11/06/2014

கோயிலா? கோவிலா? - தி. அன்பழகன்

கோவில்' என்னும் சொல்லை தமிழறிஞர்கள் உட்பட பலரும் பிழையாக "கோயில்' என்று எழுதி வருகிறார்கள். சில பத்திரிகைகளிலும் கோயில் என்றே வெளியாகின்றன. கோவில் என்பது சரியா?, கோயில் என்பது சரியா? என்பதற்கான விடை காண்பதற்கு, "உடம்படுமெய்ப் புணர்ச்சி' என்னும் தமிழ் இலக்கணம் குறித்த தெளிவு அவசியம்.

ஒரு சொல்லின் முன் பகுதியை "நிலைமொழி' என்றும், அதன்பின் பகுதியை "வருமொழி' என்றும் சொல்வர். நிலைமொழி ஈற்று என்பது அதன் கடைசி எழுத்தாகும். ஒரு சொல்லின் நிலைமொழி ஈற்றும், வருமொழி முதலும் இணைவதே "புணர்ச்சி' எனப்படும்.

ஒரு சொல்லின் நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் மட்டும் ஒன்றுடன் ஒன்று இணையாது. இதற்கு, நிலைமொழி ஈற்று உயிரும், வருமொழி முதல் உயிரும் இணைவதற்கு உடம்படுமெய் எனப்படும் "வ்' மற்றும், "ய்' என்னும் மெய்கள் தேவை. இவ்விரு உயிர்களுக்கு உருவம் கொடுக்க உடம்பாக இருந்து செயல்படுவதால் இவ்விரு மெய்களும் உடம்படுமெய் என்றானது.

வகர உடம்படுமெய்

அ, ஆ, உ, ஊ, ஓ என்னும் உயிரொலிகளுள் ஏதாவது ஒன்று நிலைமொழியின் கடைசியில் இருக்க, வருமொழி முதலில் பன்னிரண்டு உயிரெழுத்துகளுள் எது வந்தாலும் வகர மெய் தோன்றும்.

கோ+இல் என்பது புணர்ச்சியில் கோ+வ்+இல் என வகர உடம்படுமெய்யைப் (வ்) பெற்று கோவில் என்றாகும். (எ-டு) நா(நாக்கு) +இல் என்பது புணர்ச்சியில் நாயில் என மாறாது. உடம்படுமெய்யான "வ்' - வுடன் சேர்ந்து (நா+வ்+இல்) நாவில் என்றாகும். (எ.கா. மா+இலை = மாவிலை; திரு+ஆரூர் = திருவாரூர்) இருவகையாக எழுதும் சொற்களுள் (கோயில்-கோவில்; சுருசுருப்பு - சுறுசுறுப்பு; யாறு - ஆறு; எமன் - யமன்; ஐயர்-அய்யர்; பவளம் - பவழம்) இதுவும் (கோயில்-கோவில்) ஒன்று என்றாலும், இலக்கண விதிப்படி இனி "கோவில்' என்றே எழுதிப் பழகலாமே..!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: