04/06/2011

இழப்பு, ஈட்டல், எதிர்பார்ப்பு - முனைவர் க. அன்பழகன்

அறிமுகம்:-

நாட்டுப்புறம் நமது உயிர்ப்பின் கருவறை. நாட்டுப்புறத்தான் நமது முன்னோடி. நமது பண்பாட்டின் வேர் அங்கேதான் ஆழமாக இன்றும் புதைந்து விரிந்து போய்க் கொண்டிருக்கிறது. மனித வளர்ச்சி, பேசிய பேச்சு, வளர்ந்த நாகரிகம் போன்றவற்றிற்கெல்லாம் ஆதியாய் நாட்டுப்புறம் இருக்கிறது. கலை, இலக்கியம், பண்பாடு, நம்பிக்கை போன்றவை நாட்டுப்புறப் பேழையிலிருந்து நமக்குக் கிடைத்தவை. இவை அழுத்தமான பதிவை உள்ளடக்கியவை. இவற்றை நாம் ஈட்டி வைக்காமல் இழந்திருக்கிறோம். இவை பாதுகாக்கப்பட்டால் மனித வாழ்வு மேம்படும் என்ற பொறுப்பான எதிர்பார்ப்பு நம்மிடையே இல்லை என்பது அப்பட்டமான உண்மை. நாட்டுப்புறக் கூறுகளின் சிதைவுகளால் மனித வாழ்வும் சிதைவுக்காளானது என்பது மறுக்க முடியாதது. இக்கட்டுரை நாட்டுப்புற ஆய்வுகள் மீதான ஒரு பொதுப் பார்வையையும், இழப்பையும், ஈட்டவேண்டியதையும் தேவையான எதிர்பார்ப்பில் சில ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்வதாக அமைகிறது.

இழப்பு, ஈட்டல், எதிர்பார்ப்பு:-

நாட்டுப்புற வாழ்வமைப்பு மிகவும் இறுக்கமானது. நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள், மரபு மீறாத செயல்பாடுகள் இவற்றைக் கூறுகளாகக் கொண்டது. இந்த இறுக்கமான வாழ்வமைப்பில் உறைந்து போன சாதியமைப்பு. சாதி காட்டிய ஏற்றத்தாழ்வுகள், இவற்றையொட்டிய சடங்குகள், சடங்குகளில் செயல்படுத்தப்படும் மூடநம்பிக்கையிலான போக்குகள் போன்றவை பதிந்து கிடந்தன. இருப்பினும் இவற்றைத் தாண்டிய ஒரு உயிர்ப்பான, உவகை கொஞ்சும் வாழ்க்கை இருந்தது. அந்த வாழ்க்கையை நகரக்காட்டில் நாம் தொலைத்து இழந்திருக்கிறோம். இது ஈடுகட்டவியலாத இழப்பு. அறிவியலின் வளர்ச்சிப் புயல் மாற்றப் புழுதியைப் படிய வைத்து நகர வாழ்வைச் சிதைத்து நின்றது. காலங்காலமாக பின்பற்றி வந்த நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், சடங்குகளையும் இழந்து தனித் தீவுகளாக உருவான மனித வாழ்வு தன்னலத்தீவாக நிரூபணம் ஆயிற்று. கூட்டுச் சமூக உணர்வுகள் மழுங்கிப் போயின. எனவே இழந்ததை எண்ணிய வருத்தத்தோடு, இழந்த இழப்போடு மீறி நாட்டுப்புற வாழ்வின் மீதான ஒரு விருப்பிற்கு எதிர்பார்ப்பு தோன்றியது.

இந்த இழப்பு நேர்ந்தது ஒரு மாற்றமே. இதனை ஈடுகட்ட நாட்டுப்புறம் மீதான ஒரு கவனம் வந்தது. இதைப் பின்வரும் கூற்று எடுத்துக்காட்டுகிறது,

''பழைய கால வாழ்க்கையை நினைத்து

ஏங்குவது போன்று எந்திரமயமான வாழ்க்கை

யிலிருந்து மீள வழி தெரியாத நடுத்தர

வர்க்கத்தினர் பழைய சடங்குகளையும் பழக்க

வழக்கங்களையும் பின்பற்றி வருகின்ற

நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையை நினைத்து

ஏங்குகினர்.''

இந்த ஏக்கம் இழப்புணர்த்திய ஏக்கமாகும். எனவே நாட்டுப்புறக் கூறுகளை முறையாத்தரமறிந்து பாதுகாத்தல் இழப்பை ஈடு செய்யும் ஒரு வழியாகும்.

நாட்டுப்புற வாழ்வு வெளிப்படையானது. தனது அன்பையும், கோபத்தையும், ஆசை பொங்கலையும், எதிர்பார்ப்பையும் நேரடியாகக் குறையாது காட்டியது. அதில் கள்ளங்கபடம் இல்லாமல் அர்த்தமான வாழ்வு போக்கு காட்சியாக இயக்கம் பெற்றது.

ஓர் இளம் பெண்ணின் கூந்தலிலே மயங்கிப்போன ஒரு இளம் ஆணின் மனதை இப்படிப் படம் பிடிக்கிறது ஒரு நாட்டுப்புறப் பாடல்

''ஆலம் விழுது போல

அந்த புள்ளை தலைமயிரு

தூக்கி முடிச்சாலே

தூக்கணாங் கூடுபோலே

ஆலம் விழுதுகளை

அள்ளிக் கொண்டை போட்டவளே - அடி

ஆத்தாடி இந்த கொண்டை

ஆரைக் குடிகெடுக்க''

அன்புப் பெருக்கம் எளிமையாகச் சொல்ல வந்ததை உணர்த்துகிறது. உண்மையான அன்பில் ஈர்க்கப்பட்ட மனது வெளிப்படுத்தும் சொற்களும் எளிமையாக மனதைக் கவர்கின்றன. இன்னொரு பாடலில்,

''...............

தண்ணிக் குடத்தினுள்ளே

தளும்புதடி என்மனசு''

என்கிறான் உண்மைக் காதலன். எதார்த்தமான வாழ்வில் நிகழ்வுகள் எதார்த்தமானவை. இவை உண்மை வாழ்வின் அடையாளங்கள் தாய்மைப் பண்பின் கருவரையாகத் திகழ்பவை தாலாட்டுக்கள். தனது அன்பை அவதாரமாகக் காட்டுவதன் காட்சியே தாலாட்டு எனலாம். இதில் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு மொழி கவியரங்கம் நிகழ்கிறது எனலாம்.

''ஏழு கடல் நீந்தி

எடுத்து வந்த தாமரைப்பூ

.............

............

ஆயிரம் முத்திலே - என்கண்ணே நீ

ஆராய்ந்தெடுத்த முத்தோ

...................

..................

கொப்புக் கனியே

கோதுபடா மாங்கனியே

கண்ணே கமலப்பூ கண்ணிரண்டும் தாமரைப்பூ

கண்மணியே ஏலப்பூ காதிரண்டும் பிச்சிப்பூ

மேனி மகிழம்பூ மேற்புருவம் சண்பகப்பூ''

இவற்றை எல்லாம் நாம் இழந்திருக்கிறோம். மனித வாழ்வு தற்போது பணத் தேடலில் மட்டுமே இலக்கு வைத்து தீவிரத் தேடலில் எல்லாச் சிதைவையும் உள்வாங்கிக் கொள்ளும் விபரீதமான மனநிலைக்கு வந்திருக்கிறது. இயந்திரமயமான வாழ்வில் இரும்புத் துண்டுகளாக மனசுகள் மாற்றம் பெற்று வளர்வதைத் தடுத்து ஈட்டவேண்டிய தேவையிருக்கிறது.

அடுத்து எதிர்பார்ப்புப் பற்றியது. நாட்டுப்புறவியல் பற்றியதான ஒரு சொல் வங்கியும், அகராதி உருவாக்கமும் மிக அவசியமானதாகும். சொற்கள் மொழியின் பண்பாட்டுக் கட்டமைப்பில் தூண்களாக உருமாற்றம் பெற்றவை. அவற்றிற்குரிய பண்பிழப்பு இல்லாமல் இவற்றைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் சொல்வங்கி நமக்குத் தேவையாகவுள்ளது. காரணம் நாம் சிலவற்றை வெளிப்படையாக மூலமென்றும், போலியென்றும் அடையாளப்படுத்த இவை உதவும். நாட்டுப்புறவியலில் வரலாற்றுக்குரிய கால நிலையில் அவற்றின் கூறுகளை எல்லைப்படுத்துகிற போது நமக்கு நம்பகத்தன்மை உருவாகும். மேலும் திரும்பப் பிறத்தல் பண்பு (Repetation) நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் துணிவுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. இவற்றினை மாற்றி நிலைப்படுத்தச் சொல்வங்கி மிகவும் பயனுடையதாகும். அறிஞர் குழுக்கள் இதனை வடிவமைத்து நெறிகளை உருவாக்கலாம். வட்டார வழக்குச் சொல்லகராதி எனும் நிலையிலிருந்து மேலும் முன்னேறிப் பொது நிலையில் நாட்டுப்புறவியல் கூறுகளை அடையாளப்படுத்தும் தனி அகராதிகள் பல உருவாக்கம் பெறல் தேவையும் அவசியமாகும். இன்றைய அறிவியல் வாழ்வில் மிக மெலிதான பண்பாட்டு அரிப்பு கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனித உறவுகள் கறையான் அரித்த நிலையைக் காட்சிப்படுத்துகின்றன. நமக்கானதான ஒரு மொழி கட்டமைப்பு இல்லாது நகர்ந்து தூர்ந்து போகின்ற அபாயம் தவிர்க்க இவ்வகராதிகள் உதவும் என்பது நம்பிக்கை. இவை மீண்டும் மனித உறவுகளில் யதார்த்தமான வாழ்வை விதைக்கலாம். அகராதி உருவாக்கப் பதிவுகளில் சிறு சிறு விளக்கங்கள் நாட்டுப்புறக் கூறுகளின் பண்புகளோடு சுட்டப்படல் மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். பின்னர் கலைக்களஞ்சியத் தொகுப்புகளுக்கு வழி காட்டுதலாக இவ்வகராதிகள் அமையலாம்.

அரிதான மானுட வாழ்வில் ஒரு முறை பிறப்பில் எதார்த்த வாழ்வே வாழ்வாகும். இவற்றின் வேர் மட்டுமே நாட்டுப்புறக் கூறுகளில் இன்னும் அழுகிப் போகாமல் உள்ளது. அறிவியல் மாற்றம் நகரவாழ்வை நரகமாக ஆக்கி நாள் முழுக்கத் தேடலும் அலைச்சலுமாகக் கழிந்து போகிற நிலைக்காளாகியுள்ளது. இன அடையாளத்திற்கு மொழியும், பண்பாடும் உயிர் போன்றவை. இவற்றைப் பிடித்துவைத்திருப்பது நாட்டுப்புறக் கூறுகளே. அன்பும், அமைதியும், உறவுகளும் என வாழ்தலே வாழ்வின் நிலைப்பாடு, மனித வாழ்வை மேம்படுத்தலே இலக்கியத்தின் பணி, இவற்றிற்கு அடிப்படை நாட்டுப்புறத்தான் ஆகிய நமது முன்னோடி உருவாக்கி வைத்த வாய்மொழி இலக்கியங்கள். இவையே நமது வாழ்வை வழி நடத்தும் பாங்கு பெற்றவை. எனவே இவற்றை இழக்காது ஈட்டி வைத்து சில எதிர்பார்ப்புகளைச் செய்து வைத்தல் வாழ்வாகும் என்பதே இக்கட்டுரையின் எண்ணமாகும்.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: