக்கிறான். நான்கு லாரிகள். ஒவ்வொன்றும் பூதமாக இருக்கிறது. பூதங்களால் வேகமாகப் போக முடியாது. மிக மிகச் சாவதானமாகத்தான் அவற்றின் அசைவு. பூதங்கள் நினைத்தால் மாயமாக மறைந்துபோக முடியும். அலாவுத்தீனுக்காக ஒரு அரண்மனையை அதில் தூங்கும் அரசகுமாரியுடன் ஒரு கணத்தில் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும். ஆனால் ரெயிலுக்குப் போகும் அவனை ஒரு யுகம் அந்த நடைபாதையோரத்தில் நிறுத்திவைத்து விடும்.
ஆயிற்று, நிலையத்தை அடைந்தாயிற்று. ரெயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிஷம்
இருக்கிறது. டிக்கெட்டையாவது முன்னால் வாங்கித் தொலைத்திருக்கக் கூடாதா? நான்கு டவுன் புக்கிங்க் ஆபீஸ்கள். அங்கே டிக்கெட் கொடுப்பவர்கள் பகலெல்லாம்
வேலையில்லாமல் வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக்கொண்டு இருப்பார்கள். இவன் டிக்கெட் வாங்கப் போயிருந்தால் வெற்றிலை பாக்குப் போட்டு அரைப்பதிலிருந்து ஓர் இடைவெளி கிடைத்ததே என்று இவனுக்கு மிகுந்த நன்றியுடன் டிக்கெட் கொடுத்திருப்பார்கள். யாரோ சொன்னார்கள், ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் வாங்கிக்கொள்ளேன் என்று. யார் அந்த மடையன்? பக்கத்து வீட்டுத் தடியன். அந்த முட்டாள் சொன்னானென்று இந்த முட்டாளும், ‘எல்லாம் அப்புறம்
பார்த்துக்கொள்ளலாம்’ என்று இருந்துவிட்டான்.
இப்போது ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஏகக் கூட்டம். கியூ
வரிசை. எல்லாரும் வரிசையாகவே வந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு சில்லறை சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம். ரெயிலைப் பிடிக்க வேண்டாமென்றால் கியூ வரிசையில் ஒழுங்காக நின்று, டிக்கெட் வாங்கிச் சில்லறை சரிபார்த்துக் கொண்டு போகலாம். ஒன்றுமே செய்ய வேண்டாமென்றால் எல்லாச் சட்ட திட்டங்களையும் ஒழுங்காக அநுசரித்துப்போய் நல்ல பிள்ளையாகப் பட்டினி கிடந்து சாகலாம். அந்த நடைபாதைப் பிச்சைக்காரக் குழந்தைகள்போல. அந்தக் குழந்தைகள் சாகாமல் இருக்க வேண்டும். பிச்சை வாங்கிச் சேகரித்துக் கொண்டிருக்கும் அந்த ஆண் பெண் இருவரும் அந்தக் குழந்தைகளின் அப்பா அம்மாவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமலும் இருக்கலாம். பிச்சைக்காரர்களுக்கு அப்பா ஏது? அம்மா ஏது? அப்பா அம்மா இல்லாமலும் இந்த உலகத்தில் இருக்க முடியுமா? அந்தக் குழந்தைகளுக்கு அவர்கள் அப்பா அம்மா இல்லை. எங்கெங்கேயோ கிடந்த ஐந்து குழந்தைகளைச் சேர்த்து
மயக்க மருந்து கொடுத்து நடைபாதையில் கிடத்தி அவர்கள் பிச்சை
எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கும் தின்ன ஏதாவது
கொடுப்பார்களா? கொடுக்க வேண்டும். அப்படித் தின்னக் கொடுக்காமல் எத்தனைக்
குழந்தைகள் அப்படி மயக்கத்திலேயே செத்துப் போய்விடுகின்றனவோ? அப்பா அம்மா
இருந்து இதோ இவன் மயக்கம்போடாமல் பிச்சைக்காகக் காத்திருக்கிறான். பிச்சையில்
ஒரு கூட்டந்தான், இதோ இந்த டிக்கெட் கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பது.
ரெயில் கிளம்ப இன்னும் ஓரிரு நிமிஷம் இருக்கும்.
இவன் டிக்கெட் வாங்குவதற்கும் அந்த நேரம் முடிவதற்கும் சரியாக இருந்தது.
இப்போதுகூட ஓடிப்போய்ப் பிடித்து விடலாம். நல்ல வேளையாக மாடிப்படி ஏறி இறங்க வேண்டியதில்லை. அப்படியும் நூறு அடி தூரம் இருக்கும்போது வண்டி நகர
ஆரம்பித்துவிட்டது.
ஓடினான். பிளாட்பாரத்தில் உலகத்தில் இல்லாதது இல்லை. எல்லாம் கூடை கூடைகளாக, மூட்டைகளாக, இருந்தன. தகர டப்பாக்களாக. இவன் மோதிய ஒரு கூடை திடீரென்று கிருச் கிரீச்சென்று கத்திற்று. கோழிகள். கூடை கூடையாக உயிரோடு கோழிகள். கூடைக்குள் நகர முடியாதபடி அடைத்துவைக்கப்பட்ட கோழிகள். அவற்றினால் கத்தத்தான் முடியும். கூவ முடியாது. அதைத்தான் செய்தன, இவன் மோதியவுடன். அப்புறம் இந்தத் தபால்காரர்களின் தள்ளுவண்டி. வண்டியில் மலைமலையாகத் தபால் பைகள். புடைத்துப்போன தபால் பைகள். எவ்வளவோ ஆயிரம் பேர் எவ்வளவோ ஆயிரம் பேருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நேரில் பார்த்துப் பேச முடியாததை எல்லாம் கடிதமாக எழுதியிருக்கிறார்கள். இவர்கள் நேரில் பார்த்தால்தான் எவ்வளவு பேச முடியப்போகிறது? கடிதத்தில், ‘இங்கு யாவரும் நலம். தங்கள் நலமறிய ஆவலாயிருக்கிறேன்’ என்று மறு சிந்தனை இல்லாமல் எழுதிவிடலாம். கடிதத்தில் அது ஒரு சௌகரியம்.
இப்படி ஓடிக்கொண்டே இருந்தால் ரெயிலைப் பிடித்து விட முடியுமா? முடியலாம்.
ரெயிலின் வேகம் குறைவாக இருந்து, தன் வேகம் அதிகமாக இருந்தால். ஆனால் ஒரு
சூத்திரத்தின்படி பின்னால் ஓடுகிறவன் முன்னே போவதை எட்டிப்பிடிக்க முடிவதில்லை. இருந்த போதிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இந்த ரெயிலைப் பிடித்துவிட வேண்டும்.
“ஹோல்டான், ஹோல்டான்!” என்று கத்திக்கொண்டு ஒற்றைச் சிறகை விரித்துக்கொண்டு பையில் திணித்திருக்கும் அலுமினியத் தம்ளர் கணத்துக்கு ஒரு தரம் அவன் விலா எலும்பைத் தாக்க, அவன் ரெயில் பின்னால் ஓடினான். திடீரென்று பிளாட்பாரம் முழுக்கக் காலியாகப் போய்விட்டது. அவன் அந்த ரெயில் இரண்டுந்தான். இப்போது நிச்சயம் ஓடிப்போய்ப் பிடித்துவிடலாம். ஆனால் பெரிய முட்டுக்கட்டையாக ஒரு பெரிய உருவம் எதிரே நிற்கிறது. கடவுள்.
“தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுங்கள்! நான் அந்த ரெயிலைப் பிடிக்க வேண்டும்.”
“அந்த ரெயிலையா?”
“ஆமாம்.அதைப் பிடித்தால்தான் நான் நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேருவேன். நாளைக் காலை அந்த ஊர்ப் போய்ச் சேர்ந்தால்தான் நாளை பத்து மணிக்கு அந்த இண்டர்வியூவுக்குப் போக முடியும். தள்ளி நில்லுங்கள்! தள்ளி நில்லுஙகள்!”
”வேலை கிடைத்துவிடுமா?”
“வேலை கிடைக்க வேண்டும். வேலை கிடைத்தால்தான் நான் அந்த நடைபாதைக் குழந்தைகள் போல் சாகாமல் இருக்க முடியும். எனக்குப் பிறக்கும் குழந்தைகளை நான் நடைபாதையில் கிடத்தாமல் இருக்க முடியும். தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!”
“நீ என்ன ஜாதி!”
“நான் என்ன ஜாதியாக இருந்தால் என்ன? நான் ஒரு சடங்கு, கர்மம் செய்வதில்லை.
பெரிதாக மீசை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். ஹோட்டலில் சென்று எந்த மிருகத்தின்
இறைச்சி கொடுத்தாலும் தின்கிறேன். சாராயம் குடிக்கிறேன். எனக்கு ஜாதி கிடையாது.
தள்ளிப் போங்கள்! தள்ளிப் போங்கள்!”
“நீ உனக்கு ஜாதி இல்லை என்பதற்காக அவர்கள் உனக்கு ஜாதி இல்லை என்று நினைக்கப் போகிறார்களா?”
“போ, தள்ளி! பெரிய கடவுள்.”
மீண்டும் ஒற்றைச் சிறகு, ஹோல்டான். அலுமினியத் தம்ளர். இந்தச் சனியன்
அலுமினியத் தம்ளரை வேறு இடத்தில் திணித்திருந்தால் என்ன? இப்போது நேரமில்லை.
இந்தத் தம்ளரே எதற்கு? தண்ணீர் குடிப்பதற்கு அல்ல; நாளை ஓரிடத்தில் உட்கார்ந்து
ஒழுங்காக சவரம் செய்துக்கொள்வதற்குத்தான். எது எப்படிப் போனாலும்
இண்டர்வியூவுக்கு முகச் சவரம் செய்துகொண்டு போக வேண்டும்! இந்தக் கடவுளுக்குத் தெரியுமோ எனக்கு வேலை கிடைக்காதென்று?
இன்னும் இரண்டடி எட்டிப் பிடித்தால் ரெயில். மெதுவாகத்தான்
போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் ஓர் அவதி; ரெயலின் கடைசிப் பெட்டியில் ஏறிக்
கொள்ள முடியாது. அது கார்டு வண்டியாக இருக்கும் முற்றும் மூடிய பார்சல்
பெட்டியாக இருக்கும். ஆதலாம் ரெயிலை எட்டிப் பிடித்தால் மட்டும் போதாது.
ஒன்றிரண்டு பெட்டிகளையும் கடந்து செல்ல வேண்டும். மீண்டும் கடவுள்.
”அட ராமச்சந்திரா! மறுபடியுமா?”
“ஏதோ உன்மேல் பரிதாபம். அதனால்தான்.”
“அப்படியானால் வண்டியை நிற்கச் செய்யும்.”
“நானா உன்னை வண்டி பின்னால் ஓடச் சொன்னேன்? ஒரு பத்து நிமிஷம் முன்னதாகவே கிளம்பியிருக்கக் கூடாது?”
“ஏதோ எல்லாம் ஆயிற்று. இனிமேல் என்ன செய்வது?”
“அப்போது அநுபவிக்க வேண்டியதுதான்.”
“இதைச் சொல்ல நீ எதற்கு? நான்தான் அநுபவித்துக் கொண்டிருக்கிறேனே. தள்ளி போம்”
இரண்டு முறை கடவுள் தரிசனம் ஆயிற்று. நேருக்கு நேராக. எத்தனை பக்தர்கள்,
எவ்வளவு முனிவர்கள் எவ்வளவு ஆண்டுக்காலம் எப்படியெல்லாம் படாதபாடு
பட்டிருக்கிறார்கள்! இல்லாத தியாகங்கள் புரிந்திருக்கிறார்கள்!
புதுமைப்பித்தனாவது வீட்டுக்கு அழைத்துப் போய் ஒரு வேளைச் சோறு போட்டார். நானோ தள்ளிப் போகச் சொல்லிவிட்டேன். கடவுள் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே?
இப்படி ஓடி ஓடியும் ஐந்து நிமிஷப் பத்து நிமிஷக் கால தாமதத்தில் எவ்வளவோ
தவறிப்போயிருக்கிறது. தவறிப் போவதற்கென்றே திட்டமிட்டு காரியங்களைத் தாமதமாகச் செய்ய ஆரம்பித்து அப்புறம் இல்லாத ஓட்டம் ஓடி, கடைசியில் என்ன ஓடினாலும் முடியாது என்று ஆகும் போது, “பார்! என் துரதிர்ஷ்டம்! பார், என் தலையெழுத்து!” என்று சொல்லச் சௌகரியமாக இருக்காது?
நாளையோடு இருபத்தைந்து முடிகிறது. இனி இந்த மாதிரி இடங்களில் உத்தியோகம்
எதிர்பார்க்க முடியாது. வேலை வாய்ப்பு என்பது நாளை என்பதால் அப்படியே
ஒன்றுக்குக் காலாகிவிடும். முழு வேலைவாய்ப்பில் படிப்பு முடிந்து இந்த ஆறு
வருஷங்களில் விட்டுவிட்டு எண்பத்தொரு நாட்களில் தினக்கூலி வேலை. ஒரு மாதம்
நான்கு நாட்கள் ஒரு பண்டாபீஸில் தற்காலிகமாக. அவ்வளவுதான். ஒரு வேளை
வேலைக்கென்று உண்மையாகவே தீவிரமாக முயற்சி செய்யவில்லையோ? முயற்சி.
விடாமுயற்சி. தீவிர முயற்சி. முயற்சி திருவினையாக்கும். முயற்சி திருவினை
ஆக்கும். பணக்காரன் ஆகலாம். பணம் வந்தால் ரெயில் நிலையத்துக்கு பஸ்ஸில் வர
வேண்டாம். ஒரு டாக்ஸியில் குறித்த நேரத்துக்கு வரலாம். ரெயில் பின்னால்
சிறகொடிந்த நெருப்புக்கோழிபோல ஓட வேண்டியதில்லை; அதுவும் “ஹோல்டான். ஹோல்டான்” என்று கத்திக்கொண்டு. இந்த ஹோல்டான் என்ற சொல்லே தரித்திரத்தின் குறியீடு.
நகர்ந்து கொண்டே இருக்கும் உலகத்தை ஹோல்டான் சொல்லி நிறுத்திவிட முடியுமா?
உலகம் நகர்ந்துகொண்டா இருக்கிறது? பயங்கரமான வேகத்தில் அண்ட வெளியில் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் அல்ல. இன்னும் ஆயிரக்கணக்கான,
கோடிக்கணக்கான அண்டங்கள், உலகங்கள், தலை தெறிக்கும் வேகத்தில் சீறிப் பாய்ந்து
கொண்டிருக்கின்றன. இத்தனை அண்ட சராசரஙக்ளைச் சிருஷ்டித்துவிட்டு அவற்றைக் கன வேகத்தில் தூக்கி எறிந்துவிட்டு இந்தக் கடவுள் என் முன்னால் நின்று நான்
ஓடுவதைத் தடுக்கிறது!
நான் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறேன்? ஒரு ரெயிலைப் பிடிக்க; இந்த ரெயில்
நிலையத்தில் பிளாட்பாரத்தில் நகர ஆரம்பித்துவிட்ட ஒரு ரெயிலைப் பிடிக்க. நான்
ரெயிலைப் பிடிக்க வேண்டும். அல்லது அது என்னை விட்டுப் போய்விட வேண்டும். இந்த இரண்டுதான் சாத்தியம். இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அரை நிமிடம். அதிகம் போனால் ஒரு நிமிடம். ஆனால் இதென்ன மணிக்கணக்காகச் சிந்தனைகள்? எத்தனை சிந்தனைகள், எவ்வளவு எண்ணங்கள்! எண்ணங்கள் என்பது வார்த்தைகள். வார்த்தைகள் காலத்துக்கு உட்பட்டவை. இவ்வளவு நேரத்தில் அதிகபட்சம் இவ்வளவு வார்த்தைகளே சாத்தியம் என்ற காலவரைக்கு உட்பட்டவை. ஆனால் மணிக்கணக்கில் எண்ணங்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கிறேன்! கடவுளைக்கூடக் கொண்டு வந்துவிட்டேன்! கடவுள் காலத்துக்கு உட்பட்டவரா?
எனக்குத் தெரியாது. எனக்கு காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுதத்து என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரையில் ரெயில் நின்று கொண்டிருக்கிறது. அது கிளம்பிவிடவில்லை நான் அதைப் பிடிப்பதற்கு அதைத் துரத்திக்கொண்டு போக வேண்டியதில்லை. இந்த ஓட்டைப் பெட்டி, உப்பிப்போன பையுடன் திண்டாடித் தடுமாறி ஓட வேண்டியதில்லை. ஆனால் அப்படி இல்லை. காலம் எனக்கு வெளியேதான் இருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகள். ஆறு ஆண்டுகள். எண்பத்தொரு நாட்கள். ஒரு மாதம் நான்கு நாட்கள். பஸ்சில். பெருச்சாளி ஊர்தல். ஐந்து குழந்தைகள். கூட நிறையக் கோழிகள். கிரீச் கிரீச். கொக்கரக்கோ இல்லை. இம்முறை கடவுள் பிரத்தியட்சம்.
கடவுள் என்றால் என்ன? என் மனப் பிராந்தி. கடவுளைப் பார்த்தவர் யார்? அவருக்கு
என்ன அடையாளம் கூற முடியும்? அவர் என்னும்போதே கடவுள் ஏதோ ஆண் பால் போல ஆகிவிட்டது. கடவுள் ஆண் பாலா? ஐந்து குழந்தைகள் மயக்க மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் காலம் நின்றுவிட்டது. நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ரெயில் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறேன். என்ன? எங்கே ரெயில்? எங்கே ரெயில்?
அவன் டிக்கட் கொடுப்பவர் கொடுத்த பாக்கிச் சில்லறையை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். உப்பியிருந்த தோள் பையால் ஒரு கையை மடக்க முடியாமல் அப்படியே அகற்றி வைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ரெயிலில் ஏறிக் கொண்டான். பையில் திணித்து வைத்திருந்த அலுமினியத் தம்ளர் விலா எலும்பில் இடிக்கும்போது அவனுக்கு வலிக்கத்தான் செய்தது.
(1973)
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக