07/09/2012

கண்ணகி மானுடப் பெண்ணல்ல கட்டுரைக்கு மறுப்பு - மரபின்மைந்தன் முத்தையா


ஓம் சக்தி டிசம்பர் – 2011 இதழில் பேராசிரியர் திரு.இராம.இராமநாதன் அவர்கள் எழுதிய “கண்ணகி மானுடப்பெண் அல்ல என்னும் கட்டுரை, பொறுப்பாசிரியரின் பலத்த பீடிகையுடன் வெளியாகியுள்ளது.
முன் முடிவுகளுடன் சிலப்பதிகாரத்தை அணுகி, காவிய ஆசிரியரின் இயல்பான வெளிப்பாடுகளுக்கும் கட்டுரையாசிரியர் வலிந்து பொருள் கொண்டிருக்கிறார். மாநகர்க்கீந்தார் மணம் என்பது ஊர்மெச்ச நடந்த திருமணம்தானே தவிர, ஊருக்காக நடந்த திருமணம் அல்ல.

காரைக்காலம்மையார் வரலாற்றைப் பாடுங்கால் தெய்வச் சேக்கிழார்,

தளிரடிமென் நகைமயிலைத் தாதவிழ்தார் காளைக்குக் களிமகிழ் சுற்றம் கூரக் கல்யாணம் செய்தார்கள்
என்று குறிப்பால் உணர்த்தியிருப்பார். அது பொருந்தாத் திருமணம். கண்ணகி- கோவலன் திருமணம் அப்படியல்ல. அவர்கள் இருவரும் தீவலம் செய்வதைக் காண்பார் கண்கள் தவம் செய்திருக்க வேண்டும் என்கிறார் இளங்கோவடிகள்.

கண்ணகியின் விருப்பத்திற்குரிய கணவனாகவே கோவலன் இருந்ததை,

கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும் என்னும் சொற்றொடரால் அறியலாம்.
கையற்று என்ற சொல்லைக் கட்டுரையாசிரியர் பொருள் கொள்ளும் விதம் பொருந்தாது என்பதை அப்பாடலின் அடுத்த வரியே புலப்படுத்தும்.

தீராக் காதலின் திருமுகம் நோக்கி என்கிறார் இளங்கோவடிகள்.

கதிர் ஒருங்கிருந்த காட்சி போல என்பதோ ஒருபுடை உவமை. கதிரும் நிலவும் சேருமா என்ற கேள்வி இங்கே எழ வாய்ப்பில்லை. அவ்வாறாயின் கண்ணனை, “கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் என ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் பாடுகிறாரே இது தவறா?

குறியாக்கட்டுரை என்பது துறவியாகிய இளங்கோவடிகளின் கவிக்கூற்றேயன்றி வேறல்ல.

கோவலன் கண்ணகி மாலைகள் கசங்கியது “கூடும் இன்பத்திற்கான முயற்சி என்று பொருள் கொள்வது விசித்திரத்திலும் விசித்திரம். “மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு? கட்டில் மேலே நசுங்கத்தான் என்றொரு திரைப்பாடல் கூட உண்டு.

கண்ணகியும் கோவலனும் பேசிக் கொள்ளவில்லையெனில்
அளிய தாமே சிறு பசுங்கிளியே
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின

என்று கோவலன் கூற்றாக இளங்கோவடிகள் பாட வேண்டிய அவசியமென்ன?

இருவரும் இணைந்து இன்பம் துய்த்ததை “தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள் என்ற வரிகளால் இளங்கோ தெளிவுபடுத்துகிறார். கணவனைச் சற்றும் மறவாத அன்புடன் இல்லறக் கடமைகளைக் கண்ணகி ஆற்றி சில ஆண்டுகள் குடும்பம் நடத்தினாள் என்பது இளங்கோவடிகள் வாக்கு.

மறப்பருங் கேண்மையோ டறப்பரி
சாரமும் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
வுரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன விற்பெருங் கிழைமயிற்
காண்டகு சிறப்பின் கண்ணகி

இந்த வாழ்க்கை நிலையில்லாததென்பதால் இருக்கும் போதே அனுபவிக்க வேண்டுமென்பது போன்ற வேகத்தில் இருவரும் இன்பம் துய்த்தனர் என்கிறார் இளங்கோவடிகள்.

தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து – நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல்
நிலையாமை கண்டவர் போல் நின்று.

கூட்டம் நடந்திருந்தால் இருவரும் உறங்கியிருப்பார்களே என்று பேராசிரியர் சொல்வது வேடிக்கை. அது கூட்டத்துக்கு முந்தையதாகிய முன்னிகழ்வின் அங்கம் (Foreplay).

சாலினித் தெய்வம் ஆவேசித்து அவளை “கொங்கச் செல்வி குடமலையாட்டி என்கிற இடத்தை வைத்துக் கொண்டு, “உலகில் மற்றவர்களுக்கெல்லாம் கண்ணகி தெய்வமாகவே தெரிவதாக அடிகள் சுட்டுவர் என்பது அடிப்படையே இல்லாத தகவல். சாலினித் தெய்வம் மட்டுமே சொல்வது எப்படி உலகத்தவர் எல்லாம் சொல்வதாகும்?

கண்ணகி கோபத்துடன் வருவதைப் பார்க்கும் காவலன் பேசுவது அவளுக்குள் இருக்கும் தெய்வாம்சத்தை உணர்ந்ததன் விளைவல்ல. இன்றும் கோபமுற்ற பெண்களை “பத்திரகாளி போல என்கிறோம். ஊரார் அவளைத் தெய்வம் என்றது அவளுக்குள் இருந்தெழுந்த ஆவேசத்தின் எழுச்சி கண்டுதான். அதுவரை மானிடப்பெண்ணாக இருந்த கண்ணகி தன்னுள் இருந்த தெய்வாம்சத்தைப் படிப்படியாக உணர்கிறாள். அது வஞ்சிக் காண்டத்தில் முற்றுப் பெறுகிறது.

கோவலன் இறப்பின் பின்னரே அந்தப் படிநிலை எழுச்சி காணப்படுகிறது. புகாரில் குடும்பம் நடத்தும்போது இயல்பான மானிடப் பெண்ணாகவே கண்ணகி இருக்கிறாள்.

கன்னிப் பெண்தான் கடவுளாக முடியும் என்கிற கருத்து பிற்போக்குத் தனமானது. கன்னிமைக்கும் கடவுட்தன்மைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. வாழ்வாங்கு வாழ்பவர்களை மற்றவர்கள் தெய்வமாக்குவார்கள்.
கண்ணகி அப்படி வாழ்ந்தவள். மற்றபடி கண்ணகிக்கு பேராசிரியர் செய்து முடித்திருக்கும் கன்னிமைப் பரிசோதனை ஆதாரமில்லாதது. அவசியமில்லாததும் கூட.

நன்றி - ஓம் சக்தி ஜனவரி 2012

கருத்துகள் இல்லை: