திருப்புகழ்
திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும் என்பர். புகழ் என்றாலே அது முருகப் பெருமானுக்குரிய திருப்புகழ் மட்டும் தான். அத்தகைய பெருமை மிக்க நூலைப் பாடிய புலவர் என்பதால் அருணகிரிநாதருக்கு ""வாக்கிற்கு அருணகிரி'' ""கருணைக்கு அருணகிரி'' என்று சிறப்புப் பெயர்கள் உண்டு. ""முத்தைத் திரு பத்தித் திருநகை'' என்று முருகப்பெருமானே இவருக்கு முதன்முதலில் அடி எடுத்துக் கொடுத்தார் என்பர். தமிழில் சந்தநயத்தோடு பாடுவதற்கு திருப்புகழுக்கு இணையேதும் இல்லை. இவருடைய திருப்புகழ் பாடல்களில் 1008 சந்தங்கள் இடம்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாகப் போற்றப்படும் திருவண்ணாமலையில் பிறந்த இவர், கோயில் கோபுரத்தின் மீதேறி தற்கொலை செய்ய முயன்ற போது, முருகப்பெருமான் அவரைத் தாங்கிப்பிடித்து காப்பாற்றினார். அந்த முருகனுக்கு "கம்பத்துஇளையனார்' என்ற சன்னதி அங்கு அமைந்துள்ளது. திருப்புகழ் தவிர, கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல்விருத்தம், மயில்விருத்தம், உடற் கூற்று வண்ணம், திருவெழு கூற்றிருக்கை ஆகிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். தன்னைக் காப்பாற்றிய முருகனுக்கு நன்றி செலுத்தும் வகையில் வாழ்நாள் முழுவதும் குமரன் குடியிருக்கும் கோயில்களுக்கு சென்று பாடல்கள் பாடினார். 1307 திருப்புகழ் பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. முருகனை முழுமுதற்கடவுளாக வணங்கினாலும், இவருடைய பாடல்களில்எல்லா தெய்வங்களைப் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். கந்தர்கலி வெண்பா ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமசுந்தரி அம்மையாருக்கும் பிறந்த தவச் செல்வர் குமரகுருபரர். பிறந்ததில் இருந்து ஐந்து வயது வரை பேசமுடியாமல் ஊமையாய் இருந்தார். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று முறையிட்டனர் பெற்றோர். கந்தனின் கடைக்கண் சிறுபிள்ளை குமரகுருவின் மீது பட்டது. செந்திலாண்டவன் அருளால் பேசும் திறன் மட்டுமின்றி கவிபாடும் ஆற்றல் வந்தது. பெற்றோரும் மற்றோரும் கவிபாடும் பிள்ளையைக் கண்டு வியந்தனர். அப்போது முருகனின் மீது பாடிய பாடலே கந்தர் கலிவெண்பாவாகும். இப்பாடல் மட்டுமில்லாமல், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதிநெறிவிளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை, மதுரைக்கலம்பகம், சிதம்பர செய்யுட்கோவை, பண்டார மும்மணிக்கோவை, சகலகலாவல்லிமாலை, காசிக்கலம்பகம் ஆகிய நூல்கள் இவரால் எழுதப்பட்டவை.
நன்றி - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக