‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள்.
‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா.
‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’
அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான்.
‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று சொல்லிவிட்டு கமலா தன் அறைபக்கம் ஓடினாள்.
சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து பார்த்தாள்; ராகவன் மனைவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். கமலா, ‘அதற்குள் நாழியாகிவிட்டதா?’ என்று கேட்டுக்கொண்டே பின்னால் போனாள்.
அறை சற்று தூரத்திலிருந்தபோதிலும் கொஞ்சம் சாதாரணமாகப் பேசினால் காதில் விழாத தூரத்தில் இல்லை. இளம் தம்பதிகளுக்கு அக்கம் பக்கம் ஞாபகம் சில சமயங்களில் இருக்கிறதே இல்லையல்லவா?
‘போங்கள்; இதென்ன விளையாட்டு. யாராவது வரப் போகிறார்கள்!’ என்று கமலா மகிழ்ச்சியுடன் சொன்னது அரை குறையாக சாவித்திரி காதில் பட்டது. அந்த அறையில் பொங்கிய இன்பம் ஏறிய காற்று சாவித்திரியிடம் வந்தபொழுது அவள் மூச்சு திணறிற்று. வேதனை உள்ளத்தையும், உடலையும் ஏதோ செய்ய, பெருமூச்சு விட்டுக்கொண்டு குப்புறப்படுத்துக்கொண்டாள்.
சாவித்திரியின் புருஷன் வடக்கே எங்கோ மிலிடரி சர்வீஸில் இருந்தான். சாஸ்திரத்துக்காக சாந்தி முகூர்த்தம் நடந்த மூன்று நாள் இருந்துட்டு அவசர அவசரமாகப் போய்விட்டான். வருஷம் இரண்டாயிற்று. கடிதங்கள் வந்தன. ஆள் வரக்காணோம்.
சாந்திமுகூர்த்தம் ஆகாமல் வைத்திருந்தால் நாலுபேர் ஏதாவது சொல்லுவார்கள் அல்லவா? அதற்காக சம்பந்திகள் இருவரும் சேர்ந்து முகூர்த்தத்தை நடத்திவிட்டார்கள். பிறகு பெண்ணை விட்டுவிட்டுப் பையன் எவ்வளவுக் காலம் இருந்தாலும் பாதகமில்லை. நாலு பேர் பிறகு வாயைத் திறக்கமாட்டார்கள்.
ஆனால், அந்தச் சாந்திமுகூர்த்தம் சாவித்திரிக்கு யமனாகத்தான் பட்டது. உள்ளத்தை அவள் ஒருவிதமாக முன்போலவே அடக்கி ஒடுக்கிவிட்டாள். உடல்தான் ஒடுங்க மறுத்தது. ஒடுங்கின உள்ளத்தையும் தூண்டிவிட்டது. அந்த மூன்று நாள் அனுபவித்த ஸ்பரிச சுகத்தை அதனால் மறக்க முடியவில்லை. வாய்விட்டு அலறிற்று.
சாவித்திரி நல்ல சரீரக்கட்டு படைத்த யுவதி. இளமைச் செருக்கு அவள் உடலில் மதாரித்து நின்றது. அதன் இடைவிடாத வேட்கையை அவளால் சகிக்கமுடியவில்லை.
‘இந்த கமலாவுக்கு எவ்வளவு கொழுப்பு! அகமுடையான் அருகில் இருந்தால் இப்படியெல்லாமா குதிக்கச் சொல்லும்? என்னிடம் வந்து என்ன பீத்திக்கொள்வது வேண்டியிருக்கிறது? நான் கிடக்கிறேன் வாழாவெட்டி போல. என்னிடம் வந்து என்ன கும்மாளம்! இல்லை. வேண்டுமென்றுதான். நான் பார்த்து வேதனைப்பட வேண்டும் என்றுதான் இப்படியெல்லாம் செய்கிறாள் போலிருக்கிறது! சதா இவள் அகமுடையான் சொன்னது என்ன பிரதாபம்! இவள்தான் அகமுடையானைப் படைத்தவளோ?... ஏன் தலைகீழா நிற்கமாட்டாள். உடனொத்தவள் நான் தனியாகக் கிடந்து சாவதைப் பார்த்து நாம் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோமே என்று அவளுக்குப் பெருமை! நான் நொந்துகிடக்கிறேன், நொந்துபோயிருப்பேன் என்று கொஞ்சமாவது அவளுக்குத் தோன்றினால் _ எப்படித் தோன்றும்? பட்டால் அல்லவா தெரியும் அவளுக்கு.’
சாவித்திரி பொருமிக்கொண்டே படுத்திருந்தாள்.
‘ஏண்டி, ஏந்து குழாய் ஜலம் எடுத்துக்கொண்டு வந்து வைக்கப்படாதோ, இந்தா காபி!’ என்று அவள் தாயார் வந்தாள்.
‘எல்லாம் ஆகட்டும். அதற்குத்தானே பெத்தே என்னை. செய்கிறேன். போ!’
‘இதோ இருக்கு காபி. நான் அந்த தெருவுக்குப் போயிட்டு வரேன். ராத்திரிக்கு வரமுடியாதோ என்னவோ...’ ‘நீ வந்து இங்கே என்ன செய்யப்போறே. உங்கண்ணா ஆத்துலேயே இருந்துட்டுவா!’
‘ராத்திரி ஜாக்கிரதையா கதவைத் தாப்பா போட்டுண்டு...’
‘ஆகட்டும், ஆகட்டும் போ!’
அவள் தாயார் நார்மடிப் புடவையைச் சரிபடுத்திக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டு அந்தத் தெருவுக்குப் புறப்பட்டுப் போனாள். சாவித்திரியின் பக்கத்திலிருந்த காபியின் சூடு ஆறிவிட்டது. சாவித்திரியின் உள்ளத்திலிருந்த சூடு ஆறவில்லை.
புருஷன் ஆபீஸ் போனதும் கமலா வந்தாள். ‘அம்மாமி காபி சாப்பிடல்லயா?’
சாவித்திரி அவளை அசூயையுடன் பார்த்துக்கொண்டு ‘ஆறிப் போய்விட்டது, சாப்பிடவில்லை!’ என்றாள்.
‘நான் தரட்டுமா? அவருக்குச் சாயந்திரத்திற்குப் பிளாஸ்கில் போட்டு வைத்திருக்கிறேன். தரேனே, பிறகு போட்டால் போச்சு!’
‘வேண்டாம், எனக்கு வேண்டியிருக்கவில்லை. நெஞ்சைக் கரிக்கிறது.’
‘இன்னிக்கி சினிமாவுக்குப் போவோமான்னேன், நாளைக்கு ஆகட்டும்னார். நீங்களும் வர்ரேளா அம்மாமி?’
‘நன்னாயிருக்கு, நீங்க இரண்டுபேரும் தமாஷா போகிறபோது நான் நடுவில்...’
‘போங்க அம்மாமி!’ என்று சந்தோஷத்துடன் கூறினாள் கமலா. சாவித்திரிக்குக் கமலாவின் பூரிப்பு விஷமாக இருந்தது.
‘என்ன அம்மாமி, உடம்பு ஒரு மாதிரி இருக்கேளே?’
‘எனக்கென்ன கேடு, ஒன்றுமில்லை.’
‘கருகிய மொட்டு’ என்று ஒÊரு நாவல் கொண்டு வந்திருக்கிறார். படிக்கலாமா?’ என்று சொல்லி, கமலா எழுந்துபோய் புத்தகத்துடன் வந்து உட்கார்ந்தாள்.
மேல் அட்டையில் சித்திரம் ஒன்று. அதை கமலா வெட்கத்துடனும் சிரிப்புடனும் சாவித்திரிக்குக் காட்டினாள்.
ஒருவன் நாற்காலியில் உட்கார்ந்து ஆழ்ந்து யோசனையிலிருக்கிறான். கையிலிருந்த புத்தகம் கீழே விழுந்து கிடக்கிறது. பின்னால் மனைவி வந்து புன்னகையுடன் நிற்கிறாள். அவனுக்குத் தெரியாமல்.
‘இதற்கு என்ன அர்த்தம் அம்மாமி?’ என்று கமலா கேட்டாள்.
‘புருஷன் ஏதோ கவலைப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். தருணம் தெரியாமல் அசட்டுமனைவி சிரித்துக்கொண்டு வந்து நிற்கிறாள்போல் இருக்கிறது.’
கமலாவின் புன்னகை மறைந்துவிட்டது.
‘அப்படியா இருக்கும்?’
‘வேறென்ன இருக்கப்போகிறது?’ என்று சாவித்திரி சிரித்துக்கொண்டே குரூரமாகச் சொன்னாள்.
‘இருக்காது, அம்மாமி!’
‘பின் எப்படி இருக்கும்?’
‘வந்து, வந்து புருஷன் அவளை, நினைத்துக்கொண்டே படிக்கிறான். மெய்மறதியில் புத்தகம் கீழே விழுகிறது. அவள் வெகு நேரம் வரவில்லை. கடைசியில்...’
‘அதுதான் இருக்கவே இருக்கே!’
‘படிக்கலாமா?’
‘படியேன்.’
கமலா படித்தாள் வெகுநேரம். சாவித்திரி காதில் எவ்வளவு விழுந்ததோ?
‘ஐயோ, நாழியாகிவிட்டதே! படித்துக்கொண்டே இருந்துவிட்டேன். போகிறேன்!’ என்று கமலா மாலை ஐந்து மணிக்கு எழுந்து தன் வீட்டிற்குப் போனாள்.
சாவித்திரி எழுந்திருக்கவில்லை. வீடு கூட்டுகிறவள் வந்தாள். ‘நான் கூட்டிக்கொள்கிறேன் போ!’
பூக்காரி வந்தாள்.
‘இன்னிக்கிப் பூ வாண்டாம்!’
இருட்டிவிட்டது. இருட்டி வெகுநேரம் ஆகிவிட்டது. ராகவனும் கமலாவும் கொட்டம் அடித்தது அவளுக்குச் சகிக்கவே இல்லை. வீட்டில் அயலார் இருப்பதுகூட அவர்களுக்கு நினைவில்லையா? ஆத்திரத்துடன் எழுந்து மின்சாரவிளக்கைப் போட்டுவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள்.
‘இலை போட்டுவிட்டேனே வாருங்களேன்!’ என்றால் கமலா.
‘அதற்குள்ளா... இப்பவே சாப்பிட்டுவிட்டு...’
‘எனக்குத் தூக்கம் வருகிறது.’
‘தூக்கம் வருகிறதா!’ என்று ராகவன் சிரித்தான். சாவித்திரி காதில் எல்லாம் விழுந்தது.
கமலா இலையை வாசலில் கொண்டு போட்டுவிட்டு கம்பிக் கதவையும், ரேழிக் கதவையும் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு திரும்பினவள் எதிர்த்த உள்ளில் சாவித்திரி மயங்கி மயங்கிப் படுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, ‘அம்மாமி, சாப்பிட்டாச்சா?’ என்றாள்.
‘ஆச்சு!’
கமலா உள்ளே போய்த் தாளிட்டுக் கொண்டாள்.
கலியாணக்கூடம் போட்ட வீடு. இரண்டு பக்கங்களிலும் குடி. இரண்டு பக்கக்கூடத்து உள்ளுகளுக்கும், ரேழியிலும் கதவுகள்.
இரவு எட்டே மணிதான் இருக்கும். ஊர் ஓசைகூட அடங்கவில்லை. கமலாவின் பக்கத்தில் ஓசை அடங்கிவிட்டது. சாவித்திரிதான் எழுந்திருக்கவே இல்லை.
‘ராகவன்!’ என்று வாசலில் மெதுவான குரல் கேட்டது.
முதலில் சாவித்திரி வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டாள். பிறகு Êஏதோ நினைத்துக்கொண்டு எழுந்து மெதுவாக ரேழிக்கதவைத் திறந்துகொண்டு திண்ணையண்டை போனாள்.
வாசலில் ராகவன் வயதுள்ள வாலிபன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
‘ராகவன் இருக்கிறாரா?’
‘இருக்கார்!’ என்று சாவித்திரி கம்பிக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே திரும்பினாள்.
வாலிபன் ரேழிக்கு வந்து தயங்கினான்.
சாவித்திரி சற்று மெதுவான குரலில் ‘அந்த ரேழிக்கதவைத் தட்டுங்கள்!’ என்றாள் ஜாடையுடன்.
வாலிபன் திரும்பவும் தயங்கினான்.
‘வெறுமனே தட்டுங்கள், திறப்பார்!’ என்றாள். ஒருவிதமான குரூர ஆனந்தத்துடன் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு, ஆவலுடன் நடைபெற போவதை எதிர்பார்த்தாள்.
வாலிபன் ‘ராகவன்’ என்று கதவைத் தட்டினான்.
சிறிது நேரங்கழித்து ‘யார்?’ என்ற உறுமல் கேட்டது.
‘நான்தான்!’
‘நான்தான் என்றால்?’ என்று சீறிக்கொண்டு ராகவன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே இருந்தபடியே எட்டிப்பார்த்தான்.
‘நான்தான் சீனு, மதுரை.’
‘ஓ, வாருங்கள்!’ என்று ராகவன் பலதரப்பட்ட உள்ளக்கலவரத்தில் கதவைத் திறந்தபடியே விட்டுவிட்டு ரேழியில் நுழைந்து சீனுவை வாசலுக்கு அழைத்துக்கொண்டு போனான்.
ஒரு வினாடி சீனுவின் கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. மின்சார விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வாசற்படிக்கு எதிரே கமலா ஆடை நெகிழ்ந்த நிலையில் படுத்திருந்தவள் ராகவன் உடம்பு கதவு திறந்த இடத்திலிருந்து விலகினதும் சடாரென்று எழுந்து கட்டிலை விட்டுக்குதித்து சுவரோரம் ஓடினாள்.
சாவித்திரி இன்னும் கொஞ்சம் நன்றாகப் பார்த்தாள். கமலா தலையில் கட்டுப்பூ தொங்கிக்கொண்டிருந்தது. அறையிலிருந்து மல்லிகை வாசனையும் ஊதுவத்தி வாசனையும் கம்மென்று வெளியேறின.
அந்தரங்கம் திறந்துகிடந்தது போன்ற அந்த அறையை அதற்கு மேல் அவளால் பார்க்கமுடியவில்லை. ஏகாந்தம் ஆடையற்று நின்றது போன்ற அந்த ஒளி அவள் கண்களுக்குக் கூச்சத்தைக் கொடுத்தது. சத்தப்படாமல் அறைக்கதவைச் சாத்திக்கொண்டாள்.
திடீரென்று ஒரு வருத்தமும், பச்சாதாபமும் தோன்றி அவளைத் தாக்கின.
‘என்ன காரியம் செய்தேன்!’ என்ன பாவம் செய்தோ, யாரைப் பிரித்துவைத்தோ இப்பொழுது இப்படித் தனியாகக் கிடந்து தவிக்கிறேன். ஐயோ...’
அளவற்ற ஆவலில் ஒன்றையொன்று கவ்விக்கொண்டு கலந்த இரண்டு உள்ளங்கள் ஒரு கணத்தில் சிதறி தூரத்தில் விழுந்தன. கமலா கண்ணீர் பெருகாத தோஷமாக, மகாகோபத்துடன் ஆடையைச் சீர்திருத்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள்.
சீனுவை அனுப்பிவிட்டு ராகவன் உள்ளே வந்தான்.
மெதுவாகக் கட்டிலில் ஏறிக் கமலாவைத் தொட்டான். கமலா அவன் கையைப் பிடுங்கி உதறி எறிந்தாள்.
‘இன்னொரு கதவையும் நன்றாகத் திறந்து விடுகிறதுதானே!’
‘ஓ, ஞாபகமில்லை கமலா!’
‘ஞாபகம் ஏன் இருக்கும்?’
‘சின்ன விஷயத்துக்கு ஏன் பிரமாதப் படுத்துகிறாய்?’
‘சின்ன விஷயமா? என் மானம் போய்விட்டது.’
ராகவனுக்கு அதுவும் இதுவுமாக எரிச்சல் கிளம்பிற்று.
‘எவ்வளவு போய்விட்டது?’ என்று சீறினான்.
‘போதும் வாயை மூடுங்கள். அண்டை அயல் இருக்கிறது!’ என்று அவளும் சீறினாள்.
சாவித்திரியின் காதில் இதுவும் விழுந்தது. குப்புறப்படுத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
‘பாவியை என்ன செய்தால் என்ன?’ என்று புலம்பினாள்.
கமலா மூக்கைச் சிந்தும் சத்தம் கேட்டது.
‘திருப்திதானா பேயே!’ என்று சாவித்திரி தன்னைத் தானே உரக்கக் கேட்டுக்கொண்டாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக