21/09/2014

வையாபுரிப் பிள்ளையும் தமிழும் - முனைவர் தமிழண்ணல்

பேரா.வையாபுரிப் பிள்ளையின் சில கருத்து முடிபுகள் மட்டும் விமர்சனத்திற்கு உட்பட்டன என்பது உண்மையே. அதற்காக அவரது தமிழ் ஆய்வுப் பணியைக் குறைத்து மதிப்பிட இயலாது.

அவரது காலத்தில் வடமொழிச் சார்புக் கருத்துரு, தமிழ்ச் சார்புக் கருத்துரு என இரண்டு பார்வைகள் முளைவிட்டிருந்தன என்பதும் உண்மையே. இதில் வடமொழிச் சார்பினர் "தமிழ் தம் மொழியின் துணையோடுதான் வளர்ந்தது' என்பது போன்ற கருத்தினைப் பலவாறு வெளிப்படுத்தினர். மேலும், இது சிலருக்கு விமர்சனத்திற்கு உட்பட்டது. இது, வடமொழிச் சார்பினர் சிலர், "தமிழில் எதுவுமே சொந்தமாக இல்லை' என்ற கருத்துக்கு இட்டுச் சென்றது. இதற்கு மறுதலையாக எல்லாமே தமிழ்தான் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதாயிற்று. அன்று வடமொழிச் சார்பினர்க்கு செல்வாக்கு மிகுதி. இதுவும் சிலருக்கு எரிச்சலை உண்டாக்கியது. குறிப்பாக சிலவற்றைப் பார்ப்போம்:

1.   திருக்குறள் வடமொழி அர்த்த சாத்திரம், காமசூத்திரம் போன்றவற்றைப் பார்த்து எழுதப்பட்டது.

2.   திருக்குறளின் காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு.

3.   புறநானூற்றில் "மோரியர்' என்று வரும் ஐந்து இடங்களையும் மாற்றி "ஒளரஸ்' என்ற சொல்லே "மோரியர்' என ஆயிற்று எனக் குழம்பியது.

4.   சிலப்பதிகாரத்தின் காலத்தினைப் பின்னுக்குத் தள்ள பெருமுயற்சி மேற்கொண்டமை. வஞ்சிக்காண்டம் பிற்சேர்க்கை என்றெல்லாம் பலவாறு திரித்து எழுதியதில் பிள்ளை அவர்கட்கும் பங்குண்டு.

5.   அவர் தொகுத்த பேரகராதியில் பல சொற்கள் வடமொழி வழிப்பட்டவை எனக் குறித்திருப்பது. தமிழர் - விளிம்பில்லாத பாத்திரம் என எழுதியிருப்பது.

6.   தமிழ் அகத்திணைப் பாடல்களை, கிரந்தத்தில் உள்ள "கதா சப்தகவியோடு' ஒப்பிட முயல்வது.

7.   தொல்காப்பியம் வடமொழிப் பாணினியத்தைப் பார்த்து எழுதப்பட்டது எனல்.

8.   பல்வேறு இடங்களில் தமிழ் வடமொழி வழிப்பட்டு வளர்ந்தது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது.

9.   பாரதப் போரில் கடுமை காரணமாகப் படைகள் சோர்வுற்றபோது, சேரமன்னன் இரண்டு படைகளுக்கும் பெருஞ்சோறு படைத்தான் என வருவதைப் "புனைகதை' என்பார். அது பாரதப்போர் என்ற நாடகம் என்பார். சங்கப் பாடல்களில் புனைவு என்பதில்லை.

10.   குறுந்தொகையில் "பொன்மலி பாடலி பெறீஇயர்' என வருமிடத்தில், "பாடிலி' என்பது தவறான பாடம். பாடலி என்பதே சரியான பாடம் என்று கண்டு சொன்னவர், "அப்பாடல் கேள்விப்பட்டு பாடியது' என்பார். அவர் உள்ளம் தமிழின் தொன்மையை ஏற்க மறுக்கிறது. பாடலி (பாடலிபுத்திர நகரம்) எனக் கண்டு சொன்னவர், அந் நகரத்தின் காலத்தே பாடப்பட்டது அது என்பதை ஏற்கவில்லை. சுருங்கச் சொன்னால், அவர்தான் வையாபுரிப் பிள்ளை!

இன்னோரன்னவற்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நிறையும் குறையும் உள்ளதில் குறையைச் சுட்டிக் காட்டினாலே, "இவர்கள் தனித் தமிழார்வலர்கள்' என்ற சிமிழுக்குள் அடக்க முயன்ற காலம் மலையேறிவிட்டது. நடுவுநிலை என்றால் அது இரு சார்பினருக்கும் பொருந்தும்தானே!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: