ஜன்னல் வழியே நுழைந்த இளவெயில் வசீகரமானதாக தோன்றியது. இளமஞ்சள் நிறத்தில் மேலெழும்பும் சூரியனும் கடந்து செல்லும் மரங்களும் இவளுக்குள் புதுவித உற்சாகத்தை தந்தன.முதல் முறையாக பெருநகரத்திற்குள் நுழைகிறோம் என்கிற சந்தோஷத்துடன் தொலைதூர வானை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் . இவள் எண்ணம் முழுவதும் புதிதாய் கிடைத்திருக்கும் வேலையும் கைநிறைய சம்பாதிக்கப்போகும் புதிய வாழ்க்கையையும் பற்றியதாகவே இருந்தது.அந்தப் பெருநகரத்திற்குள் ரயில் நுழைந்துவிட்டது என்பதற்கு சாட்சியாக உயர்ந்த கட்டிடங்களும் அகண்ட சாலைகளும் தென்பட துவங்கின. பி.காம் முதல் வகுப்பில் தேறியதும் சென்னையிலிருக்கும் கால்சென்டரில் வேலை கிடைத்ததும் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே எண்ணினாள்.எதைச் செய்தாலும் குற்றம் சொல்லும் அம்மாவிடமிருந்து வெகு தொலைவுக்கு வந்துவிட்டது நிம்மதியை தந்தது.
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதுதான் விஜய் அறிமுகமானான். துடுக்குத்தனத்துடன் சுற்றித்திரியும் இவளுக்கு ஆழ்ந்த அமைதியுடன் வலம் வரும் விஜய் மீது முதலில் ஈர்ப்பெதுவும் ஏற்பட்டுவிடவில்லை. முதல் இரண்டு வருட படிப்பை வேறு ஒரு கல்லூரியில் முடித்துவிட்டு ஏதோவொரு காரணத்தினால் இவள் படிக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவனாய் நுழைந்தான். ரெளடிப்பெண் என்று பெயர் பெற்றிருந்தவள் அவனது மெளனத்தை பரிகசித்துக்கொண்டே இருந்தாள். எதற்கும் சிறியதொரு புன்னகை மட்டுமே அவனது பதிலாய் இருந்தது. எப்போது அவன் இவளது உலகிற்குள் வந்தானென்றே இவளுக்கு தெரியவில்லை.பூனைபோல் மனதிற்குள் மெல்ல அடியெடுத்து வைத்தான் விஜய்.அவனது மென்மையான பேச்சை கேட்காவிட்டால் இதயம் நின்றுவிடுவதாக இவள் சொன்னபோது முதலில் அதிர்ந்தவன் பிறகு இவளை நேசிக்க ஆரம்பித்தான். படபடவென்று ஏதாவது பேசிக்கொண்டிருக்கும் இவளை இமைக்காமல் ரசித்துக்கொண்டிருப்பான்.
மூன்றாம் ஆண்டு முடியும் தருவாயில் இவளுக்கு அந்த சென்னை வேலை கிடைத்தது. சந்தோஷத்தில் கல்லூரி முழுவதும் சுற்றி வந்தாள்.கேண்டீன் நடத்தும் கிருஷ்ணவேனி அக்காவை கட்டிக்கொண்டு முத்தமிட்டாள். ஆங்கில பேராசிரியர் ஸ்டெல்லாவின் கரங்களை இறுக பற்றிக்கொண்டு சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டாள். கல்லூரிக்கு பின்னாலிருக்கும் மரத்தடியில் உட்கார்ந்திருந்தான் விஜய். ஒடிச்சென்று அவனிடம் விஷயத்தை சொன்னபோது அவன் எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாது கண்டு கோபமுற்று திரும்பிக்கொண்டாள்.
“உனக்கு எப்படியும் வேலை கிடைச்சிடும்னு தெரியும்மா..ஆனா நீ சென்னைக்கு போயிட்டா என்னால உன் பிரிவை தாங்க முடியாதும்மா..” சன்னமான குரலில் விஜய் சொன்னபோது அவன் கைகளை பற்றிக்கொண்டு தொலைவிலிருந்தாலும் தினமும் பேசுவதாக உறுதி அளித்தாள். திரையில் மட்டுமே ரசித்த சென்னையின் கம்பீரமும்,கடற்கரையுன் குளிர்ந்த காற்றும்,இரவுச்சாலைகளின் அழகும் இவளது இரவுகளை தின்ன ஆரம்பித்தன.
ரயில் சென்னை வந்தடைந்தது.
----o0o------
ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோவில் விடுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போதுதான் சென்னையின் பிரம்மாண்டத்தை காண முடிந்தது. சாலைகளில் நகரும் வெளிநாட்டு கார்கள்,நவீன உடையணிந்து திரியும் யுவதிகள்,அகன்ற தோள்களுடன் பைக்கில் விரையும் இளைஞர்கள், பெரும் ஜனத்திரள் இவற்றோடு தேகம் துளைக்கும் வெயில். தான் திரையில் மட்டுமே ரசித்த நடிகர்களும் இதே வழியாகத்தானே போய்வருவார்கள் என்ற எண்ணம் தோன்றியவுடன் பெருமையாக உணர்ந்தாள். சிறகு விரித்து முதல் முறையாக பறக்கும் குஞ்சுப்பறவையை தன் நச்சுக்கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தது அப்பெரு நகரம்.
தனக்குப் பிடித்த ஆரஞ்சு நிற சுடிதாரை அணிந்துகொண்டாள்.விடுதியில் தனியறை என்பதால் எவ்வித வெட்கமுமின்றி பிடித்த பாடலொன்றை பாடியபடி உடைமாற்றிக்கொண்டிருந்தாள். கண்ணாடி அவளது எழிலை ரசித்துக்கொண்டிருந்தது. இன்றுதான் தன் வாழ்விலே மிகச்சிறந்த நாளென்று சொல்லிக்கொண்டு அலுவலகம் கிளம்பினாள்.
---o0o-----
கொஞ்ச நாட்களிலேயே அலுவலக உலகம் வேறென்று புரிந்துவிட்டது.இரவு நேர வேலை என்பது இத்தனை சுதந்திரத்தை தருமா? தன்னுடன் வேலை பார்க்கும் பெண்களில் பலர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாய் இருந்ததும் ஆண்பெண் பேதமின்றி கைகோர்த்து கொள்வதும் அடிக்கடி கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்துவதும் இவளுக்குள் ஒருவித பயம்கலந்த கிறக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒருவருடம் பழகிய விஜய்யின் விரல்கூட தன்மீது படாதபோது இங்கே தொடுதல் அதன் அர்த்தத்தை இழந்துவிட்டதாகவே தோன்றியது.இவளுடைய டீம்மேட் கிஷோரின் ஆங்கில உச்சரிப்பும் அவன் பேசும்போதும் நெற்றியில் நடனமிடும் முடிக்கற்றைகளும் அடிக்கடி அவன் மீது பார்வையை பதிய வைத்தது.
இந்த வாரத்தின் இறுதிநாட்களில் எங்கே செல்வது எப்படி செலவிடுவது என்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்தபோது தன்னுடன் வெளியே செல்ல யாருமில்லையே என்கிற ஏக்கம் இவளை சூழ்ந்துகொண்டு வாட்டியது. சென்னையை சுற்றிக்காண்பிக்கிறேன் வருகிறாயா என்று கிஷோர் கேட்டவுடன் சந்தோஷமும் தயக்கமும் ஒருசேர இவளை உலுக்கியது. வரவில்லை என்று சொல்லிவிட்டு வீடுவந்தாள். வீட்டில் தனித்திருக்க பிடிக்காமல் அருகிலிருக்கும் கடற்கரை நோக்கி நடந்தாள்.
யாருமற்ற அதிகாலை கடற்கரை அழகான ஓவியம்போல் சத்தமின்றி இருந்தது. பல வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் கடலை பார்க்கிறாள். ஓடிச்சென்று அலைகளில் கால்நனைத்து நின்றபோது கிஷோரும் உடன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாள். அலைபேசி சிணுங்கியது கிஷோர் அழைத்திருந்தான். அடுத்த அரைமணி நேரத்தில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான்.இறுகிய ஜீன்ஸும் ஆண்மை தெறிக்கும் கரங்களின் வலிமையை பறைசாற்றும் டி-சர்ட்டுமாய் அவன் நடந்துவந்த அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. அன்று முழுவதும் அவனுடன் பைக்கில் சுற்றி அலைந்தாள். விடுதிக்கு அருகே நிற்கும் பூவரச மரத்தடியில் அவளை இறக்கிவிட்டு புறங்கையில் முத்தமிட்டு குட்நைட் சொல்லி பறந்தான் கிஷோர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவனிட்ட முத்தம் உடலெங்கும் பரவி இவளுக்குள் ஏதேதோ செய்தது. விடுதிக்கு திரும்பியவள் பொத்தென்று படுக்கையில் வீழ்ந்தாள். அவனது அருகாமை தந்த கிளர்ச்சியும் பெருவெளிச்சாலையில் ஒலிவேகத்தில் அவனது தோள்களை பற்றிக்கொண்டு பயணித்ததும் எப்போதும் கிடைக்க வேண்டிக்கொண்டாள்.விஜய்யின் அலைபேசி அழைப்புகளை போலவே அவனது காதலையும் நிராகரிக்க ஆரம்பித்தாள்.
---o0o-----
ஒரு வருட நகர வாழ்க்கை இவ்வளவு விரைவாக நகருமென்று அவள் நினைத்திருக்கவில்லை. கிஷோரின் திருமணத்திற்கு உடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் இவளும் போய்வந்தாள். சுற்றுலா சென்றபோது கிடைத்த தனிமையில் தன்னை தீண்ட கிஷோர் நெருங்கி வந்தநிமிடம் நினைவுக்கு வந்தது. இதுவரை எந்தப் பெண்ணையும் தொட்டதில்லையென்று அவன் சத்தியம் செய்ததையும் எண்ணி சிரித்துக்கொண்டாள். மணக்கோலதில் இவளைக் கண்டவன் ஒன்றுமே நடந்துவிடாத பாவனையுடன் நின்றிருந்தது இவளுக்கு பிடித்திருந்தது.
---o0o-----
வேறொரு வேலை கிடைத்தது. சம்பளம் அதிகமென்பதால் உடனே அந்த வேலையில் சேர்ந்தாள். அங்குதான் சுதாகர் அறிமுகமானான். இவளைக் கண்டநாள் முதல் மந்திரித்துவிட்டவனாய் திரிந்தான். இவளது நட்பை பெற அவன் செய்த பிரயத்தனங்களை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டே ஒன்றும் அறியாதவள் போல் நடித்தாள். சிலநாட்களில் அவனை தன்னுலகிற்குள் அனுமதித்தபோது அரசியை தொடரும் அடிமையாக அவன் மாறிப்போயிருந்தான்.அது இவளுக்கு அதிகம் பிடித்திருந்தது.எதற்கெடுத்தாலும் தன்னிடம் அவன் கெஞ்சுவது அளவில்லாத மகிழ்ச்சியை தந்தது. விலையுயர்ந்த அலைபேசியொன்றை அவளுக்கு பரிசாக தந்தான் சுதாகர்.தன் விழியசைப்புக்கு உயிரை தர அவன் தயார்நிலையில் இருப்பது குரூர ஆனந்தத்தை இவள் மனதெங்கும் தெளித்தது.
சுதாகரின் அறைக்கு சென்றவள் மறுநாள் காலை தன் விடுதிக்கு புறப்பட்டு சென்றபோது நடந்தது அனைத்தும் நிஜம்தானா என்கிற பிரக்ஞையின்றி வானம் பார்த்து கிடந்தான் சுதாகர்.நூறு குறுஞ்செய்திகளில் நன்றி என்றனுப்பினான். விடுதி அறைக்குள் நுழைந்தவள் கண்ணாடி முன் நின்று சிரித்துக்கொண்டே அவனை நிராகரிக்க முடிவெடுத்தாள். காரணம் சொல்லாமல் நிராகரிப்பதில் சுதந்திரமானதொரு சந்தோஷம் இருப்பதாக நினைத்தாள். தான் வேலை பார்க்கும் கால்செண்டர் கலாச்சாரம் அவளுக்கு மிகப்பிடித்தமாக மாறியதில் தவறென்று தெரிந்தும் தவறுகளால் தான் நிரம்பியிருப்பதில் சந்தோஷம் கொண்டாள்.
உடைகளை களைந்துவிட்டு மெல்லியதொரு உடைக்குள் நுழைந்துகொண்டு சுதாகர் கொடுத்த அலைபேசியிலிருந்து கிருஷ்ணாவுடன் பேச ஆரம்பித்தாள். அறை ஜன்னல் வழியே சர்ப்பமென உள்நுழைந்த நகர வெயில் தன் மாற்றுகலாச்சார விஷத்தை இவள் மீது தெளித்த திருப்தியில் ஊர்ந்துகொண்டிருந்தது.
நன்றி - நிலா ரசிகன். வம்சி சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக