23/08/2012

அன்று இரவு - புதுமைப்பித்தன்


1
அரிமர்த்தன பாண்டியன்

     நான்மாடக்கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை. அதில் ஒருவன் சொக்கேசன். மனிதனுடன் மனிதனாக நடமாடி, அவர்களுடைய சுகதுக்கங்களில் பகிர்ந்து கொண்டு, வளையல் விற்று, சாட்சி சொல்லி, சங்கப் புலவர்கள் கருவமடக்கி, வாழையடி வாழையாக ஆண்டு வரும் பாண்டியர்களுக்கு மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய்க் கைகொடுத்துவரும் சொக்கேசன், அழகன் உறங்கவில்லை. பிறவா நெறி காட்டுவானுக்கு உறக்கம் ஏது? ஊண் ஏது? அடுத்த நாள் ஓர் அரசன்; பாண்டியன், அரிமர்த்தன பாண்டியன், இமையா நாட்டம் பெற்றவன் போல, சயனக்கிருஹத்தில் மஞ்சத்தில் அமர்ந்து நினைவுக் கோயிலில் நடமாடிவந்தான். அறிவை அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் சரக்கூடம் போட்டன; நடைபெற்ற நிகழ்ச்சிகள் வாலுடன் தலையிணைத்துக் காட்டி நகரின் வரம்பமைத்த பாம்பு மாதிரி அறிவு சக்கரவியூகம் போட்டது.

     பிரகாசம் கண்ணைத் குத்தித் தூக்கத்திற்கு ஊறு விளைக்காமல் இருப்பதற்காக அமைத்த நீலமணி விளக்கு, அவனது மார்பில் கிடந்த ஆரத்தில் பட்டு, சற்று அசையும்போது மின்னியது. கை விரல் மோதிரத்தை நெருடிக்கொண்டே சாளரத்தின் வழியாகத் தெரிந்த சிறிய துண்டு வான்வெளியை நோக்கிக் கொண்டிருந்தன. அன்றிரவு கிருஷ்ண பட்சத்துச் சந்திரன்; அது உதயமாக இன்னும் இரண்டு சாமம் கழிய வேண்டும். சாளர வரம்புக்கு உட்பட்ட தாரகைகள் ஒன்று இரண்டு, தீர்க்கதரிசிகளின் அறிவு வரம்புக்குள் அடைப்பட்ட பிரபஞ்ச ரகசியங்கள் ஒரு குறிப்பிட்ட கோலத்தில் அமைந்து, மனித உயிர் நாடும் வேட்கைக்குச் சாந்தி தரும் சமயம் என்ற ஒரு குறிப்பிட்ட கோலத்தைக் காட்டுவது போல, ஜோதிட விற்பன்னர்கள் வகுக்காத ராசி மண்டலங்களை அமைத்துக் காட்டியது.

     சாளரத்தின் உச்சியிலிருந்து, வானத்துக்கு நேர் கோட்டில் ஆணியடித்து வைரம் பதித்தது மாதிரி, அல்ல, மஞ்சள் கலந்து சிவப்புக்கல் பதித்த மாதிரி, ஒரே ஒழுங்கில் அமைந்து நின்று அசைந்து கண் சிமிட்டியது. மன்னன் மனம், அன்றைய நிகழ்ச்சிகளை ஒரு விநாடி மறந்து தாரகைக் கூட்டத்தில் லயித்தது. மனம் ஒன்ற ஒன்ற, இருட்டுக்குள் இருளுக்கு வரம்பு போட்ட மாதிரி கோபுரமும் கலசமும் திரண்டு உருவாயின; அதன் மத்தியில் அந்த விளக்குகள். என்ன, நம்மூர்க் கோயிலைக் கூடவா, நாம் தினம் கும்பிட்டு மன உளைச்சல் என்ற சுமையை இறக்கிவைக்கும் சுமைதாங்கியான கோயிலைக் கூடவா மறந்துவிட்டோ ம் என்று நினைக்கிறான் பாண்டியன். தன்னை அறியாமல் மீசையை நெருடிக்கொண்டே சிரிக்கிறான். கோபுரத்தைத் தாண்டி ஒண்டித் தெரியும் துண்டு வானத்தில் ஒரு நட்சத்திரமும் கூடச் சிரிக்கிறது.

     'முப்பது வயசுக்குள் எவனாவது திடீரென்று மாறிப் பரம் ஒன்றே என்ற நினைப்புடன் நடமாட முடியுமா? குதிரை வாங்கப் போன மந்திரி திரும்பிவரும்பொழுது, விழுந்து கும்பிடு என்று என் மனசே சொல்லும்படி எப்படி மாறிவிட முடியும்? கொண்டு போன பணத்தை என்ன செய்தான்? விரயம் செய்து போகத்தில் ஆழ்வதென்றால் அவன் உடம்பு அதைக் காட்டியிருக்குமே.'

     அரிமர்த்தனன் மனசிலே அன்று பிற்பகல் பட்டிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன.

     அமாத்தியன் திருவாதவூரன், பகல் முழுவதும் கால் கடுக்க நடுவெயிலில் நின்று கல் சுமந்து கசையடிபட்டதன் சோர்வு சற்றும் காட்டாமல், வந்தபோது பூத்து அலர்ந்த புன்சிரிப்புடன் நிற்கிறான். அரசன் அரிமர்த்தன பாண்டியன் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கின்றான்.

     "அமாத்தியரே, குதிரைகளுக்குக் கொடுத்தனுப்பிய தொகை எங்கே?"

     "அவனைத் தவிர இவ்வுலகில் கொடுப்பவர் யார்? கொள்பவரார்?"

     "வாதவூரரே, அப்படியானால் பணம் வாங்கவில்லை என்று மறுக்கிறீரா?"

     "குதிரை வரும் என்று சொல்கிறேன்."

     "குதிரையைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். பணத்தை என்ன செய்தீர், சொல்லிவிடும்; உம்மை மன்னித்துவிடுகிறேன்."
"அரசே, வாதவூரர் கொண்டு சென்றது அரசாங்கப் பணம்; அதை விரயம் செய்யத் தங்களுக்குக் கூட உரிமை கிடையாது என்பதைத் தாங்கள் எத்தனை முறை இந்த வாதவூரர் முன்னிலையிலேயே சொல்லியிருக்கிறீர்கள்; மன்னிப்பது என்றால் பாண்டியன் தனது ஆட்சியை அழிப்பது என்பதே பொருள்" என்று இடைமறிக்கிறார் ருத்திரசாத்தனார் என்ற மந்திரி.

     "பணம் வந்துவிட்டால் போதுமா? சமயத்தில் குதிரைகள் கிடைக்காததனால் நாம் எவ்வளவு ஆபத்தான நிலையில் இருந்தோம்? சோழன் திரட்டிய சேனை நம்மீது விழுந்திருந்தால் நாடு என்ன கதியாகும்? களப்பிரர்கள் சோழநாட்டைச் சூறையிடாதிருந்தால் இன்று மீன் கொடியில் ரத்தக்கறைகள் அல்லவா படிந்திருக்கும்? தோல்வி என்பது நமக்கு இல்லை. சொக்கேசன் உள்ளவரை, பாண்டியன் உள்ளவரை, அந்நியன் தலை மண்ணில் உருளத்தான் செய்யும்; இருந்தாலும்..." என்கிறார் ஏனாதியான பகைக்கூற்றச் சித்திரனார்.

     "வாதவூரரே, என்ன சொல்லுகிறீர்? தொகை எங்கே?" என்கிறான் அரிமர்த்தனன்.

     "கொடுத்தவன் வாங்கிக் கொண்டான்; குதிரைகள் வரும்" என்கிறார் வாதவூரர்.

     "அரசே, வாதவூரருக்கு வயது முப்பதுதான். திருக்கோவையாரைப் பாடியவர் என்பதற்காக, அவரை நாம் சிறிது காலம் பார்க்காமல் இருந்துவிட்டதற்காக, ஜீவன்முக்தராகிவிட்டார் என்று நினைப்பது தவறு. சங்கரனார் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நாடு இது. சங்கரருக்கே அப்படியென்றால் வாதவூரருக்கு மட்டும் என்ன இளக்காரம்?" என்கிறார் ருத்திரசாத்தனார்.

     "வாதவூரரே, என்ன சொல்லுகிறீர்? சித்தர்கள் போலப் பரிபாஷையில் பேசி ராஜாங்க நேரத்தைக் கழிக்க வேண்டாம். குதிரைகள் வரும் என்கிறீரே; எப்போது வரும்?"

     வாதவூரன் கண்கள் ஏறச் செருகிவிட்டன. நின்ற நிலையிலேயே உள்ளோடு ஒன்றிவிட்டான்.

     உதடுகள், "குதிரைகள் - குதிரைகள் - குதிரைகள்..." என முணு முணுக்கின்றன.

     பாண்டியன் மனசிலும், "குதிரைகள், குதிரைகள், குதிரைகள்" என்ற வார்த்தைகள் எதிரொலிக்கின்றன.

     பட்டிமண்டபத்துக்கு வெளியே சடபடவென்று ஆர்ப்பாட்டமான சத்தம். காவலர்கள் இருவர் ஓடி வருகிறார்கள். "குதிரைகள் வந்து விட்டன! அரசே குதிரைகள் வந்துவிட்டன!" என்று நமஸ்கரிக்கின்றனர்.

     "என்ன, குதிரைகளா! எங்கே?" என்று எழுந்திருக்கின்றான் மன்னன். சபையும் திரண்டு எழுந்திருக்கிறது. வீரக்கழல் முழங்க, அரசன் மிடுக்குடன் வாசலுக்குப் போகிறான். மந்திரி பிரதானிகள் பின் தொடர்கிறார்கள். பட்டிமண்டபத்திலே 'குதிரைகள் குதிரைகள்' என்று தம்மை மறந்து ஜபிக்கும் வாதவூரரையும் சிலைகளையும் தவிர யாரும் இல்லை.

     குதிரைகள் தாம் எத்தனை! பத்து அக்குரோணிக்குப் போதுமானவை; அவ்வளவும் வெள்ளை. குதிரை நோட்டம் தெரிந்த கணக்காயர்கள் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார்கள்; ஒரு சுழி இருக்க வேண்டுமே. அத்தனையும் உயர்ந்த ஜாதிக் குதிரைகள்.

     குதிரைப் பாகன் தான் கண்கொள்ளாக் காட்சி. அவனை அழைத்துச் சென்று அப்படியே முடிசூட்டிவிடலாமா என்று கூட நினைத்தான் அரிமர்த்தனன். என்ன அசட்டுத்தனமான நினைப்பு! அவன் துருஷ்கனா, யவனனா, சோனகனா? கண்களிலேதான் அம்மம்ம, என்ன பயங்கரம்! சாட்டையைக்கொண்டு சிமிட்டாக் கொடுக்கிறான். அத்தனை குதிரைகளும் அணிவகுத்து நிற்கின்றன!

     "பெற்றுக்கொண்டு சீட்டைக் கொடும்; போகவேண்டிய வழி கணக்கில் அடங்காது" என்கிறான் குதிரைப் பாகன். குரலில் இனிமையும் பயங்கரமும் கலந்திருந்தன.

     அரசன் முறிச்சீட்டில் கையெழுத்திட்டுத் தருகிறான். பாகன் வாங்கிக் கொண்டு வணக்கங்கூடச் செய்யாமல் போய்விடுகிறான்.

மன்னனும் மந்திரிப் பிரதானிகளும் பட்டிமண்டபத்துக்குள் திரும்ப வருகிறார்கள். வாதவூரன் முகத்தில் சோகம் தேங்க, "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே, வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்" என்று தழுதழுத்தபடி உருகி நிற்கிறார்.

     "வாதவூரரே, என்னை மன்னிக்க வேண்டும்; நான் ராஜ்யத்தைச் சுமக்கிறவன்."      "அரசே, நான் உலகின் துயரத்தை, வேதனையைச் சுமக்கிறவன்."

     "வாதவூரரே, அப்படி மனம் நொந்துகொள்ளக் கூடாது. தாங்கள் பழையபடி எனக்கு அமைச்சராகவே இருக்க வேண்டும்; தாங்கள் இல்லாவிட்டால் இத்தனை குதிரைகள் கிடைக்குமா?"

     "அமைச்சன் மருத்துவனைப் போல இருக்கவேணும் என்பதை நான் தங்களுக்குச் சொல்ல வேண்டுமா?" என்கிறார் ருத்திரசாத்தனார்.

     "பகையை விரட்டப் படைப்பலம் வேண்டாமா?" என்கிறார் ஏனாதி.

     அரிமர்த்தனன் மனசு மறுபடியும் அந்தக் குதிரைகள் மீது, அந்த வெள்ளைக் குதிரைகள் மீது சவாரி செய்கின்றன. பகைவர்கள் தலைமீது நடமிடும் குதிரைகள். வாதவூரன் கொடுத்த குதிரைகள் அல்லவா? என்ன அறிவு, என்ன தூய்மை! தெய்வாம்சமாக, தெய்வமாகக் குதிரைப் பாகனைப் போலவே நின்றானே...

     நடுச்சாமத்தைப் புள்ளியிடச் சங்கு விம்முகிறது, அலறுகிறது, முழங்குகிறது. அதன் ஓசையும் மடிகிறது.

     அது என்ன சத்தம், தனி நரி ஊளையிடுகிற மாதிரி! அதன் குரல் ஒடுங்கும் சமயத்தில் ஆயிரம் ஆயிரமாக நரிகள் ஊளையிடுகின்றன. நான்மாடக்கூடலில் நரிகளா? குதிரைப்பந்தி இருக்கும் திசையிலிருந்து அல்லவா கேட்கிறது! அரிமர்த்தனன் எழுந்து நிலாமுற்றத்துக்குச் செல்லுகிறான். காதுகளை ஈட்டியிட்டுக் குடைவது போன்ற இரைச்சல். இருட்டில் கண்கள் துழாவுகின்றன. இருட்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

     மன்னவன் வீரக்கழல் ஒலிக்க, உத்தரீயம் தரையில் புரள, மறுபடியும் சயனக்கிருஹத்தில் நுழைகிறான். மஞ்சத்தருகில் சாய்த்து வைத்திருந்த உடைவாளுடன் அறையைவிட்டு விரைகிறான். வாசலில் தூக்கமும் மருட்சியும் கண்களில் தேங்க, குழலும் மேலாக்கும் சரிய, துவண்ட நடையில் விளக்கெடுத்து முன் செல்லுகிறார்கள் பணிப் பெண்கள். அந்த மங்கிய ஒளியில் தான் அவர்கள் என்ன அழகு!

     அரசன் அரண்மனை வாசலில் வந்து நிற்கிறான். "குதிரை லாயத்தில் நரிகள் புகுந்துவிட்டன, அரசே, அவை நகருக்குள்ளும் பிரவேசித்துவிடும் போலத் தெரிகிறது..." என்று கும்பிடுகிறார்கள் குதிரைப் பந்தியின் காவலர்கள்.

     மூன்று ஜோடிக் கழல் ஒலிகள் இருட்டில் படிப்படியாக மங்கி ஓய்ந்தன.

     திடீரென்று இருட்டையே கூர்ங் கத்திகொண்டு கிழிப்பதுபோல ஒரு தனி அலறல். பீதியில் வெருண்டு உயிருக்குப் போராடி மடியும் குதிரையின் குரல் அது. அதைத் தொடர்ந்து ஆயிரம் பேய்கள் கெக்கலிகொட்டி நகைப்பது போன்ற நரி ஊளை. போர்க்களத்தில் கவந்தங்கள் ஆடுவதையும் அச்சிற்று விழும் தேரில் அடிபட்டு நசுங்கும் குதிரைகள் யானைகள் போடும் கூச்சல்களையும் கேட்டவன் தான் அரிமர்த்தன பாண்டியன். ஆனால் அன்று கேட்ட அந்தத் தனிக் குதிரையின் சப்தம், அவனிடம் அபயம் கேட்டு ஏமாந்து உயிர்விடுவது போல இருந்தது. நான்மாடக்கூடலில் இந்த இருட்டுப் பேய்க்கூச்சல் ஜனங்களை எழுப்பிவிட்டிருக்கக் கூடும். அவர்கள் இரட்டைத் தாழிட்டு வீட்டுக்குள் அமர்ந்துவிட்டனர்.

     குதிரைக் கொட்டடியின் முன் காவலர்கள் கதவைத் தாழிட்டுக் காவல் காத்து நின்றனர்.

"உள்ளே மருந்துக்குக்கூட ஒரு குதிரை இல்லை. நமது லாயத்தில் நின்ற பழைய குதிரைகளைக்கூட ஒன்று பாக்கிவிடாமல் கொன்று கிழித்துவிட்டன" என்றார்கள் காவலர்கள்.

     "புதுக் குதிரைகள்?"

     "அவை மறைந்த மாயந்தான் தெரியவில்லை. உள்ளே நரிகள் நின்றுதான் ஊளையிடுகின்றன. அவை வெளியே வந்துவிடாமலிருக்க, கதவை இழுத்துச் சாத்தி வைத்திருக்கிறோம். நாங்கள் சாத்து முன்பே பெரும் பகுதி வெளியே ஓடிவிட்டன."

     "அரசே, குதிரைப் பந்திக்குள் நரிகள் ஊளையிடுகின்றனவே; புதுக் குதிரை ஒன்று கூட இல்லையே" என்று பக்கத்தில் ஒரு குரல் கேட்டது.

     அரசன் திரும்பிப் பார்க்கிறான். அமாத்தியர் ருத்திரசாத்தனார் நின்றுகொண்டிருந்தார்.

     "ஆமாம். புதுக் குதிரைகளைக் காணவில்லையாம்" என்றான் அரிமர்த்தனன்.

     "நானும் அப்படித்தான் எதிர்பார்த்தேன். தங்கள் மந்திரியின் சித்து விளையாட்டாக இருக்கலாம். நீங்கள் கவனித்தீர்களோ, குதிரைகள் வந்தபோது அவனது நிலையை? நான் வரும்போதே மீண்டும் அவரைக் கைது செய்யும்படி உத்திரவிட்டுவிட்டு வந்தேன்."

     "சீ! அப்படி இருக்காது. மேலும் நீதி வகுக்க நாம் யார்?"

     "அரசே, தாங்களுமா?"

     "குதிரைப் பாகன் எங்கு மறைந்தான் என்பதுதான் தெரியவில்லை. நேற்று நமது கோயில் ஆயிரக்கால் மண்டபத்தில் சென்று படுத்ததைத் தான் சிலர் பார்த்ததாகத் தெரிகிறது. ஒற்றர்கள் கிரகித்த தகவல் இதுதான்" என்றது மற்றொரு குரல். ஏனாதி பகைக்கூற்றச் சித்திரனார் தாம்.

     "பாகனைப் பிடித்தால் காரியம் தெரியும்."

இடைவெட்டு

     அடியார்க்கு நல்லார்: நான் தான் அப்பொழுதே சொன்னேனே; குதிரைகள் நிச்சயமாக வரும் என்று? எனக்குத் தெரியாதா வாதவூரனை.

     சேனாவரையர்: வாதவூரன் பொய்யன் என்று நான் எப்பொழுதும் சொன்னதுண்டா? சமயத்துக்கு வராத குதிரைகள் இனி வந்து என்ன, வராமல் என்ன? இப்பொழுது வெகு சிரேஷ்டமான பரிகள் கிடைத்தாலும் அவை நரிகளுக்குத்தான் சமம். மானம் கெட்டுப்போய் அரசனும் அவற்றை ஏற்றுக் கொண்டானே!

     இளம்பூரணர்: புரை தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் எதுவும் பொய்யே அல்ல. இன்று அரசன் ஏற்றவை நரிகளாகவே இருந்தாலும் அவை பரிகளே. வாதவூரனுக்கு வயசு முப்பது என்பதற்காக வாயில் வந்தபடி எல்லாம் பேசுவதா?

     ஒற்றன்: குதிரைகள் கொண்டுவந்தானே, அவனை நீங்கள் எங்காவது கண்டீர்களா?

     அடியார்க்கு நல்லார்: சொக்கேசன் ஆலயத்து வசந்த மண்டபத்துக்குள் போய் உட்கார்ந்தான். நான் என் கண்களால் கண்டேன்.

     சேனாவரையர்: நான் பார்க்கும்பொழுது அவன் வசந்த மண்டபத்தில் இருந்தான் என்று சொல்லும். அவன் இப்பொழுது எங்கும் இருக்கலாம். அவனது கழுத்தில் கிடந்த மறுவைப் பார்த்தீர்களா? ஆலகால விஷம் மாதிரி அல்லவா இருந்தது? உன்மத்தன் போல் அல்லவா, நிதான புத்தியுடன் நடந்துகொள்ளச் சிரமப்படும் உன்மத்தன் போல் அல்லவா, அவன் விழித்தான்?

     இளம்பூரணர்: மறு இருக்கிற இடத்தில் இருந்தால் எல்லாருக்கும் அதிருஷ்டந்தான். அவன் அதிருஷ்டசாலிதான் என்பது நிச்சயமில்லை. வாதவூரன் நிச்சயமாக அதிருஷ்டசாலிதான்.

2
வாதவூரர்

     வாதவூரன் மனசும் அறிவும் தட்டுமறித்து விளையாடின. யாருக்கு யார் பதில் சொல்லுகிறார்கள் என்ற நினைப்பின்றி யாரோ மனசில் சொன்னதை, தாம் நாவால் சொன்னதாகவே வாதவூரருக்குப்பட்டது. குதிரைகள் வாங்க வேண்டும் என்ற நினைப்பே அற்றுப் போகும்படி தம்மை இழுத்து உட்கார்த்திவிட்ட பெரியார் தம்மிடம் என்னத்தைக் கண்டுவிட்டார் என்பதுதான் முடிவில்லாப் புதிராக அவரை மலைக்க வைத்தது.

     கல்லால நீழலில் அமர்ந்த தட்சிணாமூர்த்தத்துக்கு, கண்கூடாகக் கண்டு, ஸ்பரிசித்துப் பேசக்கூடிய ஒரு ரூபம் இருக்குமாகில் அது அவர்தாம். என்னை ஆட்கொள்வதற்காக அம்மையப்பனே அப்படி வந்தானோ! சீ! நான் யார்? எனக்குத் தகுதி என்ன? மனசில் அவன்மீது நாட்டம் இருந்துவிட்டால் போதுமா? கால் எடுத்து வைக்கமுடியாமல், அறிவுதான் அடிக்கு நூறு வேலிகள் கட்டுகிறதே, அப்படிப்பட்ட அறிவு, என்னை ஆட்கொண்டு என்னை அளந்து நிற்கும்போது, அவனால்தான் வர முடியுமா, என்னால்தான் அவனிடம் போக முடியுமா?

     பாண்டியனிடம் சமத்காரமாகப் பேசிவிட்டதால் நான் செய்த காரியம் சரியாகிவிடுமா? அவன் கொடுத்தானாவது! அவன் வாங்கிக் கொண்டானாவது! அவன் அரிமர்த்தனனாக வந்து கொடுத்த பொழுது அரிமர்த்தனனாக நிற்கும் அவனிடம் கணக்குக் காட்டுவதை விட்டு, வேதாந்தம் பேசி என்னை நான் பொய்த்துக் கொண்டேனே! என்னை விட நெஞ்சறி கள்வன் எவன்? என்னையும் நம்பி, பணத்தைக் கொடுத்தானே பாண்டியன்! பாண்டியன் பணம். பாண்டியன் பணம் கரையும் பொழுது காலம் நின்றதே; களனே அழிந்ததே. அந்த பெரியவரை நான் திரும்பவும் பார்க்க வேண்டுமே அவர் அருகில் இருந்தால், தாய் மடியில் இருப்பது போலல்லவா இருந்தது? அவர் என்னிடம் என்ன சொன்னார்? என்னத்தைத்தான் சொல்லவில்லை? அவர் சொன்னதை வேதமும் வேதாந்திகளும் சங்கரனும் சொல்லத் தான் செய்திருக்கிறார்கள். அவர் சொன்னதன் நுட்பம் வார்த்தைக்குள் இல்லையே. குரலிலா? கண்ணிலா? அவர் எதைக் கொண்டு என்னை இழுத்து விட்டார்? எனக்குத் தெரிந்ததைத் தான் சொன்னார். ஆனால் தெரிந்தது என நான் நம்பி இருந்ததற்கு எவ்வளவு உள்ளுறை கொடுத்துவிட்டார்! "தாமே குதிரைகள் வரும்; நீ உன் குதிரைகளை அடக்கக் கற்றுக் கொள்" என்றாரே சிரித்துக் கொண்டு! அப்பொழுது பாண்டியனும் அவனுடைய குதிரைகளும் அவனுடைய குதிரை வேட்கையும் இந்தப் பிரபஞ்ச லீலையில் எவ்வளவு அற்பமாக, துச்சமாகப் பட்டன; நமது பார்வைக்குள் படவேண்டாத ஒன்றாகப் படும்படி செய்துவிட்டாரே! நானா பணத்தை எடுத்துக் கொடுத்தேன்? இந்தப் பிரபஞ்சமே எடுத்துக் கொடுத்தது. அதற்குப் பாண்டியன் என்னை வெயிலில் நிறுத்த வேண்டும், கசையடி கொடுக்க வேண்டும், கண்ணைப் பிடுங்க வேண்டும், யானையை விட்டு என் தலையை இடற வேண்டும்? இவையெல்லாம் அற்பத்துக்கு அற்பமான காரியங்கள். பாண்டியனது குதிரை வேட்கை மாதிரி பிரபஞ்சத்தின் பார்வையில் படவேண்டாத ஒன்று. என்னுடைய கட்சியும் பாண்டியன் கட்சி போன்றதுதான். மதுரை அதிருஷ்டம் பெற்ற ஊர்தான். பாண்டியநாடு அதிருஷ்டம் பெற்ற நாடுதான். என்னை எப்படியாவது நீதியின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக என்ன என்ன பாடு பட்டான்! அவனுக்குக் குதிரையைப் பற்றிக்கூட அக்கறை இல்லை போல் இருக்கிறது. நீதி என்ற ஒன்று திருப்தியடையும்படி நான் பதில் தந்துவிட்டால் என்னைப் பாதுகாத்து மறுபடியும் இந்த மந்திரி உத்தியோக விலங்கை மாட்டிவிடுவதில் அவனுக்கு என்ன ஆசை! அரிமர்த்தனனும் அதிருஷ்டசாலிதான். என் உயிருக்கு உயிரான ருத்திரசாத்தனும் ஏனாதியும் சத்திரவைத்தியர்கள் போல அல்லவா நடந்துகொள்ளுகிறார்கள்! மனித வம்சம் அநாதி காலந்தொட்டு இன்றுவரை, இனிமேலும், அறுகு போலப் படர்ந்து கொண்டே இருக்க, கண்களைக் கட்டிக்கொண்டு நடக்கும் நீதியின் பின்புறமாக, தம் மனசைச் செப்புக் கோட்டைக்குள் சிறை செய்து நடந்தார்களே, அவர்கள் அல்லவா மந்திரிகள்! மந்திரிகள் என்று உலகத்தில் வேடமிட்டால் மந்திரியாகவே நடிக்க வேண்டும். இடையிலே வேஷத்தைக் கலைத்துக் கொள்ளலாமா? அது மனுதர்மமாகாது; உயிர்த் தருமம். உயிர்த் தருமத்துக்கு அரசனது பட்டிமண்டபத்தில் இடங்கொடுக்க முடியாது? கொடுத்தால் பட்டி மண்டபத்தில் வௌவாலும் குறுநரியும் கொண்டாடி நடக்குமே...

என்ன?

     குதிரைகளா? பாண்டியனுடைய பணியாளர்கள் அல்லவா வந்து சொல்லுகிறார்கள்? குதிரைகள்! குதிரைகள் வந்துவிட்டனவோ? குதிரைகளாவது வருவதாவது! பணம் போன திக்கில் குதிரைகள் ஏது? உன்னை ஆட்கொண்ட ஐயன், அன்று கல்லாலின் அடியில் உன்னையே உருக்கிவிட்டவன், உன்னைக் காப்பாற்றக் குதிரைகளைக் கொண்டு வந்து விட்டானா? என்ன ஆபத்து! எனக்காக, என் பொய்க்காக, என்னுடைய நிலையில்லா மனசுக்காக, என்னுடன் சேர்ந்து தெய்வமே, என்னுடைய குருதேவனே, அந்தப் பொய்யை நிலைநாட்டத் துணிந்தானா? நான் கொடுக்காத தொகைக்குக் குதிரைகளா? எனக்காக, என்னுடைய அற்ப ஜீவனைப் பற்றுவதற்காக, சகல லோகங்களுமே திரண்டு நின்று எனது பொய்யை நிலைநாட்ட வருவதா? களங்கமற்ற தர்மமானது என்னுடைய சிற்றறிவின் கொடுக்கல் வாங்கல்களின் அற்ப நடத்தைகளுக்கு, அகந்தைக்குத் துணை வருவதா? உலகத்தையே பொய்ப்பிக்கும் பொய்யை உண்டாக்கிய நான் அதமன் அல்லவா? சர்வேசுவரனுடைய லீலை என்னுடைய பொய்க்கும் துணை நின்று அதை மெய்ப்பிக்க அதல பாதாளத்தில் இறங்குமாகில் அது... அது... எனது நா எழவில்லையே...!

     வாதவூரரின் உடலிலிருந்து விலங்குகள் கழற்றப்படுகின்றன. அவருக்குப் பழைய மரியாதைகள் செய்யப்படுகின்றன. ஆனால் அவை மெய்யான பாரவிலங்குகளாக ஊனையும் உயிரையும் உணர்வையும் அதற்குப் பின்புறமாக உள்ள மகாசூட்சுமமான கரணங்களின் சேர்க்கைக் கோப்பையும் அழுத்தின. அவரது நெஞ்சு உலர்ந்தது, வறண்டது, சுழன்றது, பொங்கியது, குமுறியது; சுழித்து நுரைத்துக் கொப்புளித்துப் பொய்ம்மை என்னும் வேதனையைக் கக்கி விக்கித் தடுமாறியது. அவருடைய வேதனை உலகத்தின் வேதனை ஆயிற்று. மதுரை மூதூரின் வேதனையாக உருவெடுத்தது, பெருக்கெடுத்தது. பிரவாகமாகச் சுழித்துக் குறியற்றுக் குறிக்கோள் அற்று விம்மிப் புடைத்து ஓடியது. கரைகள் என்ற பிரக்ஞை இல்லாமலே மதுரை மூதூரை நனைத்தது, முழுக்கியது, ஆழ்த்தியது. பஞ்சணை மெத்தையில் அமர்ந்திருந்தது வாதவூரன் உடல். அவருடைய வேதனை உலக வியாபகமாக, மதுரையையும் அதற்கும் அப்பால் உள்ள அண்டங்களையும் தன்னுள் ஆக்கியது...

     நடுநிசியில் ருத்திரசாத்தனுடைய சேவகர்கள் அவருடைய உடலில் விலங்கிட்டனர். விலங்குகள் ஏறின என்ற உணர்வும் அற்றுப் போன சமயம் அது. வேதனை வெள்ளம் அவரையும் அவரது பிரபஞ்சத்தையும் அமுக்கித் தன்னுள் ஆக்கித் தடந்தெரியாமல் செய்துவிட்டது.

இடைவெட்டு

     சேனாவரையர் : வையை நதியிலே வெள்ளம் இப்படி வந்தது என்று சொன்னால் நம்புகிறவர்கள் யார்? சில சமயங்களில் கண்ணால் காணும் விஷயங்கள் கூட நிஜமா என்ற சந்தேகம் தோன்றுகிறது. நீர் அந்தப் பக்கமாக ஒரு கூடை மண்ணை அள்ளிப் போடும்.

     இளம்பூரணர் : பரிகள் நரிகளுக்குச் சமம் என்றீரே. உமக்கு யக்ஷிணி உபாசனை உண்டோ ? சொன்ன மாதிரி பாண்டியன் குதிரை லாயத்திற்குள் நரிகள் எப்படிப் புகுந்தன? தலையாலங்கானத்துப் போரில் கவந்தங்கள் ஆடினவாம். கூளிகளும் பேய்களும் கூழ் அட்டனவாம். அன்று கேட்ட பேரிரைச்சல் கூட இன்றைய நரி ஒன்றின் சத்தத்துக்கு ஈடாகாதே. அலறல் கால பாசம் போல் அல்லவா உயிரை நாடித் தடவியது! நரிச் சத்தம் கேட்டே நகரத்தில் சாவுக்குக் கணக்கு இல்லையாம்.

     அடியார்க்கு நல்லார் : பேசிக்கொண்டே நிற்காதீர். முழங்கால் பரியந்தம் தண்ணீர் சுற்றுவது தெரியவில்லை? இன்று வையையில் வெள்ளம் எப்படி உண்மையோ அப்படி நரிகளும் உண்மை. இவை கண்ணுக்குத் தெரிந்தவைகள். இவற்றிற்கும் மேலாக ஏதோ ஒன்று, ஆதிகாரணமான ஒன்று...

     ஒற்றர் : ருத்திரசாத்தன் உத்தரவுப்படி வாதவூரனை விலங்கிட்டு விட்டார்கள். அவனைப் பிடித்தால் போதாது. குதிரைப் பாகனையும் பிடிக்க வேண்டும்.

     மூவரும் : மன்னவன் ஆக்ஞை அல்ல அது. அவன் அப்படி உத்தரவு போடமாட்டான். ஐயோ, வெள்ளம் பொங்குகிறதே! நுரைகள் புரள்வதைப் பாருங்கள். சிவனுடைய சிரிப்பு மாதிரி...

3
சொக்கன்

     ஆலவாய்மெய்யன், உலகத்தைத் தன்வசம் இழுக்கும் சொக்கன் விளையாடினான். ஜீவாத்மாவின் வேதனையை உணராது விளையாடினான். அங்கயற்கண்ணியின் கண்ணில் பாசமும் கன்னத்தில் குழிவும் தோன்ற அவன் விளையாடினான். பெரியவராக வந்து, பெரிய ஞானோபதேசம் செய்வதுபோலப் பாவனை செய்து, தெரிந்ததையே சொல்லி, ஏற்கனவே தன் பாசத்தில் சிக்கிய ஜீவனை இன்னும் ஒரு பந்தனம் இட்டு வேடிக்கை பார்த்தான். ஈசன் விளையாடினான். வாதவூரன் அவனுடைய விளையாட்டுப் பொம்மையானான். ஈசனுக்குப் பிரபஞ்சமே வாதவூரனாயிற்று. பிரபஞ்சத்துக்கு உடைமையான அவனது பார்வை வாதவூரன் மீது மட்டும் விழுந்தது. பிரபஞ்சமும் அண்டபகிரண்டமும் அனந்தகோடி ஜீவராசிகளும் யோக நித்திரை போன்ற தாமஸ் நித்திரையில் ஆழ்ந்துள்ள நிலைப்பொருள்களும் ஏகோபித்து ஏற்றுச் சுமக்க வேண்டிய அவனது பார்வை அத்தனையையும் விட்டு அதில் ஒன்றான மகாநுட்பமான வாதவூரன் என்ற தோற்றத்தின் மீது, ஓர் உருவ வரம்புக்கு உட்பட்ட தனிச் சாகையின் மீது விழுந்தால் அது சுமக்குமோ?

     ஆமாம், அதனால் தான் வாதவூரன் நெஞ்சிலே வேதனை பிறந்தது. சொக்கன் திடுக்கிட்டான். விளையாட்டு விபரீதமாயிற்று. அவன் மனசையும் அந்த வேதனை கவ்வியது. அங்கயற்கண்ணியின் கண்கள் வாளையைப் போலப் புரண்டு சிரித்தன. கன்னங்கள் குழிவுற்றன. கோவைக் கனிக்கு நிறமும் மென்மையும் கற்பிக்கும் அவள் அதரங்கள் மலர்ந்தன. கொங்கைகள் பூரித்தன. காம்புகள் விம்மின. செல்வி சிரிக்கத் தொடங்கிவிட்டாள். அண்ணல் தன் செயல் கண்டு, பித்தாடும் சொக்கன் வேதனை கொண்டு சிரிக்கலானான். சிரிப்பு நாபிக் கமலத்திலிருந்து கொப்புளித்துப் பொங்கியது.

     ஈசன் மனசிலோ வேதனை. ஈசன் வாதவூரனாகிவிட்டான். அவன் துயரம் இவன் துயரமாகியது. ஜீவனுடைய பொறுப்புக்குள் உட்பட்டு, அதன் அற்பத்திலும் அற்பமான கொடுக்கல் வாங்கல் பேரங்களின் சிக்கலை நன்குணர்ந்து அதன் சுமைகளைத் தாங்கலானான். ஈசன் கழுத்துத் தள்ளாடியது. என்ன சுமை! என்ன பாரம்! கண்கள் ஏறச் செருகின.

     அவனது வேதனையைக் கண்டு அங்கயற்கண்ணி சிரிக்கிறாள். அண்டபகிரண்டமும் ஏகோபித்து அவளுடன் சேர்ந்து ஈசனைப் பார்த்துச் சிரிக்கின்றன.

     வாதவூரனாக ஈசன் வேதனை கொண்டான். அவன் மனம் என்ற சர்வ வியாபகமான காலம் கொல்லாத சர்வ மனம் நைந்தது. குமுறியது. கொப்புளித்தது. வாதவூரனாகக் கிடந்து வெம்பியது. குதிரை எனக்காட்டி ஏமாற்றி வந்துவிட்ட செயலுக்காக தானும் அந்த மனிதனைப் போல சிட்சை பெற்றால்தான் ஆறும்; வாதவூரன் தன் அருகில் வந்தால், அவனருகில் தான் இருக்க லாயக்கு என்று நினைத்தாள்.

     வேதனை சுமந்த கழுத்துடன் ஆலவாய்க் கர்ப்பக் கிருகத்திலிருந்து வெளிவந்தது ஓர் உருவம். ஈசன் வெளிவந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். எங்கே பார்த்தாலும் வெள்ளம். மதுரை மூதூரை ஊர் என்று அறிய முடியாதபடி ஆக்கிவிட்டது வெள்ளம். ஈசன் நடந்தான். ஈசன் சிரித்தான். ஈசன் வெள்ளத்தில் நீந்தி விளையாடி முக்குளித்துக் கும்மாளி போட்டுக்கொண்டிருந்தான்.

     அங்கயற்கண்ணி சிரித்தாள். வெள்ளம் இன்னும் உக்கிரமாக நுரை கக்கிப் பாய்ந்தது.

     மனித வம்சம் துயரத்திலும் வேதனையிலுமே ஒன்றுபட்டு வரும். தன்னை அறியாமலே முக்திநிலை எய்தும். அன்றிரவு அவ்வூரின் நிலை அது. யானையும் காளையும் மனிதனும் மதிலும் மண்ணும் அரசனும் ஆண்டியும் அன்று வெள்ளத்தைத் தடுக்க, மறிக்க, தேக்கி நகரத்தைக் காப்பாற்ற, காரிருட்டில் அருகில் இருப்பவன் என்ன செய்கிறான் என்பதை அறியாமல் மண்வெட்டிப் போட்டுப் போட்டு நிரப்பினர். மண் கரைந்தது. மறுபடியும் போட்டனர். கரைந்தது. மறுபடியும் போட்டனர்.

ன்றிரவு இரண்டு ஜீவன்கள் வெவ்வேறான துயரத்தில் வாடின. வாதவூரன் தன் பொய்யை நிலைநாட்டிய தெய்வத்தின் கருணையைச் சுமக்க முடியாமல் வேதனைப்பட்டான். மண் வெட்டி வெட்டிப் போடும் அனந்தகோடி ஜனங்கள் முயற்சியை அவனது வேதனை கரைத்தது. உழைத்து உழைத்துச் சோர்வடைகிறவர்களுக்குப் பசியாற்ற ஒரு கிழவி, பந்தமற்ற நாதியற்ற கிழவி பிட்டு அவித்து அவித்துக் கொட்டி விற்று வருகிறாள். அவள் கிழவி. அவளுக்கு நாதி இல்லை. பந்தம் இல்லை. பிட்டும் பிட்டுக் குழலுந்தான் பந்தம். தணிக்கை பண்ணிவரும் கணக்கர்கள் பசி போக்கப் பிட்டுக்காரியிடம் வந்தார்கள். அவளது அடுப்பில் எரிந்த நெருப்பில் கொஞ்சம் எடுத்து அவளது வயிற்றில் கொட்டிவிட்டுப் போனார்கள். மதுரைவாசிகள் எல்லாரும் கரைக்கு மண் போடவேணுமாம். அவளது பங்குக்கும் தச்சிமுழம் நாலு அளந்து போட்டிருக்கிறதாம். அவள் என்ன செய்வாள்? பிட்டுக் குழலைப் பார்ப்பாளா? அடுப்பைப் பார்ப்பாளா? அந்த இருட்டில் ஆள் தேடிப் போவாளா?

     இருட்டிலே "ஆச்சீ" என்ற குரல் கேட்டது. அதிலே எக்களிப்பும் பரிவும் கலந்திருந்தன. வேதனை வெள்ளத்தில் முக்குளித்த ஈசன் குரல் அல்லவா?

     "யாரப்பா, புட்டு வேணுமா?" என்று கேட்டாள் ஆச்சி.

     "என்ன ஆச்சி, புட்டா அவிக்கிறாய்? புட்டு நன்றாக இருக்குமா?" என்கிறான் ஈசன்.

     "என்னப்பா, இப்படி வா. உன்னை வெளிச்சத்தில் நல்லாப் பார்க்கட்டும். என் பேரன் மாதிரி இருக்கியே; வா இப்படி உட்காரு. உன் பங்கை நிரப்பிவிட்டியா? எனக்கு நாலு மொளம் அளந்திருக்காங்களாம். நீதான் ரெண்டு கூடை மண்ணை போடேன். உனக்குக் கோடி புண்ணியம் உண்டு" என்றாள் கிழவி.

     "எனக்கு என்ன கொடுப்பாய் ஆச்சி?"

     "என்னிடம் காசு பணம் ஏது? இப்பவரை சாப்பிட்டவங்க கணக்குச் சொல்லிவிட்டு போயிட்டாங்க. உனக்கு வேணும்னா, புட்டுத் தாரேன்."

     "ஆச்சி, அப்படியென்றால் நீ ரொம்ப ஏழையா?"

     "இதென்ன கூத்தா இருக்கு! உங்க ஊர்லே பணக்காரங்களா புட்டுச் சுட்டுப் பொளைக்கிறாங்க?" என்று சிரித்தாள் கிழவி. நாலு புறமும் நரிகள் ஊளையிடும் வனாந்தரத்தில் சிக்கிக்கொண்ட ஜீவனின், நிர்க்கதியாகத் தவிக்கும் உயிரின், துயரம் அந்தச் சிரிப்பிலே இழையோடியது.

     "நீயோ பரம ஏழை. எனக்கோ பசி சொல்லி முடியாது. போனாப் போகிறது. புட்டு உதிர்ந்து போனால், அதை மட்டும் எனக்கு எடுத்து வைத்திருந்து கொடு. நான் போய் உன் பங்குக்கு மண் போடுகிறேன். ஆனால் எனக்குப் பசி அதிகம். ஒரு கூடை போட்டால் உடனே ஓடி வருவேன்."

     "இந்தா..."

     "இப்ப வேண்டாம் ஆச்சி. போட்டுவிட்டு வருகிறேன்..."

     ஈசன் மறுபடியும் வெள்ளத்தில் முக்குளித்து விளையாடினான். கரையேறினான். மறுபடியும் தண்ணீரில் குதிக்க ஆசை. ஆனால் பிட்டு ருசி நாக்கைச் சுழற்றியது. ஒரு கூடை மண் எடுத்துப் போட்டான்.

     பாதிவெள்ளம் படக்கென்று வற்றியது. ஆனால் ஜலம் மனித வெள்ளம் இட்ட மண் கரைமேல் மோதித் தத்தி அலம்பி வழிந்து கொண்டிருந்தது.

     "ஆச்சீ, ஒரு கூடை போட்டுவிட்டேன். பசிக்கிறது. புட்டுப்போடு."

     "பேரப்பிள்ளை, தெய்வமேதான் உன்னை இங்கே அனுப்பியிருக்கு. நீயும் அதிட்டக்காரந்தான். நீ போனதுலே இருந்து எடுக்கிற புட்டு எல்லாம் உதுந்துதான் போகிறது. இதோ பார், எத்தனை பேர் காத்து உட்கார்ந்திருக்கிறார்கள்."

     "அது கெடக்கட்டும். இந்த முந்தித் துணியிலே புட்டெப் போடு. நேரமாச்சு. மண்ணைப் போட்டு கரையை அடைக்க வேண்டாமா?"

     "ஆமாம், ஆமாம். நேரமும் விடியலாச்சு. ராசா வந்தா..."

     "ஆமாம், ஆமாம்."

ஈசன் ஒரே அமுக்கில் பிட்டை விழுங்கி விட்டான். என்ன ருசி! பேரின்பம்! ஒரே ஓட்டமாக ஓடி, கூடையை விட்டெறிந்துவிட்டு, வெள்ளத்தில் குதித்து விளையாடினான்.

     அசுரப் பசி போலச் சுழித்தோடும் வெள்ளத்தில் மீன்போலப் புரண்டு, முழுகி, முக்குளித்து விளையாடினான். வெள்ளத்தில் படம் விரித்துச் சீறிக்கொண்டு நீந்திச் செல்லும் நாக சர்ப்பம் மாதிரி எதிர்த்து நீந்துவான். ஆனந்த வெள்ளத்தில் மிதக்கும் யோகியைப் போலச் சுகாசனமிட்டு வெள்ளத்தின் போக்கில் மிதந்து வருவான். திரும்பவும் வாலடித்துத் திரும்பும் முதலையைப் போலக் கரை நோக்கி வருவான். பிறகு மீன்கொத்திப் புள் மாதிரி கைகளைத் தலைக்குமேல் வீசிக் கோபுரம் போலக் குவிய நீட்டிக் கொண்டு உயரப் பாய்ந்து தலை குப்புற ஜலத்தைக் கிழித்துக் கொண்டு மறைந்துவிடுவான். ஜனங்கள் செத்தானோ என்று பயப்படும்போது மறுகரையில் தலை தெரியும். பிறகு சீறிவரும் பாம்பு மாதிரி நீந்தித் திரும்புவான்.

     வெளிச்சம் வர ஆரம்பித்தது. வெள்ளத்தின் பீதி குறைய, ஜனங்களும் கரைகளில் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

     சூரியனுடைய முதல் கிரணங்கள் வெள்ளத்தின் நுரைகளில் வானவில்லிட்டன. அரிமர்த்தன பாண்டியனுடைய மணிமுடி மீதும் பட்டத்து யானையின் வைரமிழைத்த முகபடாம்மீது பட்டுத் தெறித்து மின்னி விளையாடின.

     அரசன் கரையோரமாகப் பட்டத்து யானைமேல், ஜனங்களிட்ட கரையைப் பார்த்துக் கொண்டு, கணக்கர்கள் கணக்கு ஒப்பிக்க, வந்து கொண்டிருந்தான். தூரத்திலே அவன் கண்ணில் ஒரு பகுதி மட்டும் உடைத்துக் கொண்டு வெள்ளம் பாய்வது தெரிந்தது. மீசை துடிக்க அந்த இடத்துக்கு யானையை விரட்டி ஓட்டும்படி சொல்லுகிறான். பாகன் அங்குசத்தினால் குத்துக் குத்தி, செவியின் புறத்தில் விரல்களால் இடிக்கிறான். அடுத்த கணம் யானை அந்த இடத்துக்கு வந்து நிற்கிறது.

     அரிமர்த்தன பாண்டியன் தரையில் குதிக்கிறான்.

     மேல்மூச்சு வாங்க ஓடி வந்த கணக்கர்கள் அவசர அவசரமாக ஏடுகளைப் புரட்டி, "பிட்டு வாணிச்சி பங்கு" என்கிறார்கள்.

     கூடியிருந்த ஜனக் கும்பல் "தண்ணீரில் கும்மாளி போடுகிறவன் கடமை" என்கிறது.

     அரசன் கைதட்டிச் சைகை செய்து கரைக்கு வரும்படி அழைக்கிறான்.

     ஈசன் நாகசர்ப்பம் போலக் கரைக்கு நீந்தி வந்தான். கரையேறி ஈரம் சொட்டச் சொட்ட நிற்கிறான்.

     கோபாவேசமாக, "ஏன், மண்ணைப் போடாமல் பொழுதைக் கழிக்கிறாய்? சோம்பேறி!" என்று கேட்கிறான் அரசன்.

     ஈரச் சிகையை அண்ணாந்து உலுப்பிக்கொண்டு ஈசன் வாய்விட்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தான். கண்டத்தில் நனைந்த மறு சூரிய ரேகை பட்டு மின்னியது. ஈசன் சிரித்தான்.

     அரசன் கோபித்தான். கூட்டத்தை விலக்குவோர் வசம் இருந்த பொற்பிரம்பை வெடுக்கெனப் பிடுங்கி ஓங்கி ஓர் அடி கொடுத்தான். பொற்பிரம்பு ஈசன் முகத்திலும் நெஞ்சிலும் ரத்த விளிம்பு காட்டியது.

     அரசன் சினம் அவியவில்லை. மீண்டும் ஓங்கினான்.

     ஈசனது அசட்டுச் சிரிப்பு அதிகமாயிற்று. வெருண்டவன் போல ஜலத்தில் பாய்ந்தான்.

அரசன் சினம் அவிந்தது. ஈசனைக் காப்பாற்ற அவனைத் தாவி எட்டிப் பிடித்தான். ஈசனது முடிப்பிட்ட முந்தி கிழிந்து கையுடன் வந்தது. ஈசன் ஜலத்தில் முக்குளித்து மறைந்துவிட்டான். அரசனும் தொடர்ந்து குதித்து மறைந்துவிட்டான்.

     வெள்ளம் மடமடவென்று வற்றியது. நுங்கும் நுரையுமாகக் கொப்புளித்த பிரளயம் சர்வேசனது ஹிரண்ய கர்ப்பத்தில் ஒடுங்கியது.

     ஈரச் சகதியிலே மன்னவன் அரிமர்த்தன பாண்டியனது சடலம் கிடந்தது.

     உலராத சகதியிலே, முகத்தில் சிவந்த வடுவுடனும் சொல்லில் அடங்காத பொலிவுடனும் மன்னவன் அரிமர்த்தன பாண்டியனது சடலம் கிடந்தது.

     மடங்கி இறுகப் பற்றிய கைக்குள், முன்றானைக்குள் பந்தகமிட்ட ஓலை நறுக்கு ஒன்று இருந்தது.

     ஈசனுக்குக் குதிரைகள் பெற்றுக் கொண்டதாக எழுதித் தந்த அந்த முறிச்சீட்டு.

இடைவெட்டு

     இளம்பூரணர் : அவன் மண் சுமப்பவன் என்றால் என்ன? நெஞ்சில் தைரியம் இருந்தால் தண்ணீரில் நீந்தக் கூடாதா? மதுரை நகரத்தில் எத்தனை வீரர்கள் உண்டு! அவர்கள் காலில் உள்ள வீரக்கழல்களின் ஓசை எவ்வளவு! அவ்வளவு பேரும் மண்ணை வெட்டித்தானே போட்டுக்கொண்டிருந்தார்கள்? அவன் ஒருத்தன் தானே தனக்குள் வெள்ளம் அடக்கம் என்பது போல அதன்மீது பாய்ந்து நீந்தினான்? அவனை அடிக்கலாமா?

     அடியார்க்கு நல்லார் : இருட்டில் இருந்த பயம் நமக்கு இப்பொழுது இல்லை. வெள்ளமும் வற்றிவிட்டது. வெள்ளத்தில் வரம்பு தெரிகிறது. அவன் எங்கே? அரிமர்த்தன பாண்டியன் எங்கே?

     சேனாவரையர் : பரிகள் எங்கேயோ, வெள்ளம் எங்கேயோ, வெள்ளத்தில் நீந்தியவன் எங்கேயோ, அங்கே அரிமர்த்தனபாண்டியன்.

4
அங்கயற்கண்ணி

     மதுரை மூதூரின் கர்ப்பக்கிருகத்திலே மணியூசலிலே கருங்குயில் ஒன்று உந்தி உந்தி ஆடிக்கொண்டிருந்தது. விளக்கற்ற வெளிச்சத்திலே புலன்களுக்கு எட்டாத ஒளிப் பிரவாகத்திலே மணியூசல் விசையோடு ஆடியது. அளகச் சுருள் புலன் உணர்வு நுகரும் இருட்டுடன் இருட்டாகப் புரள, கால் விசைத்து உந்திச் சுழி குழிந்து அலைபோல உகள, கொங்கைகள் பூரித்து விம்மிக் குலுங்க, அன்னை மணியூசல் ஆடினாள். ஆலவாய் ஈசன், அழகன் சொக்கன் வருகை நோக்கி மணியூசலாடினாள். தோள் துவள அவள் சங்கிலிகளைப் பற்றி அமர்ந்த பாவனை, சொக்கனை ஆரத் தழுவ அகங்காட்டும் செயல் போல அமைந்திருந்தது. அங்கயற்கண்ணியின் அதரத்திலே கீற்றோடிய புன்சிரிப்பு; மருங்கிலே துவட்சி; கண்ணிலே விளையாட்டு; நெஞ்சிலே நிறைவு. செல்வி மணியூசல் ஆடினாள். அண்ட பகிரண்டங்களையும் சகல சராசர பேதங்கள் யாவற்றையும் தன்னுள் அடக்கும் ஆலிலை வரிவிட்டு புரண்டு விளையாடியது.

     அந்த ஒளியில், அந்த இருட்டில், அந்த நிறைவில் சொக்கன் வந்தான். முகத்திலே வடு, மார்பிலே வடு, நெஞ்சிலே நிறைவு. விளையாடச் சென்ற ஈசன் வீடு திரும்பினான். விளையாட்டின் பலன் ஏற்று ஈசன் வீடு திரும்பினான்.

     அன்னை அகங்குழைய நெஞ்சம் பூரிக்க அண்ணலை நோக்கினாள். அந்தப் பார்வை அகிலத்தை இழுக்கும் சொக்கனை இழுத்தது. தானாக, தன்னில் ஓர் அம்சமாகப் பிரபஞ்சத்தைக் கொண்ட ஈசனது அகன்ற மார்பில் அன்னை துவண்டாள். மணியூசலிலே வேகமும் கனலும், வேட்கையற்ற வேட்கையும் இரண்டு நாகசர்ப்பங்கள் உயிர்ப் பாசத்தினால் பின்னிப் புரளுவது போல, ஏதோ ஒரு தோற்றந்தான் அந்த இருட்டில் தெரிந்தது. அன்னையின் நெஞ்சு சுரந்தது. ஈசனின் வேதனை அவிந்தது.

மணியூசல் விசைகொண்டு உயர்ந்து பொங்கியது. வாமபாகத்தில் தன்னில் ஓர் அம்சமாக அன்னையை அமர்த்தி, வலக்கரம் கொண்டு சங்கிலியைப் பற்றி விரல்கொண்டு ஊன்றி ஆடினார்.

     பாதத்தினடியில் முயலகன் முதுகு சற்று வளைந்து கொடுத்தது. கொடுமை என்ற அவனது கோரப் பற்களிடையிலும் புன்சிரிப்பு என்ற எழில் நிலாப் பொங்கியது.

     வாமபாகத்தமர்ந்த அன்னை இடக்கரம் ஒரு சங்கிலியைப் பற்றியது. அவளது பெருவிரல் ஈசனது பெருவிரலில் பின்னிப் பிணைந்து உந்தியது.

     "அடித்ததற்குப் பலன் அரியணைக்குப் பதில் அரன்மடி போலும்" என்றாள் அன்னை.

     அவர்களது மடிமீது அரிமர்த்தன பாண்டியன் அமர்ந்திருந்தான்; சிசுவைப் போல, கவலை இல்லை; எதுவும் இல்லை.

     "வாதவூரன் நெஞ்சில் வெள்ளம் அடங்கவில்லை. வழிநடையும் தூரந்தான்" என்றான் ஈசன்.

பொற் பிரம்பு

     ஈசன் முகத்தில் விழுந்தது பொற்பிரம்பின் அடி. அவனது மார்பில் விழுந்தது. நெஞ்சில் விழுந்தது. அப்புறத்து அண்டத்தின் முகடுகளில் விழுந்தது. சுழலும் கிரகங்களின் மீது விழுந்தது. சூலுற்ற ஜீவராசிகளின் மீது விழுந்தது. கருவூரில் அடைப்பட்ட உயிர்கள் மீது, மண்ணின்மீது, வனத்தின் மீது, மூன்று கவடாக முளைத்தெழுந்த தன்மீது, முன்றிலில் விளையாடிய சிசுவின் மீது, முறுவலித்த காதலியின் மீது, காதலின்மீது, கருத்தின் மீது, பொய்மையின் மீது, சத்தியத்தின் மீது, தருமத்தின்மீது அந்த அடி விழுந்தது.

     காலத்தின் மீது விழுந்தது. தர்மதேவனுடைய வாள் மீது விழுந்தது. சாவின் மீது, பிறப்பின் மீது, மாயையின் மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன் மீது, வாதவூரன் வேதனையின் மீது, அவன் வழிபட்ட ஆசையின் மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது.

     அங்கயற்கண்ணியின் மீது விழுந்தது. அவளது நெற்றித் திலகத்தின் மீது, கொங்கைக் குவட்டின்மீது அந்த அடி விழுந்தது.

கலைமகள், ஜனவரி-பிப்ரவரி 1946

1 கருத்து:

Shekar Raghavan சொன்னது…

உங்கள் கூர்ந்த நோக்கினால் கதையின் பல பரிணாமங்களை மிக அழகாக ஆராய்ந்துள்ளீர்கள்.

"எது அந்த பொற்பிரம்பு? இயற்கையா? விதியா? பிரபஞ்ச லீலையின் ஒரு சாயலா? அல்லது இவற்றை எல்லாம் கட்டி வைத்து விளையாடும் ஒரு இலக்கிய கர்த்தாவின் எழுதுகோலா? அவனது எழுத்தே தானா அந்தப் பொற்பிரம்பு?" சிந்திக்க வைக்கும் இந்த வரிகள் அருமையிலும் அருமை.

மனமார்ந்த பாராட்டுக்கள்.