12/10/2010

1946இல் இப்படியெல்லாம் இருந்தது... - அசோகமித்திரன்

கங்காராம் பற்றி சீனுவாசன் சொன்னது எனக்குச் சரியாகப் புரியாது போனாலும் கங்காராம் ஏதோ சிக்கலில் மாட்டிக்கொள்வான் என்று மட்டும் தெரிந்தது. சீனுவாசன் என்னுடன் ஒன்பதாவது வகுப்பில் படிப்பவன். அவன் முந்தைய வருடமும் ஒன்பதாவது வகுப்பில்தான் இருந்திருக்கிறான். ஆனால் இறுதிப் பரிட்சை பாஸ் செய்யவில்லை. கங்காராம் எங்கள் பள்ளிக்கூடத்தின் வாட்ச்மென், காவல்காரன். ஐந்து பிரம்மாண்டமான கட்டடங்கள், நிறைய வெற்றிடம் உள்ள எங்கள் பள்ளியை மாலை ஐந்து மணியிலிருந்து அடுத்த நாள் காலை ஒன்பதரை மணிவரை காவல் காப்பவன். அதையே அவ்வளவு பெரிய பள்ளிக்கு மாலையிலிருந்து காலைவரை ஒரே மன்னனாக இருப்பவன் என்றும் சொல்லலாம். ஊரிலேயே எங்கள் பள்ளிதான் மிகப் பெரியது. ஏறத்தாழ ஆயிரம் மாணவர்களும் எழுபது ஆசிரியர்களும் உடையது. ஐம்பது வகுப்பறைகள் வேதியியல், பௌதிகத்து சர்க்கஸ் காட்சிக்கு உள்ளதுபோல காலரிகொண்ட அறைகள், தச்சு வேலை பயில ஒரு நீண்ட பயிற்சிக்கூடம், இரண்டு குஸ்திச் சண்டைக் குழிகள், ஓர் உடற்பயிற்சிக்கூடம், கிரிக்கெட், கால்பந்து ஆட ஒரு பெரிய மைதானம், ஒரு பெரிய பிரார்த்தனைக்கூடம் என இருந்த எங்கள் பள்ளியைக் கங்காராம் இரவு வேலைகளில் வாடகைக்குவிடுகிறான்! சீனுவாசன் சொன்னதன் முழு அர்த்தமும் புரியாதபோதிலும் எனக்கு ஏனோ வயிற்றைக் கலக்கியது.

எங்கள் பள்ளியிலேயே கங்காராம்தான் மிகக் கம்பீரமான தோற்றம் உடையவன். சிறு வயதில் நம் கண்ணுக்குப் பெரிய தோற்றம் கொண்டவர்கள் பிற்காலத்தில் நமக்கும் சிறியவர்களாகிவிடுவார்கள். கங்காராம் பற்றி எனக்கு அந்தச் சந்தேகம் உண்டு. அவனுடைய சீருடையில் பெல்ட்டும் தலைப்பாகையும் அணிந்த அவன் ஏதோ ஒரு நிஜாம்போல் எனக்குத் தெரிந்தான். காலையில் பத்தே காலுக்குப் பெரிய கேட்டுகளை மூடிப் பூட்டிவிடுவான். ஆனால் எங்கள் பள்ளிக்கு வேறு வழிகளும் உண்டு. நான் தினம் சுவர் ஏறிக் குதித்துத்தான் பள்ளிக்குப் போவேன். ஒரு நாள் கங்காராம் பிடித்துவிட்டான்.

“வா, பிரின்ஸ்பால் ரூம்.”

“வேண்டாம், வேண்டாம்.”

“கேட் திறந்திருக்கப்பவே இப்படி சுவர் மேலே ஏறிக் குதிக்கறே!”

“இந்தப் பக்கமா வரவங்க எல்லாருமே ஏறிக் குதிச்சுத்தான் வராங்க.”

இதைச் சொல்லிக்கொண்டிருந்த போதே இன்னொரு பையன் சுவர் ஏறிக் குதித்து ஓடினான்.

“டேய், டேய்!” என்று கங்காராம் அவனைத் துரத்தப் போனான். நான் நொடியில் என் வகுப்பறைக்குப் போய் உட்கார்ந்தேன்.

காவல் காப்பதோடு கங்காராமுக்கு இன்னொரு பணியும் உண்டு. பிரின்ஸ்பால் கைவலி என்று கங்காராமைப் பிரம்படி அடிக்கச் சொல்வார். ஒரு மாதத்தில் ஏªழுட்டு மாணவர்கள் சிக்குவார்கள். கங்காராம் அடிப்பது பிரின்ஸ்பால் அடிப்பதைவிட மிருதுவாக இருக்கும். பிரம்படி படுவது அவமானம் என்பதைத் தவிர யாரும் பெரிதுபடுத்தமாட்டார்கள். மிகச் சில மாணவர்கள் பெற்றோரிடம் புகார் செய்வார்கள். என்றோ ஒரு நாளைக்கு ஒரு தகப்பனார் பிரின்ஸ்பாலிடம் வருவார். அதற்குள் அவருக்கு எந்தப் பையனுக்குத் தண்டனை தரப்பட்டது என்பது மறந்துவிடும். சீனுவாசன் போன்று ஐந்தாறு மாணவர்கள் அடிக்கடி சிக்குவார்கள். அவர்களைப் பிரின்ஸ் பால் நினைவில் வைத்திருப்பார்.

சீனுவாசன் என்னிடம் பரம ரகசியமாகச் சொன்னது நிஜமோ என்று நினைக்கும்படி திடீரென ஒரு நாள் கங்காராமைக் காணோம். அவனை வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள். பதிலுக்கு வந்தவன் ஒல்லியாக உயரமாக இருந்தான். ஆனால் கங்காராமின் கம்பீரம் இல்லை. சிடுசிடு வென்றிருப்பான். மாணவர்கள் வழக்கம் போலச் சுவரேறிக் குதித்துக்கொண்டிருந்தார்கள்.

எங்கள் வீட்டிலிருந்து சுமார் முக்கால் மைல் தூரத்தில் ரெஜிமெண்டல் பஜாà
®°à¯ போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. அதற்கு நேர் எதிரே ஒரு சந்து. அதில் சின்னச் சின்ன வீடுகளாக நிறைய இருக்கும். நடு நடுவில் சில சிறு கடைகள் இருக்கும். நாங்கள் அரிசி கோதுமை அல்லது சோளம் அரைக்க இருநாட்களுக்கு ஒருதரம் இந்தச் சந்துக்குத்தான் வர வேண்டியிருக்கும். அந்தச் சந்தில் மூன்று மாவரைக்கும் ‘மில்கள்’. முதல் கடை, மாவு திருடுகிறது என்று இரண்டாவதுக்குப் போவேன். அங்கும் மாவு குறைகிறது என்று மூன்றாவதற்குப் போவேன். மூன்று கடைகளும் இரவு கடை மூடும்போது நான்கு - காலன் மண்ணெண்ணெய் தகர டப்பாக்கள் இரண்டில் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவை எடுப்பார்கள். இதை வாங்கிப் பலர் கூழ், தோசை அல்லது சப்பாத்தி செய்து சாப்பிடுவார்கள். ஒரு நாள் நான் கோதுமை மாவு அரைத்துப் போக இரண்டாவது கடைக்குப் போனபோது அங்கு கங்காராம் கடைக்காரனிடம் கலவை மாவு வாங்கிக்கொண்டிருந்தான்.

“கங்காராம்!” என்று நான் மகிழ்ச்சியோடு கூப்பிட்டேன்.

கங்காராம் என்னைப் பார்த்தான். அவன்வரையில் எண்ணற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்.

“கங்காராம், நீ ஏன் ஸ்கூலுக்கு வரதில்லே? ஏன் நிறுத்திட்டாங்க?”

எனக்குப் பதில் சொல்வதா வேண்டாமா என்பதுபோல் கங்காராம் என்னை உற்றுப்பார்த்தான்.

“நீ யாரு?”

நான் என் பெயரைச் சொன்னேன். ஒன்பதாம் வகுப்பு என்றும் சொன்னேன்.

“உன் மாதிரி ஒரு பையனாலே தான் என் வேலை போச்சு?”

“யாரு? சீனுவாசனா?”

“சீனுவாசனோ கிருத்திவாசனோ, எனக்குத் தெரியாது. என்னைக் கூப்பிட்டுக் கேக்காமகூட பிரின்ஸ்பால் டிஸ்மிஸ் பண்ணிட்டார்.”

“நீ போய்க் கேக்கலையா?”

“கேட்டேன், பையா. ஆனால் அவர் ஸ்கூல் செகரட்டரியே என்னை டிஸ்மிஸ் பண்ணச் சொன்னாருன்னு சொன்னாரு.”

“எதுக்கு?”

“தெரியலை, பையா. ஸ்கூலுக்குக் கெட்ட பேர்னு மட்டும் சொன்னாரு.”

“கங்காராம், உனக்குக் கொஞ்சம் சோளமாவு வேணுமா?”

“வேண்டாம். இந்த ஜகீர் தர மாவுலேயே எல்லாம் இருக்கு.”

கங்காராம் போன பிறகு நான் அரை மணிநேரம் காத்துக்கொண்டிருக்க வேண்டியிருந்தது. கங்காராமால் இந்தக் கலவை மாவை உண்டு எவ்வளவு நாட்கள் வாட்டசாட்டமாக இருக்க முடியும்?

என்னிடம் மீண்டுமொருமுறை சீனுவாசன் எதையோ சொல்ல வந்தபோது, “எனக்கு இதெல்லாம் தேவையில்லை, போ!” என்றேன்.

அவன் கேலியாக உதட்டைப் பிதுக்கிக்கொண்டு போனான். அவன் ‘இரண்டாம் ஆண்டு’ என்றால்கூடக் கடைசி பெஞ்சில்தான் உட்கார்ந்துகொள்வான். என்னுடையது அதற்கு முந்தைய பெஞ்சு.

வகுப்பு நடந்துகொண்டிருந்தபோதே சீனுவாசன் என்னை உதைத்துக்கொண்டே இருந்தான். ஒருமுறை பொறுக்காது எழுந்து நின்றேன். “சார், இவன் உதைச்சுண்டே இருக்கான்” என்றேன்.

“கழுதைதானே, அப்படித்தான்” என்று சார் சொன்னார்.

வகுப்பு முடிந்து நிச்சயம் சண்டை இருக்குமென எல்லா மாணவர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நானும் சீனுவாசனும் வேறு வேறு திசைகளில் போனோம்.

அடுத்த நாள் பிரின்ஸ்பால் கூப்பிடுகிறார் என்று புது வாட்ச்மென் என்னைக் காட்டி ஆசிரியரிடம் சொன்னான். காரணம் புரியாமல் நான் அவனைப் பின்தொடர்ந்தேன்.

“நீ சும்மாச் சும்மா ஒரு பையன் மேலே கம்ப்ளெயிண்ட் பண்ணிண்டேயிருக்கயாமே?” என்று பிரின்ஸ்பால் கேட்டார்.

விஷயமே புரியாமல் விழித்தேன். அங்கே அறையின் ஓர் ஓரத்தில் சீனுவாசன் நின்றுகொண்டிருந்தான்.

“சார், இவன் கெட்டக் கெட்ட வார்த்தையெல்லாம் பேசறான், சார். என்னோட பேசாதேன்னேன். என் பெஞ்சுக்குப் பின்னாலே உட்கார்ந்துண்டு உதைச்சுண்டேயிருந்தான்.”

“ஏண்டா, அப்படியா?”

“அவன்தான் கெட்டக் கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவான்.”

“நான் நீ சொல்லக் கேட்டிருக்கேன். அவன் சொல
்லிக் கேக்கலை.”

சீனுவாசன் திகைத்து நின்றான்.

“ஏண்டா, சீனுவாசா, மாசம் ஒருதரம் இரண்டுதரம் இங்கே அடி வாங்கறே நீ இந்த வருஷமாவது பாஸ் ஆக வேண்டாமா?”

பேச்சு வேறு திசையில் போவது கண்டு சீனுவாசன் கலவரம் அடைந்தான்.

பிரின்ஸ்பால் அவனை, “நீ போ, கிளாசுக்கு” என்றார்.

அவன் போன பிறகு, “நீ அவனோட சேராதே. இரண்டு பேருக்கும் நல்லதில்லே. அவன் அம்மா எங்கிட்டே வந்து அழுதா” என்றார்.

“சார், கங்காராம் பற்றி சீனுவாசன் தான் சொன்னானா?”

“ஆமாம். உனக்கெப்படித் தெரியும்?”

“சார், கங்காராம் நல்லவன்.”

“உனக்கெப்படித் தெரியும்?”

“நீங்க அவனைக் கூப்பிட்டுக் கேளுங்க, சார். அவனாலே ஒரு கெட்ட பேரும் ஸ்கூலுக்கு வராது.”

“செகரட்டரிதான் உடனே டிஸ்மின்னு சொன்னார். அவர் சீனுவாசன் பக்கத்து வீடு.”

“இப்போகூட நீங்க விசாரிச்சுப் பாக்கலாம், சார் அவன் ரெஜிமண்டர் பஜார்லேதான் எங்கேயோ இருக்கான்.”

“நீ அழைச்சுண்டு வா.”

அதன் பிறகு ஒரு வாரம் எனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் கங்காராமைத் தேடிப் போனேன். ஸ்கூல்லே இருந்த முகவரி மிகப் பழையது. கடைசியாக நான் அவனைக் கண்டுபிடித்தபோது அவன் மிகவும் மோசமான நிலையில் இருந்தான். அவன் முதலில் என்னுடன் வரத் தயாராக இல்லை.

“வா, கங்காராம். பிரின்ஸ்பாலே சொன்னாரு.”

பிரின்ஸ்பாலுக்கும் அவனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. “நீ வந்து சொல்லியிருக்கலாமே?” என்றார்.

“கையிலே கடுதாசு கொடுத்திட்டீங்க, நான் என்ன பண்ணுவேன்?”

“நீ ஏதாவது ஆம்பளை பொம்பளைக்கு ஸ்கூலைத் திறந்துவிட்டயா?”

“என்னங்க?”

“கெட்ட காரியத்துக்காக ஸ்கூல் வெராண்டாவை யாராவது பயன்படுத்தினாங்களா?”

“என்ன கெட்ட காரியம்?”

பிரின்ஸ்பால் என்னைப் பார்த்தார் “போ வெளியே” என்றார்.

நான் அவர் அறைக்கு வெளியே காத்திருந்தேன். திடீரென்று கங்காராம் சிரிக்க ஆரம்பித்தான். பிரின்ஸ்பாலும் சிரித்த மாதிரி இருந்தது. நான் உள்ளே போனேன். பிரின்ஸ்பால் இறுக்கம் தணிந்தவராக, “சரி, நீ போ. நான் செகரட்டரி கிட்டே சொல்லி உன்னை மறுபடியும் வாட்ச்மென் ஆக்கிறேன்” என்றார்.

“புது ஆளு?”

“அது ஒரு மாசத்துக்குத்தான். நீ நாளைக்கே வந்துரு.

நானும் கங்காராமும் வெளியே வந்தோம்.

“என்னாச்சு, கங்காராம்?”

“போன மாசம் பெரிசா மழை அடிச்சதில்லே, அப்போ இங்கே லீவு வேறே. இரண்டு நாள் ஏழெட்டுப் பிச்சைக்காரங்க வெராண்டாலே ஒண்டியிருக்காங்க. நான்தான் விட்டேன். அவங்க ஏதோ கலீஜ் பண்ணிட்டாங்கன்னு செகரட்டரி கிட்டே யாரோ சொல்லியிருக்காங்க.”

“யாரு?”

“அதுகூட ஒரு பையன்தான்.”

“சீனுவாசனா?”

“தெரியாது, ஆனா என் வேலை போச்சு.”

“இப்போ வந்துடுத்தே?”

“பழைய மாதிரி ஆகுமாப்பா? இப்போ எல்லாரும் என்னைக் காவல் காப்பாங்க,”

அதன் பிறகு நான் எப்போதும் தானியம் அரைக்க இரண்டாவது கடைக்கே போனேன்.

கருத்துகள் இல்லை: