19/10/2010

கனகாம்பரம் - கு.ப.ராஜகோபாலன்

1

‘மணி!’ வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம்.

‘எங்கேயோ வெளிலே போயிருக்கா. நீங்க யாரு?’ மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரலில் கேட்டான்.

ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டுவிட்டது.

மணியும் அவனும் கலாசாலையில் சேர்ந்து படித்தவர்கள். மணியின் மனைவியைப் பற்றி அவனுக்கு அதிகமாகத் தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. புதுக்குடித்தனம் நடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. அந்த மாதம் முழுதும் ராமு சென்னையில் இல்லை. அதற்கு முன் சாரதாவும் அவனைப் பார்த்ததில்லை.

ராமுவும் மணியைப் போல மிகவும் முற்போக்கமான கொள்கைகள் உடையவன்தான். கலாசாலை விவாதங்களிலும் சர்ச்சைகளிலும் பேசியபொழுது, ஸ்தீரி புருஷர்கள் சமானர்களாகப் பழக வேண்டுமென்றும், பெண்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமான சீர்திருத்தமென்றும் ஆவேசத்துடன் கர்ஜித்து வந்தான். ஆனால் அநுஷ்டானத்தில் அந்தக் கொள்கைகள் சோதனைக்கு வந்தபொழுது அவன் கலவர அடைந்துவிட்டான். முன்பின் பரிச்சயமின்றி மணியின் மனைவி தன்னுடன் பேசியது அவனுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் அதைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ‘வீட்டில் மணி இல்லாவிட்டால் பதில் வராது. கொஞ்சநேரம் நின்று பார்த்துவிட்டுப் போய் விடுவோம்’ என்றே அவன் ஒரு குரல் கூப்பிட்டுப் பார்த்தான்.

மணியின் மனைவி சாரதா படித்த பெண்ணும் அல்ல; அசல் கிராமாந்தரம்; எந்தப் பக்கத்திலும் ரெயில் பாதைக்கே இருபது  மைல் தூரத்திலுள்ள ஒரு சோழ தேசக் கிராமத்துப் பெரிய மிராசுதாரின் பெண். அவளுடைய நடை உடை பாவனைகளிலும், அந்தச் சில நிமிஷங்களில் அவன் கண்களில் பட்டமட்டில் ஒரு விதப் புதுமாதிரியான சின்னமும் காணவில்லை.

விலையுயர்ந்த பெங்களூர்ப் பட்டுச் சேலையை நேர்த்தியாகக் ‘கொசாம்’ விட்டுக் கட்டிக் கொண்டிருந்தாள். அதற்கேற்ற வர்ணம் கொண்ட பழையமாதிரி ரவிக்கைதான் அணிந்திருந்தாள். தலைமயிரை நடுவே வகிரெடுத்துத்தான் பின்னிக் கொண்டிருந்தாள். பின்னல்கூட, நவநாகரிகப் போக்குப்படித் ‘தொள தொள’வென்று காதை மூடிக் கொண்டு இருக்கவில்லை. பின்னலை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். நெற்றியில் பூர்ணசந்திரன் போலப் பெரிய குங்குமப்பொட்டு இருந்தது. உடம்பின் மேலிருந்த வைரங்கள் பூத்துக்கொட்டிக் கொண்டிருந்தன. மூக்கில் புலாக்கு இருந்தது. கைக்காரியமாக இருந்தவள், அவசரமாக யாரென்று பார்த்துப் பதில் சொல்ல வந்தாள் என்பது அவள் தோற்றத்திலிருந்து தெரிந்தது. அப்பேர்ப்பட்டவள் தன்னுடன் வந்து பேசினதும் ராமு மனம் தடுமாறிப் போனான்.

ஒரு பெண் வந்து தன்னுடன் பேசிவிட்டாள் என்பதால் அவன் கூச்சமடையவில்லை. கலாசாலையிலும் வெளியிலும் படித்த பெண்கள் பலருடன் பேசிப் பழகினவன் தான் அவன். அது அவனுக்கு சகஜமாயிருந்தது. இந்தப் படிக்காத பெண் தன்னுடன் பேசினதுதான் அவனுக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. படித்த பெண்கள் கூடப் புது மனிதர்களிடம் பேசுவது கஷ்டமாயிற்றே! அப்படியிருக்க, நவநாகரிக முறையில் ஆண்களுடன் பழகுவது என்பதே அறியாத பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பெண் பிற புருஷனுடன் பேசுவதென்றால், அது ராமுவுக்கு விபரீதமாகப்பட்டது. ஆனால் அவள் சொன்ன வார்த்தைகள் மெல்லிய தொனியுடன்தான் வெளிவந்தன. அவன் முகத்தைப் பார்த்துக்கூடப் பேசவில்லை அவள். தலைகுனிந்த வண்ணமாகவே இருந்தாள். இருந்தாலும் அவன் மனம் என்னவோ சமாதானப்படவில்லை.

‘நான் - நான் - மணியின் சிநேகிதன் - ‘ என்று சொல்லி மேலே என்ன சொல்லுவது என்பது தெரியாமல் தத்தளித்தான்.

‘இதோ வந்துடுவா உள்ளே வந்து உட்காருங்கோ’ என்றாள் சாரதா.

அதைக் கேட்டதும் உண்மையிலேயே ராமு திகைத்துப் போனான். தலை கிர்ரென்று சுற்றிற்று. ஏதோ தப்புச் செய்துவிட்டவன்போலச் சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு சிறு தனிவீட்டில், தனியாக இருக்கும் இளம்பெண் தன்னை உள்ளே வந்து உட்காரச் சொன்னாள்! - அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

‘இல்லை, அப்புறம் வரேன்’ என்று அரைகுறையாகக் கூறி தலையெடுத்துப் பார்க்காமல் வெகு வேகமாய்ப் போய்விட்டான்.
2

ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் இலையும் காய்கறியும் வாங்கிக்கொண்டு மணி உள்ளே நுழைந்தான்.

'உங்க சிநேகிதராமே? - வந்து தேடினார்’ என்று சாரதா குதூகுலமாகக் குதித்துக்கொண்டு அவனை எதிர்கொண்டு போய்ச் சொன்னாள். அவள் மேனியும் குரலும் ஒரு படையெடுப்புப்போல் அப்பொழுது அவனைத் தாக்கின. மணி புதுக்குடித்தனத்தின் தொல்லைகளிலும் தன்னை வந்து தாக்கிய அந்த இன்ப அலையை அநுபவித்து ஆறுதல் அடைந்தான்.

‘யார் அது?’ என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளிக்கொண்டு கேட்டான்.

‘யார்னு கேக்கல்லே’ என்று சொல்லிக்கொண்டு வலி கொண்டவள் போலப் பாசாங்கு செய்து, ‘ஹா!’ என்றாள்.

திடீரென்று மணியின் முகம் சிவந்தது, கோபம் பொங்கி எழுந்தது.

‘எவ்வளவு தரம் சொல்லுகிறது உனக்கு? யார் என்று கேட்கிறது என்ன கேடு உனக்கு? ஒரு வார்த்தை கேட்டுவிட்டால் என்ன மோசம்? உன் கையைப் பிடிச்சு இழுத்துடுவாளோ?’ என்று வார்த்தைகளை வீசினான்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் இப்படி ஒரு சம்பவம் நடந்து மணி சாரதாவைத் தாறுமாறாகக் கோபித்துக் கொண்டான். ‘பட்டணத்தில் நண்பர்கள் அடிக்கடி தேடுவார்கள்; பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்து கொண்டு கதவைச் சாத்திக்கொள்ளக் கூடாது; பட்டணத்தின் நாகரிகத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும்’ - இந்த மாதிரி உபதேசங்கள் செய்து முடித்தான். அதன் காரணமாக இருவரும் இரண்டு நாள் பேசாமல்கூட இருந்தார்கள்.

இந்தத் தடவை, தான் சொல்லப்போகிற பதில் மணிக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கப் போகிறது என்ற நிச்சயமான எண்ணத்தில், ‘வேண்டிய மட்டும் பேசட்டும்’ என்று சாரதா வாயை மூடிக் கொண்டிருந்தாள். பிறகு அவன் ஓய்ந்ததும் சாவதானமாகப் பதில் சொன்னாள்.

‘யாருன்னு கேட்டேன். சிநேகிதன்னு சொன்னார். பேர் சொல்லல்லே. ‘உள்ளே வந்து உக்காருங்கோ; வந்துடுவா’ன்னேன். அப்புறம் வரேன்னு போய்ட்டார்’.

சாரதா ஆவலுடன் மணியின் முகத்தைக் கவனித்தாள். அதில் எவ்விதமான சந்தோஷக் குறியும் தோன்றாததைக் கண்டு அவள் முகம் சுண்டிப் போய்விட்டது. சடக்கென்று திரும்பி உள்ளே போய்விட்டாள்.

மணியோ அந்த மாதிரிப் பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. முதலில் அவனுக்கு முகத்தில் அடித்தாற்போல் இருந்தது அவள் பதில்; பிறகு தான் சொன்னதற்கு மேலாக, அதியாக அவள் நடந்து கொண்டுவிட்டது அவனுக்கு அதிருப்தியை உண்டாக்கிற்று. அதன் பிறகு ஏன் அப்படிச் செய்தாள்? நாம் சொன்னதற்காகக் கீழ்படிந்து நடந்த மாதிரியா அது? அல்லது... என்று கொஞ்சம் அவன் மனம் தடுமாற ஆரம்பித்தது. எல்லாம் சேர்ந்து அவன் வாயை அடக்கிவிட்டன. சாரதாவும் அவனைச் சாந்தப்படுத்தவோ பேச்சில் இழுக்கவோ முயலவில்லை. அவளுக்கும் கோபம்.

சாப்பாடு முடிந்து வெளியே போகும்வரை மணி ஒருவார்த்தை கூடப்பேசவில்லை. தெருவழியாகப் போய்க்கொண்டே என்ன என்னவோ யோசித்தான். அவன் மனம் சொல்லமுடியாத வேதனையை அடைந்தது. சாரதா அவ்வளவு தூரம் போய்விடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. படித்த பெண் அம்மாதிரி செய்திருந்தால் அதில் ஒன்றும் விசேஷம் இராது. ஒரு கிராமாந்தரப் பெண், முகம் தெரியாதவனை உள்ளே வந்து உட்காரச் சொன்னது மிகவும் அநாகரிகம். சிநேகிதன் என்ன நினைத்திருப்பான்? ‘என்ன தைரியம் இந்தப் பெண்ணிற்கு?’ என்றோ, அல்லது ‘சுத்த அசடு!’ என்றோ நினைத்திருப்பான் அல்லது....

இம்மாதிரி யோசித்துக்கொண்டே போய்க் கொண்டிருந்தான்.

எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த ராமு, தெருவில் மணி எதிரே வருவதைக் கண்டு மிகவும் சங்கடமடைந்தான். அப்பொழுது மணியைக் கண்டு பேசுவதா வேண்டாமா என்று கூட அவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. வீட்டுக்கு வந்திருந்ததாகச் சொல்வதா வேண்டாமா? அவன் மனைவி சொன்னதைச் சொல்வதா வேண்டாமா? இப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் எழுந்தன. ஒருவேளை மணியின் அநுமதியின் பேரில் அவ்வளவு சகஜமாகப் பேசியிருந்தால் சரியாய்ப் போய்விடும். இல்லாவிட்டால் தான் சொல்லுவதால் அந்தப் பெண்ணின் அசட்டுத்தனமோ, அல்லது அறியாமையோ மணிக்குக் கோபத்தை உண்டாக்கினால்? அவர்களிடையே பெருத்த மனத்தாங்கல் ஏற்பட்டால்? யார் கண்டார்கள்? மனித சுபாவம் எது வேண்டுமானாலும் நினைக்கும். அந்த மாதிரி மனஸ்தாபத்திற்குத் தான் காரணமாகக்கூடாது. அவள் தானாக மணியிடம் முழுவதும் சொல்லியிருக்கிறாள் என்பது என்ன நிச்சயம்? சொல்லியிராவிட்டால் அசட்டுத்தனம் ஆபத்தாக அல்லவோ முடியும்?

இவ்விதம் எண்ணியவனாய், ராமு, சடக்கென்று ஒரு சந்தில் திரும்பி மணியின் கண்ணில் படாமல் தப்பினான். ஆனால் அன்று காலையில் நடந்த சம்பவத்தைத் தன் மனத்தைவிட்டு அகற்ற அவனால் முடியவில்லை. அந்தப் பால்வடியும் புதுமுகத்தின் களங்கமற்ற பார்வை; தடங்கல், திகைப்பு, பயம் இவையற்ற அந்தத் தெளிவான சொற்கள்! ‘இதோ வந்துடுவா!’ என்றாள் அவள். அதில் என்ன நேர்மை! என்ன மரியாதை! இன்னும், தன்னை உள்ளே வரும்படி அழைத்ததில் என்ன நம்பிக்கை! - தன் புருஷனின் நண்பன் என்றதால் ஏற்பட்டது! ‘சே, சே, அந்த நாலு வார்த்தைகளில் அவள் எவ்வளவு அர்த்தத்தை வைத்து விட்டாள்! நமையும் நம்பினாள்... அவளா அசடு? அதனால்தான் எனக்கு அந்தக் கலவரம் ஏற்பட்டது.  மணியை மாலையில் கண்டு அவனிடம் சொல்ல வேண்டும்’. இந்த மாதிரி எண்ணிக்கொண்டு ராமு நடந்தான். ஆனால் தான் முதலில் அந்தப் பேச்சை எடுப்பதற்கு முன்பு, நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். மாலை ஏழு மணிக்குச் சென்றால் அவன் நிச்சயம் வீட்டிலிருப்பான் என்று எண்ணினான்.
3

மாலை ஆறு மணி இருக்கும். சாரதா வீட்டுக்காரியங்களைச் செய்து முடித்துவிட்டு அறையில் தலையை வாரிப் பின்னிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ஒரு தட்டில் தொடுக்கப்படாத கனகாம்பர புஷ்பங்கள், எதிரே முகம் பார்க்கும் கண்ணாடி, ரிப்பன், சீப்பு, வாசனைத் தைலம் முதலியவை இருந்தன.

உள்ளே நுழைந்த மணிக்கு இவற்றையெல்லாம் பார்த்ததும் ஏதோ ஒரு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.

‘இது என்ன பூவென்று இதை நித்தியம் வாங்கித் தலையில் வைத்துக் கொள்ளுகிறாய்?’ என்று அவன் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்தான்

ஆனால், கனகாம்பரத்தைத்தான் அவன் சொல்லுகிறான் என்று நினைத்துச் சாரதா, அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவனது பட்டண நாகரித்தை இடித்துக் காட்ட வேண்டுமென்று தீர்மானித்தாள்.

‘பட்டணத்துலே எல்லோரும் இதைத்தானே வச்சுக்கறா? சங்கீத வித்வத்சபைலே கூட இதைத்தானே தலைதாங்காமெ வச்சுண்டு வந்தா?’ என்று சாரதா சொன்னாள்.

‘எல்லாம் பட்டணத்துலே செய்யறாப்பலே செய்யணும்னு யார் சொன்னது? அப்படி  கட்டாயமா? பட்டணத்துப் பெண்கள் மாதிரிதான் இருக்கு, அவர்கள் வைத்துக் கொள்ளுகிற கனகாம்பரமும். வாசனையில்லாத பூவை எங்கேயாவது தலையில் வைத்துக்கொள்வதுண்டா? காக்கரட்டான் பூவைத் தலையில் வச்சுக்கற பெண்களுடைய வாழ்க்கை ரஸனையும் அப்படித்தான் இருக்கும்.’

’நீங்கதானே நான் பட்டணத்துப் பெண் மாதிரி இருக்கணும்னேள்? இல்லாட்டா ஒங்களுக்கு வெக்கமா இருக்கும்னேளா?’ என்று சாரதா மணியின் முகக்குறியை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொண்டு கூறினாள்.

‘அதுக்காக மூணாம் மனுஷனைப் போய் ஆத்துக்குள்ளே வந்து உக்காருங்கறதோ?’ என்று மணி ஆத்திரத்தில் கொட்டிவிட்டான்.

சாரதாவின் முகம் சட்டென்று மாறுதல் அடைந்தது. என்ன கிராமாந்தரமானாலும் அவள் பெண்; அளவு கடந்த கோபத்துடன் மணியின் முகத்தை ஒரு நிமிஷம் ஏறிட்டுப் பார்த்தாள். அவன் எண்ணங்கள் அவன் முகத்தில் அவளுக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிந்தன. தனக்கு - தன் பெண்மைக்கு -அவன் செய்த அவமரியாதையை அறிந்தவள் போல அவளுடைய முகத்தில் ஓரு ஆழ்ந்த வெறுப்புக்குறி தோன்றிற்று. பாதி போட்ட பின்னலை அவிழ்ந்து முடிந்துகொண்டு கனகாம்பரப்பூவைத் தட்டுடன் அப்படியே எடுத்து அலமாரியில் வைத்துவிட்டுச் சமையலறைக்குள் போய்விட்டாள்.

இந்த மகத்தான கோபத்தின் முன்பு மணி அயர்ந்து போனான். அடிபட்ட நாய்போல மௌனமாக அறைக்குப் போய் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு ஒரு புத்தகத்தைப் படிப்பதாகப் பாசாங்கு செய்தான்.

ஏழு அடிக்கும் சமயத்தில் ராமு வந்தான். மணி கலகலப்புடன் பேச முயற்சி செய்தும் பயன்படவில்லை. வந்ததும் வராததுமாய் ராமு, ‘மணி, நான் காலையில் வந்திருந்தேன். நீ எங்கே போயிருந்தாய்?’ என்றான்.

‘நீயா வந்திருந்தாய்?’ என்று கேட்டுவிட்டு மணி மௌனத்தில் ஆழ்ந்தான்.

‘மணி, எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தில் என் பெயரைக் கூடச் சொல்ல மறந்து போனேன்.’.

ராமுவின் தொண்டை அடைபட்டது. மணி தலை குனிந்து கொண்டான்; அவனால் பேசவே முடியவில்லை. நண்பர்கள் இருவரும் சில நிமிஷ நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். ராமு நிலைமையை ஊகித்துவிட்டான். திடீரென்று எழுந்தான்.

‘மணி, நான் போய்விட்டு வருகிறேன். இதைச் சொல்லத்தான் வந்தேன்.’

‘இங்கேயே சாப்பிடேன், ராமு?’

‘இல்லை. இன்று வேண்டாம்!’
4

இரவு சாப்பாடு பேச்சில்லாமல் முடிந்தது. ஜன்னல் வழியே பாய்ந்த நிலவைக் கவனிப்பதுபோல மணி ஏங்கிப்போய் உட்கார்ந்து கொண்டிருந்தான். சாரதா பால் டம்ளரை எடுத்து வந்து மௌனமாக நீட்டினாள்.

அதுவரையில் அவளுடைய முகத்தைப் பார்க்கக்கூட அவனுக்குத் தைரியம் வரவில்லை. அப்பொழுதுதான் தலையெடுத்துப் பார்த்தான். அவள் முகத்தில் தோன்றிய துக்கக் குறியைக் கண்டு அவன் பதறிப் போனான்; எழுந்து அவள் தோளைப் பிடித்துக்கொண்டான்.

‘சாரதா!’ என்று சொல்லி மேலே பேச முடியாமல் நிறுத்தினான்.

‘வேண்டாம்!’ என்று சாரதா அவன் முகத்தைத் தடவினாள்.

‘நான் சொன்னது-’ என்று மணி தன் மனத்தை வெளியிட ஆரம்பித்தான்.

‘கனகாம்பரம் எனக்குப் பிடிக்காதே! நீங்கள் சொன்னதில் தப்பென்ன?’ என்று சாரதா, பெண்களுக்கென்றே ஏற்பட்ட சாதுரியத்துடன் பேச்சை மாற்றிவிட்டாள்.

கருத்துகள் இல்லை: