12/02/2011

இலக்கியப் பார்வை - 2

இளைய வாசகர்களே! இலக்கிய வாசனையை நுகர ஆரம்பித்து விட்டால், நாவல்களைப் படிப்பது போல் நமது ஆர்வம் மேலிடும்.  நீங்கள் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் போது, அதற்கு பதிலளிக்கவும் உதவும். நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்தப் பகுதியில்  சுருக்கமாகப் பார்க்கலாம்.

திவ்ய பிரபந்தத்தின் பிரிவுகள்
பிரபந்த நூலை 20 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதல் மூன்று ஆழ்வார்களான பொய்கை, பூதத்தாழ்வார், பேயாழ்வார் பாடியவை முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதி எனப்படும். பெரியாழ்வார் பாடியவை திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி எனப்படுகிறது. ஆண்டாளுக்குரியவை திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி. குலசேகராழ்வாருக்குரியது பெருமாள் திருமொழி. திருமழிசையாழ்வார் எழுதியவை திருச்சந்த விருத்தத்தையும், நான்முகன் திருவந்தாதி எனப்படுகின்றன.  தொண்டரடி பொடியாழ்வாருக்குரியவை திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி. திருப்பாணாழ்வார்  எழுதியதை "அமலனாதிபிரான்' என்றும், மதுரகவியாழ் வாருக்குரியது "கண்ணி நுண் சிறுதாம்பு' என்றும்  கூறப்படும். திருமங்கையாழ்வாருக்குரியது பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகியவை. நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் 20 பிரிவுகளில்,  திருவாய்மொழி என்ற பிரிவே பெரியது. இதில் 1102 பாசுரங்கள் உள்ளன. திருவெழுகூற்றிருக்கை என்ற பிரிவே மிகச்சிறியது. இதில் ஒரே ஒரு பாடல் தான் உண்டு. இந்த நூலுக்கு உரை எழுதியவர் பெரியவாச்சான்பிள்ளை. 108 திவ்யதேசங்களிலுள்ள பெருமாள்களைப் பற்றி ஆழ்வார்கள் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, அந்தத் தலங்கள் பக்தர்களால் மிகச்சிறப்பாகப்  போற்றப்படுகின்றன.
தமிழ் வியாசரின் பிரபந்தம்
திருமாலுடைய மங்கல குணங்களைப் பற்றி ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம். "திவ்ய' என்றால் "இனிமை'. "ப்ர' என்றால் "தெய்வம்'. "பந்தம்' என்றால் "உறவு'. இறைவனுடன் உள்ள உறவைக் குறித்து இனிமையாகப் பாடப்பட்ட நாலாயிரம் பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது.
12 ஆழ்வார்கள் இந்தப் பாசுரங்களை (பாடல்)  பாடியுள்ளனர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் தலா 100 பாடல்களும், திருமழிசையாழ்வார் 96 பாடல்களும், பெரியாழ்வார் 473 பாடல்களும், ஆண்டாள் 173 பாடல்களும், தொண்டரடிப் பொடியாழ்வார் 55 பாடல்களும், திருமங்கையாழ்வார் 1263 பாடல்களும், திருப்பாணாழ்வார் 10 பாடல்களும், குலசேகராழ்வார் 105 பாடல்களும், நம்மாழ்வார் 1296 பாடல்களும் பெருமாளைப் பற்றி பாடியுள்ளனர். மதுரகவியாழ்வார் பெருமாளைப் பாடாமல், தன் குருவான நம்மாழ்வாரைப் பற்றி 11 பாடல்கள் பாடியுள்ளார்.  இவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இவரை "தமிழ் வியாசர்' என அழைப்பர்.

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை: