அவன் கதையெழுதிக்கொண்டிருந்தான். தூக்கம் கழுவித் துடைத்திருந்த மனசுக்குள் நினைவும் உணர்வும் ஊறி விரலில் கசியக் கசிய எழுத்து வேகமாக ஓடியது. உடம்பு குளிரை மறந்து முறுக்கேறியிருந்தது.
கடலுக்குமேல் மெல்லக் கலையும் சாம்பல் புகைமண்டலம். அங்குமிங்குமாகத் திரியும் பறவைத் தூள்கள். தொலைவிலிருந்து சூரியனைப் புரட்டித் தள்ளிவரும் அலைகள்.
மைதானத்தில் மழை பரப்பியிருந்த நீரில் சர்க்கரைச் சாரல் உதிர்ந்து கரைந்தது. காக்காய்கள் குதித்துக் குதித்து தலையால் கோலிக் குளித்துச் சிலிர்த்தன.
மனைவி பாத்ரூமுக்குள்ளிருந்தாள்.
'தலைய ஒணத்துடா. '
முடியை உதறிக்கொண்டே மூத்தவள் வராண்டா சுவருக்கு மேல் அசையும் வாதுமைக் கொழுந்துகளை நீவிவிட்டாள். முன்பு கொழுந்துகளை எட்டிப் பார்த்தவள் இப்போது தொட்டுப் பார்க்கிறாள்.
சின்னவன் தாடை நடுக்கத்தில் சட்டை தேடினான். தலையில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அவனுக்குச் சிணுங்கல்கூடகுளிர்ந்துவிடுகிறது.
மனைவி துணி கும்மினாள்.
'அந்தப் பய அழுகிறது கேக்கலயா. காது இடிஞ்சா போச்சு. வீட்ல ஆம்பள இல்லன்னு எண்ணைக்கோ முடிவாயிருச்சு. '
அவள் வந்து சேலைத் தலைப்பால் சின்னவன் தலையை இன்னொரு தடவை துவட்டி ஈரம் பார்த்தாள். எழும்பியிருந்த முடியை மடக்கித் தடவினாள். சட்டையை எடுத்துக் கொடுத்துவிட்டு சமையலறைக்குப் போனாள்.
'வந்து கொட்டிக்கடா. ஸ்கூலுக்குப் போகணுமிங்கிறது ஞாபகமிருக்கா. இப்பவே தகப்பன் புத்தி தலையில ஏறிக்கிருச்சா. '
அவன் மும்முரமாகப் பேனாவில் சவாரிசெய்தான்.
'ஒடம்புச் சதைய அறுத்துக் குடுத்தமாதிரி மாசம் மாசம் ஸ்கூலுக்கு அழுகிறது ஒங்களுக்கெங்க தெரியும். '
மூத்தவள் கொழுந்துகளைப் பிரிந்து வந்தாள். சின்னவன் தயாராக உட்கார்ந்திருந்தான். சாப்பிட ஆரம்பித்தார்கள்.
'மழ வந்தா கொழந்தைக நனையாமப் போறதுக்கு ஒரு கொட உண்டுமா. தனக்குத்தான் வேண்டாம்னா அதுகளுமா நனையணும். '
அவன் தலை நிமிரவில்லை. கால்மடிப்பைத் தளர்த்தினான்.
பாத்ரூமுக்குள் மறுபடியும் துணியின் அங்கலாய்ப்பு.
'இடுப்பு வலிக்க எழுதி காலாணாவுக்கு வழி உண்டுமா. இந்த வயசுலயே கண்ணக் கெடுத்து கண்ணாடி போட்டாச்சு. தலையக் கொடஞ்சு மயிரு நரச்சிருச்சு. இங்க இப்படி உக்காந்துட்டுப் போயி ஆபீசுலயும் உக்காந்தா ஒடம்பு என்னத்துக்காகும். நம்ம படுத்துக்கிட்டா என்னன்னு கேக்கிறதுக்கு ஆளு உண்டுமா. நம்மளாத்தான் உருண்டு எந்திரிக்கணும். நோய வெலைக்கு வாங்குறதுக்கா எழுதணும். டாக்டருக்குக் குடுத்து முடியிதா.. எழுதியெழுதி கிழிச்சுப் போடுற பேப்பர கொழந்தைகளுக்குக் குடுத்தாலாவது பாடம் எழுதிப்பாக்கும். '
அவளுக்கு முன்னால் அழுக்கு நுரை கோபுரங்கட்டியிருந்தது. அடித்து இருத்திவைத்த குழந்தைகளைப் போல் கசக்கிய துணிகள் உம்மென்று உட்கார்ந்திருந்தன.
'தாலிக்கயறு நெறம் வெளுத்துட்டுப் போகுது. புதுசு ஒண்ணு வாங்கித் தாங்கன்னு சொல்லாற நாளில்ல. அத காதுலயே போட்டுக்கிறதில்ல. தங்கத்துல செயினா கேக்காக. நாலணாக்கயறு. அதுக்கும் பஞ்சமாப் போச்சு. ஒரு பியூன் வீட்டுக்காரி வெரல் தண்டியில செயின் போட்ருக்கா. பாத்தா வெக்கமாருக்கு. ஸ்கூலுக்குப் போனா அத்தனபேரும் கழுத்தவே பாக்கிறாங்க. சேலைய மூடி கழுத்த மறச்சா சொகமில்லையான்னு கேக்கிறாங்க... ஒரு நேரத்துல வித்தா ஒருநேரத்துல வாங்கணும். பின்னால வாங்கலாம்னு சொல்லித்தான வித்தொம். அடுத்த வருசம் அடுத்த வருசம்னு ஒவ்வொரு வருசமும் வந்துட்டுத்தான் போகுது. செத்ததுக்குப் பின்னால வாங்கினாச் சரி. '
அவளது கைகள் தொடர்ந்து உச் கொட்டின.
'குடும்பத்துல கஸ்டம் எந்நாளும் இருக்கத்தான் செய்யும். அதப்பாத்தா முடியுமா. இருக்கிறது ஒரு பொண்ணு. அது உக்காந்தா போட்டுப் பாக்க மினுக்குனு ஒரு பண்டம் இருக்குதா. ஆம்பளைகளே கழுத்துல போட்டு அத பெரிசா காட்டாட்டு அலையிறாங்க. பொம்பளைக ஒண்ணுமில்லாம இருந்தா யாரு மதிக்கிறாங்க. '
அவன் பேப்பரை மறுபக்கம் திருப்பியிருந்தான். குழந்தைகள் புஸ்தகங்களை அடுக்கிப் பைக்குள் திணித்தார்கள்.
'என்னப்போல கயறு போட்ருந்த கமலாகூட பெரிய செயின் வாங்கீட்டாங்க. நேத்து ஸ்கூலுக்குப் போறவங்க பாத்துட்டு பேசாமப் போறாங்க. நின்னு ஒருவார்த்த பேசினா என்ன. செயின பிடுங்கிக்கிருவாங்களா. இத்தன நாளும் என்பக்கத்துல உக்காந்து கொழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவாங்க. நேத்து கிட்டயே வரல. அவசரமா ஊட்டி முடிச்சிட்டு முந்திப் போயிட்டாங்க. எனக்கு அழுகையா வந்துருச்சு... யாருட்டச் சொல்றது. சொவர்லதான் முட்டிக்கிறணும். '
அவள் பக்கெட்டிலிருந்து பழைய தண்ணீரை வெடுக்கென்று ஊற்றி நுரையை விரட்டினாள். எல்லாம் சேர்ந்து கழிவுக் குழாயில் கொடகொடத்தது. டேப்பைத் திறந்துவிட்டாள். பக்கெட்டில் புதுத் தண்ணீரின் இரைச்சல். துணிகளை உள்ளே அமுக்கி குடுமியைப் பிடித்து தூக்குவதும் தண்ணீரைக் கொட்டுவதும் தொடர்ந்து நடந்தது.
அவன் முதுகுக் குறுக்கை நெளிக்கக்கூட நேரமில்லாமல் எழுத்தில் லயித்திருந்தான். கதை வெண்ணெயாகத் திரண்டு வந்தது.
கழுவிய துணிகள் நீர் கக்கிக்கொண்டு கொடியில் தொங்கின. அவள் வெளியே வந்து ஸ்டவ்வில் உட்கார்ந்திருந்த பானையின் மூடியைத் திறந்து பார்த்தாள்.
'வென்னீர் கொதிச்சிட்டுக் கெடக்கிறது யாருக்குத் தெரியிது. குளிக்கக்கூட நமக்கு நேரங்கெடைக்க மாட்டேங்குது.
துணி தேடி பானையை பாத்ரூமுக்குள் தூக்கிக்கொண்டு ஓடினாள். வந்து ஸ்டவ்வில் தண்ணீர் தெளித்து அணைத்தாள்.
'ஸ்டவ் ஒழுங்கா எரியிதா. தூண்டிவிட்டா குதிக்குது. ரிப்பேருக்குக் குடுத்தா ரூவா கேப்பான். இத என்னன்னு பாக்கிறதுக்கு முடியல. நம்ம கத இப்படியிருக்குது. '
வராண்டாவுக்கு வந்து வெளியே கைநீட்டினாள். மயிர்களில் சாரல் கோர்த்தது. ரெண்டு துண்டெடுத்து குழந்தைகளுக்கு முக்காடு கட்டினாள். பைகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.
'போயிட்டு வாறவரைக்கு வென்னீர் ஆறீட்டுக் கெடக்காம இருந்தாச் சரி. '
மாடிப்படிகளில் சின்னக் கால்களின் ஓட்டம் கேட்டது. அவனால் எழுத்தைத் தொடரமுடியவில்லை. மூக்குக்குள் சிரித்துக் கொண்டான். அதுகூட பலமாகக் கேட்டது. ஆபீஸ் கடிகாரமுள் நினவில் எழுந்து பாத்ரூமுக்கு விரைந்தான்.
சாயங்காலம் அவன் வீட்டுக்கு வரும்போது மனைவி சந்தோசமாக இருந்தாள். பல்கோர்வை வெள்ளை முகத்தின் மெல்லிய மஞ்சள்பூச்சை அடிக்கடி மிஞ்சியது. தாலிக்கயிற்றிலும் மஞ்சளால் நிறமேற்றி வெளியில் தெரியும்படி போட்டிருந்தாள்.
அவன் முகங்கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தான்.
'கொழந்தைகள் எங்க. '
'கீழ வெளையாடுறாங்க. '
'ஆச்சரியமாருக்கே. '
'அதுகளுக்கும் கட்டிப் போட்டதுபோல இருக்குமில்ல. கொஞ்சநேரம் வெளையாடாட்டு வரட்டுமே. '
'ஒனக்கு பொறுமையா குளிக்கிறதுக்கெல்லாம் நேரங்கெடைக்குதா. '
'மதியம் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து குளிச்சென்... ஒங்களுக்கு ஒண்ணுதெரியுமா. '
'என்னவிஷயம். '
'இருங்க அடுப்பில காபி வச்சென். '
அவள் சூடாக காபி கொண்டுவந்து வைத்தாள். அவன் எடுக்கவில்லை.
'சொல்லு. '
'ஸ்கூல்ல கமலாவப் பாத்தென். '
அவள் வய்விட்டுச் சிரித்தாள்.
'இதுக்கென்ன சிரிப்பு. அவங்கள தெனமுந்தான பாக்கிற. '
'என்னோட பேசீட்ருந்தாங்க. '
'பேசமாட்டங்கிறாங்கன்னு காலையிலதான் அடிச்சுக்கிட்ட. '
'என்ன பேசினாங்க தெரியுமா. '
'சொன்னாத்தான தெரியும். '
'கழுத்துல பழையபடி கயறு போட்ருக்காங்க. '
'அதுக்குள்ள புதுச்செயின் எங்க போயிருச்சாம். '
'புதுச்செயினா. '
அவள் இன்னும் உரக்கச் சிரித்தாள்.
'ஏன் பழசா. '
'பழசுமில்ல புதுசுமில்ல. '
'அப்புறம்.... '
நேத்து வர்றதா அவங்க அப்பா ஊருலருந்து ஒருவாரத்துக்கு முந்தியே கடிதம் போட்ருந்தாராம். '
'அதுக்கென்ன. '
'வந்து செயின எங்கன்னு கேட்டா என்ன சொல்றது. '
'உள்ளதச் சொல்லவேண்டியதுதான. '
'வித்துத் தின்னுட்டம்னு சொல்லமுடியுமா. '
'அதுதான நடந்தது. அவரும் குடும்ப நெலமையத் தெரிஞ்சுக்கிறட்டுமே. '
'ஒங்கபுத்தி ஒங்களவிட்டு எங்க போகும். '
'சரி அதுக்காக என்ன செஞ்சாங்களாம். '
'அண்ணைக்கிலருந்து வீட்டுக்காரர அரிச்சிருக்காங்க. அவரு அங்க இங்க ஓடி பணம் பெரட்டி கனமா கவரிங் செயின் வாங்கி வந்துட்டாரு. அப்பா நேத்து வந்துட்டு இண்ணைக்குப் போயிட்டாராம். அவரு போன ஒடனே கயற எடுத்து மாட்டிக்கிட்டாங்க. '
'அடடா வீண்செலவுதான. பணத்துக்கு என்ன கஸ்டப்பட்டாரோ. '
'இனியும் அவங்க அப்பா வருவாருல்ல. அதனால பத்தரமா கழட்டி வச்சிட்டங்க. இல்லன்னா கவரிங் வெளுத்துப் போகுமே... நல்லவேள எனக்கு அப்பாவுமில்ல அம்மாவுமில்ல. '
அவனுக்கு நெற்றிக்குள் குடைந்தது. ராத்திரிக்கு கதையெழுதமுடியுமென்று தோணவில்லை. தூக்கம்கூடச் சந்தேகந்தான்.
'கொழந்தைக இன்னும் வரலயா. '
'காபி ஆறிப்போயிருக்கும். '
அவள் வெளியே நின்று குழந்தைகளைத் தேடினாள். அவன் அவளையே பார்த்தபடி காபியை விழுங்கும்போது தொண்டைக்குள் விக்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக