21/09/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 3

இந்த வாரச் சொல் வேட்டைக்குள் நுழைவதற்கு முன், ஒரு வாக்கு மூலத்தை வாசகர்களுக்கு நான் அளிக்க வேண்டும். நான் தமிழ் அறிஞன் அல்லன். ஆனால் தமிழ் ஆர்வலன். இந்த வேட்டையில் பங்கேற்கும் வாசகர்களும், படித்து மகிழும் அல்லது படித்துப் பார்க்கும் பலரும், மொழியியலில் என்னைவிட மிகப்பெரிய அறிஞர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். எனவே, இந்த வேட்டையில் தேர்ந்தெடுக்கப்படும் சொற்கள், என்னுடைய அல்லது தினமணி ஆசிரியருடைய இறுதித் தீர்ப்பல்ல. தீர்ப்பளிப்பதற்கு, இது நீதி மன்றமும் அல்ல. இதில் தேர்ந்தெடுக்கப்படும் சொற்களை நாங்கள் தமிழ்கூறும் நல்லுலகம் முன் பரிசீலனைக்கு வைக்கிறோம். அவர்களது தீர்ப்பிற்கு நாம் கட்டுப்படுவோம். இனி இந்தவார வேட்டைக்கு வருவோம்.

"அடிக்ட்' என்ற சொல்லை சென்ற வாரம் நாம் வேட்டைக்கு விட்டோம். பட்டுக்கோட்டையில் இருந்து பன்னீர்செல்வம் என்னும் வாசகர் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி "விடுதல் அறியா விருப்பினன்' என்ற சொற்றொடரையும், வேட்கை, கூடுதல் விருப்பம், மிகு விருப்பம் என்னும் சொற்களையும் மாற்றாகக் குறிப்பிட்டு விட்டு, "அடிக்ட்' என்ற சொல்லுக்குக் "கொடு வேட்கை'' என்னும் சொல்லும் பொருத்தமாக இருக்கும் என்று எழுதியிருக்கிறார்.

அம்பத்தூரிலிருந்து புலவர் உ.தேவதாசு, கள், கவறு (சூது), காமம் இவற்றுக்கு ஆட்பட்டு மீள முடியாமல் போகும் நிலையையே "அடிக்ட்' என்ற சொல் குறிப்பதானால் சிலப்பதிகாரம் கூறும் "விடுதல் அறியா விருப்பம்' அல்லது "வேட்கை' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும் உரைத்திருக்கிறார். கோவை கோவில்பாளையம் முனைவர் வே. குழந்தைசாமியும் விடுதல் அறியா விருப்பினன், மீளா வேட்கை, வேட்கை அடிமை, மீளா விருப்பினன், மீளா விருப்பு ஆகிய சொற்களை எழுதியுள்ளார்.

வில்லிவாக்கம் சோலை. கருப்பையா பித்து, பைத்தியம் ஆகிய சொற்களையும், உள்ளகரத்திலிருந்து வி.ந.ஸ்ரீதரன் "மீளான்' என்ற சொல்லையும், பட்டாபிராம் பாரதி நேசன் "பண்பில் பழக்கம்', "மது மயக்கம்' என்ற சொற்களையும், திருவாரூர் தனபாலன்,  "ஆட்படுதல்' என்ற சொல்லையும், காஞ்சிபுரம் முனைவர் அமுத.இளவழகன், "விடுதல் அறியா விருப்பினன்', "விடா விருப்பு', "விடா வேட்கை' என்னும் சொற்களையும், போளூர் ரகுபதி முழுகுதல், அனுபவித்தல், திளைத்தல், மகிழ்தல், துர்பழக்கம் என்னும் சொற்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

புலவர் அடியன் மணிவாசகன் திருவள்ளுவர், அக நிலையிலும், புற நிலையிலும் தீமை செய்து ஒழுகுதலை, படிறு + ஒழுக்கம் = படிற்றொழுக்கம் என்று சொல்வதையும், தேவாரத்தில் "மீளா அடிமை உனக்கே' (சுந்தரர்) என்று சொல்லப்படுவதையும் சுட்டிக்காட்டி, காட்சி நிலையில் திடீரென அறிவு மயங்குவது "மருட்கை' எனப்படும் எனவும், தொல்காப்பியத்தில் மருட்கை என்பது அறிவுக்குப் பொருந்தாத சிறுமைச் செயல் என்று குறிப்பிடப்படுவதால், அடிக்ட் என்ற சொல்லுக்கு, படிற்றொழுக்கம், "சிறுமைச் செயல்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதியிருக்கிறார். பாடியில் இருந்து முனைவர் மு. அரங்கசுவாமி திருமூலரின் வாக்காகிய "வேட்கை விட்டார் நெஞ்சில்'' என்பதைக் குறிப்பிட்டு, வேட்கை என்னும் சொல் சரியாக இருக்கும் என்கிறார்.

போதை என்னும் சொல், "போதல்' என்னும் சொல்லில் இருந்து வருவதாலும், போதல் என்ற சொல்லுக்கு நன்கு பயிலுதல் என்று பொருள் உள்ளதாலும், ஆட்பட்ட மனம், தீமையைப் பழகுவதால், அடிக்ட் என்ற சொல்லுக்கு "தீயொழுழுக்கம்' என்பதே பொருத்தமான சொல்லாக இருக்கும் என்றும் ""நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்'' என்ற குறளைச் சுட்டிக் காட்டி, புதுச்சேரி தெ.முருகசாமி எழுதியுள்ளார்.

நாமக்கல் கா. சிவராஜ், அடிமை உணர்ச்சி தன்னுணர்ச்சியால் வருவதால் "அடிக்ட்' என்ற சொல்லுக்குத் "தன்னடிமை' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். அதற்குச் சான்றாக பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வரும் "தன்னை இழந்து அடிமையான பின்னர் தாரம் ஏது வீடு ஏது?' என்ற பாடலைச் சுட்டிக் காட்டுகிறார்.

திருச்சியிலிருந்து தி.அன்பழகன், தீய பழக்கங்களுக்கு மனிதன் அடிமையாவது பலவீனம் என்பதால், "அடிக்ட்' என்ற சொல்லுக்கு "பழக்கவீனம்' அல்லது "மாறாப்பழக்கம்' என்ற சொற்கள் பொருத்தமாக இருக்கும் என்கிறார். ஜெயகிருஷ்ணன் என்பவர், "வேட்கை' என்றும், கே.ஆர்.சுரேந்திரன் "விடாப் பழக்கம்'' பொருத்தமாக இருக்கும் என்றும் எழுதி இருக்கிறார்கள்.

சேக்கிழார் சிவநெறிக் கழகத்திலிருந்து சைவப் புலவர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவுள்ள மனிதன் தகாத செயல்களைச் செய்யும் பொழுது அவனை "அறிவு இல்லாதவன்', "மடையன்' என்று அழைப்பதால், "அடிக்ஷன்' என்ற சொல்லுக்கு "அறிமடம்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்றும், அதே சமயம் மனம் அறிவுக்குக் கட்டுப்படாமல் இருப்பதால், "மனக்கோட்டம்' அல்லது "ஒளவியம்' என்ற சொற்களாலும் இதைக் குறிக்கலாம் என்கிறார். "கோட்டி' என்ற சொல் ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது "அடிக்ட்'  என்ற சொல்லுக்கு "மீளா வேட்கையன்' என்ற சொல்லும், "அடிக்ஷன்' என்ற சொல்லுக்கு "மீளா வேட்கை' என்பதும் பொருத்தமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.  "மீளா அடிமை' என்ற சொல்கூட பொருத்தமாக இருக்கலாம். ஆனால், இறைவனுக்கு ஆட்பட்டவர்களை அப்படிக் குறிப்பிடுவதால் "அடிக்ட்'  என்ற சொல்லுக்கு அதே சொல்லை பயன்படுத்துவதை மனம் ஒப்ப மறுக்கிறது. "விடுதல் அறியா விருப்பினன்'' என்பது பொருத்தமாக இருந்தாலும், அது நீண்ட தொடராக இருக்கும் காரணத்தால் அதைவிட "மீளா வேட்கை' என்ற சொல்லே பொருத்தம் என்று தோன்றுகிறது.

அடுத்த சொல் வேட்டை

"டென்ஷன்'.  "பதட்டம், பதற்றம் என்கிற சொற்கள்  ஏற்கெனவே இருந்தாலும், ஒரு மனிதனின் உடல் நிலையில் ஏற்படும் "ஹைபர் டென்ஷன்' "இரத்தக் கொதிப்பு' என்று கூறப்படுகிறது. மனோ நிலையில் ஏற்படும் டென்ஷன் சில சமயம் "நிலைகொள்ளாமை' என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிராமத்திலோ, ஒரு சமூகத்திலோ ஏற்படும் பதட்டமும் டென்ஷன் என்றே அழைக்கப்படுகிறது. எது சரியாக இருக்கும்?

அடுத்த வார சொல் வேட்டைக்கான சொல் - “டென்ஷன்'

வேட்டை தொடரும்…

நன்றி - தமிழ்மணி 25 11 12

1 கருத்து:

poornima சொன்னது…

sensitive, serious என்ற ஆங்கிலச் சொற்களுக்கு சரியான தமிழ்ச் சொற்கள் எவை?
It is a sensitive issue.
This is a serious matter. போன்ற அர்த்தம் வரும்படி எப்படி சரியாக எழுதுவது?
கனடாவிலிருந்து
பூர்ணிமா