நாட்டுப்புறப் பாடல்:-
நாட்டுப்புறம் என்பது கிராமமும் கிராமியம் சார்ந்த இடங்கள் ஆகும். இங்குப் பாடப்படும் பாடல்களை நாட்டுப் புறப் பாடல்கள் என்கிறோம்.
இப்பாடல்கள் எளியவை, இனியவை, எழுதப்படாதவை, வாயில் பிறந்து செவிகளில் உலவிக் காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. இவை என்று பிறந்தவை, எவரால் பிறந்தவை என வகுத்துக் கூற இயலாத பண்பும் பாங்கும் கொண்டவை.
உருவாகும் இடங்கள்:-
நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலும் காடு கழனிகளிலும், தோட்ட வயல்களிலும், நிலத்தை உழும் போதும், ஏற்றம் இறைக்கும் போதும், நாற்று நடும் போதும், களையெடுக்கும் போதும், கதிர் அறுக்கும் போதும் நாட்டுப்புற மக்களால் பாடப்படுகிறது.
ஆரம்பம் முதல் முடிவு வரை:-
நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை, தாலாட்டுப் பாடலில் தொடங்கி விளையாட்டு, காதல் பாடல்களில் வளர்ந்து திருமணப்பாடலில் நிறைவெய்தி ஒப்பாரிப் பாடலில் முடிவடைகிறது. அந்த அளவிற்கு நாட்டுப்புறப் பாடல்கள் மக்களோடு வாழ்கின்றன.
நாட்டுப்புறப் பாடலில் வளம்:-
நீல வானத்தையும், பசுமை நிறைந்த நிலத்தையும், வானுற ஓங்கி வளர்ந்த மலையையும், முத்து விளையும் கடலையும், மலையின் முடிவையும், கடலின் அடியையும், வற்றாத ஆறுகளையும், ஆறு பாய்ந்து கொழிக்கும் வயல்களையும் வயல்களில் உழைக்கும் மனித இனத்தையும் பற்றி நாட்டுப்புறப் பாடல்களில் காண முடிகிறது.
நாட்டுப்புறப் பாடலின் வகை:-
டாக்டர் சு. சக்திவேல் அவர்கள் சூழல் அடிப்படையில் எட்டாக வகுத்துள்ளார்.
1. தாலாட்டுப் பாடல்கள்
2. குழந்தைப் பாடல்கள்
3. காதல் பாடல்கள்
4. தொழில் பாடல்கள்
5. கொண்டாட்டப் பாடல்கள்
6. பக்திப் பாடல்கள்
7. ஒப்பாரிப் பாடல்கள்
8. பன்மலர்ப் பாடல்கள்
என வகைப்படுத்தி இவற்றின் உட்பிரிவையும் வகைப்படுத்தியுள்ளார். வேறு பல தமிழ்மொழி அறிஞர்களும், ஆசிரியப் பெருமக்களும் நாட்டுப்புறப் பாடல்களைப் பல வகைகளில் பல பொருள் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளனர்.
தாலாட்டுப் பாடல்கள்:-
தாய்மை உணர்வின் வெளிப்பாடாகவே தாலாட்டு மலர்கின்றது. தாலாட்டு என்ற சொல்லைத் தால்+ஆட்டு எனப் பிரிக்கலாம். தால் என்றால் நாக்கு என்றும் நாவை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு எனவும் பெயர் பெற்றிருக்கக் கூடும் எனக் கூறுவர்.
''கிண்ணியிலே போட்ட சோற்றைக்
கீறித் தின்னப் பிள்ளை இல்லை
ஊருக்குப் போகையிலே
உடன்வரப் பிள்ளை இல்லை''
என்று பிள்ளைக்காக ஏங்கும் பாடலைக் காண்கிறோம்.
கண்ணுறங்கு கண்ணுறங்கு - என்
கண்மணியே கண்ணுறங்கு
பாலைக் குடிச்சிபுட்டு - என்
பவளமே கண்ணுறங்கு
என்று தாய்தன் குழந்தையைத் தாலாட்டித் தூங்க வைக்கும் போது பாடும் பாட்டு இது.
குழந்தைப் பாடல்கள்:-
மான் போலத் துள்ளி, மலர்போல் சிரித்து, தேன் போலப் பேசித் திரியும் பருவம் குழந்தைப் பருவம். குழந்தையைப் பெற்ற தாயும், தந்தையும் தமக்கையும், பாட்டியும், பாடுகின்ற பாடல்களைக் குழந்தைப் பாடல் என்கிறோம்.
கடுகடு மயிலைலே ரெண்டானே
தவறி விழுந்தது கிழட்டானே
தூக்கி விட்டது இளவட்டம்
இளவட்டம் இளவட்டம்
எனச் சடுகுடு விளையாட்டுப் பாடல் அமைந்துள்ளது.
தேன் தேன்
என்னாத் தேன்
கொம்புத் தேன்
என்னாக் கொம்பு
மான் கொம்பு
என்று வினா விடைப் பாடல்களைப்பாடுவர்.
காதல் பாடல்கள்:-
அகத்தின் கண் மறைந்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும், வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காதல் பாடல் மூலம் காணலாம்.
அன்ன நடையழகி
அலங்கார உடையழகி
பின்னல் நடையழகி - செல்லம்மா
நம் சேதியைப் பற்றி சொல்லம்மா
என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிகாலாக இக்காதல்பாட்டுகள் பயன்படுகின்றன.
தொழிற் பாடல்கள்:-
இயற்கையைத் தனக்குக் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் செயலே தொழில் எனக் கூறப்படுகிறது.
''வினையே ஆடவர்க்குயிரே
செய்யும் தொழிலே தெய்வம்''
என்று கூறும் தொழிலைப் பற்றிப் பாடுவது தொழிற் பாடல். இது உழைப்பின் களைப்பைப் போக்கி வேதனைக்கு வடிகாலாகவும் அமைகிறது. கூடிப் பாடும் வகையில் அமைந்துள்ள இப்பாடல்களைத் தெம்மாங்குப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வண்டிக்காரன் பாட்டு எனப் பல வகையாகப் பிரிக்கலாம்.
கொண்டாட்டப் பாடல்கள்:-
மனிதன் பிறருடன் கலந்து தன்னுடைய மகிழ்ச்சினைப் பாட்டாகவும், கூத்தாகவும் வெளிப்படுத்தும் போது பாடப்படும் பாட்டு கொண்டாட்டப் பாடலாகும். இவை கும்மி, கோலாட்டம், பரிகாசப் பாடல்கள் போன்றவை ஆகும்.
கும்மியடி நல்லா கும்மியடி - அம்மா
குனிஞ்சு நல்ல கும்மியடி
குளக்கரை ஓரத்திலே பொண்ணு
குந்தியிருக்கா நல்லா கும்மியடி
என்று மகிழ்ச்சியோடு பருவப்பெண்ணுக்கு பாடப்படுகிறது.
பக்திப் பாடல்கள்:-
இயற்கையின் ஆற்றலைக் கண்டு அஞ்சிய மனிதன் வழிபடுவதன் மூலம் அதன் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம் என்று நம்பினான். அதன் அடிப்படையில் இறைவனைப் போற்றி வணங்கிப் பாடப்படும் பாடலே பக்திப் பாடலாகும்.
சந்திரரே சூரியரே
சாமி பகவானே
இந்திரனே வாசுதேவனே
இப்பமழை பெய்யவேணும்
மந்தையிலே மாரி மழை பெய்ய வேணும். என்று கடவுளை நினைத்து மழை வேண்டிப் பாடப்படுகின்றது.
ஒப்பாரிப் பாடல்கள்:-
இறந்தவர்களை நினைத்து அவர்மீது கொண்ட அன்பாலும், பாசத்தாலும் தன் வேதனையை இழப்பை எண்ணிப் பாடப்படும் பாடல்கள் ஒப்பாரிப் பாடல்களாகும். இவற்றைப் பிலாக்கணம், பிணக்கானம், கையறுநிலை, புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு, அழுகைப்பாட்டு என பலவகையாகக் கூறுகின்றனர்.
''தாலி பெருஞ்சரடு
தாழம்பூ நச்சரடு
தாலிமேல் கைவச்சா
தாளாதய்யா எம்மனசு''
என்று கணவனை இழந்த பெண் ஒப்பாரிப் பாடல் பாடுகின்றாள். சுருங்கக்கூறின் பெண்களின் சோக உணர்ச்சிகள் முழுமையும் ஒப்பாரிப் பாடல்களில் பிரிதிபலிப்பதைக் காணலாம். இவ்வாறாக மனித உள்ளத்தையும் ஆழத்தையும் அங்கே தோன்றி எதிரொலிக்கும் பல்வேறு இதய ஒளிகளையும் இன்ப துன்பங்களையும் ஆசாபாசங்களையும் வாழ்க்கைப் பேராட்டங்களையும், நாட்டுப்புறப் பாடல்களில் காணலாம். எனவே ஒரு நாட்டு மக்களின் நாகரிகத்தைப், பண்பாட்டைக், பழக்க வழக்கங்களை, வரலாற்றை, நாட்டு நடப்பை, உண்மையான உணர்வை, முறையே படம் பிடித்துக்காட்டுவன நாட்டுப்புறப் பாடல்களாகும்.
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக