1.0 வள்ளுவர் வாசித்த சமூகம்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்மொழி வரலாற்றில் சங்ககாலம் முதல் தமிழ்ச் சமூகவரலாறு அறியப்படுகிறது. சங்ககாலச் சமூகம் இனக்குழுச் சமூகத்தையும் தொடக்க நிலவுடைமைச் சமூகத்தையும் தன்னகத்தே கொண்ட பழஞ்சமூகம் ஆகும். இதில் திருவள்ளுவர் வாழ்ந்த சமூகம் சற்றுப் பின் அமைந்த காலம் என்று கூறலாம். எனவே வள்ளுவர் அறிந்திருந்த தமிழ்ச் சமூகம் என்பது சங்கச் சமூகமும், அவரது காலச் சமூகமும் ஆகும். எனவே வள்ளுவரின் சமூக வாசிப்பில் 1. தொல்காப்பியமும் (தொல்.) சங்க இலக்கியங்களும் நமக்கு அறிவித்த சங்கச் சமூகமும், 2. அதில் இடம்பெறாது ஆனால் வள்ளுவரால் அறியப்பட்ட சமூகமும் அடங்கும். அச்சமூகங்களொடு வள்ளுவர் விரும்பி உடன்பட்ட கருத்துகளும் உடன்படாது புதிய சமூகத்தை - சமூக மாற்றத்தை உருவாக்க விரும்பிய அவரது விழைவும் திருக்குறளாக வடிவம் பெற்றுள்ளன எனலாம். வள்ளுவரின் இந்த வாசிப்பு 1. இலக்கிய வாசிப்பு, 2. வாழ்க்கை வாசிப்பு என்ற இரு நிலைகளில் அமைந்துள்ளது. இக்கட்டுரையில் இல்லறம் நோக்கிய அவரது வாழ்க்கை வாசிப்பும், அதில் அவரது விழைவும் மட்டும் ஆராயப்படுகிறது.
2.0 வள்ளுவரின் வாழ்க்கை வாசிப்பு
வள்ளுவர் தம் கால மற்றும் தமக்கு முற்பட்ட காலச் சமூகத்தை வேர்முதல் நுனிவரை வாசித்து அறிந்துள்ளார். அதன் விளைவாகவே எல்லா நிலையில் உள்ள மனிதனும் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று அவர் விழைகிறார். அதனால் தான் திருக்குறள் உலகப் பொது மறையாகியது.
3.0 இல்லறம்
வள்ளுவர் விழைந்த வாழ்க்கைக் கோட்பாடு என்பது முப்பால் பாகுபாட்டில் தனிமனிதனைச் சார்ந்த கல்வி, ஒழுக்கம், அரசு (அரசன்), நாடு, இல்வாழ்க்கை என்று பல பொருட் கூறுகளைக் கொண்டுள்ளது. எனினும் அவையாவற்றிலும் இல்லறத்தைச் சமூக அறமாக்க வேண்டும் என்ற அவரது விழைவே மேலோங்கியுள்ளது எனக் கருத முடிகிறது.
4.0 வள்ளுவர் வாசித்த இல்வாழ்க்கையும் விழைந்த இல்லறமும்
4.1 அறத்துப்பால்
வள்ளுவர் அறிந்த சங்க காலத்தில் இல்வாழ்க்கை என்பது ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் பேரின்பம். அது புறத்தாருக்குப் புலனாகாது அகம் என்று அழைக்கப்பட்ட உள்ளத்து உணர்வு. இது மனைவியோடு கூடியும் ஊடியும் வாழும் இன்பத்தை மட்டும் தருமே ஒழிய அறத்தையும் பொருளையும் தராது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்ட ஒன்று.
அறம் என்பது சமுதாயத்தில் ஆணின் புற வாழ்க்கைக் கூறுகளில் ஒன்றாக இருந்து கொடை, தருமம் என்று விளக்கப்பட்டது (புறநானூற்றில் அறம் பற்றிய செய்திகள்). மகளிர் நோக்கில் தலைவன் தன்னைவிட்டுப் பிரியாது இருந்து அருளுதலே அவன் செய்யும் அறமாகக் கருதப்பட்டது.
இன்பம் நோக்கிய இல்வாழ்க்கை, அறத்தை நோக்கியதாக மலர வேண்டும் என்று விழைந்த வள்ளுவர் ''அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை'' என்று இல்வாழ்க்கையை இல்லறமாக்குகிறார்.
அதனாலேயே முதல் நான்கு அதிகாரங்களில், திருக்குறளின் முதல் விளக்கமாக இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தை அமைத்துள்ளார். தொடர்ந்து, ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களாகிய வாழ்க்கைத் துணை நலம், நன் மக்கட்பேறு ஆகியோரையும் விளக்குகிறார்.
இம்மூவரும் சார்ந்த தனிக் குடும்பமாகிய இல்லறத்தின் செயல்பாடுகளையே - வாழ்க்கை முறைகளையே முப்பாலிலும் அவர் விளக்குகிறார்.
வள்ளுவர் அறிந்த சங்கச் சமூகத்தில் இல்லாளின் மாண்புகளாக, ''கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும், மெல்லியற் பொறையும், நிறையும், வல்லிதின் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் வலியுறுத்தப்படுகின்றன.
இப்பண்புகளை ஆணும் கடைப்பிடித்தால் தான் சமுதாயம் சிறப்படையும் என்று ஆணுக்கும் உரியதாக்கி அப்பண்புகளின் பரப்பை விரிவுபடுத்துகிறார். இதன் விளைவாகவே விருந்தோம்பல், பொறையுடைமை, பிறனில் விழையாமை போன்ற அதிகாரங்களைப் படைத்துள்ளார்.
சங்கச் சமூகம் விளக்கிய ஓர் இல்லறத்தில் வரக்கூடிய இன்னொரு உறவு பரத்தைமை. அதைவிட இழிவானதொரு உறவு பிறன்மனை நயத்தல். குறிக்கோள் நோக்கில் வடிவமைக்கப்பட்ட சங்க இலக்கியங்கள் வெளிப்படுத்தாது மறைத்த ஒரு உறவு இது. சமூகத்தைச் žர்கெடுக்கும் இவ்வுறவை அறிந்த வள்ளுவர் அதைக் கடிகிறார். பரத்தைமையை ஒருவன் தவிர்க்க வேண்டும் என்பதைப் பொருட்பாலில் நல்லொழுக்கமாகக் கூறும் வள்ளுவர் பிறன்மனை நயத்தலை அறத்துப்பாலில் கூற விழைவது கருதத்தக்க ஒன்று. ஏனெனில் பிறன்மனை நயவாமையை ஒருவன் அறமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதை வலிமையாக அறிவுறுத்த ''அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையான் பெண்மை நயவாமை நன்று (150) என்று, ''நீ அறம் நீங்கிய செயலைச் செய்தாலும் செய்; ஆனால் பிறன்மனை நயத்தலை மட்டும் செய்யாதே'' என்று கூறுகிறார்.
இப்பிறன்மனை நயத்தலில்லாத இல்லமே ''புகழ்புரிந்த இல்லம்'' ஆகும் (59) என்று விளக்குகிறார்.
''காமம் சான்ற கடைக்கோட்காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே'' என்று அமைந்த தாம் கண்ட சமூகத்திற்கு ஏற்ப வள்ளுவரும் இல்வாழ்வான் மனைவி மக்களொடு சேர்ந்து, அவர் ஒவ்வொருவரும் சிறந்த அறங்களை வாழ்க்கைச் செயல்களாகக் கடைப்பிடித்து, இறுதியில் பற்று நீக்கி (துறவு 35), மெய்யுணர்வுற்று (36), அவாவறுத்து (37) வாழவேண்டும் என்று அறத்துப்பாலை அமைத்துள்ளார். எனவே அறத்துப்பால் முழுவதுமே இல்லறத்தாருக்குரியதாவே படைக்கப்பட்டுள்ளது என்று கருத இடமுள்ளது.
4.2 பொருட்பால்
வீரமும், கொடையும், புகழுமே பெருஞ் செல்வமாகக் கருதப்பட்ட சமூகப் பார்வையிலிருந்து மாறி வள்ளுவர் அறிவும் (கல்வி, கேள்வி முதலியன), பண்பும் (செங்கோன்மை, மடியின்மை போன்றன), உணர்வும் (நட்பு, மானம், பெருமை....), தொழிலும் (இறைமாட்சி, அமைச்சு, ஒற்று, உழவு....), ஒழுக்கமும் (சுற்றந்தழால், வரைவின் மகளிர், பிறன்மனை நயவாமை....) ஆகிய வாழ்க்கை ஒழுக்கங்களே வாழ்க்கைப் பொருளாக அமைய வேண்டும் என்று விழைந்துள்ளார். இவற்றில் சுற்றந்தழால், குடிசெயல்வகை ஆகிய இல்லறக் கடமைகளை மேலே கூறியது போல் கிழவோளுக்கு உரியதாக இருந்ததை ஆணுக்கும் உரியதாக்க விரும்புகிறார்.
ஒரு கணவன் ஒரே ஊரில் வாழ்ந்தாலும், தாம் வாழும் சேரிக்கு வந்தாலும், தம் மனைவியை ஏதிலாளர் பிணம் போலப் பார்த்த பரத்தமை கொடுமை'' கூடாது என்பதற்காகவே பரத்தையரைத் தழுவுதலை இருட்டறையில் ஏதில் பிணம்தழுவுவதற்கு ஒப்பாகக் (913) காட்டுகிறார்.
இவ்வாறு வாழ்வான், தனிமனிதன், ஆண், பெண் என்று வேறுபடுத்தாமல் எல்லோருக்கும் மேற்குறிப்பிட்ட அறிவும், பண்பும், தொழிலும் முதலிய அனைத்து ஒழுக்கங்களுமே வாழ்க்கைப் பொருளாகக் கருதப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.
4.3 காமத்துப்பால்
வள்ளுவர் தன்னை ஒரு சிறந்த அக இலக்கியக் கவிஞனாக வெளிப்படுத்திக் கொண்டது காமத்துப்பாலில் தான். எனினும் அதிலும் தன்னை இல்லறத்தைச் செம்மைப்படுத்தும் சமுதாயச் சிற்பியாகவே காட்டிக் கொள்கிறார்.
இல்வாழ்க்கை எல்லோருக்கும் உரியது. அதில் உயர்வு தாழ்வு இல்லை. சமுதாயத்தை வடிவமைக்கும் இல்லறத்தாரின் கடமைகளில் அரசனின் குடும்பத்திற்கும் ஆண்டியின் குடும்பத்திற்கும் வேற்றுமை இல்லை என்று வள்ளுவர் கருதுகிறார். எனவேதான் சங்க இலக்கியத்திலிருந்து மாறுபட்டுத் தலைவன் தலைவி என்ற சொல்லைப் பயன்படுத்தாது தவிர்த்துள்ளார்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்றாலும் பெண்ணின் புலவியை உணர்ந்து ஊடலைத் தீர்க்காத கணவனிடம் அவள் ஊடுதல் கூடாது என்று அறிவுறுத்துகிறார். ''நோதலும் எவன் மற்று நொந்தாரை அஃதறியும் காதல் இல்லா வழி'' (1308), ''நீரும் நிழலது இனிதே புலவியும், வீழுநர் கண்ணே இனிது'' (1309). இல்லையெனில் அது பிரிவுக்கு வழிவகுத்துவிடும் என்று கருதியுள்ளார்.
மேற்குறிப்பிட்டவற்றால் வள்ளுவர், 1. இல்வாழ்க்கையே ஒரு சிறந்த சமுதாயத்தை வடிவமைக்கிறது. 2. இல்லறத்தின் உறுப்பினர்களாகிய கணவன், மனைவி, மக்கள் ஆகிய மூவரும் சமுதாய அறத்தைக் கடைப்பிடித்து (அறத்துப்பால்) வாழ்க்கைப் பொருளாகக் கருதப்படும் அறிவு, பண்பு, தொழில், ஒழுக்கம் முதலியவற்றைப் (பொருட்பால்) கைக்கொள்ள வேண்டும். 3. அப்போது அவர்கள் சமுதாயத்தின் உறுப்பினர்களாகவும் ஆகின்றனர். 4. எனவே, ''இல்லறமே சமூக அறம் ஆகிறது'' என்று கருதி வள்ளுவர் இல்லறத்தின் விளக்கமாக முப்பாலையும் வடிவமைத்துள்ளார் என்பது அறியப்படுகின்றது.
அடிக்குறிப்புகள்
1. கலித்தொகை, தஞ்சைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984, பாடல் எண் 92 (1-16).
2. மேலது, பாடல் எண்கள் 9, 38.
3. திருக்குறள் பரிமேலழகர் உரை, கழக வெளியிடு, சென்னை, 1956.
4. தொல்காப்பியம் பொருளதிகாரம், கற்பியல், கழக வெளியீடு, சென்னை, 1980, நூற்பா எண். 11.
5. தொல்காப்பியம், மேற்படி, நூல், நூற்பா எண் 51.
6. குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சா., பதிப்பு, சென்னை 1937, பாடல் எண் 231.
முனைவர் சி. கலைமகள்
விரிவுரையாளர் - தமிழ்
6, சாய்விஷால், பாடியா கார்டன் எதிரில்
மணப்பாக்கம் மெயின் ரோடு
மணப்பாக்கம், சென்னை - 116.
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக