நண்பர் நட்-- 'நட் 'டாவது, 'போல் 'டாவது என்று நினைக்காதீர்கள் ' 'நடேசன் ' என்ற பெயரைத் தான் 'நட் ' என்று 'ரத்தினச் சுருக்க 'மாகச் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் நண்பர்.
காரணம், தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழில் கவிதை எழுதுவதை அகெளரவமாக எண்ணி, அவர் ஆங்கிலத்தில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டதுதான் '
இதனால் ஆங்கில நண்பர்கள் மட்டுமல்ல; ஆங்கில நாணயங்களான பவுன், ஷில்லிங் பென்ஸ்உம் அவருக்குத் தாராளமாகக் கிடைத்து வந்தது.
எனினும், அந்த நோபல் பரிசை-- உலகம் முழுவதும் ஒரே நாளில் தன்னை அறிமுகப்படுத்தி வைத்துவிடும் சக்தி வாய்ந்த அந்த நோபல் பரிசை- ஒரு முறையேனும் தட்டிக்கொண்டு விடவேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆசை அவருக்கு. இதனால் அந்தப் பரிசுக்குரிய காலம் வரும்போதெல்லாம் அதை ஆவலுடன் எதிர்பார்ப்பதும், எதிர்பார்த்து ஏமாற்றமடைவதும் அவருக்கு வழக்கமாயிருந்தது.
* * *
ஒரு நாள், 'வீடு வேண்டும்; பெரிய வீடாக வேண்டும் ' ' என்று தம் கைகள் இரண்டையும் அகல விரித்துக் காட்டிக்கொண்டே வந்தார், நண்பர் நட்.
'நீங்கள் நான்கு பேர்தானே இருக்கிறீர்கள் ? இப்போதிருக்கும் வீடு போதவில்லையா, உங்களுக்கு ? ' என்றேன் நான்.
'எங்களுக்காகக் கேட்கவில்லை, நான். லண்டன் நண்பர் பட் என்பார் வரப்போகும் வசந்த காலத்தின்போது இந்தியாவுக்கு வருகை தரப் போவதாக எழுதியிருக்கிறார். கிடைத்தற்கரிய அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, நான் அவருக்கு ஒரு நாள் விருந்து வைக்கலாமென்று நினைக்கிறேன். இப்போதிருக்கும் வீடு அதற்குத் தகுதியாயிருக்கும் என்று தோன்றவில்லை. எனவே தான்... '
'பாக்ஸ் ரோடில் ஏதோ ஒரு பங்களா காலியாயிருப்பதாகச் சொன்னார்கள். சாயந்தரம் வேண்டுமானால் வாருங்களேன்; போய்ப் பார்த்துவிட்டு வரலாம் ' என்றேன் நான்.
'நன்றி ' ' என்று 'நாகரிக 'மாகச் சொல்லிவிட்டு-- அதாவது உதடு உள்ளத்தைத் தொடாமலும், உள்ளம் உதட்டைத் தொடாமலும் சொல்லிவிட்டு நகர்ந்தார் அவர் '
அவரைப் போன்றவர்களுக்கு அதுதானே நாகரிகம் ?
* * * *
சொன்னது சொன்னபடி, அன்று மாலை குழந்தை விண்டெருடன் நண்பர் நட் வந்தார். மூவரும் பாக்ஸ் ரோடுக்குச் சென்றோம். வழியில், 'சாவியை வாங்கிக்கொண்டு விட்டார்களா ? ' என்றார் நண்பர்.
'ஓ, வாங்கிக்கொண்டு விட்டேனே ? ' என்றேன் நான்.
பார்ப்பதற்கு அழகாய்த்தான் இருந்தது பங்களா; ஆனால் கிழக்குப் பார்த்த வாசல்........
'தெற்குப் பார்த்த வாசலாயிருந்தால் நன்றாயிருந்திருக்கும் ' என்று தம் முதல் குறையை முதல் முதலாக வெளியிட்டார் நண்பர்.
'கிழக்குப் பார்த்த வாசலும் நல்லதுதான் ' ' என்றேன் நான்.
'வாசலில் வேப்பமரமல்லவா இருக்கிறது ? பூவரசு வைத்திருந்தால் விசேஷமாக இருந்திருக்கும் ' ' என்று நண்பர் தம் இரண்டாவது குறையை வெளியிட்டார்.
'அதனாலென்ன, நீங்கள் வந்த பிறகு வேண்டுமானால் பூவரசும் கொண்டுவந்து வைத்துக் கொள்ளுங்களேன் ' '
'வீட்டின் அகலம் எத்தனை அடி இருக்குமென்று நினைக்கிறீர்கள் ? '
'ஏனாம் ? '
'இருபத்தைந்து அடி இருந்தால் மனைவி மாண்டு போவாளாம், ஸார் ' '
'கவலைப்படாதீர்கள்; முப்பது அடிக்குக் குறையாது ' '
'நீளம் ? '
'நாற்பத்து நான்கு அடி இருக்கலாம்....... '
'ஐயையோ ' கண்ணே போய் விடுமாமே ? '
'ஆபத்துத்தான் ' கொஞ்சம் பொறுங்கள்; கையாலேயே அளந்து பார்த்துவிடுகிறேன் ' ' என்று அளந்து பார்த்துவிட்டு, 'சரியாக நாற்பத்திரண்டு ' ' என்றேன் நான்.
'சந்தோஷம்; அஷ்ட லக்ஷ்மிகளும் குடியிருப்பார்கள் என்பது சாஸ்திரம் ' '
'எல்லா வகையிலும் ஆங்கில நடை உடை பாவனைகளைப் பின்பற்றும் நீங்கள், நமது சாஸ்த்திரத்தில் இவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்திருப்பீர்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ' '
'நெற்றியில் 'நாம 'த்தைப் போட்டுக்கொண்டு தலையில் 'ஹாட் 'டையும் வைத்துக் கொள்கிறார்களே சிலர், அவர்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்களேன் ' 'என்றார் அவர் சிரித்துக் கொண்டே.
நானும் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே கதவைத் திறந்தேன்.
'மாடிப்படி ஹாலிலேயே இருக்கிறதா, நல்லது தான் ' '
'நல்ல வேளை, பின்பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லாமல் இருந்தீர்களே ? '
'தெற்குப் பார்த்தாற்போல் இரண்டு ஜன்னல்கள் வைக்கவே வைத்தார்கள்; அவற்றை இன்னும் கொஞ்சம் பெரிதாக வைத்திருக்கக்கூடாதோ ? '
'வைத்திருக்கலாம்; அப்புறம் ? '
'மெட்ராஸ் டெர்ரஸ்உக்குப் பதில் பாம்பே டெர்ரஸ் போட்டிருந்தால் இந்த மரங்கள் கண்ணை உறுத்தாது ' '
'ம், அப்புறம் ? '
'இன்னும் எத்தனையோ குறைகள்; இருந்தாலும்....... '
இந்தச் சமயத்தில் அவருடைய குழந்தை விண்ட்டெர் ஓடிவந்து, 'அப்பாப்பா ' எனக்கு வீடு ரொம்பப் பிடித்துப்போய்விட்டது, அப்பா ' அதோ இருக்கிறது பாருங்கள் மாடிப்படி, அந்த மாடிப்படிக்குக் கீழே இருக்கும் சந்தில் நான் ஒளிந்து கொண்டுவிட்டால், அண்ணா மான்ஸ்உனால் என்னைப் பிடிக்கவேமுடியாது, அப்பா ' ' என்றாள் உற்சாகத்துடன்.
'பார்த்தீங்களா, இந்த வீட்டைப் பற்றி உங்களுக்கு எத்தனையோ குறைகள் ' உங்கள் குழந்தைக்கோ ஒரு குறையும் தோன்றவில்லை; தனக்குக் கிடைத்த ஒரு மாடிப்படிச் சந்தை வைத்துக்கொண்டு, 'வீடே எனக்க்கு ரொம்ப ரொம்பப் பிடித்துப்போய்விட்டது ' ' என்கிறாள் திருப்தியுடன் ' என்றேன் நான்.
அவ்வளவு தான்; 'எக்ஸெலெண்ட் ஐடியா, ப்ரில்லியண்ட் ஐடியா ' ' என்று ஒரே கத்தாகத் கத்திக் கொண்டே துள்ளுத் துள்ளென்று துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டார் கவிஞர் நட்.
'என்ன ' என்ன வந்து விட்டது, உங்களுக்கு ? ' என்றேன் நான், ஒன்றும் புரியாமல்.
'சந்தேகமேயில்லை, இந்த ஆண்டு நோபல் பரிசு எனக்குத்தான் ' ' என்றார் கவிஞர், மீண்டும் ஒரு துள்ளுத் துள்ளிக் குதித்தபடி.
'வாங்கும்போது வாங்கிக் கொள்ளுங்களே; அதற்காக இப்போதே 'குதி, குதி ' என்று குதிப்பானேன் ? ' என்றேன் நான்.
'உங்களுக்குத் தெரியாது, ஸார் ' இப்படி ஓர் 'ஐடியா ' இதுவரை 'ஸ்ட்ரைக் ' ஆகாமல்தான் எப்போதோ வாங்கியிருக்கவேண்டிய நோபல் பரிசை நான் இன்னும் வாங்காமலிருக்கிறேன். கடைசியில் என் கண்மணியாலல்லவா அந்த 'ஐடியா ' எனக்கு 'ஸ்ட்ரைக் ' காகியிருக்கிறது ? ' என்று சொல்லிக் கொண்டே குழந்தையைத் தூக்கி 'முத்து,முத்து ' என்று முத்த ஆரம்பித்துவிட்டார் அவர்.
'அப்படி என்ன ஐடியா ஸார், திடாரென்று உங்களுக்கு 'ஸ்ட்ரைக் 'காகிவிட்டது ? ' என்று கேட்டேன் நான்.
'மனிதன் பேராசை பிடித்தவன்; அவனுக்கு என்ன கிடைத்தாலும் திருப்தி என்பதே ஏற்படுவதில்லை. மேலும் மேலும், 'இது கிடைக்கவில்லையே, அது கிடைக்கவில்லையே ' ' என்று கிட்டாத பொருள்களுக்காகக் கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்கிறான்; ஆனால் குழந்தைகள்--கல், மண், கதவிடுக்கு, மாடிப்படி சந்து-- எதுகிடைத்தாலும் திருப்தியடைந்து விடுகின்றன. இந்த அற்புதமான கருத்தை ஆதார சுருதியாக வைத்து, அபூர்வமான காவியம் ஒன்று எழுதினால் நோபல் பரிசு எனக்குக் கிடைக்காமல் வேறு யாருக்கு ஸார், கிடைத்துவிடும் ? ' என்றார் அவர் மிடுக்குடன்.
'நல்லவேளை ' என்னிடம் சொன்னதுபோல் வேறு எந்தக் கவிஞனிடமாவது இந்தக் கருத்தை சொல்லிவிடாதீர்கள்; அவன் உங்களை முந்திக் கொண்டு விடப்போகிறான் ' ' என்று நான் அவரை எச்சரித்து வைத்தேன்.
'ஆமாம், ஆமாம்; நான் இந்தக் காவியத்தை எழுதி முடிப்பதற்கு முன்னால் நீங்களும் வேறு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் ' ' என்று என்னையும் பதிலுக்கு எச்சரித்துவிட்டுச் சென்றார் அவர்.
* * * *
நாலைந்து மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கடற்கரைக்குப் போய்விட்டுக் கவிஞர் 'நட் 'டின் வீட்டு வழியாக வந்து கொண்டிருந்தேன்.
வானத்தை நோக்கியபடி கவிஞர் வாசலில் நின்று கொண்டிருந்தார்.
'என்ன மிஸ்டர், நட் ' காவியத்தை எழுதி முடித்து விட்டார்களா ? ' என்றேன் நான், பழகிய தோஷத்துக்காகப் பார்த்தவுடன் ஏதாவத் பேசி வைக்கவேண்டுமே என்று '
'நீங்களா ? வாங்க ஸார், வாங்க ' இன்னும் நாலே நாலு அடிகள்தான் பாக்கியிருக்கின்றன. அதைப்பற்றித்தான் இப்போதும் யோசிக்கிறேன், யோசிக்கிறேன்,யோசித்துக்கொண்டே இருக்கிறேன் ' ' என்றார் அவர்.
'மன்னியுங்கள்;நல்ல சமயத்தில் வந்து உங்கள் கற்பனைக்குத் தடையாக இருந்துவிட்டேன் ' ' என்று நான் அவருக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, மேலே நடந்தேன்.
அப்போது 'ஓ ' என்று அலறிக் கொண்டிருந்த குழந்தை விண்ட்டெருடன் அவருடைய மனைவி அங்கே வந்து, 'இவளை என்னவென்று கேட்டார்களா ? ' என்றாள் சிரித்துக் கொண்டே.
'என்னவாம் என் கண்ணுக்கு ? ' என்றார் கவிஞர், நோபல் பரிசுக்கு வித்திட்டுத் தந்த தன் அருமைக் குழந்தையை அன்புடன் வாங்கி அணைத்தபடி.
'வானத்தில் இருக்கும் நிலவைப் பிடித்து இவளுக்குத் தரவேண்டுமாம்; அப்போதுதான் இவள் சாப்பிடுவாளாம் ' '
அவ்வளவுதான்; தலையில் இடி விழுந்ததுபோல் அதிர்ச்சியுற்ற கவிஞர் நட், குழந்தையைச் 'சட்டென்று ' இறக்கிக் கீழே விட்டுவிட்டு அவசர அவசரமாக உள்ளே சென்றார். பூர்த்தி பெறாத மனோரதம் போல் பூர்த்தி பெறாமலிருந்த அந்தக் கருத்தோவியத்தை எடுத்துக்கொண்டு வந்து சுக்கு நூறாகக் கிழித்து எறிந்துவிட்டு, 'போச்சு, என் முயற்சி அத்தனையும் வீணாய்ப் போச்சு ' - என்ன பேராசை இந்த குழந்தைகளுக்கு ? இவையும் மனிதர்களைப் போலவே கிட்டாத பொருள்களுக்கெல்லாம் கொட்டாவி விடுகின்றனவே ? - இனி நோபல் பரிசாவது, எனக்குக் கிடைக்கப் போவதாவது ? ' என்றார் பெருமூச்சுடன்.
'மனிதக் குழந்தைதானே ? பிறக்கும்போதே பேராசையும் சேர்ந்து பிறந்துவிட்டாற் போலிருக்கிறது ' ' என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன் நான் '
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக