மக்களது வாழ்க்கையை எவ்வித ஒளிவு மறைவின்றி விளக்குவது நாட்டுப்புற இலக்கியமாகும். மக்களின் சுய விருப்பு வெறுப்புகளை நாட்டுப்புற இலக்கியங்களில் பார்க்க முடிவதில்லை. உழைக்கும் மக்களில் ஒருவராலோ அல்லது பலராலோ ஒரே நேரத்தில் அல்லது பல நேரத்தில் உருவான பாடலின் அமைப்பே, நாட்டுப்புற இலக்கியமாகும்.
கதைப்பாடல் - விளக்கம்:-
பாலட் என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சமமான தமிழ்ச் சொல்லாக கதைப்பாடல் என்பது வழங்கி வருகின்றது. கதைப்பாடல் என்ற சொல்லால் நாட்டுப்புறவியலில் வில்லுப் பாடல்கள், உடுக்கடிப் பாடல்கள், பூசாரிப் பாடல்கள், கனியான் பாடல்கள் போன்ற பாடல்கள் குறிக்கப்படுகின்றன. கதையைப் பாடல்களாகச் சொல்வதால் கதைப்பாடல்கள் எனப்படுகின்றன.
கதைப்பாடலின் இயல்புகள்:-
மாக் எட்வர்ட் லீச் என்பவர் கதைப்பாடல்களின் இயல்புகள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார். இத்தகைய நாட்டுப்புறவியல் சார்ந்த கதைப்பாடல்கள் காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப மாறுபட்டமைதல் இயற்கை. ஆனால் இவைகளுக்குள்ளும் பொதுமையாகச் சில பண்புகள் ஓரளவு நிலையாகவும், அடிப்படையாகவும் காணப்படுகின்றன.
1. கதைப்பாடல் எடுத்துரைக்கப்படுவது.
2. அது பாட்டாகப் பாடப்படுவது.
3. உள்ளடக்கத்தாலும், பொருளாலும், நடையாலும், பெயராலும் கதைப்பாடல் மக்களுக்குரியது.
4. கதைப்பாடல் தனிச்சம்பவம் ஒன்றைப் பிரதிபலிப்பது.
5. தற்சார்பற்றது.
6. கதையின் நிகழ்ச்சிப் போக்கு உரையாடலாலும், சம்பவங்களாலும் முடிவை நோக்கி விரைவாக நகரும்.
கதைப்பாடல் குறித்த ஆய்வில் ஈடுபட்ட நா. இராமச்சந்திரன் தமிழில் காணப்படும் பல்வேறு கதைப்பாடல் வடிவங்களையும் ஆய்ந்த பின்னர், ஒரு முடிவுக்கு வருகிறார். குறிப்பிட்டதொரு பண்பாட்டில் குறிப்பிட்ட சில சூழல்களில் வாய்மொழியாக, ஒரு பாடகனோ அல்லது ஒரு குழுவினரோ சேர்ந்து நாட்டார் முன்னர் எடுத்துரைத்து இசையுடன் நிகழ்த்தும் அல்லது நிகழ்த்திய ஒரு கதை தழுவிய பாடல் கதைப்பாடல் ஆகும். அது மக்களால் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கப்படலாம்.
வெள்ளைக்காரன் கதைப்பாடல்:-
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரன் தாலுகாவுக்குட்பட்ட பூவியூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த சிவனணைந்த பெருமாள் நாடார் அவர்கள் புதல்வன் முத்தையா நாடார் என்பவரால் வெள்ளைக்காரன் கதை என்கின்ற நூல் சுவடியில் எழுதப்பட்டுள்ளது. இது கதைப்பாடல் வகையைச் சார்ந்ததாகும். இப்பாடல் மொத்தம் 516 வரிகளை உடையது. இதனை வில்லுப்பாடலாகப் பாடி வருகின்றனர்.
வில்லுப்பாடல்:-
நாட்டுப்புறப் பாடல்களின் தோற்ற காலத்தை வரையறுக்க இயலாது என்பது அறிஞர்கள் கருத்து. நாட்டுப்புற இலக்கியத்தின் ஒரு பிரிவான வில்லுப்பாட்டு இலக்கியத்தின் தோற்றமும் அத்தன்மை வாய்ந்ததாகும்.
வில்லுப்பாடல் - பெயர்க்காரணம்:-
வில்லுப்பாட்டு என்பதனை வில், வில்பாட்டு, வில்லு, வில்லடி, வில்லவினாவது, வில்லடிச்சான் பாட்டு, வில்லிசை எனப் பலவாறு கூறுவார். வில் என்ற கருவியை முதன்மையாகக் கொண்டு வில்லுப்பாட்டு எனப்பெயர் பெற்றது.
வில்லுப்பாட்டு தோன்றிய விதம்:-
தமிழ்ப் பொதிகை காட்டிடத்தே பகற்பொழுதெல்லாம் வேட்டையாடிச் சோர்ந்தான். மாலை நேரத்தில் செழித்த மரமொன்றின் அடியில் அமர்ந்தான். தன் கையமர்ந்த வில்லைத் தரையில் சார்த்தி அம்புகோலால் அவ்வில் நாணில் மெல்லிய தாளமோசை தோன்ற அடித்து, அத்தாளத்திற்கு ஏற்ப இன்னிசைத் தமிழ்ப்பாடல்கள் பாடித் தன் களைப்பு நீங்கப் பெற்றான். களைப்பை அகற்ற வந்த கலையாகிய வில்லிசை தென்பாண்டி நாட்டில் சிறந்து விளங்குகின்றது. வில்லுப் பாட்டை உருவாக்கியவர் அரசபுலவர், இவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறுவர்.
வில்லுப்பாடல் அமைப்பு:-
கதைப்பாடலில் கையாளப்படும் சொற்களும், நடையும் மக்களிடம் உள்ள அன்றாட வாழ்வு நடைமுறை ஆகும். அதே போன்று கதைப்பாடலில் ஒன்றான வில்லுப்பாடலின் கருத்தும் சொல்லும் இயல்பானதும் கேட்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்திலும் அமைந்திருப்பதால் இனிமையான ஓசை நயத்துடன் மக்கள் அனைவரும் விரும்பும் வகையில் வில்லுப்பாடல் அமைந்துள்ளது. வில்லுப்பாட்டில் கதைக்கரு இன்றியமையாததாகக் காணப்படும். வில்லுப்பாடல்கள் ஒரு கதையை வைத்துத்தான் பாடப்பட்டிருக்கும். வில்லுப்பாட்டு ஒரு குழுவினைக் கொண்டதாக அமையும். ஐந்து முதல் எட்டுப் பேர்கள் காணப்படுவர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான இசைக் கருவியை மீட்டுபவராக இருப்பர். இதில் வில்லடிப்பவரே தலைவர். ஏனையோர் கேட்டுக் கொண்டிருக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் பக்கவாத்தியக்காரர்களாக இருப்பர். ஆண்களால் மட்டும் நடத்தி வந்த இந்தக் கலை இன்று பெண்களைத் தலைவர்களாகக் கொண்டு வளர்ப்பதைக் காணலாம். வில்லுப் பாட்டைப் பாடுவதற்கு வில், வீசுகோல், குடம், உடுக்கை, தாளம், கட்டை ஆகிய துணைக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
கதைப்பாடலும் வில்லுப் பாடலும்:-
தமிழில் அம்மானைப் பாடல்களில் இருந்துதான் கதைப்பாடல்கள் வளர்ச்சி பெற்றுள்ளன எனலாம். கதைப்பாடலுக்கு அம்மானைப் பாடல்கள் என்ற பெயரும் உண்டு. முதலில் வீரம் பற்றிய கதைப் பாடல்கள் தோன்றியிருக்க வேண்டும். பின்னர் தெய்வக் கதைப் பாடல்களும், வரலாற்றுக் கதைப்பாடல்களும் வளர்ந்திருக்க வேண்டும்.
வில்லுப் பாடல் பாடப்பட்ட நோக்கம்:-
வில்லுப் பாடல் மக்களின் பொழுதுபோக்கிற்காகப் பாடப்பட்டதாகும். அது சுருங்கச் சொல்லி மக்களுக்கு விளங்க வைக்கும் தன்மையுடையது. உலகில் பேச்சு வழக்குக் கதைகளாக இருப்பவற்றை மக்கள் தாமே புரிந்து கொள்ளுமாறு, ரசிக்கும் அளவிலும், இசையோடு வில்லுப்பாட்டாகப் பாடப்படுகிறது. மக்களிடம் காணப்படும் குற்றம் குறைகளை நயமாக எடுத்துக் கூறுவதாகவும், வில்லுப்பாட்டுக் கலை முன்னேறியுள்ளது. இன்று தொழிலாகவும் இவ்வில்லுப்பாடல் வளர்ந்து வருகிறது. வானொலி, தொலைக்காட்சியில் பொழுது போக்கிற்காக நடத்தப்படுகிறது. பொதுவாக இக்கலை வளர்ச்சிக்காக எனவும் கொள்ளலாம்.
வெள்ளைக்கார சாமி கதைக்கரு:-
வெள்ளைக்கார சாமியின் கதை ஒரு நிகழ்ச்சியை முக்கியமாகக் கொண்டுள்ளது. பூவுலகில் உள்ள அரசர்களுக்கு கப்பல்கள் இருப்பதினால் தனக்கென்று தனியாக ஒரு கப்பல் வேண்டும் என்ற எண்ணத்தில் மரங்கள் வெட்டி கப்பல் செய்து லண்டன் பட்டினத்திலிருந்து வெள்ளைக்காரன் அந்தக் கப்பலில் கன்னியாகுமரி நோக்கி வரும் போது கப்பல் தவிட்டுத் துறைக்கு அருகில் மூழ்கி உடைந்து விடுகிறது. வெள்ளைக்காரன் உடன் இருந்தோருடன் இறந்து விடுகிறான். உலக இயல்புக்கு பொருந்தும் இந்த நிகழ்ச்சியுடன், செங்கிடாய்க்கார தெய்வத்தின் உலக இயல்புக்கு அப்பாற்பட்ட செயலை இணைத்து கதைப்பாடல் உருவாக்கப் பெற்றுள்ளது.
கதையில் வரும் அணி:-
இயல்பாக நிகழும் நிகழ்ச்சியில் கவிஞன் தான் கூறக்கருதும் பொருளை ஏற்றிக் கூறுதல் தற்புகழ்ச்சி அணி எனப்படும். பாறையில் மோதி கப்பல் உடைகிறது. பயணம் செய்தோர் இறக்கின்றனர். இது நிகழ்ச்சி, கொடி மரத்திற்கு பூஜை கொடுக்காத காரணத்தால் தெய்வம் கோபம் கொண்டு நரபலி வாங்குகிறது என்பது கவிஞரின் கருத்து. இதுவே நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை.
கதைச் சுருக்கம்:-
பரங்கித்துரை என்பவன் லண்டன் மாநகரிலே வசித்து வருகின்றான். தமிழக அரசர்கள் பலருக்கு கப்பல்கள் இருப்பதைக் கேள்விப்படுகின்றான். தனக்கென்று தனியாக ஒரு கப்பல் செய்து அதில் தமிழகத்திற்குச் செல்ல வேண்டும் என்பது அவன் ஆசை. இதற்காகத் தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள மலைகளிலே வளருகின்ற மரங்களில் கப்பல் கட்டுவதற்கு உரிய மரங்களைத் தேர்வு செய்து வெட்டி இலண்டன் மாநகருக்குக் கொண்டு செல்லுகின்றான்.
கப்பல் கட்டுவதற்கான பணியாளர்களான மாந்தையர் மற்றும் கொத்தன்மார்களை தமிழகத்திலிருந்தே கொண்டு செல்லுகின்றான். கப்பல் செய்து முடித்தபின் கப்பலுக்கான கொடிமரம் வெட்ட வேண்டும் என்று மீண்டும் காட்டிற்கு வருகின்றனர். உயர்ந்த சந்தனமரம் என நினைத்து அம்மரத்திலே செங்கிடாய்கார தெய்வம் உறைந்து இருந்தது. அதை அறியாமல் பரங்கித் துரையின் ஆணையின்படி மரம் வெட்டப்பட்டது. மரத்தை வெட்டும்போது உதிரம் வடிந்தது. ஆனாலும் தெய்வ நம்பிக்கை இல்லாமல் மரத்தை வெட்டி கொடிமரமாகச் செய்து கப்பலிலே நிறுத்தினர். பரங்கித்துரையை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று செங்கிடாய்க்கார தெய்வமும் கொடி மரத்தில் உறைந்தது.
கப்பல் பயணம்:-
கப்பலிலே பயணத்தின் போது தேவைப்படும் உணவு வகைகளையும், மருந்துப் பொருட்களையும், விஸ்கி, பிராந்தி, பில்டர் சிகரெட்டுகள் போன்றவற்றையெல்லாம் தேவைக்கு ஏற்ப ஏற்றிக் கொண்டு இலண்டன் மாநகரிலிருந்து கப்பல் புறப்படுகிறது. பல மாநகரங்கள், நகரங்கள், ஊர்கள், கடல்கள் கடந்த காயங்குளம் அருகே வருகின்றது. காயங்குளம் அருகே வரும் போது கப்பலில் சரக்கு வகைகள் தீர்ந்து விட்டதால், எல்லாவகையான பொருட்களையும் ஏற்றிக் கொண்டு கப்பல் காயங்குளத்தில் இருந்து கிளம்புகின்றது. அங்கிருந்து பல ஊர்களையும், இடங்களையும் பார்த்து வரும் போது கன்னியாகுமரியை நோக்கி வரும் வழியில் தவிட்டுத்துறை என்னும் அருகே கப்பல் வருகின்றது.
கப்பல் மூழ்கடிப்பு:-
கப்பல் தவிட்டுத்துறை அருகே வரும் போது கப்பலைக் கவிழ்க்க வேண்டும் என்று செங்கிடாய்க்காரன் காகமாக வடிவெடுத்து கொடிமரத்தின் மேல் அமர்ந்தான். கொடி மரத்தின் உச்சியில் காகம் அமரும் போது கப்பல் சற்று தடுமாற்றம் அடைவதை பரங்கித்துரை பார்த்தான். எனவே தொலைநோக்கு ஆடியால் காகத்தைப் பார்த்து கையில் உள்ள துப்பாக்கி கொண்டு காகத்தைச் சுட்டான். சுடும்போது காகமாக இருந்த செங்கிடாய்க்காரன் மறைந்து விட்டான். கப்பல் தவிட்டுத் துறை அருகே வரும்போது நரபலி கொள்ள வேண்டும் என்ற எண்ணமுடைய செங்கிடாய்க்காரன் செம்பருந்தாக வடிவம் கொண்டு கொடி மரத்தில் அமர்ந்துவிட்டான் உடனே கப்பல் கடலிலே ஆழ்ந்து விட்டது.
இறந்தோருக்கு வரம் கொடுத்தல்:-
கப்பலிலே வந்த பரங்கித் துரையும், அவன் பாளையக்காரர்களும், கப்பல் கட்ட உதவிய மாந்தையர்கள், கொத்தன்மார்கள் எல்லோரும் ஒருபோலவே மாண்டு போனார்கள். மாண்டவர்களுடைய ஆவி செங்கிடய்க்கார தெய்வத்திடம் வந்து முறையிட்டன. செங்கிடாய்க்காரன் சிவனுடைய அம்சமாகக் கருதப்படுகிறான். அன்றியும் நாட்டுப்புறங்களில் உள்ள சிவன் கோவில்களில் காவல் தெய்வமாகச் செங்கிடாய்க்காரன் உள்ளான். சிவனுடைய அருளால் பரங்கித் துரைக்கு தன் அருகில் ஓர் பூஜைக்கு இடம் கொடுத்தான்.
பரங்கித் துரைக்கு பூஜை:-
ஆண்டுதோறும் தைமாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை செங்கிடாய்க்கார சுவாமிக்கு திருவிழா நடைபெறும். செங்கிடாய்க்காரனுக்கு பூஜை முடித்ததும், வெள்ளைக்காரன் சுவாமிக்கு பூஜை கொடுக்கப்படும். முக்கியமாக வெள்ளைக்கார சுவாமிக்கு உயர்ரக மது வகைகள், பில்டர் சிகரெட்டு, துப்பாக்கி, தொப்பி, அங்கி போன்றன படையலாக வைக்கப்படுகின்றன.
கதையின் சிறப்புக் கூறுகள்:-
கப்பல் கட்டுவதற்கு எந்தெந்த மரங்கள் உதவும் என்பதும், கப்பல் கட்டுவதற்கு ஆகாத மரங்கள் எவை எவை என்பதும் பாடலில் பட்டியலிடப்படுகின்றன. இலண்டன் துறைமுகத்தில் இருந்து கடல் மார்க்கமாக கன்னியாகுமரி வரை உள்ள இடங்கள் வரிசைப்படி பட்டியலிடப்படுகின்றன. வேட்டி, துண்டு என அணிவது தமிழர் பண்பாடு, முழுக்கால் சட்டையும், முழுக்கை சட்டையும் அணிவது ஆங்கிலேயர் பண்பாடு. வெள்ளைக்கார சாமியின் உருவத்தில் மீசை, பொட்டு, முழுக்கை சட்டை படைக்கருவியாக வில், வேல், வாள், சூலம், ஈட்டி, பிரம்பு போன்றன இருப்பது மரபு, ஆனால் வெள்ளைக்காரனுடைய தற்பாதுகாப்பு படைக்கருவியாக தொலைநோக்கி ஆடியும், துப்பாக்கியும் அமைந்துள்ளன.
கப்பல் கட்ட உதவாத மரங்கள்:-
கப்பல் கட்ட ஆகாத மரங்களைப் பட்டியலிட்டு காட்டுகிறார். ஆசிரியர்,
வாட்டமில்லா மாமருது வண்டாளை குருத்தி நெல்லி
வல்லிபூரம் கொல்லியு மாகாது
அத்தியித்தி ஆலரசு அடுக்கடுக் காய் நெல்லி
ஆத்தி திரு வாத்தியுமாகாது
ஆலரசு பூவரசு ஆளி புளி தேளுளுவை
ஆனிஞ்சி குருவிஞ்சியு மாகாது
வெத்தி கருங்காலி நல்ல வில்லை பூரம் கொல்லி குமிழ்
வேங்கை கரு வேங்கையுமாகாது
என்ற பாடல் வரிகள் மூலம் கப்பல் கட்ட ஆகாத மரங்களைக் குறிப்பிடுகின்றார். கப்பலுக்கு ஆகும் மரங்கள்
தேடரிய சந்தனமும் திடமான ஆசினியும்
மலைதனியே நல்ல மரம் பார்த்து
தேக்கோடு சந்தனமும் சிறந்த கரு நாங்குடனே
சிறந்த வெள்ளைக் காரரவர் கூடி
புன்னையோடு காரிலுப்பை புகழ்பெரிய
வெண்ணாங்கும் புகழ்ந்துமரம் தன்னை வெட்டுவாராம்
இவ்வரிகள் மூலம் கப்பல் கட்ட உதவும் மரங்களாக சந்தனம், ஆசினி, மஞ்சனத்தி, மாமருது, தேக்கு, கருநாங்கு, புன்னை, காரிலுப்பை, வெண்ணாங்கு, ஈட்டி போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்.
கப்பல் கடந்து வந்த பாதைகள்:-
இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் டோவர் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்படுகிறது. டோவர் நீரிணைப்பு, இங்கிலாந்து சானல், பிரஸ்லி நகர், பெல்லித் தீவு, பிஸ்கே குடா, ஸ்பெயின் நாடு, கோயின் பாரு நகர், போர்ச்சுக்கல், லிஸ்பன் நகர், ராக்கா முனை, செயின்ட் வின்சென்ட் முனை, சிவிலாடர் நீரிணைப்பு, சிவிலாடர் நகர், ஸ்பெயின், பிரான்ஸ், தூஸணப் பட்டணம், ஜிவாகுடா, கார்ஸ’கா தீவு, சர்டேனியத் தீவு, ரோமாபுரி, நேப்பின்ஸ் நகரம், மெஜினா நீரிணைப்பு, டோரண்டா குடா, ராமக்கா முனை, கிரீஸ், காண்டியாத்தீவு, கைப்பிரஸ், பெய்ருட் நகர், சூயஸ் நகர், ஜித்தா துறைமுகம், ஏடன் நகர், ஏடன் குடா, கட்சு நகர், சூரத் நகர், மும்மை, பஞ்சிம் நகர், கார்வார், மங்களுர், மாகி நகரம், கேலிகட் பட்டணம், காயங்குளம், கொச்சி துறைமுகம், வேம்பநாட்டு காயல், காயப்பட்டணம், ஆப்புழை, கொல்லம், திருவனந்தபுரம், குளச்சல், மண்டைக்காடு, மணவாளக் குறிஞ்சி, பொழிக்கரை, பிள்ளைத்தோப்பு, ராசாக்கமங்கலம், பள்ளம், நச்சுப் பொய்கை, குமரன் தாழை, மணக்குடி, பொழிமுகம், மண்கோட்டை, அஞ்சுபனை மூடு, தலைக்குளம், கோவளம், குருசடி, தவிட்டுத்துறை என மொத்தம் 73 இடங்களை வரிசை மாறாது கூறி இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
வெள்ளைக்கார சாமியின் வழிபாட்டில் தமிழர் பண்பாடும் ஐரோப்பிய பண்பாடும் இணைந்துள்ளது. கப்பல் கட்ட உதவும் மரங்கள், ஆகாத மரங்கள் என ஒரு நாட்டுப்புற ஆசிரியர் வரிசைப்படுத்தி கூறி இருப்பது அருமை. இலண்டன் மாநகரிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள இடங்களை வரிசைப்படுத்தி கூறிக் இருப்பதும் இதன் சிறப்பு ஆகும்.
இவ்வழிபாடு கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள பூவியர் மற்றும் பூஜைப் புரை விளை போன்ற ஊர்களில் நடைபெறுகிறது.
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக