30/01/2013

'மகாவித்துவான்' உ.கந்தசாமி முதலியார் - முனைவர் மா.சா.அறிவுடைநம்பி



கருவூரில், 1838-ஆம் ஆண்டு புரட்டாசி திங்கள் 5-ஆம் நாள் உலகநாதர் - பார்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தவர். இவருடைய முன்னோர் சேலம் மாவட்டத்தில் குடியேறி வாழ்ந்தவர்கள். பின்னாளில் காலவேறுபாட்டால் கோயம்புத்தூரில் வந்து குடியேறினர். முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக சேலம் மாவட்டத்தில் கிராமக்கணக்கு வேலை பார்த்து வந்தனர். தம் இளவயதிலேயே தந்தையாரை இழந்த கந்தசாமி, தாயார் பிறந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தார்.

அங்குள்ள கிறிஸ்தவப் பள்ளியில் தமிழும் ஆங்கிலமும் கற்றார். அக்காலத்தில் கிறிஸ்தவ சமயம் பலவகைக் காரணங்களால் எங்கும் பரப்பப்பட்டுப் பரவி இருந்தது. கந்தசாமி முதலியாரும் கிறிஸ்தவ சமயத்தினரால் ஈர்க்கப்பட்டு அதில் மயங்கி, அச்சமயத்தின் முடிவுகளையும் அதன் கொள்கைகளையும் பேசுவதைத் தம் கடமையாகக் கொண்டு செய்து வந்தார். தாம் கற்ற சைவ சமயக் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் இழித்துப் பேசுவதுமாக இருந்து வரலானார்.

சமணராக இருந்த மருள்நீக்கியார் (அப்பர்) சைவ சமயத்தைத் தழுவியது போன்றதொரு நிலைதான் கந்தசாமியின் வாழ்விலும் நடந்தது. கிறிஸ்தவ சமயத்தின் மீது பற்றுக்கொண்டிருந்த மனநிலையுடன் ஒருநாள் பேரூரில் நடந்த திருவிழாவை வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றார். அத் திருவிழாவுக்கு வந்திருந்த சந்திரசேகரம் பிள்ளை என்ற சைவச் சான்றோர், கந்தசாமியை அழைத்து, பலவாறாகப் பேசி, பத்தி நெறியையும், பழவடியார் தாள் பணியும் புத்தி நெறியையும் எடுத்துரைத்தார். கந்தசாமி முதலியாரைத் தடுத்தாட்கொண்டு கிறிஸ்தவ சமயத்திலிருந்து மீட்டார்.

அச்சான்றோர் பேசியதைக் கேட்ட கந்தசாமியின் மனம் மாறியது. சைவ சமயத்தின்பால் உள்ளம் திரும்பியது. உடனே திருக்கோயிலுக்குள் சென்றார். பட்டிப் பெருமானை உளமுருக வணங்கி அருள் பெற்றார். அன்று முதல் சைவ சமயத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார்.

பின்னர் கோயம்புத்தூரில் குடியேறினார். மார்கழித் திருவாதிரை, பங்குனி உத்திரம் மற்றும் சிறப்பு நாள்களில் பேரூருக்குச் சென்று பட்டீசரை வழிபட்டு வந்தார். அத்திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தார். இறைவன்மீது செந்தமிழ்ப் பாக்களும் பல பாடினார்.

மாதவச் சிவஞான முனிவரிடத்திலிருந்து தொடங்கி வரும் மாணாக்கர் பரம்பரையிலிருந்து வந்தவர் சந்திரசேகரம் பிள்ளை. கந்தசாமி முதலியார், சந்திரசேகரம் பிள்ளையிடம் கல்வி கற்றுத் தேர்ந்து மகாவித்துவானாக ஆனார்.

அந்தக் காலத்தில் வழக்குரைஞர் தொழிலுக்கென்று தனியாகச் சட்டத்தேர்வு இல்லை. வழக்குரைஞர்களை அரசியலார் ஒவ்வொரு நீதிமன்றத்திற்கென்று நியமித்தனர். அதற்கு அந்நாளில் "அன்கவனென்டெட் சிவில் சர்வீசஸ்' என்றொரு தேர்வு வைத்திருந்தனர். கந்தசாமி அதில் சேர்ந்து படித்துத் தேர்வில் வெற்றி பெற்றார். முதன் முதலாகக் கொள்ளேகாலம் உரிமையியல் நீதிமன்ற வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் அவ்வேலையை ஒப்புக் கொள்ளவில்லை.

அந்நாளில் கோயம்புத்தூரில் மாவட்ட நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகிய இரு நீதிமன்றங்கள் செயல்பட்டன. மொத்தம் 20 பேர் வரை வழக்குரைஞர்கள் இருந்தனர். வழக்குரைஞர்களுக்குள் போட்டியில்லை; ஒற்றுமை இருந்தது. அவர்கள் மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர் என்றும், உரிமையியல் நீதிமன்ற வழக்குரைஞர் என்றும் இரு வகையினர்.

கந்தசாமி முதலியார் கோவையில் தங்கியிருந்து தனியாக வழக்குரைஞர் தொழிலை நடத்தி வந்தார். சில காலத்துக்குப் பின்னர் கோவை உரிமையியல் நீதிமன்ற வழக்குரைஞராக நியமனம் செய்யப் பெற்றார். பணம் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு கந்தசாமி வழக்காடவில்லை. பேரூர் கோயில் திருப்பணியிலேயே அவரது உள்ளம் ஈடுபாடு கொண்டது.

கோயம்புத்தூர் வட்ட இந்து தேவஸ்தானக் குழு என்ற சபையில் உறுப்பினராகவும் அதன் தலைவராகவும், மேற்படி சபை தொடங்கிய காலம் முதல் இருந்து வந்தார். பேரூர் கோயிலில் பல்வேறு வகையான திருப்பணிகளை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்.
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது, பேரூர் பச்சைநாயகியாரூசல், மரகதவல்லியம்மன் மாலை, பச்சை நாயகியம்மையார் ஆசிரிய விருத்தம், திருப்பேரூர் மும்மணிக்கோவை, திருப்பேரூர் போற்றிக் கலிவெண்பா, கோயம்புத்தூர் கோட்டை சங்கமேசுவரர் பதிகம், மருதாசலபதி உயிர் வருக்க மாலை, சிவகிரி அடைக்கலப்பத்து, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வெண்பா மாலை, முத்து விநாயகர் ஆசிரிய விருத்தம், வெள்ளை விநாயகர் பதிகம், பழனிநாதர் உயிர் வருக்க மாலை, நந்தியம்பெருமான் தோத்திரம், திருப்பொருளாட்சி (பொள்ளாச்சி) ஸ்ரீ சுப்பிரமணியர் திருஇரட்டை மணிமாலை, அவிநாசிக் கருணாம்பிகை பதிகம் முதலிய பல சிற்றிலக்கிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

கந்தசாமி முதலியார் சில நூல்களை எழுதியதுடன் நில்லாமல், பேரூர் புராணம், திருநணா என்கிற பவானி கூடற்புராணம், திருஅவிநாசித் தலபுராணம், திருக்கருவூர் புராணம், திருமுருகன் பூண்டிப் புராணம், திருக்கொடுமுடி புராணம், பேரூர் பச்சைநாயகியம்மை பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார். இவர் 1890}ஆம்
ஆண்டு காலமானார்.

இவ்வாறு "மகாவித்துவான்' கந்தசாமி முதலியார் தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பல பணிகளைச் செய்து தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளார். பெரியபுராணம் முழுவதற்கும் விரிவான வகையில் உரையெழுதிய "சிவக்கவிமணி' சி.கே.சுப்பிரமணிய முதலியாரின் தந்தையார் இவர் என்பது பலரும் அறியாத ஒன்றாகும்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: