பஸ்ஸின் வேகத்துக்கு ஏற்ப ஜன்னல் வழியாகக் காற்று வந்து மோதுகிறது. டிரைவர் ஸீட்டுக்குப் பின்னால், மூன்றாவது ஸீட்டில் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து இருக்கிற பரமுவின் முகத்தில் அறைகிற காற்று, காதோர முடிக் கற்றைகளை இழுத்து அலைக்கழிக்கிறது.
இடைவிடாத காற்றின் தாக்குதலால் முகமே காய்ந்து உலர்ந்துபோய், ஏதோ ஒரு நெறுநெறுப்பாகத் தோன்றுகிறது.
பரமுவின் மனசு கிடந்து அலைபாய்ந்து வருகிறது. நிற்க இடம் இல்லாத காற்று என அற்றலைகிற நினைவுகள். ஊர் நெருங்க நெருங்க... அவள் மனசுக்குள் ஒரு தவிப்பும் கலக்க முமாக இருக்கிறது.
சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்ட பஸ், பெருங்கோட்டூரையும் தாண்டி... அழகாபுரியையும் கடந்து பாய்கிறது. சீமைக் கருவேல மரங்களும் நாட்டுக் கருவேல மரங்களும் வேப்ப மரங்களும் விருட்விருட்டென்று பின் நோக்கி ஓடுகின்றன. சுற்றி உள்ள செவல் காடுகளும் கன்னங்கரேல் என்று இருக்கிற கரிசல் காடுகளும் வட்டச் சுற்றாகச் சுற்றிச் சுழன்று பின்னோக்கி ஓடுகின்றன. எதையும் பார்த்து ரசிக்கிற மன நிலையில் இல்லை பரமு.
அவளது கால்மாட்டில், புடைப்பாக ஒரு பெரிய பை இருக்கிறது. உட்கார்ந்து இருக்கிற அந்தப் பை, சாமான்கள் கனத்தினால் சரிந்து சாய்ந்துவிடக் கூடாதே என்று அதன் பக்கத்தில் வலது காலை வைத்து இருக்கிறாள்.
பை முழுவதும் மூச்சுத் திணறுகிற அளவுக்குச் சாமான்கள் திணிக்கப்பட்டு இருக்கின்றன. ஜவுளிக் கடையில் தருகிற பை. மூங்கில் கட்டைகளைக் கைப்பிடியாகப் போட்ட சாக்குப் பை. உடுமாற்றுக்கான துணிமணிகள், அய்யா - அம்மாவுக்கான தின்பண்டங்கள், அம்மா கேட்டு இருந்த மசால் பொடி, ஊறுகாய், மிளகாய் வற்றல் மற்றும் வேறு சில பழ வர்க்கங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இடித்துக்கொண்டு, உள்ளே திணிக்கப்பட்ட நிலையில் திமிறிக்கொண்டு இருக்கின்றன.
'சாகக் கெடக்குற அந்த ஆளு, போற வரைக்கும் உசுரோட இருப்பாரா?’
இது ஒரு ரகசியத் தவிப்பு. அந்தரங்கக் கலக்கம். யாரிடமும் காட்டிக்கொள்ள முடியாத உணர்வு. ரகசிய அவஸ்தை.
குல தெய்வம் போட்டோ, பத்தி குத்துகிற ஸ்டாண்ட், வெண் திருநீறு கிடக்கிற கிண்ணம், உலர்ந்து காய்ந்த சந்தனக் கிண்ணம் இருக்கிற இடத்தில்தான், துணி போட்டு மூடிய சிமென்ட்டு கலர் போனும் உட்கார்ந்து இருக்கும்.
அடுப்புச்
சோலியில் பரமு அல்லாடிக்கொண்டு இருந்தாள். சோறாக்கி, குழம்புவைத்து, முற்றம் பெருக்கி, குப்பை அள்ளிப் போட்டுவிட்டு, ஆடு குட்டிகளுக்கான கொழை ஒடிக்கப் போகிற கட்டாயம். எல்லாமே இருட்டுவதற்குள் முடித்தாகணும் என்கிற பரபரப்பில் தவித்தாள் பரமு.
தொலைபேசி மணியின் கிணுகிணுப்பு, மூடி இருந்த துணிக்குள் இருந்து கமுக்கமாகக் கேட்டது.
''இது வேற... அச்சலாத்தி! ச்சேய்...'' என்று சள்ளையுடன் போய் எடுத்தவள், எரிச்சலும் அவசரக் கடுப்புமாக, ''ஹல்லோ... யாரு?'' என்று கடித்தாள்.
''நாந்தாம்மா... அம்மா பேசுதேன்...''
அம்மாவின்
குரல், கொதி பாலில் விழுந்த குளிர் நீராக இருந்தது. கொதி மனசு சட்டென்று குளிர் மனசாக மாறிற்று.
குழைகிற அன்புக் குரலில் கேட்டாள். ''என்னம்மா..?''
''காலுக்குள்ளேயும் கைக்குள்ளேயும் வீட்டுச் சோலிகள்ல மாட்டிக்கிட்டு இருக்கீயாம்மா?''
''வீடுனு இருந்தா... பாடு இல்லாமலா? சமுத்திரம் வத்துனாலும் சம்சாரி வீட்ல சோலிக வத்தாது. சொல்லும்மா... என்னம்மா?''
''அம்மாவும் அய்யாவும் மட்டுந்தானே? வீட்டுப்பாடு முடிஞ்சு, உஸ்ஸ்ஸுனு உக்காந்தேன். ஒங்கிட்டே போன் போட்டு, நாலு வார்த்தைப் பேசிரலாம்னு நெனைச்சேன்மா...''
''எப்பவும் ராத்திரிதானே போடுவே? இன்னிக்கு என்ன இந்நேரத்துல?''
''ராத்திரிக்கு ஒரு சோலி இருக்கு.''
''என்னதும்மா?''
''மேலத் தெரு மாடசாமி வீட்ல செத்தோடம் போய் உக்காரணும்.''
''என்னம்மா?''
''அவனுக்கு ஒடம்புச் சேட்டமில்ல. இழுத்துக்கோ, பறிச்சுக்கோனு கெடக்கு. ஆளோட ஆளா... ஊர் மொறைக்குப் போய் உக்காரணும்ல. அதான்... இப்பவே ஒங்கிட்ட பேசிரலாம்னு போட்டேன்.''
''அந்த மச்சானுக்கு என்ன செஞ்சுச்சு? வயசு கொஞ்சந்தானே?''
''என்னமோ... கிட்னியோ புட்னியோனு என்னென்னமோ சொல்லுதாக. நமக்கென்ன கழுதை புரியுது? அது போயிருச்சாம்.''
இவளுக்குள்
திக்கென்று இருந்தது. நெஞ்சுக்குள் கட்டைபோல ஏதோ ஒன்று அடைத்துக்கொண்ட மாதிரி இருந்தது. உயிரின் அடி வேர்வரை பரவிப் படர்ந்து உலுக்கி எடுக்கிற அதிர்வலை. நினைவு நரம்புகளின் எல்லாப் பின்னல்களிலும் இந்த அதிர்வு மின்னல் ஓடிப் பரவியது. அவளால் வேறு எதுவும் யோசிக்க முடியவில்லை.
அம்மாவுக்கு
இது வெறும் சம்பவம். தனது ஊரின், தனது உறவின் ஒரு சோக நிகழ்வு. செய்தியாக மகளிடம் சொன்ன வேகத்தில், வேறு விஷயங்களுக்குத் தாவிவிட்டாள்.
''யாருக்கு என்ன எழுதியிருக்கோ, அதை மாத்தி எழுத யாரால் முடியும்? அதானே நடக்கும்? ஹூம்...'' என்று சோகச் சொற்களும் பெருமூச்சுமாக, வேறு விவரங்களைக் கூறினாள். அது இது என்றும்... அப்படி இப்படி என்றும் ரொம்ப நேரமாகப் பேசுகிற அம்மாவுக்கு 'உம்’ கொட்டிக்கொண்டே இருந்தாள் பரமு. உயிர் அற்ற, உணர்ச்சி அற்ற 'உம்’.
நினைவு எல்லாம் வேறு எங்கோ போய் அலைந்தது. அம்மா சொன்னது எதுவும் மனசில் ஏற வில்லை.
போனை வைப்பதற்கு முன்பாக... உயிரும் உணர்வுமாகச் சொன்ன ஒரே வாக்கியம். ''நாளைக்கு நா ஊருக்கு வாரேன்ம்மா.''
அந்த நேரத்தில், வெட்ட வெயிலில் அறுத்துப்போட்ட கீரைத் தண்டாக முகம் வாடிப்போனாள் பரமு. உயிர் வாடிப்போன உள் மன நிகழ்வின் நிழல். அடுப்புச் சோலிகளை முடித்தாள், உயிர் அற்றவளாக. முற்றம் கூட்டி, தாழ்வாரத்தில் சாணி சகதியை அள்ளி, குப்பையைக் கூடைகளில் சுமந்தாள். கடைக்குப் போய் சரக்கு வாங்கி வந்தாள். எல்லாம், உயிர் அற்ற உடம்பின் பழக்கப்பட்ட செயல்பாடுகள். இயந்திரத்தின் சலனம்.
புஞ்சைக்குப் போய் அகத்திக் கொழை ஒடித்து, ஆமணக்குக் கொழை ஒடித்து, சீமைப்புல் அறுத்து, சவுண்டல் கொழையை ஒடித்து கட்டாகக் கட்டி, தலையில்வைத்து, கடாப்பெட்டி நிறைய அறுத்துச் சேர்த்த புல்லை இடுப்பில் இடுக்கி வீடு வந்தாள். ஆடு, குட்டி, மாடு கன்றுகளுக்குப் பச்சையைக் காட்டவும் குதூகலித்தன. பசுக்களின் கண்களில் ஈர மின்னல்கள். ஆடுகளின் சின்ன வாலின் குறுந்துள்ளல்.
அதுகளோடு பேசிப் பழகி, தட்டிக்கொடுத்து, உண்ணிகள் பொறுக்குகிற வழக்கமான பரமுவைக் காணாமல் ஏங்கித் தவிக்கின்றன அதுகள்.
மூத்த பயலும் இளைய பொட்டச்சியும் பைக்கட்டோடு வீடு வந்தனர். அம்மா வாங்கிவைத்து இருந்த தின்பண்டங்களைத் தின்றபோது, ரெண்டு பேருக்குள் நடந்த கேலியான, கிண்டலான வாக்குவாதம் கைச் சண்டையில் வந்து நின்றது.
அம்மாவின்
தலையீட்டையும் அதட்டலான சள்ளைக் கூப்பாட்டையும் எதிர்பார்த்துவிட்டு ஏமாந்து, கோடை மழைத் தூவானமாகத் தானாக நிறுத்திக்கொண்டனர்.
அம்மா, அம்மாவாக இல்லை. முகம் குறாவிப் (குறை ஆவி) போய் இருந்தாள். வாட்டம் ஒரு கரிய நிழலாகப் படிந்து இருந்தது. ''என்னம்மா?'' கவலையுடன் விசாரித்த மகளைப் பரிவுடன் பார்த்து, ''ஒண்ணுமில்ல...'' என்று உயிர் இல்லாத 'சும்மா’வாகச் சொன்னாள் பரமு.
ராத்திரி ஆயிற்று, புருஷன் ராமசுப்புவிடம் கூறினாள். முகம் வாடிப்போய் இருந்தவளைப் பரிவும் கவலையுமாக ''என்ன?'' என்று நோண்டித் துருவி விசாரித்த பிறகு சொன்னாள். ''நாளைக்கு அம்மா - அய்யாவைப் பாக்கப் போகணும்.''
''என்ன, திடுதிப்னு?''
''என்னமோ... அடி மனசுகெடந்து அடிச்சிக்கிடுது, உசுர் போறப்ப றெக்கை அடிக்கிற பறவை மாதிரி.''
ராமசுப்புவுக்கு எரிச்சலும்
கடுப்புமாக முகம், நிறம் மாறியது. வெறுப்பின் முகச்சுளிப்புடன் அவளைப் பார்க்கிற அவனது கண்ணிலும் குரலிலும் கண்டனத் தொனி.
''காடுகரைகள்ல பாடுசோலிக குமிஞ்சுப்போய்க்கெடக்கு. மழைத் தண்ணி வர்றதுக்குள்ள புஞ்சைகள்ல கெடக்குற தூர்க் கட்டைகளைக் கொத்தி ஒதுக்கணும். ஒழவு போடணும். அருகு புடுங்கணும். குப்பை அடிச்சு, குமிகுமியாக் குமிக்கணும். நாத்தங்கால் ஊத்தணும். வெதைப் பண்டம் சுத்தம் பண்ணணும். நீ என்னடான்னா... ஊர் வழி போகணும்ங்குறே...''
கோபச் சூட்டுடன் சீறுகிற புருஷனைப் பயமோ, தயக்கமோ இல்லாமல்... வெறுமையாக வெறிக்கிறாள் பரமு.
''ஒரு நா...த்தானே? விடியக் காலம் மொத வண்டிக்குப் போய்ட்டு, ராத்திரி கடைசி வண்டிக்கு வந்துருவேன்லே?''
''புள்ளைகளுக்குச் சோறு தண்ணி?''
''புளியோதரையும் தயிர்ச் சோறும் ராத்திரியே தயார் பண்ணிவெச்சிருதேன்.''
சொல்லுக்கு
முன்னால் முட்டிக்கொண்டு வருகிற அழுகையின் திமிறல். அழுகைக்கு முந்திக்கொண்டு வருகிற விசும்பலையும் கண்ணீரையும் முந்திச்சீலையில் துடைத்துக்கொள்கிறாள் பரமு.
ராமசுப்புவுக்கு அவளைப் பார்க்கப் புதிராகவும் இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. ''சரி... சரி... ஒம் மனசுப்படி நீ போய்ட்டு வா.''
அழகாபுரியைக் கடந்து, கரிசல்குளம் நோக்கி விரைகிற பஸ்ஸின் வேகம். காலைக் காற்றின் ஈரப்பதம் அற்ற கோடைக் குணம். மிளகாய்த் தோட்டங்களும், பருத்திப் புஞ்சைகளும், கம்பம் பயிர் தோட்டங்களும் பின்னோக்கி ஓடுகின்றன.
மேலத்தெரு மேயர் என்றுதான் மாடசாமியை எல்லாரும் சொல்வார்கள். கிராமத்துக்கு உரிய கைலி, பனியன், மேல் துண்டுடன் யாரும் அவனைப் பார்த்திருக்க முடியாது. எப்பப் பார்த்தாலும் தும்பைப்பூ மாதிரி வெள்ளை வெளேர் என்று வேட்டி, சுருட்டி மடித்து ஏற்றிய சட்டைக் கையுடன் தேய்ப்பு மடங்காத வெண்ணிறச் சட்டை கழுத்தடி காலரில் வேர்வை படியாமல் இருக்க எந்நேரமும் முக்கோண மடிப்பிலான கைக்குட்டை சொருகி இருப்பான்.
அவன் மீது இவளுக்கு அப்போது எல்லாம் ஒரே மையல்... ஒரே கிறுக்காக அவன் பின்னாலேயே பார்வையை மேய விடுவாள். மனசும்தான். புத்தம் புது சைக்கிள் கரும்பச்சையாக மின்னும். முழு கவர் போட்டிருப்பதால், செயின் வெளியே தெரியாது. அதன் இரைச்சல் மட்டுமே சங்கீதம் பாடும். ஃபோக்ஸ் கம்பிகளில் கலர் பாசிமணிகள் கோத்திருப்பான். சைக்கிள் சுற்றினால், சலங்கையின் நடனமாக சப்த லயம் வரும். முக்கோண பார்களுக்கு கலர் துணியால் உறை போட்டு இருப்பான். கையில் எந்நேரமும் வாட்ச் கட்டியிருப்பான். காலில், தோல் செருப்பு. நடந்தால், 'சர்ர்ருக்... சர்ர்ர்ருக்’ என்று சத்தம் எழும்.
ஆள் கறுப்பாக இருந்தாலும், நல்ல களை. சோப்பு வாசம் சொக்கவைக்கும். பவுடர் மணம் கிறங்கடிக்கும்.
பாவாடை கட்டிய பருவத்தில்இருந்து ''மச்சான்... மச்சான்'' என்று கேலியும் கிண்டலுமாக விளையாடுவாள். அவனும் வஞ்சகம் இல்லாமல் அன்பு காட்டுவான். பிரியமாக விளையாடுவான். தூரத்து உறவு மாமா மகள் என்ற உரிமையிலும், உறவு முறைப் பாசத்திலும் சடையைப் பிடித்து இழுத்துவிடுவான். தெறித்து ஓடுகிறவளை எட்டிப் பிடிப்பான். 'வாடி... எம் பொண்டாட்டி'' என்று கத்துவான். கடையில் வாங்கித் திங்க காசும் தருவான்.
இவளைவிட பத்துப் பதினைந்து வயது அவனுக்குக் கூடுதலாக இருக்கும். இவர்கள் விளையாட்டில் கல்மிஷமும் இருக்காது. கபடம் இருப்பதாக யாரும் சந்தேகிக்கவும் மாட்டார்கள்.
இதே விளையாட்டும் வேடிக்கைச் சண்டைகளும் நையாண்டித் துரத்தல்களும் நீடித்தன. இவள் சடங்காகி, சேலைப் பெண்ணாக, சின்னச்சிட்டாக துள்ளித் திரிந்த சமயத்திலும் நீடித்தன. அப்போது, இவளுக்குள் கபடமும் கனவுகளும் கூடு கட்டத் துவங்கிவிட்டன. ஒரு மையல். ஒரு மன மயக்கம். பகலின் விளையாட்டுகளை இரவிலும் நினைத்து, போதைகொள்வது ஒரு தனி சுகம்.
அவனது சிரிப்பு, கண் சிமிட்டல், அரும்பு மீசை, கர்லிங் தலைமுடி, சட்டை, கர்ச்சீப், எல்லாமே இவளை வெகுவாக லயிக்கவைத்தன. அவனது ஸ்டைல்கள், சைக்கிள் பயன்பாடுகள், சோப்பு, பவுடரின் நறுமணப் போதை எல்லாமே இவளைக் கிறக்கிற்று.
அதைவிட இவளுக்குள் இறங்கிய மயக்கம், அவனது பேரன்பு, பாச உணர்வு, தனித்துவ அன்பு.
இவளுக்குள்
மயக்கமும் கிறக்கமும் நிறைந்த விடலைத் தனக் கபட எண்ணங்கள் கரிய முகம் காட்டினாலும்... அவனிடம் இருந்தது கபடம் அற்ற விளையாட்டு கல்மிஷம் அற்ற கேலிக் கிண்டல்கள். பாசம் மட்டுமே நிஜம் என்பதை உணர்த்துகிற ஒழுக்கம். கண்ணியம். பேச்சு டன், விளையாட்டுடன் நிறுத்திக்கொள்கிற சுயக் கட்டுப்பாடு.
எல்லைக் கோட்டைத் தாண்டாத அந்த நாணயம். சிறு பெண்தானே என்ற தனிப் பிரியம்.
இவளுக்கு ஏமாற்றமாக இருக்கும். அவனது அத்துமீறலை விரும்புகிற விடலைப் பெண் மனம். எல்லை மீறல் நிகழ்த்த மாட்டானா என்று ஏங்குகிற மனக் குரங்கு. இவள் விடலை மனம் ஏமாந்தாலும்... அவன் மீது பாசம் கலந்த மரியாதை. அன்பின் மிகுதியால் எழுந்த மதிப்பு.
விடலைப் பருவம் முடிந்த கன்னிப் பருவம். வயது இருபதாகிவிட்டது. இப்போது விளையாட்டு இல்லை. ஓட்டபாட்டம் இல்லை. சடையை எட்டிப் பிடிக்கிற குறும்பு இல்லை.
தெருவில் எதிரில் தென்பட்ட தருணத்தில்,
''வாம்மா பொண்டாட்டி, தண்ணியெடுக்கப்போறீயா?'' என்று விசாரிக்கிற மாடசாமிக்கு, அடங்கி ஒடுங்கிய நாணச் சிரிப்புடன் ''போங்க மச்சான்'' என்று கிசுகிசுத்துவிட்டு விலகி நடப்பாள். குதியான அருவி, அமைதி நதியாகிவிட்டது. ஒரு முதிர்ச்சியான நட்பு. இப்போது.
அவளுக்கு மையல் இல்லை. மயக்கம் இல்லை. அவன் ஸ்டைல்கள் கண்ட கிறக்கம் இல்லை. ஆனால், அவன் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. இவளது விடலைப் பருவ நெகிழ்வைப் பயன்படுத்திக்கொள்ளாத பாசக்காரன். இவளது மயக்க மையலில் கைவைத்து, சூறையாடிவிடாத அன்பு மனசுக்காரன் என்ற மரியாதை. ஒரு கௌரவமான ஒழுக்கமான - மாமனிதருக்குரிய உறவுச் சிம்மாசனம், அவள் மனசுக்குள்.
அப்போதுதான்
- ராமசுப்பு பெண் பார்க்க வந்து, பேச்சுவார்த்தை கனிந்து, மாலை பூத்து வந்துவிட்டது. முகூர்த்தத் தேதி குறித்தாகிவிட்டது. இன்னும் ஏழெட்டு நாட்களில் கல்யாணம்.
கல்யாண வேலைகள் றெக்கை கட்டிப் பறந்தன. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அய்யா, அம்மா, அண்ணன் எல்லோரும் ஓடித் திரிந்தனர். கல்யாணம் குறித்த கனவுகளும், முன்னேபின்னே தெரியாத ஊருக்கும் உறவுக்கும் போயாக வேண்டுமே என்ற பயங்கரமுமாகத் ததும்பி நிறைந்த அந்த நாட்கள்...
கரிசல்குளம்
ஸ்டாப்பில் நிற்கிற பஸ். ரெண்டு பேர் இறங்க, நாலு பேர் ஏறுகின்றனர். காலை வெயிலின் தங்க நிறம். கோடை வெயிலின் காலை நேர இதம். கரிசல்குளம் தாண்டிப் புறப்படுகிற பஸ், உமையத்தலைவன்பட்டியை நோக்கி, வளைவுகளும் திருப்பங்களுமான தார் சாலையில் விரைகிறது.
அந்த மாடசாமி மச்சான்தான், கிட்னி ஃபெயிலராகி சாகக்கிடக்கிறார். பாசக்கார மச்சான்.
சாகக்கிடக்கிற அந்த ஆளு, உசுரோட இருப்பாரா? போறதுக்குள்ளே, போய்ச் சேர்ந்துருவாரா? சாகக்கிடக்கிற இந்தச் சமயத்தில் சுருட்டி மடக்கிய கையுடன் கூடிய சட்டை போட்டு இருப்பாரா? கர்ச்சீப்பைக் கழுத்தடியில் சொருகி இருப்பாரா? பவுடர் பூசியிருப்பாரா? மரணப் படுக்கையிலும் சோப்பு வாசம் இருக்குமா?
எப்படியோ ஒரு சுகபோகியாக வாழ்ந்த ஒருவர் மரண வாசல் ரோகியாக...
அவளுக்குள்
ஊற்றெடுக்கிற கண்ணீர் ஒற்றைக் கோடாக வழிந்தது.
அதைத் துடைத்துக்கொள்ளக்கூடத் தோன்றவில்லை. கண்ணீரோடு இருப்பதை, பஸ்ஸில் இருப்போர் யாராச்சும் பார்த்தால்... வேறு ஏதாச்சும் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ...
முந்திச் சேலையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். மாடசாமி பற்றிய நினைவுகள். அவனைப் பற்றிய நெகிழ்ச்சி.
அவனுக்கும்
இவளுக்குமான உறவு, என்ன வகையைச் சேர்ந்தது? காதலா? அல்ல. காமமா? அதுவும் அல்ல. பிரியம். மனசுக்குள் பொங்கிப் பெருகிப் பரவிய பிரியம். ஆகாய வெளிபோல, தூய்மை நிறைந்த பிரியம். மண்ணில் விழாத மழைத்துளி போன்ற பிரியம்.
இவளது விடலைப் பருவ நினைவுச் சேட்டைகள், கன்னத்துப் பருக்கள் போன்றவை. தற்காலிகமான, வளர்ந்து கடந்து போகப்படுகிற இடைநிலைத் தாவணியைப் போன்ற இடைக்காலம்.
அதற்கு முன்பும் பின்பும் நிகழ்ந்த பாசமான விளையாட்டுகளே நிரந்தர நிஜம். அதற்கு ஆணி வேரான பிரியமே நிரந்தர உண்மை.
அப்பேர்பட்டவரா சாகக்கிடக்கிறார்? அவரைப் 'பார்த்து’விடக் கொடுத்து வைத்திருக்கிறேனா? உயிருடன் பார்க்கிற கொடுப்பினை உண்டா?
பஸ், உமையத்தலைவன்பட்டியைத் தாண்டி, திருவேங்கடம் நோக்கி நகர்கிற போது, இவளுக்குள் பொங்கிப் பெருகுகிற சோகப் பெரும் பிரவாகம். கொந்தளிக்கிற உணர்ச்சிப் பேரலையடிப்புகள். பல்லைக் கடித்தாள். தனக்குள் தன்னைப் புதைத்தாள். புதைத்துக்கொள்ள முடியாமல் தத்தளித்தாள். திருவேங்கடம் வந்து சேர்ந்தது.
பஸ், பஸ்ஸ்டாண்டுக்குள் வட்டம் அடித்த நேரம்தான்...
இவள் ஊருக்குப் போகிற மினி பஸ் நகர்ந்துகொண்டு இருந்தது. இவள் கூவல் காடு போட்டுப் பரபரத்துப் பையுடன் இறங்க, மற்ற சிலரும் மினி பஸ்ஸைப் பார்த்து சவுண்டு தந்தனர். ஓட்டமும் பைச் சுமையுமாக வந்த பரமுவை, மினி பஸ் நின்று, ஏற்றிக்கொண்டது.
வீடு போனாள். அம்மா இவளை உட்காரச் சொன்னாள். கால் கையை கழுவிக்கொண்டு வரச் சொன்னாள். சாப்பிடச் சொன்னாள்.
மகளைப் பார்க்கிற பேராவலுடன் வந்த அய்யா, ''என்னம்மா... மினி பஸ்ல வந்தீயா?''
''ஆமய்யா...''
''மாப்ள, பேரன், பேத்தி எல்லாம் நல்லாருக்காகளா?''
''எல்லாரும் நல்லாயிருக்காக.''
வாய் வார்த்தைகளும் விசாரிப்புகளும் நீண்டுகொண்டே போயிற்று. விசாரிப்புகளின் நீட்சி, வெளிப்படாத ஒரு கேள்வியைக் கருக்கொண்டு இருக்கிறது.
கேட்காத கேள்வி... அய்யா - அம்மாவுக்குள் துடிக்க, பரமுவையும் அது உறுத்தியது.
''என்ன இப்ப... திடுதிப்னு?'' கேட்கப்படாத இந்தக் கேள்வியை ராமசுப்பு கேட்டான்.
''மாடசாமி மச்சானைப் பார்க்க'' என்று உண்மையைச் சொல்ல முடியாது.
அவர் ஒன்றும் நெருக்கமான உறவு அல்ல. நெருங்கிய சொந்தம் அல்ல. ஒரே சாதி என்பதால், தூரதூரத்துச் சொந்தம்.
மாடசாமி மச்சானைப் போய்ப் பார்ப்பதற்காக இவள் வாங்கிவைத்த பழ வர்க்கம், பைக்குள் அடியில் ஒளிந்து இருக்கிறது, இவள் மனதுக்குள் ஒளிந்திருக்கும் உண்மையைப் போல.
காடு கரைகள், பாடுசோலிகள் விசாரித்து முடித்த பின்பு, காலைச் சாப்பாடு முடிந்த பிறகு... வேறு வேறு விஷயங்கள் பேசிய பிறகு... கவனத்தின் திசைகள் பலவாறாகப் பெருகிப் பாய்ந்து கழிந்த பிறகு... ஒட்டில்லாத பாவனை மனதுடன் கேட்டாள். ''மாடசாமி மச்சானுக்கு இப்ப எப்படி இருக்கு?''
அவன் அன்பை ருசித்தவள், அவனது பாசப் பண்பை உணர்ந்தவள். இவள் சறுக்கத் தயாராக இருந்த அறியாப் பருவத்தை, அறிந்தே பயன்படுத்தாமல் ஒதுங்கிய கண்ணியவான். பிரியத்தால் உயர்ந்தவன். பாசத்தின் ஆகாய விரிவாய், இவளது மனச் சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருக்கிற புனிதாத்மா.
இவள் அசிரத்தைப் பாவனையுடன் கேட்ட கேள்விக்கு, அசலான அசிரத்தையுடன் சூள் கொட்டிவிட்டுப் பதில் சொன்னாள் அம்மா, ''கெடந்து சீரழியுதான். சாகவும் முடியாம, எந்திக்கவும் முடியாம... சட்டடியாப் படுத்துக்கெடக்கான். எல்லாம்... அவன் செய்ஞ்ச பாவம் சும்மாவுட்டுருமா?''
''பாவமா...? அந்த மச்சானா?''
''ஆமா! அவனோட மைனர்தனத்தாலே வவுத்துல உண்டாகி... வழி இல்லாம, அரளிக் கொட்டையை அரைச்சுக் குடிச்சு உயிரை மாய்ச்சுக்கிட்டதுக ஏழெட்டு இருக்கும். வயசு முத்துன குடும்பப் பொண்ணுகளை ஏமாத்தி, மயக்கி வசப்படுத்தி... வாழா வெட்டிகளானதும் நாலஞ்சு இருக்கும். அவன் பண்ணுன பாவக் கூத்துகளை எல்லாம் மேல இருந்து பாக்குற கூத்துவன் சும்மா வுடுவானா? அதான்... சட்டடியாப் போட்டெடுக்கான்.''
அம்மாவின்
அமைதியான குரலில் ஒளிந்திருக்கிற ரௌத்ரம். ஒரு கோபாக்னி அம்மாவின் கோபாக்னியில் எரிந்து சாம்பலாகிற மாடசாமியின் மனச் சித்திரம்.
''இம்புட்டு மோசமானவனா? பொண்ணுகளை நாசக்காடு பண்ணுன பொறுக்கிப் பயலா?''
இவள் மனசின் முணுமுணுப்புகள். இவளுக்குள் ஏதோ சரிந்து உடைந்து பொடியாகிற உணர்வுகள். ஏதோ சிம்மாசனம் உடைந்து, முறிந்து, நொறுங்கி, நொய்த் தவிடாகி, நைந்த கந்தல் துணிச் சிதறல்களாகி காற்றில் மிதக்கிற மாதிரி உணர்வு.
மசால் பொடி, ஊறுகாய், அய்யா அம்மாவுக்கான தின்பண்டங்களை எடுத்துவைத்த பரமு, ஆழத்தில்கிடந்த பழ வர்க்கங்களையும் எடுத்து அம்மா முன்பாக வைத்தாள்.
''இது யாருக்கும்மா?''
''அம்மா - அய்யாவுக்குத்தான். ஏன்ம்மா... நாம பழ வர்க்கம் சாப்புடக்கூடாதாம்மா?''
வந்ததில் இருந்தே கேட்கப்படாத கேள்வியுடன், உள் மனக் குழப்பத்துடன் மகளை ஒரு புதிர்போலப் பார்த்துக்கொண்டே இருக்கிற அய்யாவுக்கும் அம்மாவுக்கும் இப்போதும் அவள் ஒரு புதிராகவே தோன்றுகிறாள்.
அவள் அவளுக்குள் அவளது அறியாமைகளைப் புதைத்துக்கொண்டு இருக்கிறாள்.
நன்றி - விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக