07/01/2012

நேத்த்திக்கடன் - வாஸந்தி

நைந்துபோன செருப்பின் ஊடாக பாதையில் இருந்த சிறு கற்கள் உள்ளங்காலில் குத்தி வலியெடுத்தது. இன்னும் கொஞ்ச தூரம்தான் என்றான் ராமப்பா தனக்குள் சொல்லிக்கொள்வதுபோல. வெயில் பொசுக்கிற்று. சாதாரணமாக ராமநவமிக்குப் பிறகுதான் சூடு ஆரம்பிக்கும். யுகாதிகூட இன்னும் முடியவில்லை. அதற்குள் பெங்களூரில் இப்படி வெயில் பொசுக்கி அவன் தனது வாழ்நாளில் பார்த்ததில்லை. ஒரு கையில் கம்பு, ஒரு கையில் பை இருந்ததால் குடை கொண்டு வரமுடியவில்லை. குடையும் ஓட்டை. நேற்று பிரித்துப் பார்த்தபோது பெரிய பொத்தல் இருந்தது. எலி கடித்திருக்கும். அதற்கு வேறு எதுவும் திங்கக் கிடைத்திருக்காது பாவம். அவன் சிறுவனாக இருந்தபோது அம்மா மெனக்கெட்டு ஹோட்டலிலிருந்து ஒரு மசால் வடை வாங்கி வந்து எலிப் பொறியில் வைக்கச் சொல்வாள். அதில் பாதியை ஒடித்து அவனுக்குக் கொடுப்பாள். மறு பாதியைத் தின்று எலி சாமர்த்தியமாகத் தப்பிவிட்டதைக் கண்டு அம்மா அதிசயிப்பாள். கடைசியில் அந்தப் பாதியையும் அவளுக்குத் தெரியாமல் அவனே தின்றுவிடுவது கண்டுபிடித்து பங்காருசெட்டிக் கடையிலிருந்து பாஷாணம் வாங்கி வந்தாள் எலியைக் கொல்ல  `டேய் இது விஷம்டா தின்னுத் தொலைக்காதே' என்று திட்டினது ராமப்பாவுக்கு நினைவிருக்கிறது.

வயிறு லேசாக உறும ஆரம்பித்தது. அதற்கும் பதில் சொல்வதுபோல, `இரு, உறுமாதே' என்றான். இன்னிக்கு சாப்பாட்டுக்கு நேரமாயிடும். சில வருஷங்களாக தனது உறுப்புகளுடன் அல்லது அவன் வேலை செய்யும் தோட்டங்களின் செடிகளுடன் பேசுவது அவனுக்கு வழக்கமாகிப் போயிற்று. சக மனிதர்களுடன் பேசுவது கிட்டத்தட்ட நின்று போயிருந்தது. எப்படியும் அவர்கள் பேசுவது காதில் விழப்போவதில்லை. முன்பு அவர்கள் பேசும்போது அவர்களது உதடசைவைக் கொண்டு அவர்களின் வார்த்தைகளை அவன் யூகிப்பான். அதுகூட பல சமயங்களில் கோளாறாகிப் போகும். அவர்கள் கேலியுடன் சிரிப்பதைக் கண்டு கூச்சப்பட்டுக்கொண்டு நகர்வான். இப்போது, பேசுபவர்களின் முகங்களைப் பார்க்கக்கூட தயக்கமாகிவிட்டது. கண்பார்வை மங்கிவிட்டது. தவிர அவர்களது முகங்களில் தோன்றக்கூடிய பாவங்களை எதிர்கொள்ளும் வலு இப்போது முற்றிலும் குறைந்துவிட்டது. ராட்சஸ முகங்களாக மாறிவிட்டதுபோல கலக்கமேற்படுகிறது. எதற்கு வம்பு என்று ஒதுங்கவேண்டும் போல் இருக்கிறது.

யோசித்துப் பார்க்கும் பழக்கம் ராமப்பாவுக்கு இல்லை. யோசனை செய்து வாழ்ந்தோ, பேசியோ, வேலை செய்தோ பழக்கமில்லை. வாழ்க்கை அதுவாக நகர்ந்தது. காற்றின் வேகத்தோடு நகரும் சறுகு போல. அவன் வளர்ந்த காலத்தில் ஒரு வேளை மட்டுமே சாப்பிடக் கிடைத்தாலும் பிரத்தியேகமாகப் பிரச்சினைகள் இருந்ததாக நினைக்கவில்லை. இரண்டு வேளைச் சோறு சாப்பிடுபவர்கள் இருப்பதுகூட அவனுக்குத் தெரியாது. சிறுவனாக இருந்தபோது அவன் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று யாரும் யோசித்ததில்லை. அவனுடைய அப்பா கெங்கப்பாதான் வேலை செய்யும் தோட்டத்துக்கு அவன் நடக்க ஆரம்பித்தவுடனேயே அழைத்துப் போக ஆரம்பித்துவிட்டதாக அஜ்ஜி சொல்லிச் சிரிப்பாள். மண் புழுக்கள்தான் அவனது முதல் தோழர்கள். அதை வாயில் போட்டுக் கொள்ளக்கூடாது என்று அப்பா கண்டித்ததால் அது சாப்பிடும் விஷயம் இல்லை என்று அவனுக்குப் பேச்சு வருவதற்கு முன்பே புரிந்தது. அதை இரண்டாய் அறுத்தால் அது இரண்டு திசையில் தனியாகப் பயணிக்கும். குருவிகள், மைனாக்கள், காகங்கள், கிளிகள் மோப்பம் பிடித்து புழுக்களைக் கொத்த வந்தால் அவன் விரட்டுவான். மண்ணைப் பற்றி தெரிந்த அளவு மனிதர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர்கள் இருப்பது வேறு உலகம் போல் படுகிறது இப்பவும். கல்யாணம் செய்துகொள் என்று அம்மா சொன்னபோது செய்து கொண்டான். பிள்ளைகள் வேணும் என்றபோது பிள்ளைகள் பிறந்தார்கள். எப்படியோ குடும்பம் நடந்தது. எப்படியோ வளர்ந்தார்கள். படித்தார்கள். என்ன படிப்பு என்று அவனுக்குத் தெரியாது. எப்படி வாழ்க்கை நகர்ந்தது என்று புரியவில்லை. அவன் அதன் நகர்த்தலுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அவன் உறங்கும்போது யாரோ சக்கர உருளைகளை உருட்டுவதுபோல தள்ளியிருக்க வேண்டும். இப்போது திடீரென்று உருளைகள் நின்றுவிட்டன போல திகைப்பேற்படுகிறது. லக்கம்மா இருக்கும்வரை சரியாகத்தான் இருந்தது. இப்போது கண்ணைக் கட்டிவிட்டதுபோல ஒன்றும் புரியாத குழப்பம் அவனை ஆட்கொள்கிறது. லக்கம்மா போய் ஒரு வருஷம் ஆனதுகூட கிட்டத்தட்ட மறந்து போயிருந்தது.

அவன் வேலை பார்க்கும் கம்பெனியின் தோட்டத்தில் அவன் செடிக்கு நீர் பாய்ச்ச பைப்புகளைத் தயார் செய்யும்போது ஒரு இளைஞன் சிரித்துக்கொண்டே பலத்த குரலில் கேட்டான். `ராமப்பா, நாளை மறுநாள் யுகாதி வருது. ஹோளிகே கொண்டுவருவியா?'

அவன் போட்ட சத்தத்தில் உள்ளேயிருந்து இன்னும் நாலைந்துபேர் வந்து நின்றார்கள்.

ராமப்பா சிரித்துக்கொண்டே வழக்கம்போல் யோசிக்காமல் சொன்னான். ``கொணாந்தா போச்சு.''

எல்லாரும் சிரித்தார்கள். அவர்கள் சிரித்தது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது.

பிறகுதான் ஞாபகம் வந்தது. யுகாதிக்கு முந்தைய தினம் அவளுக்கு திதி வருகிறது. அதாவது நாளை. ``நல்ல வேளை சொன்னியே அப்பா, நீ நல்லா இருக்கணும்'' என்று முணுமுணுத்தபடி செடிகளுக்கு நீர் விட்டு முடிந்ததும், சம்பளம் கொடுக்கும் கேஷியரிடம் சென்று ``சம்பளம் அட்வான்ஸ் வேணும் சாமி'' என்றான். ``என் பெண்ஜாதிக்கு திதி வருது நாளைக்கு.''

அவன் வேலை முடிந்ததும் கணேஷன் குடிக்குச் (பிள்ளையார் கோயில்) சென்றான். சாஸ்திரிகளிடம் ``திவசம் செய்யணும் என் பெண்ஜாதிக்கு'' என்றான்.  அவர் என்னென்னவோ கேட்டார். என்ன நட்சத்திரம் எந்த திதியிலே போனா என்றார். சாவில் இத்தனை விஷயம் இருக்கும் என்று அவனுக்குத் தெரியாது. ``தெரியாது சாமி. யுகாதிக்கு முந்தின நாள் விடியற நேரத்திலே கண்மூடினா.'' சாஸ்திரிகள் நல்ல மனுஷன். பரிகாசமாகச் சிரிக்கவில்லை. ``நாளைக்கு வா பதினோரு மணிக்கு'' என்றார். கோயிலுக்குப் பின்புறம் ஒரு கிணத்தடியில் செய்யலாம் என்றார்.

நினைவு வந்தவனாகத் தோளில் தொங்கிய பையைத் திறந்து கைவிட்டுத் துழாவிப் பார்த்தான். சாஸ்திரிகள் சொன்ன சாமான்கள் எல்லாம் இருந்ததாகத்தான் தோன்றிற்று. அரிசி, வெல்லம், எள்ளு, தேங்காய், வெற்றிலைபாக்கு, மஞ்சள் குங்குமம். ஒரு முழம் பூ மட்டும் வாங்கவேண்டும். அது கோயிலுக்கு முன் கிடைக்கும். முழம் பத்து ரூபாய் என்பார்கள் விவஸ்தையில்லாமல். ஒரு முழம்தான் வாங்கமுடியும். சம்பளத்தின் முன்பணம் வாங்கியது இடுப்பில் இருந்தது. அது பூஜைக்கும், திதிக்கும், சாஸ்திரிகளுக்கும் வேண்டியிருக்கும். அடுத்த மாத சாப்பாட்டுக்கு இன்னும் இரண்டு வீட்டுத் தோட்ட வேலை சம்பளம் கிடைக்கும். வீட்டு வாடகைப் பணம் நிற்கும். அடுத்த மாசம் சேர்த்துத் தரேன்னு சொல்லணும்.

``எலேய் ராமப்பா, நீனு தொட்ட சௌவுக்காராகணோ!'' (நீ பெரிய பணக்காரன்டா!) அவன் சடக்கென்று திரும்பிப் பார்த்தான். `எஜமான்றே?' என்றான் மகிழ்ச்சியுடன். யாரும் எதிரில் இல்லை. சரியான மறதி. அவர் எப்பவோ செத்துப் போயாச்சே.

இப்பவும், நாற்பது வருஷம் கழித்தும், கம்பெனி மானேஜர் நஞ்சுண்டராவின் சிரிப்பு எதிரில் நின்றது.

அவன் முகமெல்லாம் சிரிப்பாக அலங்க மலங்க விழித்தபடி நின்றான். எஜமான் சொன்னதன் முழு அர்த்தமும் விளங்கவில்லை. கம்பெனி அவனுக்கு சேமிக்கும் ஓய்வூதிய நிதியிலிருந்து கொஞ்சம் பணத்தில் இரண்டு சின்ன நிலம் வாங்கப் போவதாகச் சொன்னபோது, பிறகு பணத்துக்கு என்ன செய்வது என்று குழப்பத்துடன் பார்த்தான்.

நிலம் தங்கம் போல என்று நஞ்சுண்டராவ் விளக்கினார். நீ ரிட்டையராகிற சமயத்திலே நூறு மடங்கு மதிப்பு ஏறும். அதுக்கும் மேலேயே. ஒரு நிலத்தை வித்தாலும் கடைசி காலத்திலெ சௌக்கியமா வாழலாம். இப்ப ரொம்ப மலிவாகக் கிடைக்கிறது, வாங்கவா?

ஒரு நிலத்தில் வீடு ஒன்று சின்னதாகக் கட்ட அவரே உதவினார். சம்பளப் பணத்தில் பிடித்துக்கொண்டதால் அதை ஈடுகட்ட மாலை வேளைகளில் இரண்டு வீடுகளில் தோட்ட வேலை செய்தான். பிள்ளைகள் படிப்புக்கு, சாப்பாட்டுக்கு. எதுவும் அவனுக்கு சிரமமாக இருக்கவில்லை. வீட்டைச் சுற்றி கடந்த பத்து ஆண்டுகளில் ஊரே மாறிவிட்டது. அவன் உடம்பும், உறுப்புகளும் மாறியதுபோல. ஏதேதோ கம்பெனிகள், வங்கிகள், கடைகள் வந்துவிட்டன. ஜே ஜே என்றிருந்தது எப்பவும். தெருவைத் தாண்டவே அரை மணி நேரம் பிடித்தது. எஜமான் இதையெல்லாம் பார்க்கவில்லை. திடீரென்று ஒரு நாள் வேலை செய்யும் நாற்காலியிலேயே அமர்ந்தபடி செத்துப் போனார். சின்ன வயசு. பகவானுக்கு என்ன அவசரமோ?

``ராமப்பா! ராமப்பா!''

உள்ளுணர்வின் உந்துதலில் அவன் திரும்பிப் பார்த்தான். யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை.

``ராமப்பா!''

அருகிலேயே யாரோ இருப்பதாகப் பட்டது. இடப்பக்க வீடு. மாலையில் அவன் வேலை செய்யும் இடம். வீட்டு எஜமானி சரோஜாம்மா நின்றிருந்தாள்.

என்னவோ கேட்டாள். ``இப்ப இல்லே, சாயந்திரம் வரேன்'' என்று அவன் சிரித்தபடி சொல்லிவிட்டு நகர்ந்தான்.

கோயில் பூஜாரி அவனைப் பார்த்ததும் `இரு' என்று சைகை காட்டி, குடுமி வைத்த ஒரு இளைஞனை அவனுடன் அனுப்பினார்.

``மந்திரம் எல்லாம் தெரியுமா?'' என்றான் ராமப்பா, சந்தேகத்துடன். இளைஞன் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்து ஏதோ சொன்னான்.

``சரிதான்'' என்று ராமப்பா சிரித்தான் புரிந்ததுபோல. பிறந்ததிலிருந்து இதுதான் என் பிழைப்பு என்று அவன் சொன்னதாகப்பட்டது. ``நா தோட்ட வேலை கத்துக்கிட்டமாதிரி'' என்றான்.

குடுமி இளைஞன் குழப்பத்துடன் அவனைப் பார்த்து ஏதும் சொல்லாமல் மண்டை ஆட்டினான். பாவம் செவிடு போலிருக்கு என்று ராமப்பா அனுதாபப்பட்டான். எத்தனைச் சின்ன வயசிலே கஷ்டம் பாரு என்று முணுமுணுத்துக்கொண்டான். ``ஏனு?'' என்றான் குடுமி கை ஜாடையாக.

ஆகாசத்தை நோக்கிக் கும்பிட்டு ராமப்பா கனிவுடன் சொன்னான் ``பகவந்தா (ஆண்டவன்) கொடுப்பதை ஏத்துக்கணும்''.

குடுமி மறுபடி தலையை அசைத்துக் காரியத்தில் இறங்கினான். கிணற்றடியில் மேடாக ஒரு சின்ன முற்றம் இருந்தது. அதில் ஒரு மனையைப் போட்டு அமர்ந்து ராமப்பா பையிலிருந்து எடுத்து வைத்த சாமான்களை வாழை இலைகளில் பரத்தினான். ஜாடையிலேயே கிணற்று நீர் எடுத்து கால் கழுவி வரச்சொன்னான். ராமப்பா முகம், கை கால் என்று விஸ்தாரமாக முழு உடம்பையும் கழுவிக் கொண்டு எதிரில் அமர்ந்தான். கிணற்றைக் குனிந்து பார்த்தபோது நீர் அதலபாதாளத்தில் இருப்பதாகத் தோன்றிற்று.

``பெண்ஜாதிப் பேர் என்ன?'' என்றான் குடுமி.

``ஆமாம், கிணத்திலே நீர் ஜாஸ்தி இல்ல, மழை வந்தா ஊறிடும்'' என்றான் ராமப்பா. குடுமி கழுத்தில் தாலி கட்டுவதுபோல ஜாடை காட்டி பேர் என்னா என்றான்.

அதை முதலிலேயே கேட்கக் கூடாதா என்று சிரித்து `லக்ஷ்மி' என்றான் ராமப்பா. `லக்கம்மான்னு கூப்பிடுவோம்.'

குடுமி மறுபடி ஜாடை காட்டி குழந்தைகள் உண்டா என்றான்.

இருக்காங்க. ரெண்டு மகன்கள் என்று விரல்களால் காண்பித்தான்.

பேரு?

கல்யாணம் ஆயிட்டது.

மறுபடி ஜாடையில் குடுமி கேட்க, வெங்கடேஷா, திம்மப்பா என்றான் ராமப்பா.

இளைஞன் வேறு ஒன்றும் கேட்கவில்லை. மஞ்சள் பொடியைப் பிசைந்து உருட்டி கோபுர வடிவில் சின்னதாக ஒரு தட்டில் வைத்தான். அதற்குக் குங்குமத்தை வைத்து ராமப்பா பத்து ரூபாய் கொடுத்து வாங்கி வந்திருந்த ஒரு முழம் பூவைச் சுற்றினான். மூக்கைப் பிடித்துக்கொண்டு கண்ணை மூடி அமர்ந்தான். ஏதோ மந்திரம் சொல்வது போல உதடுகள் அசையத் தொடங்கின. கிணற்றடியில் அவர்களைத் தவிர யாருமில்லை. சுற்றிலும் அடர்ந்த மரங்களும் செடிகளும் பசுமையாக இருந்தது. குளுமைபோன்ற பிரமையை ஏற்படுத்திற்று. வெயில் உச்சிக்கு நகர்ந்து கொண்டிருந்தது? பசியும் வெப்பமுமாக ராமப்பாவுக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. தூங்கக் கூடாது என்று நிமிர்ந்து உட்கார்ந்தான். மந்திரத்துக்கு நடுவில் லக்ஷ்மி என்று இளைஞன் சொல்வது போல் இருந்தது. மஞ்சள் உருண்டையின் மேல் அட்சதையையும் எள்ளையும் போட்டபடி அவன் சொன்ன மந்திரத்துக்கு வசிய சக்தி இருந்தது. இனம் புரியாத நெகிழ்ச்சி ஏற்பட்டது ராமப்பாவுக்கு. இந்த வருஷம் செய்யறேன். அடுத்த வருஷம் முடியுமோ இல்லையோ தாயீ என்றான் ஆகாசத்தை நோக்கி. மேலே வெளிறிப் போயிருந்த வானம் கண்ணைக் கூசிற்று. அவன் கண்களை மூடிக்கொண்டான்.

லக்கம்மாவின் சடலம் கிடத்தியிருந்தது. நேற்று இரவு கூட அவனுக்காக ராகி முத்தே செய்து கொடுத்தாள். ஐயோ போயிட்டாளே என்ற துக்கம் அடிவயிற்றில் சுருண்டு எழுந்தது. இனிமே என்ன செய்வேன் என்கிற பீதி சூழ்ந்தது. திடீரென்று அவன் ஒன்றுமில்லாமல் போனது போல் தோன்றிற்று. அவன் தோளை அக்கம்பக்கத்துக்காரர்கள் தொடும்போதெல்லாம், `என்னை விட்டுட்டுப் போயிட்டா!' என்று குறை சொல்வதுபோல ஆத்திரத்துடன் அழுகை வெளிப்பட்டது. இப்பவும் வந்தது. நீர் நிறைந்த கண்களை மேல்  துண்டால் துடைத்தபோது அந்தச் சின்னத்தட்டில் அந்த மஞ்சள் உருண்டை இருந்த இடத்தில் ஆச்சரியமாக லக்கம்மா உட்கார்ந்திருந்தாள். தேய்ந்துபோன உடம்பு. பெரிய குங்குமம். வெற்றிலைக் காவி படிந்த சிரிப்பு.

பிரவாகமாக ஒரு அலை புரண்டது உள்ளே. `என்னைப் பாக்க நீ வந்தியா?'  என்றான் அவன். சொல்லும்போது மறுபடி கண்ணில் நீர் படர்ந்தது `பாரு, என் கதியைப் பாரு' என்று மார்பில் அடித்துக்கொள்ளலாம்போல.

``காலையிலே ஏன் ஒண்ணும் சாப்பிடாமெ வந்தே?''

``எப்படிச் சாப்பிடறது? உனக்கு இன்னிக்குத் திதி செய்யணுமே?''

``நல்ல கூத்து'' என்று லக்கம்மா சிரித்தாள். ``அந்த ஆள்தான் சாப்பிடக்கூடாது. உனக்குப் பட்டினி கிடந்தா ஆகுமா? நீ சாப்பிட்டா ஒண்ணும் தப்பில்லே.''

``அப்படியா?'' என்றான் ராமப்பா. ``இனிமே சாப்பிட்டுட்டு வறேன். இல்ல இல்ல இனிமே உனக்குத் திதி பண்ண முடியாது லக்கம்மா. ரொம்ப செலவு. கையிலே காசு இல்லே. கடன் வாங்கிப் பழக்கமில்லே.''

``திதியுமாச்சு பொதியுமாச்சு. நா கேட்டேனா?''

ராமப்பாவுக்கு அழுகை வந்தது. `என்னவோ உன் நினைவு வந்தது. உனக்கு நா வேற என்ன செய்யமுடியும்?'

லக்கம்மா எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு அவன் ஒரு புடவைகூட வாங்கிக் கொடுத்ததில்லை என்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் அவளிடம் இரண்டு, மூன்று இருந்தன. அவன் வேலை பார்க்கும் வீடுகளில் அவனுக்கும், அவளுக்கும் பழைய உடுப்புகள் கிடைக்கும்.

``உனக்கு நா ஒரு புடவைகூட எடுத்துக் குடுத்ததில்லே.''

``நா கேட்டேனா?''

அது உண்மை என்று அவன் நினைத்துக்கொண்டான்.

``நீயும்தான் என்ன கேட்டே? பசிக்கிறது சாப்பாடு போடுன்னுகூட கேட்கத் தெரியாது. நா கூப்பிட்டுக் கொடுக்கணும்.''

அவன் சிரித்துக்கொண்டான். திடீரென்று கோபம் வந்தது. ``அதனாலேதான் அலுத்துப்போய் என்னை விட்டுட்டுப் போயிட்டியா? ஓட்டல் சாப்பாடு சாப்பிடவே முடியல்லே.''

வார்த்தைகள் வெளியே வரமுடியாமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டன. குமுறிக் குமுறி துக்கம் வந்தது. முதுகு குலுங்க இனி கட்டுப்படுத்தமுடியாததுபோல ஓவென்று அழ ஆரம்பித்தான். மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த இளைஞன் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். மந்திரத்தை நிறுத்தி ஜாடை காட்டி ``இன்னும் கொஞ்ச நேரம்தான் முடிந்துவிடும்'' என்றான். சின்ன காகிதத்தில் எழுதியிருந்த எதையோ பார்த்து என்னவோ சொல்லி அவசரம் அவசரமாக அட்சதையைப் போட ஆரம்பித்தான். கைகள் இரண்டையும் ஓசையுடன் தட்டி விரல்களை உருட்டி சொடுக்கித் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டான். ராமப்பா திகைப்புடன் கண்கள் விரிய பார்த்தான். உடம்பு பூராவும் பயம் கவ்வியது. ``யார் நீ? யாரப்பா நீனு?''

இப்போது குடுமி இளைஞனைக் காணோம். திம்மப்பா உட்கார்ந்திருந்தான். வெங்கடேஷாவும் அவனுடன் ஒன்றிக்கொண்டு பின்னால் நின்றான்.

அவனுக்கு நாக்கு உலர்ந்து போயிற்று. ``அம்மாவுக்கு திவசம். பண்ண வந்தேன்.''

அவர்கள் அசையாமல் நின்றார்கள்.

``சம்பளப்பணம் அட்வான்ஸ் வாங்கி பண்ணறேன். வேற காசில்லே சத்தியமா.''

அவர்கள் வளர்ந்துகொண்டே போனார்கள். ராட்சஸர்கள் போல. கைகளும், முகமும் விகாரமாய் பெரிதாயிற்று. பார்க்கவே அவனுக்குக் கூசிற்று. அவர்கள் கையில் அட்சதை வைத்திருப்பது போல் இருந்தது. நீங்களும் அம்மாவுக்கு திவசம் பண்ண வந்தீங்களா? பாசம் விட்டுப்போகுமா என்று நினைத்தபடி எழுந்திருக்கப் போனான். ஆச்சரியமாக அவன் ஊன்றி நடக்கும் கம்பு அவர்கள் கைக்குப் போய்விட்டது. வெங்கடேஷாவுடைய பையன் இப்படித்தான் கம்பை ஒளித்து வம்புக்கு இழுப்பான்.

``கம்பைக் கொடுடா, என்ன விளையாட்டு இத்தனை வயசுக்கு மேல?'' என்றான் சிரித்தபடி. கண்மூடி கண்திறப்பதற்குள் முதுகில் சுளீரென்று பட்டது. வலியில் மூளை சிதறிவிடும்போல் இருந்தது.

ஐயோ அடிக்காதே, அடிக்காதே, லக்கம்மா அடிக்கிறான், என்னை விடுங்கடா!

ராமப்பா இரு கரங்களாலும் மார்பையும் முகத்தையும் அவசரமாகப் பொத்திக்கொண்டான். வேண்டாம்! வேண்டாம்!

``பெரியவரே, உங்களுக்கு என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?. இப்ப முடிஞ்சுடும்.'' குடுமி நின்றபடி கேட்டான் எழுந்த வேகத்தில் குடுமி அவிழ்ந்து கரு கருவென்று சுருண்ட முடி தோளில் விரிந்தது. முகம் ராவணனாக மாறி இருந்தது.

`உனக்கே நல்லா இருக்கா, உன் தகப்பன்டா நா!'

`தகப்பனோ இல்லையோ? அப்ப இதிலே கையெழுத்துப் போடு. ஆளுக்கு ஒரு நிலம்னு'. குடுமி கையில் வைத்திருந்த சீட்டை நீட்டினான். கையில் ஒரு பேனாவைத் திணித்தான்.

`எஜமான் எனக்கு வாங்கிக் கொடுத்தது. ஏன் கையெழுத்துப் போடணும்?'

`நீ நாளைக்கே மண்டையைப் போடுவே. உனக்கெதுக்கு நிலம்? கையெழுத்துப்போட்டு எங்களுக்குக் குடு. அப்புறம் உன் வழிக்கு வரமாட்டோம்.'

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. மண்டைக்குள் ஒரு வண்டு குடைந்தது. போடாதே என்றது.

`அதெல்லாம் போடமாட்டேன்.'

ராவணன் தலையைச் சுற்றிக்கொண்டு வந்து முதுகில் கம்பு விழுந்தது. ஐயோ முதுகு போச்சு. சிமெண்ட் தரையில் உடம்பு சாய்ந்தது. உயிர் போகாதது எப்படி என்று புரியவில்லை. உதடு வீங்கி தொங்கிற்று.

குடுமி அவனை நிமிர்த்தி உட்கார்த்தினான். `போடு! போடு, இன்னும் வேணுமா?' வேண்டாம் கம்பை குடு. அது உடைஞ்சா என்னால நடக்க முடியாது.

போடு! போடு!

காகிதத்தில் ஒரே கிறுக்கலாக அவன் பெயர் ஓடிற்று. ராமப்பா.

மயக்கமாக வந்தது ராமப்பாவுக்கு. விடிந்தபோது உடம்பு வலித்தது. வழக்கம் போல கால்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தன. தனக்கு என்ன நேர்ந்தது என்று தெளிவாக விளங்கவில்லை. யாரும் அவனுடன் பேசவில்லை. எல்லாமே தேய்ந்து அழிந்து போன சித்திரமாக நினைவில் நிழலாடியது. யாருக்கோ நிகழ்ந்ததைப் பார்ப்பது போல இருந்தது.

தோட்டத்து வேலை முடிந்து ஒரு மாலை வீடு திரும்பியபோது வீட்டில் யாரோ வாடகைக்கு அமர்ந்திருந்தார்கள். திம்மப்பாவும் வெங்கடேஷாவும் வேறு எங்கோ குடிபெயர்ந்துவிட்டார்கள் என்றான் பக்கத்துவீட்டுக்காரன். உனக்குத் தெரியாதா? என்றான். எங்கே போவது, எங்கே சாப்பிடுவது என்று புரியாமல் அலைந்து கால் கடுத்து பட்டினியோடு இரவு சரோஜாம்மாவின் வீட்டின் வராந்தாவில் குளிர் நடுங்க கழிக்க நேர்ந்தது? காலை சரோஜாம்மா அவனை கவனித்து காபி கொடுத்து அனுப்பினாள். மறு நாள் முழுவதும் தேடி அலைந்து ஒரு ரூம் வாடகைக்குக் கிடைத்தது. ஆயிரம் ரூபாய் வாடகைக்கு. ஆயிரம் ரூபாய்! நம்பமுடியுதா லக்கம்மா?

ராமப்பாவுக்கு மூச்சுத் திணறிற்று. ஒரேயடியாக உடம்பு ஓய்ந்து போயிற்று.

உனக்கு இதெல்லாம் சொல்ல வேண்டாம்னுதான் நினைச்சேன்...

லக்கம்மா பொம்மைபோல அமர்ந்திருந்தாள். உச்சி வெயிலில் மஞ்ச மசேல் என்று ஒளிர்ந்தாள்.

குடுமி அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.  இவன்தான் தன்னை அடித்தவன் என்று ராமப்பாவுக்கு நிச்சயமாகத் தோன்றிற்று.

பாரு இந்த ஆள் என் முதுகை எப்படி அடிச்சிருக்கான் பாரு. உனக்கு திவசம் பண்ணணும்னுதான் சொன்னேன். அது தப்பா? தட்சணைக்குப் பணம் வெச்சிருக்கேன். சும்மா ஒண்ணும் பண்ணச் சொல்லல்லே.

லக்கம்மா பதிலே சொல்லவில்லை. அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுருங்கிப் போய் பிசைந்து வைத்த மஞ்சள் கட்டியாகிப் போனாள்.

இளைஞன் அவனுக்கு ஜாடை காட்டி அழைத்தான். வெற்றிலை வைத்திருந்த தட்டில் சிறிது நீர் விடச் சொன்னான். `தட்சணே' என்று சைகை காட்டினான். மஞ்சளாக அமர்ந்திருந்த லக்கம்மாவைப் பார்த்து ராமப்பா அர்த்தத்துடன் சிரித்தான். இடுப்பில் முடிந்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை எண்ணாமல் கொடுத்தான். குடுமி திடுக்கிட்டு ஒரு நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு, `இது போதும்' என்றான்.

`ஏன், அப்புறம் என்னை அடிக்கவா? நீயே வெச்சுக்கோ' என்று எழுந்தான் ராமப்பா.

இளைஞன் உதட்டைப் பிதுக்கி தலையை அசைத்தான். தட்டில் இருந்த மஞ்சள் உருண்டை அட்சதை எல்லாவற்றையும் கிணற்றில் போட்டுவிட்டுப் போ என்றான் கையை அசைத்து.

கிணத்திலேயா?

ஆமாம் ஆத்தங்கரைக்கு பதிலா கிணறு.

இளைஞன் `எனக்கு வேற இடத்துக்குப் போகணும்' என்று கிளம்பினான்.

ராமப்பா சற்று நேரம் அந்த மஞ்சள் உருண்டையைப் பார்த்தபடி இருந்தான். அது லக்கம்மா என்பது அந்தக் குடுமிக்குத் தெரியாது. ராமப்பா மெல்ல அதை சர்வ ஜாக்கிரதையாகக் கையில் எடுத்தான். கல்யாணமான புதிதில் லக்கம்மா இப்படித்தான் இருப்பாள். மிருதுவாக பொன்னிறமாக. கிணற்றுக்குக் கம்பை ஊன்றியபடி நடந்தான். கிணற்றடியில் கம்பை சாய்த்து கைத்தாங்கலாகப் பிடித்து லக்கம்மாவை அணைத்தபடி சுவரில் ஏறி சடாரென்று அதல பாதாளத்தை நோக்கிப் பயணிக்கும்போது ஆனந்தமாக இருந்தது.

`லக்கம்மா பசிக்கிறது' என்றான்.

லக்கம்மா சிரித்தாள். அட! உனக்கே கேக்கணும்னு தோணியிருக்கா? வா! என்றாள். பாதாள இருளில் அவளது மஞ்சள் முகத்தை தேடியபடி அவன் விரைந்தான்.

நன்றி – தீராநதி

1 கருத்து:

bharathiyinputhumaipen சொன்னது…

mika azhakana sirukathai. padikka pakirntha singamanikku nandrikal.