அனேகமாக தேர்வுக்கும், தேர்வு முடிவுக்கும் காத்திருக்கும் பிள்ளைகளைப் போல் நமது வாசகர்களும் ஞாயிறு அன்று உதயமாகும் தமிழ் மணிக்காக எழுதுகோலோடும், ஏட்டோடும் காத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அந்த அளவிற்கு இலக்கியச் சான்றுகளோடு அளப்பரிய சொற்செல்வங்களை வாசகர்கள் கொண்டுவந்து கொட்டுகிறார்கள்.
கோவில்பாளையம் முனைவர் வே.குழந்தைசாமி, ""பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை'' என்ற திருவாசகக் கூற்றையும், ""மனம் பதைப்பு அறல் வேண்டும்'' என்ற திருப்புகழ் வரியையும் சுட்டிக்காட்டி "பதைப்பு' அல்லது "பதற்றம்' என்பது "டென்சன்' என்ற சொல்லுக்குச் சரியான சொல்லாக இருக்கலாம் என்கிறார். "ஹைப்பர் டென்சன்' என்ற சொல்லுக்குக் கம்ப இராமாயணத்தில் பயன்படுத்தப்படும் மனக்கொதிப்பு, என்ற சொல்லைச் சுட்டிக் காட்டுகிறார்.
தஞ்சாவூரிலிருந்து பா.ஜம்புலிங்கம், இரத்தத்தில் ஏற்படும் அழுத்தம் இரத்த அழுத்தம் (ஹைப்பர் டென்சன்) என்றும், சித்தத்தில் ஏற்படும் அழுத்தம் டென்சன் என்று குறிப்பிடப்படுவதால், "மன அழுத்தம்' அல்லது "மன இறுக்கம்' என்ற சொல் சரியாக இருக்கும் என எழுதியிருக்கிறார். அதே கருத்தை பொன்னமராவதியிலிருந்து அ.கருப்பையாவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
பவானிசாகரிலிருந்து பெரு.தமிழ்வேந்தன், "டென்சன்' என்ற சொல்லுக்கு உள்ளழுத்தம், உட்படு சினம், உள்ளழற்சி, உள்ளரவம், உள்ளிடல் போன்ற பல சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.
சென்னையிலிருந்து ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன் என்பவர், உணர்ச்சி மிகுதியின் காரணமாக மன நெருக்கடிக்கு ஆளாவதால் "மிகு உணர்ச்சி' என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்.
சென்னை கோட்டூரிலிருந்து ஜெயகிருஷ்ணன் என்பவர், "டென்சன்' என்ற சொல்லை "அழுத்தம்' என்று சொல்வது சரியாக இல்லை என்றும், "இறுக்கம்' அல்லது "மன இறுக்கம்' என்பதே முறையானதாக இருக்கும் என்கிறார்.
திருச்சியிலிருந்து தி.அன்பழகன், "டென்சன்' என்ற சொல்லுக்கு "கொந்தளிப்பு' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும், தமிழ் இலக்கணத்தின் வழி "கடல் கொந்தளிப்பு' என்பது இயல்பு வழக்காகும் என்றும், "ஊர் கொந்தளிப்பு' என்பது தகுதி வழக்காகும் என்றும் குறிப்பிடுகிறார்.
சென்னை வில்லிவாக்கத்திலிருந்து சோலை. கருப்பையா என்பவர், ஒரு கிராமத்திலோ அல்லது சமூகத்திலோ ஏற்படும் டென்சன் "பதட்டம்' என்ற சொல்லாலும், மனோநிலையில் ஏற்படும் டென்சன் "படபடப்பு' என்ற சொல்லாலும் உளவியல் சார்ந்த டென்சன் "மன இறுக்கம், மன அழுத்தம், கொந்தளிப்பு' ஆகிய சொற்களாலும் அழைக்கப்பட்டு ஏற்கனவே புழக்கத்திற்கு வந்துவிட்ட காரணத்தால், நாம் டென்சன் என்ற சொல்லுக்கு ஓர் ஒற்றைச் சொல்லைத் தேடி அலையத் தேவையில்லை என்கிறார்.
புலவர் அடியன்மணிவாசகன், டென்சன் என்ற சொல்லுக்கு அகரமுதலியில் "மனத்தாக்க அழுத்த உணர்வு' என்றும், "உள அழுத்த அலைவு' என்றும் பல பொருள்கள் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும், மனச்சோர்வு, மனக்களைப்பு, மனஉளைச்சல், மனவலி, மனப்போராட்டம் ஆகிய யாவும் மனதிற்கு சுமையாகி விடுவதால் டென்சன் என்ற சொல்லுக்கு "மனச்சுமை' என்ற பெயர் கொடுக்கலாம் என்கிறார். ""களைப்பின் வாராக் கையறவு உளவோ'' என்று பட்டினத்தார் கூறுவதால் "கையறவு' என்றும் சொல்லும் மனச்சுமை அழுத்தத்திற்குப் பொருந்தும் என்று சொல்லிவிட்டு, இறுதியில் மனச்சுமை, கையறவு, மன அழுத்தம், அகப்பிதுங்கல், அகவேக்காடு, பொறுக்க இயலாமை மனவுறுத்தம், மனச்செறுக்கம் ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார்.
கல்லூரிக் கல்வி மேனாள் இணை இயக்குநர் பேராசிரியர் திருக்குறள் க.பாஸ்கரன், அகரமுதலியிலிருந்து "இழுவிசை' மற்றும் "நெருக்கடி நிலை' ஆகிய சொற்களைச் சுட்டிக்காட்டி, அமைதியின்மை அல்லது இதய இறுக்கம் என்கிற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.
அம்பத்தூரிலிருந்து புலவர் உ.தேவதாசு, பொதுவாக டென்சன் என்ற சொல்லுக்கு மறுகுதல், அலமரல், பதைபதைப்பு, நிலைதிரிதல், ஊசலாட்டம் எனப் பல சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்றாலும், இத்தகைய நிலை தடுமாறலுக்கு அவரவர் மனநிலை காரணமாக அமைவதால், "மன உளைச்சல்' என்ற சொல் பொருந்தும் என்கிறார். அதற்குச் சான்றாக கம்ப இராமாயணத்திலிருந்து சீதையின் மனநிலையைக் குறிக்கும் ஒரு பாடலையும், இராமனின் மனநிலையைக் குறிக்கும் ஒரு பாடலையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
நங்கநல்லூரிலிருந்து டி.வி. கிருஷ்ணசாமி, மன இறுக்கம் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். ச. இராசதுரை "கொடுநோய்' என்பது பொருந்தும் என்று எழுதுகிறார்.
கிழவன் ஏரியிலிருந்து செ.சத்தியசீலன், திருவாசகத்தில் திருச்சதகப் பகுதியில் வருகின்ற ""மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து'' என்று வருவதை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார். எனவே, டென்சன் நேரத்தில் இருக்கும் மனநிலையைக் குறிக்க "பெருவிதிர்ப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார்.
புதுச்சேரியிலிருந்து நா.கிருஷ்ணவேலு, டென்சன் என்ற சொல்லுக்கு "கூடுதல் சக்தி' மற்றும் "வலியவிசை' (வலிமையான விசை) என்ற சொற்களையும், புதுச்சேரி தெ.முருகசாமி, டென்சன் என்ற சொல்லுக்கு "பரபரப்பு' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார்கள்.
பாடியிலிருந்து முனைவர் மு.அரங்கசுவாமி, டென்சன் என்ற சொல்லுக்கு தனிமனித அளவில் நிலையழிதல், தடுமாறுதல், மனக்கொதிப்பு, பதறுதல் ஆகிய சொற்களையும் சமூக அளவில் பதற்றம், இறுக்கம், கொந்தளிப்பு ஆகிய சொற்களையும் பயன்படுத்தலாம் என்று கூறி, சேக்கிழார் பெருமானுடைய அப்பூதியடிகள் நாயனார் புராணத்திலிருந்தும், திருவாசகத்திலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
ஆலந்தூர் புலவர் இரா. இராமமூர்த்தி, தொல்காப்பியம் மற்றும் நற்றிணை ஆகியவற்றிலிருந்து " கையறவு' என்ற சொல்லையும், சிவப்பிரகாசர் அருளிய நால்வர் நான்மணிமாலையிலிருந்து "விதிர்விதிர்ப்பு' என்ற சொல்லையும் சிலம்பு மற்றும் புறநானூற்றிலிருந்து "அடர்' என்ற சொல்லையும் பரிந்துரைக்கிறார். அவர் எழுதிய கடிதத்தில் ஒரு அற்புதமான புதுச்சொல்லை நற்றிணையிலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறார். அந்தச் சொல், "அஞர்' என்பதாகும். கடற்பயணத்தில் கலம் உடைந்து நீரில் வீழ்ந்தோர் மரப்பலகையைப் பற்றிக் கொள்வதை ""பலர் கொள் பலகைபோல வாங்க வாங்க நின்ற ஊங்கு அஞர் நிலையே'' என்று நற்றிணை விளக்குவதையும், புறநானூற்றில் 238-ஆவது பாடல் ""ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு'' என்று கூறியதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். இறுதியில் டென்சன் என்ற சொல்லுக்கு மருட்கை, ஆரஞர், விதுப்புறுதல், பதுறுதல், படர்மெலிதல் என்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார். இந்தக் கடிதத்தில் நம்மை மகிழ்விப்பது தற்போது பேச்சுவழக்கில் இல்லாத "அஞர்' மற்றும் "ஆரஞர்' என்னும் சொற்களாகும்.
இவையெல்லாம் பார்க்கும் போது, டென்சன் என்ற சொல்லுக்கு "கொதிப்பு' என்ற சொல் சரியாக வரும்போல் தெரிகிறது. காரணம், இரத்தத்தில் வரும் கொதிப்பு இரத்தக் கொதிப்பாகவும், சித்தத்தில் ஏற்படும் கொதிப்பு மனக்கொதிப்பாகவும் வழக்கத்திலும் புழக்கத்திலும் வந்துவிட்டதாகப் பலர் எழுதியிருக்கிறார்கள்.
நன்றி - தமிழ்மணி 01 12 12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக