24/10/2012

விபரீத ஆசை - மேலாண்மை பொன்னுசாமி


முத்துப்பெருமாள் அருவாளைக் கண்டாலே சீமைக் கருவேல மரங்கள் பயத்தில் தருக் தருக் என்று கழியும். நீளவாக்கில் ஓடிக் கிடக்கிற முள் விளார்கள் தலை தாழ்த்தித் தலை தாழ்த்திக் கூழைக் கும்பிடு போடும். சீமைக் கருவேல முள், விஷமுள். அதைக் கண்டால் எல்லாரும் பயந்து சாவார்கள். காய்ந்த முள், கட்டையாக இரும்பாணி மாதிரி இருக்கும்.

தப்பித் தவறிக் காலை வைத்துவிட்டால், முள் ஏறுகிறபோதே வலியும் விஷமும் உச்சி மண்டைக்கு ஏறிவிடும். பன்னிக்குட்டி மாதிரி பாதம் அடித்து வீங்கிவிடும்.
முள் குத்துச்சுப்பா அவனும் அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு வைத்தியம் பாத்து, ஆன மட்டும் மல்லுக்கட்டிப் பாத்தான். விஷப்பய முள்ளு. சீமை முள்ளு. ஆளை மாய்ச்சிருச்சுப்பா போய்ச் சேந்துட்டான்.

இப்படிப்பட்ட பேச்சுக்களை அங்கே இங்கே என்று அடிக்கடி கேட்கலாம். ஆளைக் கொல்லுற விஷப்பய முள்ளு, முத்துப்பெருமாளைக் கண்டால் பயந்து சாகும்.

முத்துப்பெருமாள் மூட்டுப் பெருத்த ஆள். ஓங்கு தாங்காய் இருப்பான். தாட்டியமான திரேகம். வைரம் பாய்ந்த கருவேலங்கட்டை மாதிரி நிறமும், உடம்பும். கன்னங்கருப்பு. முறுக்கேறிய தசை முறுக்கம். ஆறடிக்குக் குறையாத வளர்த்தி தெரியாத அளவுக்குத் தசைத் திரட்சி. சைக்கிள் மிதிப்பான். இரண்டு முழங்கால்களையும் அகல விரித்துத்தான் மிதித்தான். சைக்கிள் பெடல் மிதித்து ஏற வேண்டியது வராது. அப்படியே நின்ற வாக்கில் காலைத் தூக்கிப் போட்டால், தொடை உயரத்துக்கும் தாழ்வாக சைக்கிள் நிற்கும். அப்படியே சீட்டில் உட்கார்ந்து வலது காலைப் பெடலில் வைத்து மிதித்தால் வண்டி உருளும்.

அவனது உள்ளங்கை இரும்புப் பலகை மாதிரி, மரத்துக் காய்ப்பேறிப் போயிருக்கும். பத்து வயதில் பிடித்த அருவாள். அருவாளும், துரட்டியும், கோடாரியும் மட்டுமே கைப்புழக்கம். சீமைக் கருவேல மரத்துக்கு எமனாக வந்து பிறந்திருக்கிறவன்.

ஆத்துப்பாலத்துக்கு வடக்கில் அஞ்சு குறுக்கம். சமுத்திரமாக விரிந்து பரந்த தரிசு. தரிசு மண் கண்ணுக்குத் தெரியாது. அம்புட்டு அடர்த்தியான சீமைக்கருவேல மரங்களின் வளர்ச்சி. வருஷக் கணக்காக அருவாள் படாமல் வளர்ந்த மரங்கள்.

முத்துப்பெருமாள் வெட்டிக் கொண்டே முன்னேறுகிறான். அவனுடன் ஏழெட்டுப் பேர் ஆண்கள். ரெண்டு பெண்கள். துரட்டியால் முள் விளார்களைக் கவ்வி சடக் சடக்கென்று இழுத்துப் போடுவான். இரும்பு நிறத்தில் கொப்புகள் நிற்கும். துரட்டிபட்டு இழுபட்ட இடத்தில் ஈரம் கசியும்.
இவன் துரட்டியால் இழுத்துப் போட்ட விளார்களைக் கவட்டைக் கம்பால் இழுத்து ஒதுக்குகிற பெண்கள். எல்லாருக்கும் வியர்த்து ஊற்றுகிறது. பொடிப்பொடி வேலிமர இலைகள் வேர்வைப் பிசுக்கில் ஒட்டி நிற்கின்றன. பழுத்த இலைகள் மஞ்சள் புள்ளிகளாக அப்பி நிற்கின்றன.

வெயில் பார்த்தறியாத நிலத்தில், வெயில் தொடுகிறது. கொடி வீசி, ஒன்றுடன் ஒன்றாகப் பின்னிக் கிடந்த வேலி மரங்களின் விளார்கள் தரைக்கு இருட்டையே தரும். சீமைக் கருவேல மரங்களின் ஆடையாகவும் தலையாகவும் இருந்த முள் விளார்கள் அகற்றப்பட்ட பிறகு தலையில்லாத அம்மண முண்டங்களாக நிற்கிற வேலிக் கொப்புகள். துரட்டியை ஓரிடத்தில் சாய்த்து நிறுத்திவிட்டு, அருவாளை எடுக்கிற முத்துப்பெருமாள்.

அடித்தூருக்கு மேலாக முத்துப்பெருமாளின் அருவாள் வெட்டு விழுகிறது. ஓங்கி, ஓங்கி உயர்த்திய அருவாளை, அழுத்தமாக இறக்குவான். ஈரச் சதைத் தெறிப்புகளாக வெண்துகள்கள். இரும்பு நிறத்தில் இருக்கிற மரக்கொப்பில் விழுகிற வெட்டு. நாலைந்து வெட்டிலேயே சாய்கிற கொப்பு. கொப்பு மீதுள்ள முள்களையெல்லாம் அருவாளால் பரசிச் சீவுகிறான். இடது கையால் கொப்பு பற்றி வெட்டுகிறான். துண்டு துண்டாகிற விறகுகளை ஒரே குவியலில் போடுகிறான். முத்துப் பெருமாளைப் போலவே, எல்லாரும். பேச்சும் சிரிப்புமாகக் கேலியும் எகத்தாளமுமாக வேலையின் மும்முரம்.

ஆனி முடிந்து, ஆடி பிறந்த பின்பும் காற்றுக் கிளம்பவில்லை. காற்றில்லாமல் அடிக்கிற வெயில், படு உக்கிரமாக இருக்கிறது. கோடை மழை எதுவும் மண்ணில் விழாததால், வெயிலின் வெக்கை, தீப்பிடித்த மாதிரி தகிக்கிறது.

முத்துப் பெருமாள் முன்பெல்லாம் மரம் வெட்டிப் பிழைக்கிற பிழைப்பாய்ப் போயிற்றே என்று குற்ற உணர்வு கொள்வான். மரங்கள் பூமியின் வரங்கள். மழைப் பிள்ளையின் கருக்கள். உயிர்க்காற்றின் சுரங்கம். உலக வாழ்வின் சுவாசம் என்றெல்லாம் டி.வி.யில் சொல்லப்படுவதைக் கேட்கிற போதெல்லாம், முத்துப் பெருமாளுக்கு மனசு கிடந்து கூசும். பிள்ளையைக் காலைப்பற்றி ஓங்கிச் சுழற்றிப் பாறையில் அடிக்கிற குரூரத்தைத் தான் செய்வதாக ஒரு குற்ற உணர்ச்சி.
மரத்தை வெட்டிப் பிழைக்கிற ஈனப் பொழைப்பாப் போச்சு நம்ம தொழில் என்று அடிக்கடி அங்கலாய்ப்பான்.

டீக்கடையில் தினசரிப் பேப்பரை வாசித்துக் கொண்டிருந்த பெரியவர், பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே பேசினார்.

நாட்டுக் கருவேல மரம் நாட்டுக்கேத்தது. மருந்துக்காகும். பல்லுக்காகும். ஆடு குட்டி காக்கும். மனுசருக்கு நல்லது பண்ணும். உரம் சேர்க்கும். உழவுக் கலப்பை செய்றதுக்காகும். சீமைக் கருவேல மரம் அப்படியில்லே

டீ குடித்து முடித்துவிட்டு வேலைக்குப் போகணுமே என்ற பரபரப்பில், பேச்சைக் கேட்டும் கவனிக்காமலிருந்த முத்துப்பெருமாள், சட்டென்று அவர் முகம் நோக்கித் திரும்பினான். மனசு, அவரது உதட்டசைவில் நங்கூரமிட்டது.

நம்ம நாட்டோட மழை வளத்தையும், மண்ணு வளத்தையும் நாசம் பண்ணுறதுக்காக அமெரிக்காக்காரன் அனுப்பி வைச்ச விஷ விதைதான், சீமைக் கருவேலம். அமெரிக்காக்காரன் அனுப்பி வைச்ச கோதுமையோட கலந்து அனுப்பிச்சுட்டான், இந்த விதைகளை. இங்க வந்து வெஷமாய்ப் பரவிருச்சு.

பெரியவர் முகமெல்லாம் நரை ரோமங்கள். உடைந்த ரெண்டு பற்கள் சொல்லைக் குதறிப் போட்டன. பீடியை முழுக்க இழுத்துவிட்டு நசுக்கியெறிந்தார். நாசித்துவாரங்களில் புகை சீறலாக வந்தது.

முத்துப்பெருமாள் டீ குடித்து முடித்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். அவரது உதடுகளையே கவனிக்கிறான்.

சீமைக் கருவேலம் வறட்சியிலேதான் கொண்டாட்டமா வளரும். பரப்புற சல்லி வேருக, மண்ணோட உயிர்ப்பதத்தை உறிஞ்சிரும். நீண்டு வளர்ற முள் விளார்க, காற்றோட ஈரப்பதத்தை ஒட்ட உறிஞ்சிரும். இதுக பெருகிப் பரவுற எடங்கள்லே மழையோட அளவு சன்னஞ்சன்னமாகக் கொறைஞ்சு வரும். கால் மாட்டுல புல்லு புளுச்சியை –  செடி செத்தையை முளைக்க விடாது. கண்டங் கத்தரி, இண்டு, தூதுவளை, குப்பைமேனி, கொம்மட்டிச் செடி, ஆத்திச்செடி, ஆதாளை மாதிரியான காடுகரைகள்லே மானாவாரியா செழிச்சுக் கிடந்த அருமையான மூலிகைகளையெல்லாம் கண் காணாம ஒழிச்சுக் கட்டுனது, சீமைக் கருவேலந்தான்.
சீமையிலேயிருந்து வந்த இந்த முள்ளுச்செடி பூமியோட வரமில்லே, பெருஞ்சாபம். இந்த வெவரமெல்லாம் யாருக்குத் தெரியுது. எல்லாரும் புஞ்சைக் காடுகளைத் தரிசாப் போட்டுட்டு டவுனுப்பக்கம் போயிடுதாக. இங்க சீமைக் கருவேலி முளைச்சு நாட்டை நாசம் பண்ணுது.
முத்துப் பெருமாளுக்குள் புதிய கதவுகள் திறந்து கொண்டன. வெளிச்சமும், காற்றும் மனசை நிரப்பிற்று. மனசுக்குள் குத்திக் கொண்டு ரொம்ப நாளாக ரத்தம் கசிய வைத்த முள்ளை உருவிப் போட்டு விட்டார் பெரியவர்.

முத்துப் பெருமாள் கையில் பிடித்திருந்த அருவாள், விறகுகளை வெட்டிச் சரித்தது. துண்டு துண்டாக நறுக்கப்பட்ட விறகுகளைக் குவியலின் மீது எறிந்தான். குற்ற உணர்ச்சியுடன் வெட்டிக் கொண்டிருந்தவன், இப்போது கோப உணர்ச்சியுடன் வெட்டுகிறான். ஜென்மப் பகைவனை வெட்டிச் சாய்க்கிற மனவேகம். ஆவேசப் பெருக்கு.

தண்ணீர் பாய்ச்ச, குப்பையள்ளிவிட, கண்மாய் மண் லோடு பண்ண, பாத்திகட்ட, கரடு வெட்ட என்று காடுகரை வெள்ளாமைச் சோலிகளுக்கு யாராச்சும் கூப்பிட்டால், முன்பெல்லாம் போவான். விறகு வெட்டுற பாவத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று தெறித்தோடுவான்.
இப்போதெல்லாம் போவதில்லை. சீமைக் கருவேல மரவெட்டுக்கு மட்டுமே போவதை முழு வழக்கமாக வைத்துக் கொண்டான்.

ஒரு சமயம் கேரளாவிலுள்ள தட்டப்பாறைக்கு இந்த ஊரிலிருந்து நிறையப்பேர் வேலைக்குப் போனார்கள். சம்பளம் ஜாஸ்தி, வேலை மணிக்கணக்கு என்று ஆசைப்பட்டுப் பலபேர் பயணப்பட்டனர்.

ஏய் பெருமாள் நீ வரல்லியா?

வரல்லே

ஏம்ப்பா? சம்பளம் சாஸ்தி. டயப்படி வேலை

கறியை வைச்சுக்கிட்டு என்ன செய்யப் போறோம்? வேலை பார்க்கப் பயந்து என்னத்தை மிச்சம் பண்ணப் போறோம்?

சம்பளம் ஜாஸ்திப்பா

ஒழைக்குற மனசிருந்தா இங்கேயும் அதே சம்பளத்தைப் பாத்துரலாம்

அப்ப நீ வரல்லே?

வல்லே

ஊரில் பெரும்பகுதியோர் தட்டப் பாறைக்குப் போய்விட இவன் இங்கு ஜென்மப் பகைவனை வெட்டிச் சரித்துக் கொண்டிருந்தான். அமெரிக்கா அனுப்பி வைத்த தந்திரப் பகைவனை இவனால் இயன்ற அளவுக்குத் தீர்த்துக் கட்டுவதில் உக்கிரமாயிருந்தான், சூரியனைப் போல.
பருத்த விறகுகளையெல்லாம் சீறிப் பிளந்தான், முத்துப் பெருமாள். கூட வேலை பார்த்தவர்களில் சின்னப் பாண்டிதான் கேட்டான், சாப்ட்டுக்கிடுவோமா?

நேரமாச்சா?

வகுறு பசிக்கலியா?

சரி வாங்க, சாப்டுவோம்

ஐந்து லிட்டர் கேனிலிருந்த தண்ணீரைச் சாய்த்து வலது உள்ளங்கையை மட்டும் அலசிக் கொண்டான். மஞ்சணத்தி மரத்து நிழல், அலசலாக இருந்தது. அதில் உட்கார்ந்தனர்.
குத்துக்கால் வைத்து உட்கார்ந்த முத்துப் பெருமாள், தூக்குச் சட்டியைத் திறந்தான். மூடி முட்ட சோறு இருந்தது. புளி ஊற்றிக் காய்ச்சிய நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு வாசம் ஆளைத் தூக்கியது. குழம்பின் மஞ்சள் நிறமும், கருவாட்டின் வாசமும் மனசைத் துளைத்தது.
அந்த வாசமும், ருசியும் மனைவியை மனசுக்குள் கொண்டு வந்தது. ராசம்மா கருப்புதான். பவுடர் பூசின மாதிரியான ஒரு வெளிர் கருப்பு. லட்சணமாக முகவெட்டு. மனசைச் சுண்டியிழுத்து, மோகத்தீயை மூட்டுகிற கவர்ச்சியான திரேக வடிவமைப்பு. ரெண்டு பேரும் உள்ளூர்தான். கல்யாணத்துக்கு முந்தியே இவர்களுக்குள் ஓர் உறவு, தொடர்பு. அடிக்கடி சந்திப்புகள், கண்ணடிப்புகள், புன்னகைக் கள்ளம். கைசாடைகள், முகபாவனைகளில் மனமோகம்.
விடியற்காலம் நாலரை மணி. முன்னிரவின் தேய்பிறை மறைந்து, கனத்த இருட்டு கவ்வியிருந்த நேரம். முற்றம் தெளிக்க மாட்டுச்சாணி எடுப்பதற்காக இவன் தொழுவத்திற்குள் வந்த ராசம்மாவை, இவன் எடுத்துக் கொண்டான். அவள் மறுப்பும் மயக்கமும், சிடுசிடுப்பும் சிணுங்கலுமாகத் தத்தளிக்க காடிக்குள் அவளைத் தூக்கிப் போட்டு இவனும்
பசுமாடுகளின் தடதடப்பிலும், கன்றுக்குட்டிகளின் கதறலிலும் ஆட்கள் வந்து இவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொள்ள ஊர்ப்பஞ்சாயத்தில் கல்யாணமாகி கோவிலில் நாட்டாமை முன்னால் தாலி கட்ட

இப்படி கலாட்டா, களேபரம், கசா, புசாவில்தான் இவர்கள் தாம்பத்யம் ஆரம்பித்தது.
வருஷம் நாலாகி விட்டது. இன்னும் குழந்தை குட்டியில்லை. நேற்று ராத்திரி-
என்னவோ ஒரு கிறுக்குத்தனம் முத்துப் பெருமாளுக்கு. சாயங்காலமே இந்த எண்ணம் தோன்றி, கோணத்தனமான பாதைகளில் பயணப்பட்டது. வினோதமான மனமூர்க்கம்.
இவர்கள் வீடு ரெண்டு அறைகளும், ஒரு ஹாலும் கொண்டது. முன்பக்கம் தாழ்வாரச் சாய்ப்பு. அதற்கு இடையில் இரண்டு திண்ணைகள். வீட்டை ஒட்டிய மேற்கில் மாட்டுத் தொழுவம். பசுமாடுகளும், வெள்ளாடுகளும் சாண வாசமும், மூத்திர மணமும் நிரந்தரம்.
அடுப்பு ஜோலிகள் எல்லாம் முடித்துவிட்டு, குளித்த ஈரத்தோடும், சலவை வாச உடு மாத்துத் துணியோடும் பாய்க்கு வந்த ராசம்மாவிடம் குழைந்த முத்துப்பெருமாள்.
என்ன இன்னும் ஒறங்கலியா?

இல்லே

ஏன்?

ஓங்கிட்டே கொஞ்சம் வெளையாடணும்

என்ன வெளையாட்டு? வெறகு வெட்டி அலுத்த ஒடம்பு. ஒறங்கி எந்திரிங்க

எனக்கு ஒரு கிறுக்குத்தனமான ஆசை!

என்ன?

இன்னிக்கு நாம தொழுவுக்குள்ளே இருக்கணும். காடியிலே அவனது குறும்புச் சிரிப்பும் கண்ணடிப்பும் பழைய சம்பவங்களையும் உணர்வுகளையும் குப்பென்று எழுப்பி விட்டது. அவள் உயிர் பதற, பதைத்தாள். பயத்தில் தலையாட்டினாள்.

அதெல்லாம் முடியாது அன்னிக்கும் நாம பண்ணுனது கிறுக்குத்தனம். இன்னிக்கும் உங்க புத்தி போற போக்கிலே கேவலக்கூத்தாகிப் போயிரும்.

அவள் மறுக்க இவன் கெஞ்ச மருகித் தவித்து மன்றாட இவனே ஜெயித்தான். அரை மனசும், குறை உயிருமாகக் கூட வந்தாள்.

காடிக்குள் இருக்கும்போது

ஏழெட்டுப் பேர்கள் வந்து, தலைவாசல் கதவைத் தட்டுகின்றனர். இவன் பெயரைச் சொல்லிச் சொல்லி, கூப்பிட்டு, கதவைத் தட்டுகின்றனர். ஒட்டு மொத்தத் தெருவே விழித்தெழுந்து விட்டது.
எங்க அவுகளை எங்க அவுகளை என்று தெரு ஜனம் பூராவும் புலம்பித் தவித்தனர். காடிக்குள் கிடந்த இவர்களோ ஊமையன் கண்ட கேவலக் கனவாக மௌனமாகிக் கிடந்தனர். மனசெல்லாம் கிழிந்து கிடந்தனர்.

முத்துப்பெருமாள் விறகு வெட்டி விட்டுக் குளித்துவிட்டு, ஈரவேட்டியும் துண்டுமாக சைக்கிளில் வீடு வந்து சேருகிறபோது, மணி ஏழாகி விட்டது. நன்றாக இருட்டி விட்டது.
ஊர்ப்பஞ்சாயத்தாம் உங்களுக்காகத்தான் காத்திருக்காம் வெருசாப் போங்க.
பதற்றமும் வெட்க வேதனையுமாக ராசம்மா துடித்த துடிப்பில் ஒரு கண்டனத்தொனி உறுத்திக் கொண்டிருந்தது.

என்னவாம்?

தெரியலே

துணிமணியை மட்டும் மாற்றிக் கொண்டு பஞ்சாயத்துக்குப் போனான். ஊர் மடத்தில்தான் கூட்டம். மொத்த ஊரே திரண்டு நின்றது. இவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்த நாட்டாண்மை நடுநாயகமாக உட்கார்ந்திருக்கிறார்.

பஞ்சாயத்து, விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்பும் சொல்லப்பட்டு விட்டது. தீர்ப்பு இவனுக்கு நாட்டாமையால் அறிவிக்கப் பட்டது.

நேத்து மாரிமுத்து புஞ்சைத் தென்னை மரத்துலே இளநியாகக் கூட முத்தாத பிஞ்சுக் குலையைப் புடுங்கி நாசம் பண்ணிக் கிடக்கு. நேத்து ராத்திரியே முத்துப்பெருமாள் வீட்டுக்கு ஊராளுக தேடிப்போனா அவனையும் காணலே. அவன் பொஞ்சாதியையும் காணலே. நடந்துருக்கிறது, களவு இல்லே. அழிமானம். நாசம். அதுக்கு அவுக பொறுப்பேத்துக்கணும். இல்லேன்னா
நேத்து எங்கே போயிருந்தாகன்னு அவுக ருசிப்பிக்கணும்.

ஓங்குதாங்கானவன். மூட்டுப் பெருத்த ஆள். ஆறடிக்குக் குறையாத கரும்பாறைத் திரேகம். நாடே பயந்து சாகிற சீமைக்கருவேல முள் இவனைக் கண்டால் பயந்து சாகும்.

இவன் இந்தக்கணத்தில் - பூனையால் மறிக்கப்பட்ட சுண்டெலியாகப் பயந்து செத்துக் கொண்டிருக்கிறான். குன்றிக் கூனிக் குறுகிப்போய் நிற்கிறான்.

நன்றி - ஓம்சக்தி

1 கருத்து:

aandon ganesh சொன்னது…

semai karuvela maram, need to remove fully upto root bone, otherwise it will grow again.