04/06/2011

நாட்டுப்புறப் பாடல்களில் உரிமைகளும், உணர்வுகளும் - முனைவர் சி. சித்ரா

மனிதன் பகுத்தறிவால் எண்ணங்களை ஏந்தி அவற்றை வெளிப்படுத்தும் உணர்ச்சியைப் பெற்றுள்ளான். சிந்தனைகளையும் கருத்துக்களையும் மொழிவழிப் புலப்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளான். தான் பேசும் கருத்தைப் பிறரும் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் மொழியை அமைத்தான். அவன் வாய்மொழியாகப் பாடிய கட்டில்லாக் கவிதைகளே நாட்டுப்புறப் பாடல்களாகும். இசையும், தாளமும், உணர்ச்சியும் மிக்க இத்தகு பாடல்களில் உறவுமுறையில் திருமணம் செய்யத்தக்க ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிகழும் உரையாடல் அமைப்பிலுள்ள பாடல்கள் வழி அறியலாகும் உரிமைகளையும், உணர்வுகளையும் இக்கட்டுரை விளக்க முற்படுகின்றது.

தமிழ்ச் சமுதாயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான திருமண உறவில் ஆணுக்குச் சில தகுதிகளும் பெண்ணுக்குச் சில கட்டுப்பாடுகளும் இருத்தல் வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்ற உரிமைக் குரல்கள் அங்கங்கே ஓங்கி ஒலிக்கும். இக்காலத்திலும் பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டு ஆணின் கருத்துக்களை அப்படியே ஏற்று நடக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது. ஆனால் நாட்டுப்புறப் பாடல்களில் ஆணும் பெண்ணும் கட்டுக்கள் இன்றித் தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடும் உரிமை பெற்றிருந்தனர்.

கெஞ்சலும் மிஞ்சலும்:-

ஆடவன் ஒருவன் தான் விரும்பிய அத்தை மகளைப் பார்த்துப் பேசுவதற்காக ஐந்நூறு மைல் கடந்து வருகிறான். அன்னமே பொன்னம்மா, உன்னைப் பார்க்காமல் கண்ணிரண்டும் சோர்ந்துவிட்டது. ஐந்து வயது முதல் அரும்பாடுபட்டு ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளேன். பெரிய வீட்டுக்காரிலெல்லாம் நான்தான் பெரியதலை; முச்சந்தி ரோட்டுப்பக்கம் மூணுகுழி நிலம் வாங்கியுள்ளேன் என்றெல்லாம் ஆசைவார்த்தைகள் கூறுகிறான்.

ஆனால் அவனை விரும்பாததுபோல் காட்டிக்கொண்ட அவளோ, ஆரடா நீ பயலே, போடா நீ, வெட்கங்கெட்ட பையா, பேய்ப்பயலே, மானங்கெட்ட மடப்பயலே, தெருத்தெருவாய்த் திரிந்த நாயே என்றெல்லாம் அவனை ஏளனமாக விளிக்கின்றாள். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் வார்த்தை பேசுகிறாள்.

மரியாதை இல்லாமல் அடாபுடா என்று பேசுகிறாயே; உன்னைத் திருமணம் செய்து கொள்ளத்தானே இவ்வளவு அன்பாய்ப் பேசுகிறேன்; கண்ணே, கண்மணியே கல்நெஞ்சுக்காரியே நீ என்று அவன் கேட்கிறான். அவனைத் தொடர்ந்து பேசவிடாமல் அவள், வாழ்நாளை வீணாக்காமல் பொழுது விடியுமுன் போய்விடு; ஆயிரம் ரூபாய் சேர்த்தால் எனக்கென்ன? உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிப்போய்விடு; இல்லையென்றால் கண்ணே மணியே கிளியே புளியே என்று சொன்ன உன் நாக்கை அறுத்து, நெஞ்சைப் பிளந்திடுவேன்.

''என்குலமும் உன்குலமும் என்சொத்தும் உன்சொத்தும்

ஏணிவைத்தால் எட்டுமாடா எருமை மாட்டுப் பயலே'' என்று ஏசுகிறாள்.

குடும்பத்துக்கு ஒரே வாரிசாகிய அவன்தன் சிறப்புக்களையும் சொத்துக்கணக்கையும் அவளிடம் சொல்லி, மானே, மரகதமே, மயிலே, இளங்குயிலே, தேனே திரவியமே நீ எப்படித் திட்டினாலும் என்னால் உன்னைவிட்டுப் போக முடியாது; வம்பு, வாது செய்யாமல் நீயும் நானும் தாலிகட்டி வாழலாம் என்கிறான்.

கெஞ்சினால் மிஞ்சிவிடும் காதல் போதையையும் தான் விரும்பியவள் என்ன பேசினாலும் திருமணத்திற்கு முன்பு பொறுத்துச் செல்லும் ஆணின் தன்மையையும் ஆணைத் தாக்கிப் பெண் வாதம் செய்யும் முறையையும் இவை உணர்த்துகின்றன.

கணவனும் மனைவியும்:-

திருமணமான புதிதில் கணவன் மனைவியை அன்னநடையழகி, அலங்கார நகையழகி, பின்னல் சடையழகி என்றெல்லாம் கொஞ்சித் தேர் பார்க்கப் போகலாம் வா என்கிறான். அவளோ, சம்மங்கி எண்ணெய், சைனாப்பட்டுச்சீலை, பம்பாய்ச் சோப்பு, பயாஸ்கோப்பு, ரோசாப்பூச்செண்டு + எல்லாம் வாங்கிக் கொடுத்தால் ராசாராணி போல் போய் வரலாம்; இல்லாவிட்டால் நான் வரவில்லை என்கிறாள். அவன் உன் விருப்பம்போல் எல்லாம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி அவளை மகிழ்விக்கிறான். மனைவியாகிய பெண்ணின் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்குக் கணவனாகிய ஆணின் பொருளியல் நிலை உயர்ந்திருந்த தன்மையை இவர்களின் வாழ்க்கை வடித்துக் காட்டுகிறது. சீனப்பட்டு, மும்பைச்சோப்பு என்று பேசும் பெண் புறஉலகு பற்றிய தன்அறிவைப் புலப்படுத்துகிறாள்.

பண்பினால் போட்ட பாலம்:-

தன்னை மணக்க வேண்டிய முறைமாமன் தறிகெட்டு அலைவதைப் பார்த்து வருந்திய பெண்ணொருத்தி அவன் வாழ்க்கையைச் சீரமைக்கிறாள். உங்கள் பொன், பொருளுக்காக மயங்கவில்லை. நானும் வீடுவாசலும், சொத்துச்சுகமும், காடுகரையும், ஆடுமாடும் உங்களுக்கே சொந்தம்; ஓயாமல் தவம்செய்து உருக்கமாய்ப் பெற்றெடுத்த தாய், தகப்பனைக்கூட மறந்து எப்போதும் உங்களை நினைத்தே உருகுகிறேன் என்கிறாள். அவளின் அன்பான வார்த்தைகளைக் கேட்டுப் பண்பாளனாக மாறிய அவன், உன்குணமும் அன்பும் பண்பும் தெரியாமல் மனங்கலங்க வைத்து விட்டேன்; என்னை மன்னித்துவிடு; நானும் என் சொத்துக்களும் என் உயிரும் இனி உனக்கே சொந்தம் என்று சொல்லி அவளை மணந்து கொள்கிறான். அன்பாலும், பண்பாலும் மென்மையான அணுகுமுறையாலும் வீழவிருந்த ஆடவனை வாழவைத்த பெண்ணின் உணர்வுகளை இதன்வழி அறியலாம்.

திருமண முறைப்பாடு:-

ஊருலகம் போல ஒழுங்காகத் தாலிகட்டி உறவுமுறையார் கூட ஊர்கோலம் போகவேண்டுமெனத் தான் மணக்க விரும்பிய பெண்ணிடம் ஆடவன் கூறுகிறான். திருமண முறைப்பாடுகள் பற்றி இருவரும் இணைந்து பட்டியலிடுகின்றனர். ஆட்டுக்கிடாய் அடித்து ஆயிரம் பேரை அழைத்து விருந்து வைத்தல், ஏழைபாழைகள் எங்கிருந்தாலும் கூப்பிட்டு வாழையிலையில் சோறு போடுதல், மாமன் மச்சானுக்கு மாலை, அண்ணன், அக்காள், தம்பி, தங்கைக்குத் துணிகள் வாங்குதல், வரிசை கொண்டு வந்தோர்க்குப் பதில்வரிசை செய்தல், கலியாணத் துணிமணி வாங்குதல், முகூர்த்தக்கால் ஊன்றி, ஊர் வெற்றிலை வைத்து, நாள், நட்சத்திரம் பார்த்து நாதசுரக்காரர்களை அழைத்தல், தாம்பாளத் தட்டில் மல்லிகைப்பூ, மருக்கொழுந்து, நெல்அரிசி, நல்லமஞ்சள், தாலிக்கயிறு, தாலி வைத்தல், வந்தோர்க்குச் சந்தனம், குங்குமம் கொடுத்தல் என்று மாறி மாறி அவர்கள் பேசுகின்றனர்.

மணவாழ்க்கையைத் தன்னின்பத்திற்கான நிகழ்வாகக் கருதும் தன்னலமில்லாத முறைகளையும் சடங்குகளையும் போற்றி, ஊரையும் உறவுகளையும் மதித்து, ஏழைகளை எண்ணத்தில் கொண்டு வாழ நினைக்கும் நேய உணர்வு இருவரிடத்தும் பொதிந்திருப்பதை நாட்டுப்புறப்பாடல்கள் சுட்டுகின்றன. மேலும், திருமணத்தைப் பற்றியோ திருமண நிகழ்வுகளின் முறைப்பாடுகள் பற்றியோ பெண் பேசுவது முறையன்று. நாணத்தால் அவள் நாவடைத்துத் தலைகுனிந்து இருக்க வேண்டும் என்ற மடமைகளைச் சாடும் வகையில் பெண்ணின் கருத்துக்களும் எண்ணங்களும் உணர்வுகளும் போற்றப் பெறுகின்றன.

சொல்நயமும், சுவைநயமும் கற்பனை வளமும் செறிந்த எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றிய பின்னும் கட்டில்லா இலக்கியமாக நாட்டுப்புறப் பாடல்கள் தமக்கெனத் தனியிடம் பெற்றுள்ளன. மழலைத்தன்மையும் எளிமையும் இன்பதுன்பங்களை, குறைநிறைகளை உள்ளவாறே காட்டும் நேர்மையும் இப்பாடல்களின் தனிப்பெருமைகளாகும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வாதித்து உரையாடும் முறையிலமைந்த இப்பாடல்கள் வழி,

1. ஆண், பெண் சமத்துவ உரிமைப்பாடு

2. ஆண், பெண்ணின் உணர்வையும் பெண் ஆணின் உணர்வையும் மதித்து நடத்தல்.

3. கிண்டல், கேலி, நகைச்சுவை, பொய்க்கோபம் ஆகியவற்றோடு வாழ்க்கை நிகழ்வுகளை மகிழ்ச்சியாக அணுகும் பாங்கு.

4. விருப்பமில்லாத திருமணத்திற்கு உடன்படாநிலை

5. பிறர்க்குத் தீங்கு நினைக்காத உளப்போக்கு போன்ற கூறுகள் ஆழப் பொதிந்தமைக்கு இற்றை வாழ்க்கையிலும் பின்பற்ற ஏற்றவையாய் உள்ளன.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: