அன்புள்ள செல்லா,
உன் கடிதம் கிடைத்தது. என்ன செய்யச் சொல்லுகிறாய்? முயற்சியில் ஒன்றும் குறையில்லை . ஒவ்வொரு நாள் மாலையும், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் என்று வேகமாக அலையத்தான் செய்கிறேன். மோட்டார்காரனுக்குக் காசு கொடுத்துக் கட்டி வராது என்று விளக்கெண்ணை வேறு வாங்கி வைத்திருக்கிறேன் காலில் போட்டுத் தேக்க. என் காலைப் பிடித்துவிட நீயும் இங்கு உடனே வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்ன செய்யச் சொல்லுகிறாய், செல்லா, முப்பது ரூபாய்க்கு மேல் போகவும் கூடாது. அதுவே நம் சக்திக்கு மீறியதுதான். போனால் போகிறது என்று கொடுக்கத் தயாராக இருந்தாலும்கூடக் கிடைக்க மாட்டேன் என்கிறதே.
நேற்று நடந்த அந்தச் சம்பவம், அந்தக் காட்சி, அதை நீ பார்த்திருக்க வேண்டுமே செல்லா, தேனாம்பேட்டையில்...
தேனாம்பேட்டை பக்கம்தான் போய்க்கொண்டிருந்தேன்.. ஒரு சந்து. குப்பையும், சேறும் சாக்கடையும், பன்றிக் கூட்டமும் - ஒரே அசுத்தக் களஞ்சியமாக இருந்தது. மூக்கைக் கழற்றி எறிந்துவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணமிட்டபடி நடந்தேன். அந்தச் சந்தினுள் எப்படித்தான் நுழைந்தேனோ, கால்கள் நடக்கக் கூசின. ஆனால் மனிதன் அங்கும் சுவாசித்துக் கொண்டு, சாப்பிட்டுக்கொண்டு, குழந்தை குட்டிகளோடு கொஞ்சிக் குலவிக்கொண்டு உட்கார்ந்துதான் இருக்கிறான். என்னத்தைச் சொல்ல? உடம்பெல்லாம் கூசிற்று. வேறு வழியில்லை. அந்தச் சந்தைக் கடந்துதான் நான் போகவேண்டிய இடத்துக்குப் போக வேண்டியிருந்தது. போன காரியம் மட்டும் வெற்றியாக முடிந்திருந்தால்... 'ஸ்டார்ட் இம்மீடியட்லி?' ஆம். அவ்வளவுதான். இந்நேரம் நீ நம் கண்மணி ராஜாவுடன் ரெயிலில் வந்துகொண்டிருந்திருப்பாய்... சரி, போகட்டும்; அந்தக் காட்சியை அல்லவா சொல்ல வந்தேன் -
போன காரியம் காயாய்ப் போன ஏமாற்றத்துடன், அந்த ஏமாற்றப் புண்ணுக்கு மருந்திடுவதுபோல ஜாலியான சினிமா மெட்டு ஒன்றைச் சீட்டியடித்தபடி அந்தச் சந்துவழி - அதிலிருந்து நான் தப்புவதற்கில்லை - வந்து கொண்டிருந்தேன்.
அப்போதுதான் அந்தக் காட்சி, ஒரு வேப்பமரத்தினடியில் இரண்டு பெரிய பழைய பூட்சுகள். கனமான, தடித்த, அங்கங்கே ஓட்டுப் போட்ட போலீஸ்காரன் பூட்சுகள். யாராவது போலீஸ்காரந்தான் காலுக்கு உதவாததை அங்கே வீசி எறிந்துவிட்டுப் போயிருக்க வேண்டும். அப்படியானால் யாரோ போலீஸ்காரன் தெருவில் விட்டுவிட்டுப் போன பூட்சுகள் இன்னும் அப்படியே, அங்கேயே கிடந்ததுகொண்டிருக்கிறதா? ஓட்டை, உடைசல் பழைய சாமான்கள் வாங்குகிறவன் கண்களில்கூடவா படவில்லை அவை! அந்தப் பூட்சுகளை மீண்டும் ஒருமுறை நான் கவனித்தேன். என்ன ஆச்சரியம்! ஒரு பூட்சுக்குள்ளிருந்து பந்து பந்தாய்ப் புகைச் சுருள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது என்று பார்க்க வேப்பமரத்தின் அருகே போனேன். புகை மேலும் வெளிப்பட்ட வண்ணமாகவே இருக்கிறது. அது மட்டுமா! பூட்ஸின் வேறொரு பக்கத்திலிருந்து ஒரு சிறு துவாரத்தின் வழியாகத் தண்ணீர் வேறு வெளியே வந்துகொண்டிருந்தது!
அந்த பூட்சை நெருங்கி கைகளிரண்டையும் முதுகுப்புறம் கட்டிக்கொண்டு, தலையைக் குனிந்து புகை வெளிவரும் இடத்தை உற்றுப் பார்த்தேன். எரியும் சுடர் தெரிந்தது. வேறு எதுவும் தெளிவுபடவில்லை. உட்கார்ந்து நன்றாகப் பார்க்கலாம் என்று தரையில் குனிந்தேன். அப்போது சிறு தும்மல் சப்தம் உள்ளேயிருந்து கேட்டது. தும்மியவன் மனிதன் தான். என் நிழல் தன்மேல் கவிந்ததும் அந்த மனிதன் அண்ணாந்து மேலே பார்த்தான். "என்ன சார்! என்ன பார்க்கிறீர்கள்...? அடுப்பில் ஈர விறகை வைத்துவிட்டாள் வீட்டுக்காரி. புகைகிறது... என்ன விஷயம்? உள்ளே வாருங்களேன்...! ஒ! இல்லை, இல்லை... நானே வெளியே வருகிறேன்" என்று கூறிய அந்த மனிதன் தென்னை ஈரக் குச்சியால் படி கட்டிய ஒரு நூல் ஏணியின் மேல் வேகமாக ஏறி மேலே வந்தான். அவன் வேகமாக வந்தும் கூட என் பக்கம் அவன் வர இரண்டு நிமிஷம் பிடித்தது. மீசையை முறுக்கிவிட்டவாறு பூட்சின் மேல் தளத்தில் வந்து நின்றான் அவன். 'கலிவரின் யாத்திரை' என்ற இங்கிலீஷ் கதையில் வரும் லில்லிபுட் பேர்வழிகளைப் போலல்லவா இருக்கிறான் இவன்! உயரம் அரை விரற்கடை கூட இருக்காது. கருப்பாக இருந்தான். தலை வழுக்கை. கடுகாய் சிறுத்த மூக்கும் கண்ணும், காக்கி நிஜார் மட்டும் அணிந்திருந்தான். நெஞ்சில் கீரை விதை பரப்பியதுபோல மயிர் படர்ந்திருந்தது. உடம்பில் வேர்வையின் ஈரம். புகையில் நின்றதால் தானோ என்னவோ அவன் விழிகள் சிவந்துபோயிருந்தன. பின்னும் இரண்டு தரம் தன் கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டான். அவன் கேட்டான்:
"என்ன சார்...! ஏன் இப்படி நிற்கிறீர்கள்... ஏதோ மலைத்தமாதிரி...!"
இல்லை . அதெல்லாம் ஒன்றும் இல்லை... சும்மாதான்... இதுதான் உங்கள்... வீடா?" - வியப்புடன் கேட்டேன்.
"ஆம். இதில்தான் வசிக்கிறேன். ரொம்ப சௌகரியமான இடம். நான், என் மனைவி, மூன்று குழந்தைகள்; ஐந்து பேருக்குப் போதாதா?"
"என்ன இதிலா?"
"ஆம், மேலும் என் சொந்த வீடு. அதோ, அதுகூட என் வீடுதான்." - மற்றொரு பூட்சைச் சுட்டிக் காட்டினான்.
"ஒ ஹோ"
"முன்னே உங்களைப்போல் இருந்தபோது இது என் கால் பூட்சாகத் தான் இருந்தது. அப்போது நான் போலீஸ் கான்ஸ்டபில். இப்போது சி.ஐ.டி. ரகசிய போலீஸ். உத்தியோகம் கொஞ்சம் உயர்ந்துவிட்டது. இந்த உத்தியோக உயர்வுகூட உங்களைப் போல இருந்திருந்தால் கிடைத்திருக்கும் என்கிறீர்களா? இதற்கும் எத்தனை சிபாரிசு என்கிறீர்கள்...!" என்று அலுத்துக்கொண்டான். அந்த மனிதன். அவன் என்னைக் கேட்டான்.
"நீங்கள் எங்கே... இப்படி இடம் தேடியா?..." மிகவும் தாழ்ந்த குரலில், ஒருவித அனுதாப சுருதியில் அவன் இதைக்கேட்டான்.
"ஆம்... இடம்தான்...தேட ஆரம்பித்து ரொம்ப ரொம்ப நாளாகிறது. முப்பது ரூபாய்க்குள் ஒரு இடம்.... என் குழந்தை, மனைவி, நான் - மூன்று பேருக்கும். கிடைத்தால்தானே. அவள் ஊரிலிருந்து வாரத்துக்கு நாலு கடிதம் எழுதுகிறான், 'கிடைத்ததா?... கிளம்பலாமா?' என்று இப்போதும், இதோ இந்தப் பக்கம் தேடிவிட்டுத்தான்... இடம் இருக்கிறது. ஐம்பது ரூபாயாம்...! எங்கே போவது?...வெறும் குமாஸ்தா." - நான் பெருமூச்செறிந்தேன். என் பெருமூச்சுக்கு உரிய மரியாதை செலுத்துபவன் போல் ஒரு நிமிஷம் மௌனமாக நின்றுவிட்டுப் பிறகு சொன்னான்.
"இதோ, இந்த வீட்டை வாடகைக்கு விடுவதாகத்தான் இருக்கிறேன். ஐந்து ரூபாய் மாதத்துக்கு. இரண்டு மாத வாடகை அட்வான்சாகக் கொடுத்துவிட வேண்டும். நேற்று ஒருவர் வந்து பார்த்துவிட்டுப் போனார். இந்த வாடகை அதிகமாம். கட்டி வராதாம். வேண்டாமாம்; போனால் போய்விட்டுப் போகிறார். அவருடைய மாத வருவாயே முப்பது ரூபாய்தானாம். அதற்க்கு நான் என்ன பண்ணுவது? எனக்கும் என்ன, மாசம் ஆயிரமா வருகிறது!... சரி, அது போகட்டும் உங்களுக்குக் கொடுத்துவிடலாம் என்றால்... ஒ, அது முடியாதே, நீங்கள்... நீங்கள்... என்ன செய்ய? ரொம்பவும் பரிதாபமாக இருக்கிறது; இரண்டு மாதமாக அந்த வீடு காலியாகத்தான் கிடக்கிறது. முன்னே இருந்த ஆசாமி இரண்டு மாத வாடகை பாக்கி போட்டுவிட்டு, பணம் கொடுக்காமல் கம்பி நீட்டிவிட்டான். போலீஸ்காரனுக்கே மிளகாய் அரைத்துவிட்டுப் போய்விட்டான். அவனை நான் விடப்போவதில்லை... அது சரி, நீங்கள் நிற்கிறீர்களே!... உட்காரச் சொல்லவும்..."
"அதனால் என்ன... பரவாயில்லை. ஒரு இடம் கிடைப்பதாயிருந்தால் இப்படியே நெஞ்சில் கையைக் கட்டிக்கொண்டு நூறு நூற்றைம்பது வருஷம் நின்றுவிடலாம். கால் வலித்தாலும், இடம் கிடைத்த பிறகு கடுப்புத் தீர உட்கார்ந்து ஆறலாமல்லவா? ஆனால் ஒரு யுகம் நின்றாலாவது கிடைக்குமா?... ஹுஹும், உங்கள் வீட்டைப் பயன்படுத்திக்கொள்ளும் அதிருஷ்டமும் எனக்கில்லை. என்ன பண்ணுவது... ஆமாம்... நீங்கள் எப்படி... இப்படி..." - நான் இப்படி இழுத்தேன்.
"ஒ! புரிந்தது. என் இந்த உருவத்தைத்தானே கேட்கிறீர்கள்! எப்படி இந்த உருவம் என்று. அப்படித்தானே? இந்தப் பட்டணத்தில் இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் தங்கியிருந்துவிட்டால் போதும்; விடை தானாகவே உங்களுக்குத் தெரிந்துவிடும்... இருந்தாலும் நானே சொல்லிவிடுகிறேன்... இந்தப் பட்டணத்துக்கு நான் வந்து சேர்ந்து எத்தனையோ வருஷங்கலாகிவிட்டன. நாங்கள் நானும் என் மனைவியும். கிராமத்திலிருந்து வந்தோம். எங்கள் கல்யாணம் நடந்த மறுநாள் எனக்கு வேலை உத்தரவு வந்தது. எல்லாம் அவளுடைய அதிர்ஷ்டம்தான். போலீஸ் வேலை. அப்போது நான் உங்களை விடவும் ஒரு பிடி உயரமாக இருந்ததாகத்தான் நினைவு. பட்டணம் வந்து இடம் தேடி அலைந்தேன். இந்தப் பட்டணம் என்றுதான் நெருக்கமாக இருந்ததில்லை? அது சரி, இது ஒரு பட்டணம் என்றா நினைக்கிறீர்கள்? ஒ! இது ஒரு சந்தை; பெரிய சந்தை. சந்தை நெருக்கடியாகத்தான் இருக்கும். ஆனால் இந்தச் சந்தை கலைவதில்லை. கூடிய சந்தை கூடியபடியே இருக்கிறது. சந்தையிலேயே எல்லாரும் தங்கிவிட்டார்கள். அப்போதும் வெய்யில் இப்படிதான். நெருப்பு. இடம் தேடி வெய்யிலில் நான் அலைந்து திரிந்தேன். வெய்யில் காலம் முடிந்து மழையின் காலம் வந்து மீண்டும் வெயிலின் காலம் தொடர்ந்தது. அப்போதும் நான் இந்தப் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டுதான் இருந்தேன். கடைசியில், ரொம்ப ரொம்பக் கடைசியில், ஒரு இடம் கிடைத்தது. அந்த இடத்துக்கு நான் என்ன வாடகை கொடுத்தேன் என்பது நினைவில்லை. ஆனால் நிச்சயம் என் சக்திக்கு மீறிய வாடகைதான். கிராமத்துக்குப் போய் என் மனைவியை அழைத்து வந்தேன். கிடைத்த இடம் கொஞ்சம் சௌகரியமாகவே இருந்தது. உட்காரவும், உடம்பைச் சற்று வளைத்துப் படுக்கவும் தாராளமாகவே இருந்தது. அந்த இடத்தில் நாங்கள் வளைந்து வளைந்து படுத்திருந்தோம். ஆனால் எப்போதுமே காலை நீட்டிக்கொண்டு உட்கார அங்கே வசதி இருந்ததே, அது பெரிய விஷயம் அல்லவா? என்றாலும் இரவில் அப்படி உட்கார்ந்து எங்களால் தூங்க முடியவில்லை. மேலும் அப்போது நாங்கள் இளம் தம்பதிகள்... என்ன ஸார், கேட்கிறீர்களா? ரொம்பவும் சுருக்கமாகத்தான் சொல்லுகிறேன்..."
"ம்... சொல்லுங்கள்." - நான் தலையைப் பலமாகச் சுழற்றினேன்.
"கொஞ்ச காலத்துக்குப் பிறகு அந்த வீட்டை நங்கள் காலி சேயை வேண்டியதாயிற்று. வீட்டுக்காரன் வாடகையை உயர்த்தினான். மீசையை முறுக்கிக்கொண்டு நான் முறைத்தேன். என் போலீஸ் ஜம்பம் ஒன்றும் அவனிடம் சாயவில்லை. அவன் கண்டிப்பாகப் பேசிவிட்டான். மேலும் எனது கூனல் விழுந்த முதுகைப் பார்த்து அவன் கேலியாகச் சிரிக்க வேறு செய்தான். ஆம், அந்த இடைக்காலத்தில் என் முதுகும் என் மனைவியின் முதுகும் நன்றாக வளைந்து கூனிக் குறுகிப் போய்விட்டிருந்தது. வெகு நாட்களாக வளைந்து வளைந்து படுத்திருந்ததால்தானோ என்னமோ எலும்பு வில்லாயின எங்கள் முதுகுகள்."
மீண்டும் இடம் தேடித் திரிந்தேன். கூனல் முதுகுடன் பட்டணத்து வெய்யிலில் சிறிது காலம் சுற்றிய பின் ஒரு இடம் கிடைத்தது. நாலு வருஷம் தேடிய பிறகுதான் கிடைக்கும் என்று முதலில் நினைத்தேன். எப்படியோ சீக்கிரம் கிடைத்துவிட்டது. எங்கள் அதிர்ஷ்டம்தான். முன்னை விடவும் வாடகை சிறிது அதிகம். இடம் முன்னை விடவும் சற்று சிறிது. ஆனால் கால் நீட்டி நாங்கள் உட்கார முடிந்தது. இரவில் உன்னை விடவும் முதுகை வளைத்து, அரை வட்டமாகச் சுருண்டு கிடக்க இடமிருந்தது. நானும் என் மனைவியும் சேர்ந்து ஒரு வட்டமாகக் கிடப்போம்.
"இந்த வட்டத்துக்குள் இருக்கும் காலி இடத்தை யாருக்காவது ஒண்டிக் கிடித்தனம் விடலாமல்லவா?" என்று என் வீட்டுக்காரி கேட்டாள். அவள் மிகவும் கெட்டிக்காரி என்பதில் என்ன சந்தேகம்? அப்படி யாராவது குடித்தனம் பண்ண வந்தால் அது எங்களுக்கு லாபம்தானே? எங்கள் வருவாய் சிறிது அதிகரிக்காதா? அந்த வீட்டில் வைத்துத்தான் எங்களுக்குக் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன. பிறந்த குழந்தைகளின் முதுகுகளும் வளைந்தே இருந்தன. ஒருகால் கருப்பையில் அவைகள் நிமிர்ந்தே இருந்திருக்கலாம்.
"நாள் செல்லச் செல்ல ஒரு அதிசயம் நிகழ்ந்தது. எங்கள் முதுகுகள் சிறிது சிறிதாக நிமிரத் தொடங்கின. அப்படியே எங்கள் குழந்தைகளின் முதுகுகளும் படிப்படியாக நிமிர்ந்து வந்ததை எல்லையற்ற மகிழ்ச்சியுடன் நாங்கள் கவனித்து வந்தோம். ஆனால் கொஞ்ச நாளில் எங்கள் குழந்தைகளிரண்டும் ஒன்றன் பின் ஒன்றாகத் திடுதிப்பென்று இறந்து போயின. நாங்களும் நோய்வாய்ப்பட்டோம். குழந்தைகள் இறந்ததில் நாங்கள் மிகவும் துயரம் அடைந்தோம் என்றாலும், அந்தத் துயர நிகழ்ச்சிக்குப் பின் எங்கள் வாழ்க்கையில் அற்புதமான சில சௌகரியங்கள் வந்து கூடின. முதுகு கூனி, முதுகு நிமிர்ந்த பின் முன்னைவிடவும் குறுகிச் சிறுத்தோம். நாங்கள் இருந்த வீடு ஒரு மாளிகையை எங்களுக்குத் தோன்றும் வண்ணம் நாங்கள் உருமாற்றம் கொண்டுவிட்டதை என்னவென்று சொல்ல? ஒன்று சிறுத்தது ஒன்று சிருக்கவில்லை என்றில்லாதபடி எங்கள் எல்லா அங்கங்களும் அதனதன் அளவில சீராக, சுருக்கமாக - நானும் அவளும் கண்ணாடியில் கண்டு களிப்புரும்படியாக – அமைந்துவிட்டதை என்னவென்று சொல்ல! இருந்த சிறு குடில் பெரிய வீடாகவும் அணிந்து வந்த சரியான சட்டைகள் தொளதொளத்து, உடல் நீண்டு, கை நீண்டு, தோல் பட்டை நீண்டு.... பேஷ், பேஷ்! ஒரு வேட்டியை இரண்டு வேட்டியாக்கிக் கொள்ள முடிந்தது! பழைய ஒரு நாள் சாப்பாட்டில் இரண்டு நாள் பசியைத் தீர்த்துக்கொள்ள முடிந்தது. ஒரு நாளைக்கு ஓரணா மோர் வாங்கிய நாங்கள் இப்போது அரை அணா மோர் வாங்கத் தொடங்கினோம். நாங்கள் பாதியாய்ச் சிறுக்க எங்கள் தேவைகளும் பாதியாய்ச் சிறுத்தன. ஆனால் பழைய வருவாய் அப்படியேதான் வந்தது. இருந்த வீடு முன்யிருந்தது போலவேதான் இருந்தது. ஆ! என்ன ஆனந்தம்! என்ன வெற்றி! பேரதிர்ஷ்டம்...!"
அந்த மனிதன் சொல்லச் சொல்ல நான் அமைதியாகவும், ஆச்சரியத்தை விழுங்கிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் நின்றேன். அக்குறுமனிதன் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டக்காரன் தான்.
நெற்றி வியர்வையை வழித்து விட்டு விட்டு இரண்டு இடுப்பிலும் இரண்டு கைகளையும் மீண்டும் ஊன்றிக் கொண்டு என்னை அண்ணாந்து நோக்கினான் அந்த மனிதன்.
"உம் அப்புறம்" என்றேன் நான்.
பொழுது இருட்டத் தொடங்கிற்று. தெரு விளக்குகள் ஒரு வகைச் சோகம் கலந்த மங்கிய ஒளியை மண்ணில் தேய்க்கத் தொடங்கின. தன் பேச்சில் தானே சலிப்புற்றவன் போல் அந்த 'இக்கினியூண்டு' மனிதன், "அப்புறம் என்ன ஸார்..." என்று ஒரு இழுப்பு இழுத்தான். நானும் சற்றுச் சலிப்புற்றுத்தான் இருந்தேன். போய்விடலாம் என்றே தோன்றியது. ஆபீஸ் வேலைகளும் மண்டையை அழுத்திற்று. ஆனாலும் நான் பேச்சை வளர்க்க முனைந்தேன். ஏனென்றால் அறையும் குறையுமாய் விஷயத்தை விட்டுவிட்டால் உனக்கு எரிச்சலாக வருமே செல்லா. எதையுமே கடைசிவரை தெரிந்து கொள்ளும் அக்கறை உள்ளவலாயிற்றே நீ. ஆனால் உலகத்தில் எதையுமே கடைசிவரை தெரிந்துகொள்ள முடியாது என்பதை மீண்டும் உனக்குச் சொல்லுகிறேன். கடைசி கடைசி என்பதெல்லாம் வெறும் மயக்கம்தான். சரி போகட்டும்... பாதியாகக் குருகியவன் பூட்சுக்குள் புகும் அளவுக்கு எப்படி ரூபம் பெற்றான் என்று நீ அடுத்த கடிதத்தில் நிச்சயமாகக் கேட்பாய். நான் இப்படி இங்கே நிறுத்திவிட்டால். உனக்காக அவனிடம் பேச்சை வளர்த்தினேன். " உம் அப்புறம், அப்புறம்" என்றேன்.
அவன் சிரித்தான். அரை நிக்கரை மேலே இழுத்துச் சரி செய்துகொண்டான். தொண்டையையைக் கனைத்துக் குரலை வசதி பண்ணிக்கொண்டான்.
அப்புறம் என்ன?... அதேதான், அப்புறமும் எங்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. குடும்பம் பெருகிற்று. என் மனைவி வியாதிகளில் விழுந்தாள்; எழுந்தால். குழந்தைகளும் நோய் நொடிப்பட்டன. செலவு அதிகரித்தது. இடையில் வாய்த்திருந்த சௌகரியங்கள் இல்லாமலாயிற்று. விலைவாசிகள் நாள் செல்லச் செல்ல விஷ வேகத்துடன் ஏறின. உலகத்திலே எங்கெங்கோ கடும் யுத்தங்கள் மூண்டன. இந்தப் பட்டணத்தின் நெருக்கடி பத்து மடங்காய், நூறு மடங்காய், மிகுந்தது. வீட்டு வாடகை என்னும் பேய் அமோகமாய் வானை முட்டிக்கொண்டு எழுந்தது. மீண்டும் நான் இருந்த வீட்டை விட்டுச் செல்ல வேண்டியவனானேன். இன்னும் பதினைந்து கூட்டிக் கொடு என்றான் வீட்டுக்காரன். என் சம்பளம் அப்போது சிறிதளவு ஏறியிருந்தது. என்றாலும் விலைவாசியும், குடும்பமும் பெருத்துப் போனதால் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. மறுபடியும் ' ஒரு வீடு' என்று நாயை நடந்தேன். இந்தப் பட்டணத்தைச் சுற்றிச் சுற்றி... போதும், இப்படிப் பேசிக்கொண்டே இருக்கப் பிடிக்கவில்லை ஸார்! மேலும் இப்போ எனக்குப் பசிக்கிறது. விஷயத்தை ஓட்டிச் ஒல்லி முடித்து உங்களையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். நீங்கள் நூறு வருஷமாய் நின்றுகொண்டிருப்பதாகவும் நூற்றைம்பது வருஷமாய் என் சுயசரிதத்தை உங்களிடம் கடைவிரித்துக் கொண்டிருப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது... ஏன், உங்களுக்குப் பசிக்கவில்லையா?... ஹோட்டல்... மணி இப்போது ஏழரை இருக்காது....
"இருக்கும். இருக்கும்... அப்புறம் என்ன?"
"அப்புறம் என்ன? உலகத்திலேயே மிகச் சிறிய வீடு எனக்குக் கிடைத்தது. அதில் நானும் குடும்பமும் குடிபுகுந்தோம். எங்களை இரண்டாக, நாளாக மடக்கிக்கொண்டு அவ்வீட்டில் படுத்து உறங்கினோம். அட்டைகளாய் இழைத்தோம். எங்கள் முதுகுகள் மேலும் வளைந்து நிமிர்ந்தது. மேலும் நாங்கள் குறுகிச் சிருத்தோம். இருந்த குழந்தைகள் இறந்தன. மேலும் பிறந்தன. ஒரு நாள் உணவு நாலு நாள் பசியைத் தீர்த்தது. நாலுநாள் பசி தீர்த்த ஒரு நாள் உணவின் விலை முன்னை விடவும் எட்டு மடங்காய் ஏறிற்று. உலகம் புதிய பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு திண்டாடியது. பத்துச் சிக்கல்கள் ஒரு புறம் விடுபடுகையில் பதினாயிரம் புதுச்சிக்கல்கள் மற்றொரு புறம் கால்பரப்பி எழுந்தன.
"பிறகு உலகத்திலேயே மிகச் சிறிய அந்த வீட்டையும் துறக்க வேண்டியவர்களானோம். குடும்பம் பெருத்தாலும், நோய்நெடிச் செலவுகள் மிகுந்தாலும், விலைவாசிகள் எட்ட முடியாதபடிச் சிறகடித்துப் பறந்தாலும், உடல் குருகியதால் ஏற்பட்ட சௌகரியங்கள் அடிபட்டுப் போயின.
"பிறகு ஒரு கோழிக் கூட்டில் நாங்கள் குடிபுகுந்தோம்..."
"பிறகு இந்த வீட்டுக்கு - இந்த பூட்சுகள்! இது எனது பழைய பூட்சு. போலீசில் முதலில் நான் சேர்ந்த காலத்ஹ்டில் சர்க்கார் எனக்குக் கொடுத்தது. நோக்கமின்றியே பத்திரமாகப் பாதுகாத்துக்கொண்டு வந்தேன். ஓட்டுப் போட்டதென்றாலும் உறுதியானது. இது மிகவும் சௌகரியம், உள்ளே பல வசதிகள் பண்ணி வைத்திருக்கிறேன். வந்து பார்க்கிறீர்களா? ஒ! மன்னிக்க வேண்டும். உங்களை ரொம்பவும் காக்க வைத்துவிட்டேன். மணி இப்போது எட்டு இராதா?... இருக்கும். நீங்கள் பொங்கல். உங்களுக்குப் பசிக்கவில்லையா? எனக்குப் பசிக்கிறது. கடவுள் கிருபையால் சீக்கிரமே உங்களுக்கு வீடு கிடைக்க வேண்டும்... சரி போய் வாருங்கள். என் மனைவி இதோ என்னைக் கூப்பிட்டுக் கத்துகிறாள். கேட்கிறதா?...
கரம் கூப்பிவிட்டு நூலேணியில் கால் வைத்தான் அந்த ஆசாமி. மீண்டும் ஒரு பெருமூச்சை உதறிவிட்டு நான் அங்கிருந்து புறப்பட்டேன்.
செல்வா, நம்மை விடவும் அந்தக் குறுகல் பேர்வழி அதிர்ஷ்டசாலி இல்லை என்று உன்னால் நினைக்க முடிகிறதா. செருப்புக்கு ஏற்றபடி எல்லாம் அவள் காலைச் ஹ்சின்னது பண்ணிக் கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறான் இறைவன்.
இப்போது என்ன சொல்கிறாய்? நாமும் அவனைப் போல்... அடக் கடவுளே!
இப்படிக்கு ,
உயரமான உன் கணவன்
இலக்கிய வட்டம்.
நன்றி: கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள், முழுத்தொகுப்பு - காலச்சுவடு பதிப்பகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக