எந்தக் காலத்துக்கும் இவன் குணம் எண்ட ஒருவன்தான் இன்னும் மாறாம இருக்கிற ஒரு மனுசன். ``ஆ! முந்திச் செய்த தொழில் எனக்கு இப்ப மறந்துபோச்சு...'' என்று இண்டைய இந்த நிலையிலயும் அவன் ஆருக்குமே சொன்னதில்ல. எதையும் தள்ளி ஏன் நான் மறைப்பான் எண்டுதான் அவனுக்கு உள்ளாலயா இந்த நினைப்பு.
அப்பத்தைய வருஷங்களில அவன் காடுவழிய திரிஞ்சு தேன் எடுத்திருக்கிறான். இரவில் வள்ளத்தை நந்திக்கடலில கொண்டுபோய்விட்டு கட்டுவலை விரிப்பான். அந்தக் கட்டுவலையில நல்ல கரும் பச்சைப் பெருநண்டு பிடிபடும். அதே கடலில வீச்சுவலை நடந்துபோய் வீசி றாலும் பிடிப்பான். மீனும் பிடிப்பான். இப்பிடி அந்தக் கடல் தொழில் செய்து பிழைச்ச பிழைப்பால அவனுக்கு எவ்வளவு காசுகள் மிச்சம். தண்ணி அளவுக்கு மீனும் றாலும் நண்டுமா சேர்ந்து பெருவாரியாக் கிடக்கிற இடம்தானே நந்திக்கடல். அந்தக் கடலிலேயே வள்ளம் ஓட்டி ஓட்டி மீன் பிடிச்சு வித்துச்சேர்த்த காசுகளிலதானே பவளம், கனகம் என்று இருக்கிற தாவணி சுத்தின தன்ர தங்கச்சிமார்களையும் அவன் நல்ல இடத்தில கலியாணம் செய்து குடுத்துக் கரை சேர்த்தவன்.
``நல்லதடா அப்பிடியே உன்ரை தங்கச்சிமார் ரெண்டு பேரையும் இப்பிடிக் கஷ்டப்பட்டு நீ கரைசேர்த்துப் போட்டாயடா சிங்கம்...'' என்று ஊருக்கையுள்ள பெரிசுகளெல்லாம் இப்பிடிச் சொல்லி அவனுக்கு மரியாதையும் வைச்சவேயள்தானே.
``ஆத்தே அந்தப்பிள்ளை கிடந்து கஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டு நெடுகத் தன்ரை குடும்பத்துக்கே உழைச்சுக்கொண்டு கிடக்கு...'' என்று குணத்தின்ர கதையச் சொல்லி என்ன மாதிரியொருகாய் நகர்த்தல்... ``இப்பிடியெல்லாம் சொன்னால் உச்சி சுடும் வேலயில்லாம வீட்டில கிடக்கிற தறுதலையளுக்கு'' என்று குடும்பங்கள் வழியே உள்ள தகப்பன்மார் நினைக்கிறதுக்கு குணம் எண்டுறவன் ஒரு உதாரண புருஷன்தானே.
அந்தச் சுற்றுவட்டாரத்துக்குள்ளயே தேடிப் பார்ப்போம். இவன மாதிரி இப்பிடியா அங்க ஆரும் இருக்கினமோவெண்டு... அப்பிடியாத்தான் எங்க அதுக்குள்ள தேடினாலும் இவனொருவன் குணம் எண்டுறவன்தானே எம்பிடுவான். குணத்துக்கு எல்லாம் இப்ப படமாய் நினைவில ஓடுகிது தன்னினதும், ஊரினதுமான பழைய காலக்கதை. அந்த இடத்தில தானும் சனமும் வாழ்ந்த அந்த இனிமையான வாழ்க்கையை நெக்கநெக்க அவன்ர மனம் இப்ப வேக்காட்டில வெந்துபோகுது. எல்லாக் கதையும் இப்ப நினைச்சுப்பார்க்க முள்ளு ஒன்று தன்ர ஒற்றைக் கண்ணைக் கிழிச்சதுபோல இருக்கிது அவனுக்கு.
காட்டாறுமாதிரி கட்டுக்கடங்காம சுதந்திரமா திரிஞ்ச இடமெல்லே அவன் பிறந்து வளர்ந்த அந்த இடம். நெல்லுக்குத்தித்தான் சோறு. கடலில பிடிச்சுக்கொண்டு வந்த மீனில உடன் கறி. காலேலையும் பின்னேரத்திலயும் மாட்டுல பால் கறக்க பக்கத்தில உட்கார்ந்தா, சட்டுச்சட்டெண்டு காம்பில தண்ணியடிச்சு காம்ப உருவஉருவ சொர் சொர் என்று செம்பு நிறைய பிறகு பால்.
அந்த நேரமே பால் காய்ச்சி சுடச்சுட வாய் சாயம் கலந்த தேத்ததண்ணீ... காலேல அதக் குடிச்சாலே பிறகு மூச்சு வாங்காம மண்வெட்டி பிடிச்சு வேலசெய்யலாமே நடுமத்தியானம் மட்டும். சண்முகத்தின்ர தேப்பனும் சரியாய்ச் சண்முகம் மாதிரி முந்திக் கெட்டித்தனமான ஆள்தான். குடியிருப்புக் காட்டாந்தோனியார் கோயிலடிப் பக்கம்தான் அவரின்ட சொந்த ஊர். இவன் குணம் பிறந்த இடமும் அந்த இடம்தானே. சண்முகத்தின்ர தகப்பன் வேற உங்க இருக்கிற சில ஆக்கள் மாதிரி ஒரு பேச்சும் பேசாம சும்மா இருந்துகொண்டு அரசு மரத்தில அணில் பார்த்துக்கொண்டிருந்தவரில்ல. உடம்பு அசங்காமக் கசங்காம வைச்சுக்கொண்டு சும்மா இருந்த ஆளில்ல அந்த ஆள். ஆம்பிள எண்டவனுக்கு தொழில்தானே புருஷலட்சணம். அவர் அப்பவெல்லாம் ஊருக்குள்ள ஆடு, மாடு அடங்கி சனங்களெல்லாம் உறங்கி தெருநாயள் கூட கடைசியாக் குலைச்சிட்டுப் படுக்கிற பிறகும் அந்தச் சாமத்தில கூட நந்திக்கடலுக்குப் போயிடுவார் தொழிலுக்கு.
இந்தப் புதுக்குடியிருப்புக் காட்டந்தோனியார் கோயில் எங்க இருக்கு...? அது மந்துவில் எண்டுற இடத்துக்குப் பக்கத்திலதானே இருக்கு... இவங்கள் எல்லாம் போய் தொழில் செய்யிற இந்த நந்திக்கடல் காட்டாந்தோனியார் கோயிலடிக்குப் பக்கமாகத்தான் தொடங்கி வற்றாப்பளை எண்டு இருக்கிற அவ்வளவு தூரமாப்போய் பிறகு முடியுது.
எதையும் தள்ளி மறைக்காம இன்னும் விவரமாச் சொன்னா... நந்திக்கடலின்ர மறு கரைப்பக்கம் கேப்பாப்புலவும் அப்பிடியே போய் வட்டு வாகல்வரை போகிற இடமுமெண்டு சொல்லவேணும். கடலோட நந்திக்கடல் தொடுவாய் உள்ள பக்கம் வட்டுவாகலும் முள்ளிவாய்க்கால் எண்டுற இடங்களும் இதுகளுக்கவா இப்ப சொல்லவேண்டி வருகிறது.
மழை நல்லா அடிச்சுப் பெஞ்சு தண்ணி முட்டினா இந்த நந்திக்கடல் நிரம்பி வட்டுவாகல் பக்கமா உடைச்சுக் கொண்டுபோய் அப்பிடியே கடலில கலக்கும். அந்த மிதப்போட தேடி ஓடிவந்த மாதிரி கடலில உள்ள மீனெல்லாம் நந்திக்கடலுக்குள்ளயா வரும். அப்பிடி வந்த பிறகாத்தான் இந்த றால் மீன் நண்டெல்லாம் அதுக்க விளையிறகாலம் வருகுது.
அதுக்குப்பிறகுதான் அங்க இருக்கிற சனமொல்லாம்... ``நந்திக்கடலுக்கு எங்களுக்கு மீன் விளையப்போகுதடா... பெரிய றால் வரப்போகுதடா... நண்டு இனி வந்திடுமடா...'' எண்டு அந்தக் கடலக் கடலப் பார்த்துக்கொண்டே உதுக்க நாங்களெல்லாம் எப்பவா இறங்குவோம் எண்ட யோசனையோட தெம்பா இருக்குங்கள். இப்பிடியா அங்க உள்ள மனுசர் கூட்டத்துக்கெல்லாம் இந்தா அந்தா எண்டு மனம் அலைய தங்கட நாளை இழுந்துக்கொண்டு போய்க்கொண்டிருக்குங்கள். அந்தக் கடலில கூட்டிக்குமிச்சதாய்த் தாங்கள் அள்ளப்போகிற றால் நண்டு மீன்களையும் கூட சிலதுகள் நித்திரையிலயும் கூட கனவு கண்டு கொண்டுதானே இருக்குங்கள்.
அப்பிடியா அதுகள் எல்லாரும் நினைக்கிற அவசரமும் சரியாத்தானிருக்கு. அந்தக் கடலுக்க பிறகு பொதுக்கெண்டதாய்த்தானே பிறகு கெதியா எல்லாமே கிடந்து விளையிது... நந்திக் கடலுக்க றால் மீன் நண்டு விளைஞ்சா ஊருக்குள்ள அங்கயா பிறகு ஆர் வீட்டுக்குள்ள இருப்பினம்... கடலுக்குப் பக்கமுள்ள இடமெல்லாம் என்ன ஆள் இல்லாத அனாதிக் காடாயுள்ள இடமா...? எவ்வளவு சனம் அங்கயெல்லாம் இருக்கு... எல்லாமே சொந்தக்காறப் பட்டாளங்கள்தான்... கூட்பிடக்கூட்பிட நான் வாறன்... நான் வாறன் எண்டுகொண்டு கூட்டமாய்க்கூடி நந்திக்கடல்ப் பக்கமாப் போகுதுகள் எல்லாம்... கடலில கிடக்கிறத அள்ளிக்கொண்டு வாற கணக்கில.
அங்க அந்தக் கடலுக்க சுட்டுவிரலையும் நண்டுக்குமேல வைச்சு அழுத்தி சிலதுகள் நண்ட பிடிச்சிருங்கள். சிலதுகள் கம்பிக்குத்தால யூரியாபாக்கு நிறைய சேத்துடுங்கள் நண்டுகள்... ஒரு பேச்சும் வீணாப் பேசிக்கொண்டிராம கிடக்கிற அந்த நாலு மாசம் மட்டும் கடலுக்க இறங்கி இதுதான் வேலை எல்லாருக்கும். வத்திப்போகாம ஊறிக்கொண்டிருக்கிற மாதிரித்தான் நந்திக்கடல் இந்த நாலு மாதம் மட்டும் அந்த ஊர்ப்பிறவியள் எல்லாத்துக்கும் தன்னட்ட உள்ளத குடுத்துக்கொண்டிருக்கு சலிக்காம... இந்தக் காலமெல்லாம் சனங்கள வீட்டில சும்மா இருக்கவிடாம தண்ணீருக்க நெடுகவா பெண்டுகளெல்லாம் மீன் வித்த சம்பாத்தியக் காசுகளில் ஒண்டுக்கு ரெண்டாய் வீட்டுக்கெண்டு பாய் வாங்குதுகள், தலகாணி வாங்குதுகள். குண்டாஞ்சட்டியில இருந்து தண்ணிக்குடம், அண்டா, உரல், உலக்கை, திருகை, அம்மி எண்டு பலதும் வாங்குதுகள். இந்தக் கடல் பிழைப்பால இப்பிடியெல்லாம் வசதியாய் வாங்க எல்லாருக்கும் வழி பிறந்திட்டுது. முனகிக்கொண்டே கூட்டின பழைய விளக்குமாறையும் எறிஞ்சுபோட்டு இந்தக் காலம்தானே புதுவிளக்குமாறு கூட சிலதுகள் வாங்குதுகள்.
கடலை இப்பிடி அலசி அலசி நாலுமாதம் சீவியத்தப் போக்காட்டிப் போட்டுதுகள் சனங்கள். சோளகம் காத்தும் எழும்பி வீசத் துவங்கீற்று இப்ப ஒரு ஈ காக்கா போலவும் இல்ல, வெறிச்சோடிச்ச மாதிரித்தான் அந்தப் பக்கம் வந்திட்டுது.
சனமெல்லாத்துக்கும் தொழில் நிண்டுபோச்சுது. பாவங்கள்! குளுந்துகொண்டிருந்த ஏழைச் சனத்துக்கெல்லாம் இப்ப மனம் காஞ்சு போச்சு. வீடு வீடா அங்காலையும் இங்கலாயுமா சிலதுகள் போய்த் திரிஞ்சு பத்து ரூவா கடன் கேட்டுக்கொண்டுத் திரியுதுகள். மாடுகளை வைச்சு விளக்கிறவயள் மேயப்போய் வீடு வாறமாமாடுகளைப் பாத்துக்கொண்டிருக்குதுகள். அதுகளில் பால் எண்டாலும் கறந்து வித்து காசு கையில சிலவுக்கு எடுப்பம் எண்டும் அதுகள் யோயிச்சுக் கொண்டிருக்குதுகள்.
எல்லாரும் இந்த நிலையில தலயை சொறிஞ்சுகொண்டு கல்லுமாதிரி யோசனையில குந்திக்கொண்டிருந்தாலும் சண்முகம் எண்டவன் மாத்திரம் கிறுங்கேல்ல. மற்றவயள் மாதிரி என்ன பண்ணுவம் ஏது பண்ணுவம் எண்டு அவன் ஏன் யோசிக்கப்போறான். தவளை நிலத்திலயும் கிடந்து சீவிக்கும் தண்ணியிலயும் கிடந்து சீவிக்கும். எங்கயும் கிடந்த சீவியத்தப் போக்காட்டக்கூடியதுதானே தவளை. அந்தத் தவளையை மாதிரித்தானே இவன் குணமெண்டவனும்.
குணமென்ன புத்தியில்லாத பிழைக்கத் தெரியாத ஆளா? கடல் தொழில் போனா என்ன வன்னிக்காடு இருக்குத்தானே அங்க அவனுக்குப் பிழைப்புக்கு? எல்லாரும் அப்பிடியே வேலயில்லாம விறைச்ச மாதிரி கிடக்க அவன் ஊருக்குள்ள உள்ள பெடியள் நாலு பேரையும் தன்னோட கூட்டிக்கொண்டு போயிட்டான் காட்டுக்குள்ள தேன் எடுக்கிறதுக்கு.
காட்டுக்குள்ளபோன இளம் பெடியளுக்கு பெரும் தேனீக் குழவியளெண்டாலே சரியான பயம். அதுகளெல்லாம் காட்டுக்குள்ளயா ஒரு ஓரமா ஒதுங்கி ஒதுங்கி நடந்துகொண்டிருக்குதுகள். தேனீக்கள் குத்தி எங்களுக்கு ஒண்டும் ஆயிடப்பிடாதெண்டு குல தெய்வத்தையும் கும்பிடுதுகள். ``எங்களைப் பிழைக்க வைச்சிடு வத்தாப்பளை அம்மாளாச்சி'' என்று மீசையில்லாக் குட்டி என்று எல்லாரும் கூப்பிடற சின்னவன் தன்ர வாயாலயும் சொல்லிக்கொண்டு வாறான்.
காட்டுக்குள்ள நெடுகப் புழங்கிப் புழங்கி குணம் எண்டுற இவனுக்கு தேன் எடுக்கிறதிலயும் நல்ல பரீட்சை இருக்கு. ............ இப்படி இவன மாதிரி பரீட்சையில்லாத ஒருவன் காட்டுக்கயா தேன் எடுக்கப்போனா காஞ்ச கத்தாழ நாராய்த்தான் அதுக்க அலைஞ்சுபோட்டு வெறுங்கையோட வெளியால வரவேணும்.
ஆனா இவன் சண்முகம் மாத்திரம் காட்டுக்க போனா எப்பவும் வெறும்கையா திரும்பி வந்ததில்ல. யார் அவனோட காட்டுக்கிளயா கூடப்போனாலும் தேனீக்களிண்ட இரைச்சல் சத்தம் சண்முகத்துக்கு மாத்திரமே தெரியும்... அப்பிடி அந்தச் சத்தத்தக் காதில அணைவு வைச்ச மாதிரி அவன் பிடிச்சிடுவான்... காட்டுக்குள்ள அவன்ர கண்ணுக்குத் தேனீக்கள் காணாமப் போகுதா இல்லையா - அவன் பிடிச்சிருவான் ஒழுங்குமுறையாப் பாத்து எங்க தேன் கூடுகட்டி இருக்கெண்டு.
மரப்பொந்துத் தேன் எண்டா உயரம் நாலு அடி உயரமளவுக்கும் அதுக்குள்ளயா வதை இருக்கும். பெருந் தேனீ கட்டின கூடாயிருந்தால் அதுகள் பொத்தி வளத்த வதை எல்லாத்துக்களிலயும் நிறையவா தேன் இருக்கும். மரத்துக்கு மரம் தேனும், சுவையில வித்தியாசப்படும்தானே. வேம்புப் பொந்துத் தேனாயிருந்தா அதின்ர சுவைதான் இருக்கும். பாலைமரமெண்டா அது ஒரு சுவை... இலுப்பையெண்டா அது அதின்ர பூ மணத்தோட உள்ளது மாதிரியாவேற.
மரத்தில பொந்துத்தேன் இருக்கு எண்டு அறிஞ்சா குணம்தான் மரத்தில ஏறுவான். மேல ஏறி அவன் நிண்டுகொண்டு பொந்தை வெட்டிப் பெருப்பிப்பான். துலையில நிண்டு அவனோட போன பெடியள் அவன் செய்யிறதக் கவனிச்சுக்கொண்டே இருப்பாங்கள். குணம் பொந்து பெருப்பிச்சாப் பிறகு வாசன பிடிக்கிற மாதிர அதில முகத்தைக் கொண்டுபோவான். அவன் பிறகு ஏதோ வாயால ஊதுறமாதிரி தூரத்தில நிக்கிற பெடியளுக்குத் தெரியும். அது ஏதோ கம்ப சூத்திரம் மாதிரித்தான் அந்த வேல. பிறகு அவன் பொந்துக்காலே வதைகளை எடுத்து; வாய் அகட்டின சுரக்குடுக்கைக்குள்ள போட்டு கீழவா இறக்கிக்கொண்டருவான். பச்சைத்தண்ணிக்கும், தேனுக்கும் பொருத்தமேயில்ல. பச்சைத்தண்ணி விழுந்தா தேன் புளிச்சிடும். ஆதால தான் தேன் எடுத்துப்போட்டு வைக்கிற சுரக்குடுக்கையில தண்ணி சொட்டும் இல்லாம காஞ்சதாயிருக்க குணம் பாத்துக்கொள்ளுவான்.
காடு என்னவோ சொந்த இடம் மாதிரித்தான் குணத்துக்கு. அவன் மடமடவென்று அதுக்குள்ளாலே நடப்பான். கடைசியா காட்டுக்குள்ளால வெளியேறப்போற இடம்கூட அவனுக்கு நல்லாத்தெரியும். ஒரு நாளைக்கு ஒரு காடு என்று வன்னிப் பக்கத்து காடுகளுக்கையெல்லாம் உள்ளே போய் வெளியே வாறதெல்லாம் அவனுக்கு நல்லாத் தெரியும். குணத்துக்கு எப்பவும் குணம் நல்ல குணம்தான்! தனக்கு கிடைச்சத நாலு பேருக்கும் பிறிச்சுக் குடுக்கிறதில மகிழ்ந்து மலர்ந்து குளிர்ந்து போறவன்தான் அவன்.
குணம் மழை பெஞ்சு வெள்ளாம விளையாட்டி விறகாவது வெட்டிப் பிழைக்கக்கூடியவன். மழைத்தூறல் கண்டால் உடும்பு வேட்டைக்கு நாயோடையும் அவன் காட்டுக்கு வெளிக்கிடுவான். அவன் வளக்கிற நாய் நல்ல வேட்டை நாய். ஓடுற உடும்பை தரையில வைச்சு அந்த நாய் பொத்தின மாதிரிப் பிடிச்சிடும். அப்பிடியே அந்த இடத்தில அழுத்திப் பதிச்சு மிதக்காம உடும்பை அமுக்கி வைச்சிருக்கும் அந்த நாய். அதுக்கு உடும்பின்ர வித்து எடுத்து மூக்கில அடிச்சு விட்டதாலதான் அந்த ரோசம்... ஆதாலதான உடும்ப வாயில ஒரு இறுக்கு இறுக்கி ஆப்படிச்சமாதிரி அத அந்த நாய் பிறகு நிலத்திலயும் அடிக்கும்.
இப்படியே காட்டுக்குள்ள கல்லுகளோடயும் முள்ளுகளோடயும் கலந்து கிடந்த வாழ்க்கை குணத்துக்குக் கொஞ்ச காலம் செல்ல கடந்து போகுது. ஒரு தொழிலுக்கும் அன்று போகக் கிடைக்காட்டி வீட்டில இருந்து தன்ர மிருதங்கத்தையெண்டாலும் எடுத்து அவன் வாசித்துக்கொண்டிருக்கிறான். அவன் மிருதங்க வித்வானும்தான். வீட்டில மிருதங்க அடி இப்ப வெளியாலயும் கேட்டுக்கொண்டிருக்கு. இண்டைக்கு ஓர கோஷ்டிக்குப்போய் வாசிக்க அவன் இருக்கிறதால அதில பாடுற பெடியனையும் அவன் ஆள்விட்டுக் கூப்பிட்டிருக்கிறான். கோஷ்டிக்குப் போறதெண்டால் அவன் பாடுற பாட்டுக்களை படிக்கச்சொல்லி ஒரு கை பழக்கப்படுத்திக்கொண்டுதான் அவன் வெளிக்கிடவேணும்.
இதெல்லாமே முன்னொருகாலம் அவன் வன்னிக்குள்ள இருக்கேய்க்க வாழ்ந்திருந்த வாழ்க்கை. இண்டைக்கோவெண்டா அவன் வெளிநாடு எண்டு போய் ஒரு பாலைவனம் பிரதேசத்தில இருந்துதான் வேலை செய்து சீவிச்சுக்கொண்டிருக்கிறான். அவனின்ர சகோதரிகளும் தாய் தேப்பனும் ஏலவே யாழ்ப்பாணத்தில போய் இருந்துகொண்டதாயிருந்தாலும் அங்க வன்னிக்கிள்ள உள்ள எத்தனைபேர் என்ர உறவினர்கள். எத்தனைபேர் என்ர தாயைப் போன்றவர்கள், சகோதர, சகோதரிகளைப் போன்றவர்கள், என்று நினைச்சு தொடர்ந்து நித்திரைகொள்ளமுடியாத அளவிலதான் அவன் துடிச்சுக்கொண்டிருக்கிறான். தான் சீவிச்ச இடத்த இங்கயிருந்து அவன் நினைக்கேக்க எல்லாமே கண்ணுக்கு எட்டிய வெளியாத்தான் அவனுக்கு இப்பயா தெரியுது. காட்டுக்ககூட எந்த ஜீவராசிகளின்ட சத்தத்தையும் இப்ப கேக்காத மாதிரியாத்தான் அவன் நினைக்கிறான்.
அப்பிடி எல்லாம் சரியான கெடுதி ஒண்டும் அங்க நேரக்கூடாதெண்டு அவன் எத்தினை நாள் கடவுளப் பார்த்து பிரார்த்தினை செய்திருக்கிறான். கூடுதலா அப்பிடி ஒரு கெடுதியும் அங்க நேராதெண்டு அவன் யோசிச்சுமிருந்தான். ஆனாலும் பிறகு எல்லா அதிர்ச்சியையும் அவனுக்குச் சந்திக்கக்கூடியதாய்த்தான் போச்சுது. எல்லாச் சுவடுகளும் அழிந்த மாதிரியாக என்ன வாழ்க்கை அந்த வன்னி மண்ணில சீவிச்ச சனத்தின்ரை வாழ்க்கை.
குணம் அந்தச் சனத்தோட ஒரு காலம் உடனிருந்து சீவிச்சவன். அந்தச் சனங்களிண்ட வலியை உணர்ந்த பங்காளிகளில இவனும் ஒருவன்தானே? ஆனாலும் இந்த அநியாயத்தைப் பற்றியெல்லாம் ஒரு வரியைக்கூட காகிதத்தில இண்டைக்கு அவனால ஆருக்கும் எழுதவே முடியாது. இப்ப அவனால ஒழுங்காப் பேசவும் முடியாது. எல்லா அதிர்ச்சிகளையும் அவன் அறிஞ்சதுக்குப் பிறகு ஒரு மாசமா ஒரே யோசனை அவனுக்கு. அவன் பிறகு இப்ப கொடிய வருத்தத்திலதான் கிடக்கிறான் ஒரு ஆஸ்பத்திரி வார்டில... அவன அங்கினதான் இப்பவா போட்டுக்கிடக்கு. அவனுக்கு பரலைய்ட் எண்டுற வருத்தமாம்! அப்பிடி எண்டுதான் அவனுக்கு வைத்தியம் பாக்கிற டாக்குத்தர் ரெலிபோனில யாரோ விசாரிச்ச இடத்தில இப்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்
நன்றி – தீராநதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக