பல்கலைக்கழக நூலகத்தை விட்டு வெளியே வந்த பொழுது கார்கள் நிறுத்துமிடத்தில் அவளுக்காகக் காத்திருந்தான் சிவராசா.
``என்ன லேட்டாக வருகிறாய்...?''
``இன்னும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வர நினைத்தேன். நீ காத்திருப்பாயென்று தான் வந்தேன்!''
``காத்திருப்பது கடினமானது. இதைப் பலமுறை உன்னிடம் சொல்லியிருக்கிறேன்.''
``இப்பொழுது அது கடினமாகத்தான் இருக்கும். பிறகு அதுவே வராமல் இருந்தால் நல்லது என்று நினைக்கத் தோன்றும்!''
``சரி, சரி வா... உன்னை வீட்டில் விட்டுச் செல்கிறேன்.''
``இவ்வளவு சீக்கிரம் வீடு திரும்ப வேண்டாம் சிவா...! எங்கேயாவது பீஸா கடைக்குப் போவோம்! வயிறும் பசிக்கிறது. வீட்டுக்குச் சீக்கிரம் போவதும் சரியாக வராது.''
``என்ன யோகா, ஆச்சரியமாக இருக்கிறது? வீடு வீடுன்னு பரபரப்பே. இப்படி பேசுறீயே. ரெண்டு வாரமா வீட்டுக்கு லேட்டாவே போறீயே''
``அதெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம். முதல்லெ காரை எடு. `பீஸா ஹட்'டுக்குப் போவோம்.''
சிவராசா காரைத் திறந்து விட்டான். யோகலட்சுமி உள்ளே அமர்ந்து புத்தகப் பையை மடியில் வைத்துக் கொண்டாள்.
அவள் முகத்தையே திரும்பத் திரும்பப் பார்த்தான் சிவா.
கண்களின் அடியில் கருவளையம். அவள் சரியாகத் தூங்கியிருக்க மாட்டாள் என்பதைக் காட்டியது.
``வீட்டில் அதிக நேரம் கண்விழித்துப் படிக்கிறாயா?''
``படிப்பதற்கு மட்டும் கண் விழிப்பது நல்லதுதான் சிவா. ஆனால், மனிதர்களுக்கு வேறு விஷயங்களும் தூக்கத்தைக் கெடுத்து விடுகிறது!''
அவளுக்கு ஏதோ பிரச்சினை என்பதை சிவராசா அறிந்து கொண்டான். இப்பொழுது அதுபற்றி மேலே பேசாமல் இருப்பது நல்லதாகப்பட்டது அவனுக்கு.
`பீஸா ஹட்' முன் காரை நிறுத்தியபொழுது அவளின் விரலில் இருந்த மோதிரம் இல்லாமல் மோதிரம் அணிந்த இடம் வெள்ளை வளையமாகத் தெரிந்தது.
``உன் மோதிரம் எங்கே?''
``மோதிரம் அணிவதற்கு மட்டுமே விரல்கள் படைக்கப்படவில்லை சிவா!''
அதற்கு மேல் பேசாமல் பீஸா ஹட்டின் கதவுகளைத் திறந்து உள்ளே ஆர்டர் கொடுக்கும் இடத்தை அடைந்தான் சிவராசா.
ஓர் ஒதுக்குப்புறமான மேடை மேல் அமர்ந்து வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் யோகலட்சுமி.
குழந்தையொன்று காரிலிருந்து இறங்கி வேகமாகச் சாலையைக் கடக்க ஓடியது. அதன் தாய் ஓடிவந்து குழந்தையின் கையைப் பிடித்து சாலையைக் கடந்தாள்.
காரிலிருந்து இறங்கிய அக்குழந்தையின் தந்தை ``இப்படியா ஓடுவது'' எனக் கேட்டு செல்லமாக கன்னத்தில் தட்டினான். தகப்பனை நோக்கி கையை ஓங்கியது அக்குழந்தை. தாய் கையைப் பற்றிக் கொண்டு அதன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
குழந்தை சடாரென்று தந்தையின் தோள்களைப் பற்றிக்கொண்டு அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமழை பொழிந்தது.
தூரத்தில் ஒருவன் அழுக்கான கிழிந்த உடையுடன் வானத்தைப் பார்த்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். ஒருவேளை கடவுளுடன் அவனுக்கு சண்டையாக இருக்கலாம்.
யாருக்குத்தான் சண்டையில்லை. இதோ இந்தப் பைத்தியக்காரனுக்கும் கடவுளுடன் சண்டை இருக்கிறது. இலங்கையில் சண்டை, ஈராக்கில் சண்டை, பாலஸ்தீனத்தில் சண்டை, ஆப்கானிஸ்தானில் சண்டை... ஏன் தன் வீட்டிலும் அன்றாடம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை! சண்டைகள் இல்லாத உலகம் எப்பொழுது உருவாகும்?
யோகலட்சுமி அதற்கு மேல் சண்டைகளில் கவனம் செலுத்த விரும்பவில்லை.
சிவராசாவைத் திரும்பிப் பார்த்தாள். அவன் உணவுக்கான பணம் கொடுக்க பர்சைத் திறந்து கொண்டிருந்தான். கட்டுக் கட்டாக நூறு வெள்ளி நோட்டுகள் வெளியே வர துடிப்பது போல் பிதுங்கி நின்றன.
யோகலட்சுமி நினைத்தாள். சிலருக்கு பர்ஸ் கொள்ளாத பணம், பலருக்கு பர்சே இல்லாத நிலை!
அவன் பணக்கார வீட்டுப் பிள்ளை. அவன் தந்தை பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்தார். உலகம் முழுதும் சுற்றிக்கொண்டே இருப்பார்.
சிவாவுக்கு ஓர் அக்காள், ஓர் அண்ணன், அக்காள் டாக்டர், அண்ணன் வர்த்தகத் துறையில் எம்.பி.ஏ. பட்டதாரி.
சிவராசா இப்பொழுது பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.
யோகலட்சுமி தன்னைப் பற்றி நினைத்தாள். சட்டத் துறையில் முதலாம் ஆண்டில் இப்பொழுதுதான் சேர்ந்திருக்கிறாள். அம்மா பெரிய மருத்துவமனையில் தலைமைத் தாதி. அப்பா ஒரு கட்டுமான நிறுவனத்தில் துணை கண்காணிப்பாளராக இருக்கிறார். அண்ணன் தனியார் கல்லூரியில் பொறியியல் படிக்கிறான். தம்பி மூன்றாம் பாரத்தில் படிக்கிறான்.
பீஸாவுடன் கோக்கும் கொண்டு வந்து மேசையில் வைத்தான் சிவராசா.
அவளிடம் `பீஸாவை சாப்பிடு' என்றான். அவள் சுவாரசியமில்லாமல் ஏதோ நினைவில் ஒரு சிறிய துண்டா எடுத்துச் சாப்பிட்டாள்.
``என்ன பசிக்குதுன்னு சொன்னே... இப்படி மெதுவா சாப்பிடுறே?''
``மெதுவா சாப்பிடுவோமே. என்ன அவசரம்?''
``ஆறிப் போயிடும்!''
``எதுவும் ஆறிவிடுமென்றுதான் நினைக்கிறோம். ஆனால், சீக்கிரத்தில் ஆறுவதில்லை.''
``உனக்கு என்னா ஆச்சு?''
``ஒன்னுமில்லை சாப்பிடு.''
அதன் பிறகு இருவரும் பேசவில்லை.
காரில் ஏறி வீட்டில் அவளை விடும் வரையில் யோகலட்சுமி ஏதோ யோசனையில் இருந்தாள்.
வீட்டிற்குள் போனவள் தன் அறையைத் திறந்து புத்தகங்களை அலமாரியில் தூக்கிப் போட்டாள். அவை மூலைக்கொன்றாக எதிர் எதிர் ராணுவ வீரர்கள் போல் முறைத்துக் கொண்டு போய் விழுந்தன.
படுக்கையில் கால்களைக் கட்டிக் கொண்டு தலையை அதில் புதைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
எதிர்ப்புற அறையில் அவளின் தாயும் தந்தையும் உரத்த குரலில் சண்டை இட்டுக் கொள்வது நன்றாகக் கேட்டது.
யோகலட்சுமிக்கு ஒரு சந்தேகம். தான் வந்ததும் சண்டை ஆரம்பித்ததா? இல்லை வருவதற்கு முன்பே அது நடந்து கொண்டிருந்ததா?
கடந்த மூன்று மாதமாகத்தான் இது நடக்கிறது. அதுவும் சிவராசா தன்னை காரில் வந்து விடுவதிலிருந்து இது ஆரம்பித்தது என்று அவள் நினைத்தாள்.
தம்பி நித்தியானந்தன் வரவேற்பரையில் கணினியை உருட்டிக் கொண்டிருந்தான். அண்ணன் வர நேரமாகும்.
வீட்டு இந்தோனேசிய வேலைக்காரி இப்படியான சமயங்களில் முன்வாசல் பக்கம் வருவதே இல்லை. துவைத்த துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருப்பாள் அல்லது `அயன்' செய்து கொண்டிருப்பாள்.
யோகலட்சுமிக்கு எரிச்சலாக இருந்தது. அப்பா - அம்மா சண்டை இவள் விளக்கை அணைத்து விட்டுப் படுக்கும் வரைக்கும் நீடித்தது.
தலையில் ஒரு தலையணையை எடுத்து அழுத்தி படுத்துக் கொண்டாள்.
வீட்டில் ஒருவரோடு ஒருவர் பேசி பல நாட்களாகி விட்டன.
யோகலட்சுமிக்கு நிம்மதி என்பதே இல்லாமலாகி விட்டது. இரவில் வெகு நேரம் பாடங்களைப் படிக்கும் பழக்கம் நின்று விட்டது.
வீட்டில் ஏன் இந்த திடீர் மாற்றம்?
காலையில் எதுவும் நடக்காதது போல் அப்பாவும் அம்மாவும் வேலைக்குக் கிளம்பி விடுகிறார்கள்.
அன்பான தம்பதிகளாகத்தானே இருந்தார்கள்.
இவர்களுக்கு நடந்த திருமணம் இரு வீட்டாரின் சம்மதம் இன்றியே நடந்ததை அம்மா பலமுறை இவளிடம் சொல்லியுள்ளாள்.
அண்ணன் மேற்படிப்பிற்குப் போனது இப்பொழுது தான் பல்கலைக்கழகம் சென்றது, தம்பி பிறந்தது... இந்த எந்த நிகழ்ச்சிக்கும் அப்பா, அம்மாவின் பெற்றோர்கள் வந்ததேயில்லை. இவர்களும் அவர்களின் நல்லது கெட்டதுக்குப் போனதில்லை.
பெரும் பணமும் நகைகளும் ஒரு வீடும் தந்து தங்களது மருமகனாக ஆக்கிக் கொள்ள வசதியானவர்கள் முன்வந்தும் அப்பா பிடிவாதமாக மறுத்து விட்டார். இது அப்பாவின் பெற்றோர்களை ஏமாற்றமடைய வைத்தது போலும்.
ஸ்காட் ரோடு கந்தசாமி கோயிலில் நடந்த ஒரு சங்கீத நிகழ்ச்சியில் அம்மாவின் பாட்டைக் கேட்டு அப்பாவுக்குக் காதல் பிறந்ததாம்.
அம்மா பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்தவளில்லை. ரயில்வேயில் அவளின் அப்பா டிக்கெட் செக்கராக இருந்தவர். அம்மா ஆங்கிலப்பள்ளி ஆசிரியை.
இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்குத் தடையாக இருந்தார்கள்.
அம்மாவைப் பெண் கேட்டு பல வசதியான மாப்பிள்ளைகள் வந்தும் அம்மா மறுத்துவிட்டாள்.
பெரிய சீதனம் வருவது போய்விட்டது என்று பாட்டி புலம்பித் தீர்த்திருக்கிறாள். அப்பா கடைசியில் எவ்வளவு முயன்றும் இரு குடும்பமும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கடைசியில் மிக எளிமையாக எல்லா எதிர்ப்புகளையும் மீறி இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள்.
பிதுக்கி எடுத்த பற்பசையை மீண்டும் உள்ளே செலுத்த முடியாததுபோல் ஆகிவிட்டது.
இரு குடும்பமும் இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. உறவினர்கள் திருமணத்திற்கு ஸ்காட் ரோடு கந்தசாமி கோயிலுக்கப் போன நேரங்களில் கூட ஆளுக்கொரு திசையைப் பார்த்தபடியே இருப்பார்கள்.
இதையெல்லாம் மறந்து அப்பாவும் அம்மாவும் மிக நெருங்கிய அன்புடையவர்களாகத்தான் இருந்தார்கள்.
ஆனால், கடந்த மூன்று மாதங்களாக இலேசாக அறைக்குள் ஆரம்பித்த சண்டை இப்பொழுது இலங்கைப் போர் போல உச்சத்திற்குப் போய்விட்டது.
சிவராசா தன்னைக் காரில் கொண்டுவந்து விடுவது இவர்களுக்குப் பிடிக்கவில்லையோ?
சிவா எவ்வளவு அழகானவன். சுருண்ட கேசமும் சிவந்த நிறமும் அரும்பு மீசையும் இதை எல்லாவற்றையும் விட அவன் பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளை.
பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கலைவிழாவில் அவன் இனிமையாகத் தமிழில் பாடினான்.
அவன் சங்கீதம் கற்றிருந்தான். சுரங்களை அவன் பாடிய பொழுது மண்டபமே எழுந்து கைதட்டியது.
மற்ற மாணவர்கள் `நாக்குமுக்கா' குத்துப்பாட்டைப் பாடி ஆடியபொழுது இவன் அமைதியாகப் பாடி மொத்த மாணவர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.
`சிவா சிவா' என்ற பேரோசை யோகலட்சுமியின் மனத்தில் ஏற்பட்டது அன்றுதான்.
யோகலட்சுமி மேடைக்கருகில் போய் அவனுக்குக் கைகொடுத்தாள்.
அதன்பிறகு நூலகத்தில் உணவகத்தில் என்று சந்திப்பு தொடர்ந்து காதலாக மாறியது.
இந்தக் காதல் வெளிப்பட்ட பொழுது இருவருக்குமான ஏற்றத் தாழ்வுகள் தெரியவில்லை. சிவாவும் அதைப் பற்றிப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே யோகாவுக்குப்பட்டது.
இவளுக்காக எவ்வளவு செலவுகள் செய்யவும் அவன் கவலைப்படவில்லை. பணம் அவனுக்குப் பெரிய பிரச்னையல்ல.
தியேட்டர், பீஸா, கே.எப்.சி., கொக்கோகோலா, நட்சத்திர ஹோட்டலில் மதிய உணவு என்று அவன் நிறைய செலவுகள் செய்தான்.
இந்த மூன்று மாத தீவிர காதல் பயணத்தில் யோகலட்சுமிக்கு பெருந்தடையும் நிம்மதி இழப்பும் வீட்டில் நடக்கும் அன்றாட சண்டைகள் ஏற்படுத்தின.
சனி, ஞாயிறுகளில் கூட அவள் வீட்டில் இருப்பது குறைந்துவிட்டது. சிவராசாவுடன் காரில் தியேட்டர், பீஸா என்று பொழுதைக் கழித்தாள்.
இவளின் மன நிம்மதியற்ற நிலை பற்றி பல முறை கேட்டும் யோகா அவனுக்குச் சரியாகப் பதில் சொல்லவில்லை. இருவருக்குமான இடைவெளி அதிகரிக்கிறதோ என்றுகூட சிவா நினைத்தான்.
நேற்றிரவு வீட்டில் அம்மா - அப்பாவின் சண்டை உச்சகட்டத்தில் நடந்தது. அதுவரை வாய்ப் பேச்சாக இருந்த சண்டை கண்ணாடி கோப்பைகள் உடையும் சத்தம் கேட்கும் அளவுக்கு அதிகமாகிவிட்டது.
வேலைக்காரப் பெண் பயந்து போய் பின்வாசல் கதவைத் திறந்து வெளியே போய் நின்று கொண்டாள்.
தம்பி, அண்ணனின் அறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டான். காலையில் இரண்டில் ஒன்று கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தாள்.
``இப்படி ஏன் சண்டை போடுகிறீர்கள்? ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா குண்டு வீசி நடக்கும் சண்டைபோல கிளாசெல்லாம் உடைகிறது. என்னால் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை. வீட்டில் அமைதியே இல்லை! உங்களுக்குள் என்ன பிரச்னை?''
``இது கணவன் மனைவிக்குள் உள்ள பிரச்னை. இதில் உனக்கு சம்பந்தம் இல்லை. வீணே தலையை நுழைக்காதே. நீ உன் வேலையைப் பார்!''
அம்மா இப்படிக் கூறிவிட்டு விடுவிடுவென்று நடந்து போய்விட்டாள். யோகலட்சுமிக்கு அவமானமாக இருந்தது.
அவள் ஒரு முடிவுக்கு வந்தவளைப் போல பல்கலைக்கழகம் புறப்பட்டாள்.
அன்று மாலை சிவராசாவிடம் பேசி ஒரு முடிவெடுக்க எண்ணினாள்.
வழக்கம்போல் விரைவாக நூலகத்தில் இருந்து வந்து சிவராசாவின் காரில் ஏறிக் கொண்டாள்.
``உன்னிடம் முக்கிய விஷயம் பேச வேண்டும் சிவா...''
``இத்தனை நாளாக நான் கேட்டும் நீ வாயைத் திறக்கல்லெ. இப்பொழுதாவது வாய் திறந்தியே! சொல்லு என்ன பிரச்சினை?''
``நம்ம திருமணத்திற்கு உன் பெற்றோர்கள் சம்மதிப்பார்களா? உன் பக்கம் பிரச்னைகள் வருமா?''
இந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை.
``காதல்னு வந்தாலே பிரச்னைதான். என் வீட்டில் என்னைப் பற்றி பெரிய கனவுகளுடன் இருக்கிறார்கள். அதைப் படிப்பு முடிந்ததும்தான் சரிசெய்ய வேண்டும். அதற்கு இன்னும் காலமிருக்கு யோகா.''
``எனக்கு வீட்டில் நிம்மதியில்லை. அன்றாடம் வீட்டில் அம்மா - அப்பா சண்டை பெரிதாகிவிட்டது. படிக்க முடியல்லெ - தூங்க முடியல்ல! இரவெல்லாம் போர்க்களமாக இருக்கிறது. வீட்டை விட்டு வெளியேறி விடலாமென்ற முடிவுக்கு வந்து விட்டேன். ஹாஸ்டலில் இப்பொழுது இடம் கிடைக்காது. மாணவர்கள் சிலர் தனியாக வீடெடுத்து தங்கிப் படிக்கிறார்கள். அவர்களோடு என்னைச் சேர்த்து விட முடியுமா சிவா?''
``ரொம்ப யோசித்து செய்ய வேண்டிய முடிவு இது. அவசரப்பட்டு முடிவெடுத்து விடாதே!''
``இது அவசரமான முடிவல்ல சிவா. அவசியமான முடிவு. இனி அந்த வீட்டில் தங்கியிருக்க முடியாதுன்னு நான் சொல்றதை நீ புரிஞ்சிக்கணும். இன்னொன்று சிவா. என்னால் வாடகையெல்லாம் தரமுடியாது. என் அப்பா வீட்டை பேங்கில் அடமானம் வைத்துதான் அண்ணனையும் என்னையும் படிக்க வைக்கிறார். அவர்கள் பண சிரமத்தில் இருப்பதும் எனக்குத் தெரியும்.
``பணத்தைப் பற்றி கவலைப்படாதே. நான் இருக்கிறேன்.''
சிவா இரண்டு மூன்று இடங்களுக்குப் போன் செய்தான்.
``யோகா கம்போங் குறிஞ்சியில் ஓர் அடுக்குமாடி வீட்டில் சில மாணவிகள் தங்கிப் படிக்கிறார்கள். அவர்களோடு ஓர் அறையில் நீ தங்கிக் கொள். அவர்களிடம் பேசி விட்டேன். நாளைக்கு உன் உடுப்புகளை எடுத்துக் கொண்டு தயாராக இரு. நான் வந்து ஏற்றிக் கொள்கிறேன்.
``இல்லை சிவா. எனக்கு இன்னைக்கே வீட்டை விட்டு வெளியாகணும். தயவு செய்து அதற்கு ஏற்பாடு செய்.''
``சரி, இப்பொழுது உன்னை வீட்டில் கொண்டு போய் விடுகிறேன். எனக்கு வெளியே கொஞ்சம் வேலையிருக்கு. இரண்டு மணி நேரம் கழித்து வருவேன். நீ தயாராய் இரு. உன்னை அந்த அடுக்குமாடி வீட்டில் விடுகிறேன்.''
``சரி சிவா. இப்பொழுதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கு!'' அவள் முகத்தில் மலர்ச்சி தென்பட்டது.
காரிலிருந்து இறங்கி வீட்டையடைந்த பொழுது அவர்களின் சண்டை உச்சகட்டமாக நடந்து கொண்டிருந்தது. எப்பொழுதும் மூடி இருக்கும் அவர்களின் கதவு இன்று திறந்து கிடந்தது. கண்ணாடிகள் நொறுங்கி விழும் சத்தம் கேட்டது.
அவள் வேகமாகத் தனது அறைக்குள் போய் ஒரு பெட்டியில் தனது உடைகளை அடுக்கினாள். புத்தகங்களை இன்னொரு பையில் எடுத்து வைத்தாள். மூலைக்கொன்றாக முறைத்துக் கொண்டு கிடந்த நூல்களை ஒன்று சேர்த்து வைத்தாள்.
அப்பா எப்பொழுதும்போல் இல்லாமல் உரத்த குரலில் பேசினார்.
``உன்னைக் கட்டிக்கிட்டதற்கு நான் பட்ட பாடு போதும். நல்லது கெட்டதுக்குக்கூட அம்மா அப்பாவைப் பார்க்க முடியல்லெ. எல்லாரையும் எதிர்த்துக் கொண்டு உன்னைக் கல்யாணம் செய்தது எவ்வளவு பெரிய தவறுன்னு இப்பொழுது புரியுது.
புள்ளைங்க படிப்புக்கு இந்த வீட்டை அடமானம் வைச்சிட்டேன். மேற்கொண்டு கடனாயிடுச்சி. பேசாம அந்தப் பணக்காரப் பெண்ணைக் கட்டிக்கிட்டு இருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. உன்னாலே எல்லாம் நாசமா போச்சு. கடன்காரனாயிட்டேன்...''
``அப்போ நான் இனிப்பா இருந்தேன். இப்போ கசப்பாயிடுச்சு உங்களுக்கு? இப்போ சொத்து சுகமுன்னு பேசுறீங்க. என்னோடு வீட்டை விட்டு ஓடிவந்தபோது இது தெரியலியா?''
``யார்டி ஓடி வந்தா? நீ தான் பீஸாவுக்கும் கோக்குக்குமா அலைஞ்சே! பெட்டி படுக்கையோடு நீதாண்டி இரவோடு இரவா ஓடி வந்தே!''
அம்மா பதில் பேச முடியாமல் குமுறி அழுவது கேட்டது.
`பெட்டி படுக்கையோடு இரவோடு இரவா ஓடி வந்தவதானடி நீ! பீஸாவுக்கும் கோக்குக்கும் அலைஞ்சவதாண்டி!'
அப்பாவின் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் கபாலத்தில் சுத்தியலால் ஓங்கி அடிப்பது போல் இருந்தது யோகலட்சுமிக்கு!
`இரவோடு இரவா ஓடிவந்தவ' மீண்டும் மீண்டும் சுவரில் மோதி எதிரொலித்தது.
படுக்கையில் இருந்த பெட்டியைத் திறந்து தனது உடைகளை மீண்டும் எடுத்து அலமாரியில் அடுக்கினாள். `தொப்'பென்று விழுந்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே காரின் `ஹாரன்' சத்தம் விட்டு விட்டுக் கேட்டது. அதுவும் நின்று விட்டது!
வீடு அமைதியாகியது. யோகலட்சுமி மூன்று மாதத்திற்குப் பிறகு எந்தச் சலனமும் இல்லாமல் நன்றாகத் தூங்கினாள்!
நன்றி – தீராநதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக