தமிழக நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் பெரும்பாலும் நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டை வெளிப்படுத்தும் முகமாகவே அமைந்துள்ளன. செயற்கரிய செயல்களைச் செய்தவர்கள், வீரமரணம் அடைந்தவர்கள், தவறாக கொலை செய்யப்பட்டவர்கள் போன்ற பலரைத் தெய்வங்களாக்கி அவர்களின் வரலாற்றைப் பாடல்களாகப் பாடியுள்ளனர். அவையே கதைப்பாடல்களாக உள்ளன. இவ்வகைப்பட்ட வழிபாட்டிற்குரிய நாட்டுப்புறத் தெய்வங்கள் அரிய ஆற்றலுடன் அருள் செய்வதாகவும் நம்பி வருகின்றனர். இக்கதைப் பாடல்களில் சிவன், பார்வதி, காளி, திருமால், அய்யனார், முருகன், விநாயகர் போன்ற பல தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. விநாயகர் பற்றிக் குறிப்பிடப்படும் செய்திகளை வகை தொகை செய்து இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான கதைப்பாடல்கள் தொடங்கும்போது காப்பு, வணக்கம், துதி போன்ற கூறுகளை அமைத்துப் பாடுவர். இவை இல்லாமல் நேரடியாகக் கதைக்குச் செல்லும் கதைப்பாடல்களும் உள்ளன. செங்கிடாக்காறன் கதைப்பாடலில் காப்பு, வணக்கம் எவற்றையும் கூறாமல் நேரடியாகக் கைலாயம் பற்றிய வருணனையுடன் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
விநாயகர் துதியில்தான் அதிகமானக் கதைப்பாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விநாயகர்தான் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் வடிவமானவர் என்பதாலும், முதல் வழிபாட்டிற்குரியவர் என்பதாலும் அவ்வாறு ஆரம்பித்திருக்கலாம்.
பிற தெய்வங்களைக் காப்பாகக் கொண்டும் கதைப்பாடல்கள் அமைந்துள்ளன. சுடலைமாடன் கதையில் கலைக்கு அதிபதியாகிய கலைமகளைக் காப்பாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
''தாயே சரசுவதி தப்பாமல் எந்நாவில்
நீயே குடியிருப்பாய் நிச்சமாய்''
என ஆசிரியர் ஆரம்பித்துள்ளார்.
விநாயகர் காப்பு:-
கூறவந்தக் கதைப்பாடல்களில் நல்லமுறையில் கதைகள் அமையவேண்டும் என்பதற்கு விநாயகர் காப்புத் தரவேண்டும் என பலகதைப் பாடல்களில் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதைப் பாடலிலும் ஒவ்வொரு வகையான அடைமொழிகளைக் கொடுத்துப் பாடியுள்ளனர். அவை விநாயகரின் பெருமையை, புராணச் செய்தியை அடியொற்றி அமைந்தவைகளாக உள்ளன.
''கார்பெருகும் குடவயற நாதனான் கணபதி தன்னிரு கரணங்கள் காப்பதாமே''
''காராரு மைங்கரன் தன்கழல் வீனையே காப்பாமே''
''தாரறுந் தங்கை நல்லாளுடன் பிறந்த பொன்னர் சங்கர் கதையைப்பாடக்
காராறுந் தந்திமுகன் கணபதி தன்னிணை யிருதாள் காப்புதானே''
''ஐயன்கதை தன்னைப்பாட ஆனைமுகவன் காப்பாமே''
''வழிவந்த முப்பந்தல் நிலைகொண்ட நீலியவள்
அழியாத கதைபாட அய்யங்கரனே தான்காப்பு''
''தந்தி முகத்தோனே தனைத்தொழுது சரணமென்று உனைப்பணிந்தேன்
தொந்தி வயிற்றோன் ஐந்து கரத்தோன் துதிக்கை விநாயகன் காப்பாமே''
இப்படி விநாயகப் பெருமானின் சிறப்புகளை முன் ஓட்டாகக் கொண்டு விநாயகர்தான் காப்பு என ஏகாரத்திலும் உறுதிப்பாட்டிலும் குறிப்பிட்டிருப்பதைக் காணமுடிகிறது.
துணை:-
விநாயகரை காப்புக்கு அழைத்ததுபோல சில கதைப்பாடல்களின் ஆசிரியர்கள் தாம் பாடப்போகும் கதைக்குத் துணையாக வந்து உதவ வேண்டும் எனப் பாடுவது போலவும் அமைத்துள்ளார்கள்.
''சீர்சிறக்கும் கணபதியும் கந்தன் துணையாக
சிதம்பரநாடார் கதையைச் சீர்மையுடன் எங்கும்கூற''
முன்னிறுத்திப் பாடுதல்:-
விநாயகப் பெருமானை முன்னிறுத்தித்தான் எல்லா வழிபாடுகளையும் செய்வர். அது போல சில கதைப்பாடல்களில் நீ முன் நடத்துவாயாக என பாடியுள்ளனர்.
''முந்தி முந்தி விநாயகனே முக்கண் கணபதியே
சத்திக் கணபதியே தையல் நல்லாள் புத்திரனே
வித்தைக் கணபதியே வெண்முடி விநாயகனே
காராவின் மேனியனே கணபதியே முன்னடவாய்''
''கணபதியே கசமுகவான் எங்கள் கர்ப்பகமே முன்னடவா''
விநாயகர் தோத்திரம்:-
விநாயகப் பெருமானிடம் காப்பு வேண்டிப் பாடிய பின்பும் சில கதைப்பாடல்கள் தோத்திரம், துதி என தனிப்பகுதி அமைத்து அதில் விநாயகப் பெருமானப் போற்றிப் பாடுவதையும் காண முடிகிறது.
அண்ணன் சுவாமி கதையில் தனியாக தோத்திரம் பாடி, காப்புப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
''நல்ல கணபதியை நான் காலமே தொழுதால்
அல்லல் வினைகள் அகலுமே - சொல்லரிய
தும்பிக்கையானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை யுண்டே நமக்கு''
தோட்டுக்காரி கதையில் காப்பது கடவுள் கடனே எனக் கூறி விநாயகர்க்கு காப்புப் பாடல் அமைத்து தனியாக விநாயகர்க்கு ஒரு பாடலும் உள்ளது.
''பூரணமாய்த் தோட்டுக் காரிகதை தன்னை
பூதலத்திலுள்ள மனுவோர்கள் கேட்கக்
காரணமாய் இக்கதையைக் காசினியில் கூற
கந்தனுக்கு மூத்தபிள்ளை வந்துதவவேணும்''
இது போன்ற பலகதைப் பாடல்களிலும் துதிப்பாடல்கள் அமைந்துள்ளன.
விநாயகர் பெருமை:-
பலகதைப் பாடல்களில் விநாயகரின் பெருமைகளைப் பல வரிகளில் குறிப்பிட்டுள்ளது. ஆரவல்லி, சூரவல்லி கதையில் ஓரடி செந்துறை என்னும் பகுதியில் 27 வரிகளில் அவர் பெருமை விளக்கப்பட்டுள்ளது.
''முந்தி முந்தி விநாயகனே முக்கணனார் தன்மகனே
சத்திகணபதியே தையனல்லாள் புத்திரனே
கந்தருக்கு முன் பிறந்த கணபதியே முன்னடவாய்
என்துயர் தீர்த்தருறு மெய்பிரான் தன்மகனே
வித்தைக்கு வல்லவனே வேழ முகத்தோனே''
இதே போன்று பவளக்கொடி மாலையில்,
''அத்திமுகத்தோனே அரனார் திருமகனே
சத்திக் கணபதியே சரிந்த வயிற்றோனே
காரானை மாமுகனே கணபதியே முன்னடவாய்
ஸ்ரீராமர் தன்மருகா செல்வக்கணபதியே
பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனனே
வேழ முகத்தோனே விநாயகரே நான் சரணம்''
எனப் பல வரிகளில் விநாயகரைத் துதி செய்து பெருமையைக் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.
விநாயகர் பெருமையைக் கூற எண்ணிய ஆசிரியர் பிறநூலில் உள்ள பாடல்களையும் தன் பாடலில் எடுத்தாண்டுள்ளார். அண்ணன்மார் கதையில் விநாயகரின் தோத்திரப் பகுதியில் ஒளவையாரின் மூதுரை நூலில் உள்ள பாடலை அவ்வாறே எடுத்துப் பாடியுள்ளதைக் காணமுடிகிறது.
''வாக்குண்டாம் நல்லமன முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு''
விநாயகர் பற்றிய குறிப்புகள்:-
விநாயகப் பெருமான் சிவபெருமானுக்கும் உமையாளுக்கும் மைந்தனாவான் என்ற செய்தி முத்துப்பட்டன் கதைப்பாட்டிலும், பிச்சைக்காரன் கதையிலும் காணப்படுகிறது.
''பொதிகைவாழும் சாய்கரன் அளித்தமைந்தன்''
''மாதமையாள் ஈன்றெடுத்த கணபதியே''
இதே செய்தியை பூச்சியம்மன் வில்லுப்பாட்டில்
''தையல் நல்லாள் புத்திரனே'' என்றும்
''எத்திசையும் போற்றும் இறையோன் திருமகனே....
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.''
மேலும் திருமால் மருமகன் என்றும், வேலவர்க்கு முன்பிறந்த விக்னேஸ்வரன் என்றும் ஆனைமுகத்தோன் என்றும் பல கதைப் பாடல்களில் விளக்கப்பட்டுள்ளது.
சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாயத்தில் விநாயகர் இருந்தார் என்பதை,
''நாயகனார் கயிலாசம் தனில் வந்திருந்தார்
முப்பத்து முக்கோடி தெய்வார் முனிவர்கள் சூழ
முன்பில் கணபதி மூத்தமகனுமே சூழ''
பிரமசக்தியம்மன் கதை வழி அறிய முடிகிறது. இக்கதையில் திருப்பாற் கடலைக் கடையத் தொடங்கும்போது, நல்ல கணபதி தன்னை வணங்கியே ஆரம்பித்தனர் என்கிறது இக்கதைப் பாடல். மேலும் இக்கதையில் தேவர்கள் கொண்டு வந்த பொன்னரிய மாலையைக் கெவனமோடியார்கள் பறித்துச் சென்றனர். இதை மீட்டுவர சிவபெருமான் விநாயகரை அனுப்பியதாகக் காணமுடிகிறது.
''வாரும் பிள்ளையாய் கணபதியே வார்த்தை ஒன்று சொல்லக் கேளு
பொன்னரிய மாலையதை புகழ்ந்து கொண்டு வரும்போது
தன்னினவை அறியாமல் சண்டமுண்டன் கெவனமோடி
தெய்வாரைத் தானடித்து சிவனென்றென்னைப் பாராமல்
கையேத்தம் செய்தவனும் கலகஞ்செய்து கொண்டுபோனான்
ஆனதினால் நீஅவனைவென்று அழகுமாலை பறித்து வர
நானுமுன்னை வரவழைத்தேன் நடந்துசென்று நீகடிதாய்
மாலைதன்னை பறித்துவர மதியுமுண்டு மோகி கணபதியே''
விநாயகரின் பிறபெயர்கள்:-
பொதுவாக கடவுளுக்குப் பலபெயர்கள் உண்டு என்பர். எல்லாப் பெயர்களையும் ஒரே இடத்தில் (நாமாவளி பாடல்களைத் தவிர) காண்பது அரிது. பல இடங்களில் காணலாம். அதுபோல நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் விநாயகரின் பல பெயர்கள் கூறப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. கணபதி என்ற பெயர் அதிகமாகக் காணப்படுகின்றது.
சங்கர விநாயகன், மல்கந்த விநாயகன், தொந்தி விநாயகன், மதயானை முகத்தோன், குணபதி, தந்தி முகத்தோன், குடவயற நாதனான கணபதி, கும்பகெம்ப கணபதி, மதகரிவாள் முகத்தோன், சந்திக் கணபதி, முக்கண் கணபதி, வித்தைக் கணபதி, ஆனை முகத்தோன், சக்திக் கணபதி, செல்வக் கணபதி, ஆலடிபிள்ளையார், அரசடி விநாயகன், தேவ முகத்தான், குடவயற நாதனான கணபதி, கார எறுமைங்கரன் இவைபோன்ற பெயர்கள் கதைப்பாடல்களில் நிறைந்து காணப்படுகின்றன.
சமுதாயக் கதைப்பாடல்களாக, வரலாற்றுக் கதைப்பாடல்களாக, தனிமனித கதைப்பாடல்களாக இருந்தாலும் எந்த வகையாக இருந்தாலும் அவற்றில் இறைமனம் கமழ்வதைக் காணமுடிகிறது. அவற்றுள் விநாயகர் பற்றிய செய்திகள் இல்லாமல் இல்லை. விநாயகர் பிரணவ மந்திரக் கடவுளாக இருப்பதால் அவரை எல்லோரும் எடுத்தாண்டிருப்பதைக் காணமுடிகிறது. கதைப்பாடல்களில் விநாயகரின் பங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகவே உள்ளது எனலாம்.
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக