இலக்கிய இன்பம் குறவஞ்சி நூல்கள்
சிற்றிலக்கியங்களில் நாடக வடிவில் அமைக்கப்பட்டவையே குறவஞ்சியும், பள்ளும் ஆகும். காதலனின் பிரிவுத்துயரை தாங்காமல் காதலி சிரமப்படும் போது, குறவர் குல பெண் அவளுக்கு குறி கூறி நல்ல செய்தியைக் கூறுவது குறவஞ்சி எனப்படும். இவ்வாறு குறி கூறும் பாடல்களை, குறத்திப்பாட்டு, குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் என்றும் சொல்வர். குறவஞ்சி நூல்களில் முதன்மையானது குற்றாலக் குறவஞ்சி. குற்றால அருவியின் அழகு இந்த நூலில் வர்ணிக்கப்படுகிறது. குறிப்பாக "வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும், மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்' என்ற பாடல் மனதை மயக்குவதாக இருக்கும். அக்கால தமிழ் மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர்கள் ராகத்துடன் சொல்லித் தருவார்கள். குற்றாலக் குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்பக் கவிராயர். இவர் குற்றாலம் அருகிலுள்ள மேலகரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த நூலைப் பாராட்டி, மதுரையை ஆண்ட முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கர், கவிராயருக்கு "குறிஞ்சி மேடு' என்ற இடத்தையே பரிசாகக் கொடுத்தார். இது தவிர, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எழுதிய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, வேதநாயக சாஸ்திரிகள் இயற்றிய பெத்லகேம் குறவஞ்சி, குமரகுருபரர் எழுதிய மீனாட்சி அம்மைக்குறம் ஆகியவையும் குறவஞ்சி நூல்களில் குறிப்பிடத்தக்கவை.
பள்ளுப்பாட்டு
சிற்றிலக்கியங்களில் நாடக வடிவில் அமைந்த மற்றொரு வகை பள்ளு நூல்களாகும். உழவுத்தொழில் செய்யும் விவசாயிகளின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது இந்த நூல். கமலை ஞானப்பிரகாசர் எழுதிய திருவள்ளூர்ப் பள்ளு என்ற நூலும், ஆசிரியர் பெயர் தெரியாத முக்கூடற்பள்ளு என்ற நூலும் சுவை மிக்கவை. முக்கூடல் என்பது திருநெல்வேலி அருகிலுள்ள சீவலப்பேரி என்ற கிராமத்தைக் குறிக்கும். இங்கு பயிர்த்தொழில் செய்து வந்த உழவன் ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். ஒருத்தி சைவத்தையும், மற்றொருத்தி வைணவத்தையும் தழுவியவர்கள். இந்த சக்களத்திகளுக்கு இடையே தங்கள் தெய்வங்களைப் பற்றி எழுந்த சிறு சர்ச்சையே இந்த நூலின் கருப்பொருள். முக்கூடற்பள்ளு படித்தால் இருபெரும் தெய்வங்களைப் பற்றிய சுவையான செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
பதிகம் என்றால் என்ன?
ஒரு பொருளைப் பற்றி பத்து அல்லது 11 பாடல்களால் பாடுவது பதிகம் எனப்படும். தேவாரத்தில் மட்டும் 11 பாடல்கள் இருக்கும். ஒரு ஊரிலுள்ள சிவனைப் புகழ்ந்து பாடும் தேவார ஆசிரியர்கள், அந்தப் பாடலைப் பாடினால் என்ன பலன் கிடைக்கும் என்பதைக் கடைசிப்பாடலில் சொல்லியிருப்பார்கள். குறிப்பாக, சம்பந்தரின் பாடல்கள் அவரது பெயரிலேயே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காலத்தால் மிகவும் முற்பட்டதாகக் கருதப்படும் பதிகம், காரைக்கால் அம்மையாரின் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் (இரண்டு பதிகங்கள்) ஆகும்.
நன்றி - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக