இருபதாம் நூற்றாண்டு கண்ட சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் - படைப்பிலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் ஆர்.வி., என்று அழைக்கப்படும் ஆர்.வெங்கட்ராமன்.
தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், 1918-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள், இராமையர்-சீதாலட்சுமி இணையருக்குப் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்குகொண்டு துண்டுப் பிரசுரங்கள் எழுதித் தருவது, பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்புவது போன்ற பணிகளில் ஈடுபட்டார். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் விடுதலைப் போராட்டத்துக்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
1956-ஆம் ஆண்டு வெளிவந்த இவருடைய "அணையா விளக்கு' நாவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. "ஆதித்தன் காதல்' என்ற சரித்திர நாவலில் கொஞ்சி விளையாடிய தமிழ் நடையையும், "திரைக்குப் பின்' நாவலின், புயல் வர்ணனைகளையும் படித்தவர்களால் மறக்க முடியாது.
வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம், ஆர்.வி.யின் இளம் உள்ளத்தில் சுதந்திர வேட்கையைக் கிளர்ந்து எழச்செய்தது. 12-ஆம் வயதில் கதராடைக்கு மாறிய ஆர்.வி., வாழ்நாள் முழுவதும் கதராடையே அணிந்து வந்தார்.
1941-இல் நடைபெற்ற தனி நபர் சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு மூன்று மாதம் சிறைத்தண்டனை பெற்றார். அப்போது, இவருடைய பள்ளிச் சான்றிதழ்களைப் போலீசார் பறித்துச் சென்றுவிட்டனர். நாட்டு விடுதலைக்காக ஊர் ஊராகச் சென்று, தீவிரமாகப் பிரசாரம் செய்து, போராட்டங்களில் கலந்துகொண்டு, சான்றிதழ்களை இழந்து, சிறைத்தண்டனை அனுபவித்து பல இன்னல்களுக்கு ஆளாகியும்கூட சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்காக வழங்கப்படும் ஓய்வூதியத்தையோ, சலுகைகளையோ அனுபவிக்கவில்லையாம்.
ஆர்.வி., பத்தாம் வகுப்புப் படிக்கும்போது எழுதிய முதல் சிறுகதைதான் "தனிக் குடித்தனம்'. பள்ளிப் பருவத்திலேயே ஆனந்த விகடன், கலைமகள் போன்ற பிரபல பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டார் ஆர்.வி.
1942-ஆம் ஆண்டு அப்போதைய "இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழின் ஆசிரியரான கே.சந்தானம், ஆர்.வி.யை சென்னைக்கு அழைத்துவந்து, கல்கியிடம் அறிமுகம் செய்து வைத்தாராம். கல்கியில் பணியில் சேர இருந்த ஆர்.வி., தற்செயலாகக் கலைமகள் காரியாலயத்தில் கி.வா.ஜ.வைச் சந்திக்க நேர்ந்ததும், அதன் பயனாகக் கலைமகள் அலுவலகத்திலேயே பணியில் அமர்ந்ததும் தனிக் கதை. கலைமகள் பத்திரிகையை இலக்கியத் தரம் வாய்ந்த உயர்ந்த பத்திரிகையாக வளர்த்ததில் ஆர்.வி.யின் பங்கு மகத்தானது. மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று பிரபலமாகப் பேசப்படும் பல மூத்த எழுத்தாளர்களைக் கலைமகளில் எழுதவைத்த பெருமையும் ஆர்.வி.யைச் சேரும்.
கலைமகள் நிறுவனம் 1950-இல் "கண்ணன்' என்ற சிறுவர்களுக்கானப் பத்திரிகையைத் தொடங்கியபோது அதன் ஆசிரியர் பொறுப்பு ஆர்.வி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்.வி.யின் அனுபவம், கற்பனை வளம், எழுத்தாற்றல் இவை தமிழில் சிறுவர் இலக்கியம் வளர உரமாக அமைந்தன. புதுமையான நடையில் அற்புதமானச் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் கண்ணனில் எழுதினார். கண்ணன் வாயிலாக, பாரபட்சமின்றி பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, ஊக்கமூட்டி எழுத வைத்தார். குழந்தை இலக்கியத்திற்காகக் கலைமகள் நடத்திய "கண்ணன்' இதழ் வெளிவந்த 22 ஆண்டுகள், தமிழில் குழந்தை இலக்கியத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.
கல்கியைத் தலைவராகக்கொண்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாகக் காரணமாகி, அதில் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். விக்கிரமன், சாண்டில்யன், த.நா.குமாரசுவாமியுடன் சேர்ந்து எழுத்தாளர்கள் தங்கள் நூல்களைத் தாங்களே வெளியிட்டுக்கொள்ள உதவும் வகையில் "தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம்' அமையவும் காரணமாக இருந்தவர் ஆர்.வி.
குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மூன்று ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியதோடு, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர், ஜாகிர் ஹுசேன் முன்னிலையில் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் குழந்தை இலக்கிய மாநாட்டை நடத்தினார்.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் கிளையைச் சென்னையில் தொடங்கியதோடு, "ஆதர்ஸ் கில்டு' என்ற இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக் கிளை உருவாகக் காரணமாக இருந்து, அதன் செயல் உறுப்பினராகவும் இருந்தார்.
ஆர்.வி.யின் அணையா விளக்கு, குங்குமச் சிமிழ், சந்திரகிரிக் கோட்டை ஆகிய நூல்களுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசுகள் கிடைத்தன. காரைக்குடியில் நடைபெற்ற குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் ஏழாவது குழந்தை இலக்கிய மாநாட்டில், கேடயம் வழங்கி கெüரவிக்கப்பட்டார் ஆர்.வி.
2004-ஆம் ஆண்டு 27-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான விருது ஆர்.வி.க்கு வழங்கப்பட்டது. 33-ஆம் ஆண்டு கம்பன் விழாவில் சிறந்த எழுத்தாளருக்கானப் பாராட்டும், பொற்கிழியும் வழங்கப்பட்டன.
ஆர்.விக்குத் திருமணம் நடந்தபோது அவருடைய வயது 18; மனைவி பட்டம்மாவின் வயது 13. தமது எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து, நான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் நன்றாகப் படிக்கவைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்துவைத்து, தம் 90-வது அகவை வரை நிறைவான வாழ்க்கை வாழ்ந்த ஆர்.வி., 2008-ஆம் ஆண்டு ஆகஸ்டு 28-ஆம் தேதி காலமானார்.
தமிழ்ப் படைப்பிலக்கியம் வாழ-வளர உழைத்த சில மூத்த எழுத்தாளர்களுள் முன்னிலையில் இருக்கும் ஆர்.வி.யின், நூல்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு, பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதே பலரது பேரவா!
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக