11/10/2012

க.நா.சு. உருவாக்கிய புரட்சி - தமிழவன்


என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம். முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன், நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள். ஜனரஞ்சகமான நாவல்களுக்கும் கலைத்தரமான நாவல்களுக்கும் வித்தியாசமுண்டு என்று தெரியாது.

இது நடந்தது 1965 வாக்கில். தி.மு.க. அலை அப்போது இளைஞர்களை வசீகரித்தது. சிறுநகரங்களில் இருந்து பெருநகரங்கள் வரை தி.மு.க. பேச்சாளர்களின் பெயர்கள் எல்லோருக்கும் பரிச்சயம். ஒவ்வொரு இரவிலும் பிரச்சாரக்கூட்டங்கள். ‘அண்ணா என்பது ஒருமாயமந்திரச்சொல். ஆனால் என் போன்றோர் படித்த கல்லூரிகளில் காங்கிரஸ் பரவியிருந்ததால் பல இளைஞர்கள் காங்கிரஸ் சார்பில் வாதாடினார்கள். அவர்களின் விவாதமும் கவர்ச்சியாகத்தான் அமைந்திருந்தன. பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டம் காங்கிரஸ் கோட்டை. அப்பகுதிகளில் காங்கிரஸ் கொள்கை பரவியிருந்தது. இளைஞர்களிடமும் காங்கிரஸ் பரவியிருந்தது. இந்த இளைஞர்கள் அதிகம் உணர்ச்சிவயப்படாதவர்களாய்க் காணப்பட்டனர். இவர்களிலும் நிறைய மேடைப்பேச்சாளர்கள் இருந்தனர்.

என்றாலும் நான் படித்த கல்லூரியில் வை.கோபாலசாமியும் வலம்புரி ஜானும்தான் பட்டிமன்ற இரட்டையர்கள். எந்தத் தலைப்பிலும் வெட்டியும் ஒட்டியும் பேசும் இரட்டையர்கள். காங்கிரஸ் இளைஞர்களுக்கு இவர்கள் முன் நிற்கும் திறமை இருக்கவில்லை.

எங்கள் ஆசிரியர்கள் எல்லோரும் தி.மு.க. சார்பாளர்கள்தாம். எனவே மு.வரதராசன்தான் அவர்களின் சிறந்த நாவலாசிரியர். இரவில் இரண்டு மூன்று மணி என்று கண்விழித்து மு.வ. நாவல்களைப் படித்தோம். அந்த வயசில் எங்களைக் கவர்ந்தவை காதல் சார்ந்த நாவல்கள் என்பதால் அந்த மு.வ.பாணி நாவல்களைப் படித்தோமா, அல்லது அந்த நாவல்களில் வரும் இலட்சியத்திற்காகப் படித்தோமா என்று தெரியவில்லை.

அதுபோல்தான் நா.பார்த்தசாரதியின், பூரணி, அரவிந்தன் என்ற இரண்டு பெயர்களைத் தெரியாத நாவல் வாசகர்கள் யாரும் எங்கள் மத்தியில் இல்லை. ஒருவித லட்சியம், தூய்மை, உணவுக்கட்டுப்பாடு (மறைமுகமாக பாலியல் கட்டுப்பாடும்) போன்றன இந்த நாவல்களில் பரப்பப்பட்ட கருத்துகள்.

இரண்டு ஆண்டுக்குள் இந்த இலக்கிய உலகமும் அதன் கருத்துகளும், இலட்சியங்களும் தகர்ந்து போகும் என்று அறிந்திருக்கவில்லை.

தகர்த்தவரின் பெயர் க.நா.சு.

நான் க.நா.சு. வை எண்பதுகளில்தான் சந்தித்தேன். ஆனால் ‘எழுத்து தொடங்கி எல்லாச் சிறு பத்திரிகைகளும் அவர் பெயரை உச்சரித்தன. போதாக்குறைக்கு க.நா.சு. வின் ‘இலக்கியவட்டம் என்ற இதழ் 60களில் என் கைக்குக் கிடைத்தது. பாதுகாப்பாய் பைண்ட் செய்யப்பட்ட ‘இலக்கிய வட்டம் இதழ்கள். என் 22-ஆம் வயதில் இலக்கிய வட்டம் புரியவேயில்லை. ஆனால் எனக்கு அந்த இதழ்களில் ஒரு கவர்ச்சி இருந்தது.

இன்று தமிழ் படிக்கவரும் 22-ஆம் வயது மாணவ மாணவிகளிடம், எனக்கு புத்திலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்த முடிந்ததேயில்லை. ஒருவேளை சுமக்க முடியாத அளவு பக்தி இலக்கியம், தொல்காப்பியம் அது இது என்று சுமையைக் கொடுப்பதால் அவர்களுக்கு அந்த வயதில் வரக்கூடிய புதியதைக் கண்டால் தோன்றும் ஆர்வம் மங்கிவிட்டதா? தெரியவில்லை.

க.நா.சு.வுக்கும் தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் மெதுமெதுவாக க.நா.சு. வின் இலக்கியக் கருத்துகளை அறிய அறிய அவர் ஒரு பெரிய புரட்சிக்காரர்போலத் தென்பட்டார். தி.மு.க. பரப்பிய கருத்துப்புரட்சி ஒருவிதமென்றால் க.நா.சு. பரப்பிய கருத்துப் புரட்சி முற்றிலும் மாறுபட்டது.

அகிலன் எழுத்தாளர் அல்ல என்றார் க.நா.சு. என் கற்பனை இலக்கிய உலகம் ஒரே அடியாய் தகர்ந்தது. க.நா.சு. ஒரு தகராறு பேர்வழி என்று நான் நினைக்கவில்லை. மற்றவர்கள் ஒன்று சொன்னால், தான் இன்னொன்றைச் சொல்லி கவனத்தைத்தன் பக்கம் திருப்பும் ஆசை கொண்டவரல்ல என்று ஏனோ மனதில் உறுதியாகப் பட்டது.

அடுத்ததாக, நா.பார்த்தசாரதி எழுதுவது நாவல் அல்ல என்றார். எனக்கு ஒரே குழப்பம்; அப்படியென்றால் நாவல் என்றால் என்ன? ஒரே கலவரம் என்னைப் பிடித்தாட்டத் தொடங்கியது.

இன்னும் ஒரு போடு போட்டார். மு.வரதராஜனுக்கு நாவல் எழுதத் தெரியாது.

என் புரிதல் உலகம் கொஞ்சம் கூட மிச்சமில்லாம் தகர்ந்தது. அப்படியென்றால் நானும் என் போன்ற பிற இளைஞர்களும் மோசடி செய்யப்பட்டுவிட்டோமா?

எங்கள் தமிழாசிரியர்கள், நாங்கள் படித்த இலக்கிய வரலாறுகள் எல்லாம் வெறும் பொய்யா? பொய்தான் என்று அடித்துச் சொன்னார் க.நா.சு.

இங்குக் கவனிக்க வேண்டியது க.நா.சு. சொன்ன சிந்தனைகளின் பின்னால் அமைந்திருந்த தத்துவம். அவற்றைக் க.நா.சு. அவரின் வாழ்க்கை முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தார். இவரளவுக்கு ஆழம் இல்லாவிட்டாலும் சி.சு.செல்லப்பா முக்கியமான காலகட்டத்தில் ஒரு பத்திரிகையை நடத்தியதால் இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான இலக்கிய ஆளுமையாக இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்படுவார். க.நா.சு.விடம் வேதாந்த விசாரம் உள்ளோட்டமாய் இருந்தது என்று ஒரு பெரிய தாக்குதலைச் செய்து ஒருநூல் எழுதியிருந்தார் க. கைலாசபதி. தனிப்பட்ட முறையில் க.நா.சு.வை அது பாதித்தது. ஒருமுறை பெங்களூருக்கு க.நா.சு. வந்தபோது சுமார் 8 மணிநேரம் ‘படிகள் சிறு பத்திரிகைக்காக நாங்கள் ஒரு பேட்டி எடுத்து நாடாவில் பதிவு செய்தோம். அதிலிருந்து சில பகுதிகளை அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘படிகளில் பிரசுரித்தோம்.

மார்க்சியர்கள் க.நா.சு.வை வெறுக்கத் தேவையில்லை என்பதே அந்தப் பேட்டியின் அடிநாதமாக இருந்தது.

அதுவரை இடதுசாரியினர் க.நா.சு.வை அகில உலக சுதந்திர காங்கிரஸ் என்ற வலதுசாரி இலக்கிய அமைப்பைச் சார்ந்தவராகவே பார்த்தார்கள். ஆனால் க.நா.சு. எனக்கு மார்க்சியம் தெரியாது, பின் எப்படி நான் மார்க்சிய எதிரியாக இருக்கமுடியும் என்று கேட்டார். இதனை நாங்கள் படிகள் இதழில் பதிவு செய்தோம்.

அது உண்மைதான். மார்க்சிய எதிரியாக இருக்கவேண்டுமென்றால் நிரம்ப படித்திருக்க வேண்டும். சமீபத்தில் நான் உம்பர்த்தோ எக்கோவின் (Umberto Eco) இலக்கியத்தின்மீது (On Literature) என்ற கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். அதில் மார்க்ஸின் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற பிரச்சார நூல், இரண்டு நூற்றாண்டுகளைப் பாதித்து மாற்றியது என்கிறார் எக்கோ. அவ்வளவு பெரிய சிந்தனை இயக்கத்தை வெள்ளை கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்து கறுப்புக் கண்ணாடியுடன் அலைந்து கொண்டிருந்த ஒரு வயதான பிராமணர் மறுக்கமுடியுமா? அவருடன் பேசிப் பார்த்ததில், கநாசுவுக்கு ஆங்கிலம் மூலம் படைப்பு இலக்கியம் பற்றி ஆழ்ந்த படிப்பு இருந்த அளவு மார்க்சியம் பற்றி இல்லை எனத் தெரிந்தது. படிகளில் வெளிவந்த பேட்டி க.நா.சு. மீது அதிக மதிப்புகொண்ட ச.கந்தசாமி போன்ற இலக்கியவாதிகளைக் கவர்ந்தது.

ஆனால் மார்க்சிய கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு என்ற இரு பிரிவினரையும் அதிகமாக ஈர்க்கவில்லை. அதற்கான காரணம் க.நா.சு. தமிழிலக்கியம் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்த கருத்துகளை ‘கசடதபற போன்ற பத்திரிகைகள் பெருவாரியாக தமிழில் நிலைநாட்டிய கட்டம் அது. பெரும்பாலும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள்ளும் க.நா.சு.வின் இலக்கியக் கருத்துகள் பரவியிருந்தன. எழுபதுகளின் ஆரம்பத்தில தமிழில் கம்யூனிஸ்டு கட்சிக் கருத்துகள் ஒருவகையாகவும் எண்பதுகளின் இறுதியில் கம்யூனிஸ்டு தோழர்களின் கருத்துகள் வேறு வகையாகவும் அமைந்தன.

அதிர்ச்சி அடையத்தக்க உண்மை என்ன என்றால் தமிழகத்தில் இலக்கியக் கருத்துகள் மிக விரைவில் மாறிவிட்டன. ஒரு இருபது வருடங்களில் இலக்கியம் தமிழில் மாறிவிட்டது. ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்ற மாந்திரிக எதார்த்தவாத நாவல் வந்தபோது பெரியவர் தி.க.சி.யும் சில இடதுசாரி நண்பர்களும் எதிர்த்தார்கள். இன்று அவர்களின் கட்சியினர் மாந்திரிக எதார்த்த வாத நாவலை எழுதுகிறார்கள்; பாராட்டி விமரிசனம் எழுதுகிறார்கள்.

அதாவது க.நா.சு.வின் இலக்கியக் கருத்துகள் இன்று இடதுசாரிக் கட்சிப் படைப்பாளர்களால் பின்பற்றப்படுகிறது. படைப்பில் கருத்து வெளிப்படையாக வரக்கூடாது என்பது க.நா.சு.வின் கொள்கை. சோசலிச எதார்த்தவாதம் என்ற பெயரில் பிரச்சார எழுத்தைத் தமிழக கம்யூனிஸ்டுகள் எழுத ஊக்கப்படுத்தப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் மார்க்சும் எங்கெல்சும் கூட பிரச்சாரமாக கலைப்படைப்பு அமையக்கூடாது என்றே கூறுகிறார்கள். அதாவது க.நா.சுவும் மார்க்சிய மூலவர்களும் இவ்விஷயத்தில ஒரே கருத்தைத்தான் கொண்டிருந்தார்கள். ஆக மார்க்சியர்கள் மற்ற வர்களின் இலக்கியப் போக்குகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். இது ஆரோக்கியமான போக்கு. தமிழ்மொழிதான் நல்ல மார்க்சிய இலக்கியம் பற்றி அறிவுறுத்தமுடியுமே தவிர, தமிழ் தெரியாத ஏதோ மொழிபேசும் கட்சித் தலைவர்கள் அல்ல.

அன்று க.நா.சு. அகிலனையும் நா.பார்த்தசாரதியையும் மு.வரதராஜனையும் தாக்கித் தகர்த்ததால் இலக்கியம் பல்வகையாகப் பரவ வாய்ப்பு ஏற்பட்டது என்பதை க.நா.சு. விளம்பரப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் மொழியில் இன்று நடக்கும் அதிவேக மாற்றங்கள் புதிது புதிதாக இலக்கியப் படைப்புகளைத் தமிழுக்குத் தந்துகொண்டிருக்கின்றன.

இங்கு நடந்த மாற்றங்களைக் கவனிக்கும்போது பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லலாம். இலக்கிய வடிவம் என்பது ஒரு மண்ணெண்ணெய் டப்பா போன்றதல்ல; இலக்கியக்கருத்து என்பது டப்பாவில் ஊற்றும் மண்ணெண்ணெய் அல்ல. வடிவம்கூட ஒரு செய்திதான். உள்ளடக்கம்கூட ஒரு வடிவம்தான் என்பது இப்போது தமிழில் உறுதிப்பட்டுவருகிறது.

க.நா.சு. சொல்லிவந்த கருத்துகள் இவைதாம் என்று கூறலாம். மேடைகளில் உரக்க, அடுக்கு மொழியில் கருத்துகள் கருத்துகளாக எல்லோரும் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், க.நா.சு. அன்று புறக்கணிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து அவர் புறக்கணிக்கப்படமுடியாது. அவரது படைப்புகள் பற்றி வேறுபட்ட கருத்து உள்ளவர்கள்கூட அவரது இலக்கியம் பற்றிய கருத்துகளைப் புறக்கணிக்க முடியாது.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் க.நா.சு.வின் கருத்துகளைவிட அரூபமான இலக்கியக் கருத்துகள் இன்று களத்திற்கு வந்துவிட்டன. அந்த அளவு தமிழ் வேகமான மொழி ஆகிவிட்டது.

நன்றி - உயிரோசை

கருத்துகள் இல்லை: